disalbe Right click

Monday, February 25, 2019

சட்டவிரோத கைது: போலீசாருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சட்டவிரோத கைது: போலீசாருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
சென்னை: 'சட்டவிரோத கைதுக்காக, போலீசாருக்கு எதிராகவும், இயந்திர கதியாக காவலில் வைக்க உத்தரவிடும் மாஜிஸ்திரேட்டுகளுக்கு எதிராகவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட தயங்காது' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்து உள்ளது.
செம்மர கட்டைகள் கடத்தியதாக, ஒரு வாகனத்தை பிடித்து, ஐந்து பேருக்கு எதிராக, வனத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், சென்னை பாரிமுனை அருகில் நின்ற, மாநில, 'பில்லியட்ஸ்' விளையாட்டு வீரரும், அவரது பயிற்சியாளரும், கைது செய்யப்பட்டனர். இவர்கள், 2016, பிப்., 22ல் கைது செய்யப்பட்டனர்.
ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பில்லியட்ஸ் வீரர், தாக்கல் செய்த மனு:
பயிற்சி முடித்த பின், தங்கச் சாலையில் இறக்கி விடும்படி, பயிற்சியாளர் கேட்டார். வரும் வழியில், பாரிமுனை தம்புசெட்டி தெருவில், வாகனத்தை நிறுத்தும்படி கூறினார். மொபைல் போனில், அவரது நண்பருடன் பேசினார். அப்போது, முத்தியால்பேட்டை போலீசார், எங்களை கைது செய்தனர். எதற்காக கைது செய்து, காவலில் வைத்தனர் என்பது தெரியாது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
பொறியியல் கல்லுாரி மாணவரான மனுதாரர், பில்லியட்ஸ் விளையாட்டு வீரராக உள்ளார். ஏன் கைது செய்யப்பட்டோம் என, தெரியாமல், சிறையில் உள்ளார். அவரது மனதில், இந்த சம்பவம் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். அவர் மட்டுமின்றி, அவரது பெற்றோர், குடும்பத்தினரும் அதிர்ந்து போயிருப்பர்.
சட்டவிரோத கைது, ஒருவரது சுதந்திரத்தை மீறுவதாகும். இதனால் தான், ஒருவரை கைது செய்யும் போது, போலீசார் எவ்வளவு கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை, நீதிமன்றம் அவ்வப்போது உணர்த்தி வருகிறது.
மாஜிஸ்திரேட்டும், இயந்திரகதியாக காவலில் வைக்கும்படி, உத்தரவு பிறப்பிக்கின்றனர்.எனவே, சட்டவிரோதமாக கைது செய்யும் போலீசாருக்கு எதிராகவும், இயந்திரகதியாக காவலில் வைக்க உத்தரவிடும் மாஜிஸ்திரேட்டுக்கு எதிராகவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதற்கு, நீதிமன்றம் தயங்காது. இதை, போலீசாருக்கும், மாஜிஸ்திரேட்டுகளுக்கும், சுட்டிக் காட்டுகிறோம். நீதிமன்றம் பிறப்பித்த வழிமுறைகளை மீறியது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரியிடம் விளக்கம் கோரி, ஒழுங்கு நடவடிக்கையை, மாவட்ட வனத்துறை அதிகாரி எடுக்க வேண்டும். மனுதாரரை காவலில் வைக்க உத்தரவிட்ட, எழும்பூர் மாஜிஸ்திரேட், வரும், 2௮ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். மனுதாரருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. விசாரணைக்கு தேவைப்படும் போது, ஆஜராக வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
***********************************************நன்றி : தினமலர் நாளிதழ் - 26.02.2019

Tuesday, February 19, 2019

இனி அவசர உதவிக்கு 112

இனி அவசர உதவிக்கு 112
தமிழகம் உள்பட 16 மாநிலங்களில் 112 எண் சேவை தொடக்கம்: இனி அவசர உதவிகளுக்கு இந்த ஒரே எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
தமிழகம் உள்பட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொதுமக்களின் அவசர உதவிகளுக்கு 112 என்ற புதிய தொலைபேசி சேவை  19.02.2019 முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி சேவை, நமது நாட்டில் முதல்கட்டமாக ஹிமாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் தமிழகம், ஆந்திரம், உத்தரகண்ட், பஞ்சாப், கேரளம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான், தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி, டாமன் அன்ட் டையு, ஜம்மு -காஷ்மீர் ஆகிய 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 19.02.2019   செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உதவிக்கும் ஒவ்வொரு எண்
இதற்கு முன்னர் காவல்துறைக்கு 100 என்ற எண்ணையும், தீயணைப்புத்துறைக்கு 101 என்ற எண்ணையும், சுகாதாரத் துறையினருக்கு 108என்ற எண்ணையும், பெண்கள் தொடர்பான உதவிகளுக்கு 1090 என்ற எண்ணையும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு வந்தனர்.
இனி 112 என்ற ஒரு எண் போதும்
பொதுமக்கள் இனி 112 என்ற ஒரே எண்ணிலேயே அனைத்து வகையான உதவிகளையும்  கோர முடியும்.
நெருக்கடி காலத்தில் உதவி கோர விரும்புவோர், (லேண்ட் லைன்) தொலைபேசியில் 112 என்ற எண்ணை அழுத்தினால் போதும், அந்த அழைப்பானது   அவசரகால   உதவி சேவை   மையத்துக்கு  அழைப்பு செல்லும்
ஸ்மார்ட் போன் செல்லிடப்பேசி என்றால், அதை ஆன் செய்ய பயன்படுத்தப்படும் பொத்தானை 3 முறை அழுத்தினால், அவசரகால உதவி சேவை மையத்துக்கு அழைப்பு செல்லும்
சாதாரண செல்லிடப்பேசி எனில், 5ஆம் எண் பொத்தான் அல்லது 9ஆம் எண் பொத்தான் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நீண்ட நேரம் அழுத்த வேண்டும். 
மேலும், செல்லிடப்பேசியில் 112 என்ற செயலியையும் பதிவிறக்கம் செய்து, அதன்மூலமும் உதவி கோரலாம்அந்த அழைப்பு, 112 சேவை மையத்துக்கு செல்லும்
தொடர்பு கொண்டபின்னர் என்ன நடக்கும்?
தொடர்பு கிடைத்த பின்னர், அதன் மூலம் பேசும் அதிகாரிகள், பொதுமக்கள் கோரும் உதவி வகைகளை குறித்துக் கொண்டு, அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், சுகாதார நிலையம் மற்றும் பிற உதவிகள் மையங்களில் ஏதேனும் ஒன்றுக்கு தகவல் அனுப்புவார்கள்.  அதன்மீது சம்பந்தப்பட்ட துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்வர்.
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 20.02.2019 

Sunday, February 17, 2019

அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்


அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார் : போலீசார் விசாரிக்க கட்டுப்பாடுகள்
'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான லஞ்ச புகார்களை விசாரிக்க, முன் அனுமதி பெற வேண்டும்' என, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, லஞ்ச புகார் வந்தால், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேரடியாக வழக்கு பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. பரஸ்பர அடிப்படையில் மட்டும், சம்பந்தப்பட்ட துறை தலைமையிடம், அனுமதி பெற்று வந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய சட்டத்தை பின்பற்றி, தமிழக அரசு, புது அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வாயிலாக, அரசின் பல்வேறு துறைகளுக்கும், சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊழல் தடுப்பு சட்டம், 1988ல், மத்திய அரசு, '17 - ' என்ற, பிரிவை இணைத்துள்ளது. அதை பின்பற்றி, தமிழக அரசும், ஊழல் தடுப்பு சட்டத்தில், புதிய பிரிவை சேர்த்துள்ளதுஇதன்படி
 அரசு பணியில் நியமிக்கப்பட்டுள்ள, குரூப் - , பி, சி மற்றும் டி பிரிவில் உள்ள, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு புகார்கள் வந்தால், அதுகுறித்து, துறை தலைமைக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தர வேண்டும்.
➤ புகார் அனுப்பியவர்களிடம், புகாருக்குரிய விளக்கம் மற்றும் ஆதாரங்களை பெற வேண்டும்
➤ அவ்வாறு, ஆதாரத்தை தர தவறினால், அந்த புகாரை ஆதாரமற்றதாக கருத வேண்டும்.
➤ புகார்தாரர்களின் விளக்கம் கிடைத்து, புகார் உறுதியானால், அதன் மீது, போலீசார் நேரடியாக நடவடிக்கை எடுக்க கூடாது.
➤ சம்பந்தப்பட்ட துறையின் தலைமைக்கு தகவல் அளித்து, உரிய அனுமதி பெற வேண்டும்.
➤ அதற்கு முன், துறை தலைமை வழியாக, புகாருக்குள்ளானவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். 
➤ அதன்பிறகே, போலீசார் விசாரணையை நடத்தலாம்.
இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
*************************************************நன்றி : தினமலர் நாளிதழ் - 17.02.2019