disalbe Right click

Showing posts with label விசாரணை. Show all posts
Showing posts with label விசாரணை. Show all posts

Monday, January 8, 2018

கொலை நடந்த நேரம் கண்டுபிடிக்க....?

கொலை வழக்குகளில் இறப்பு நிகழ்ந்த நேரத்தை கணிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அது துப்பு துலக்குவதற்கு மட்டுமின்றி எதிரி குற்றவாளியா? இல்லையா? என்பதை நிரூபிக்கவும் உதவி செய்கிறது.
மரணம் நிகழ்ந்த பிறகு, பாக்டீரியாக்கள் சடலத்தின் திசுக்களை உண்ண ஆரம்பிக்கும் போது அவை துர்நாற்றம் வீசும் வாயுக்களை உற்பத்தி செய்கிறது. இந்த வாயுக்கள் திசுக்களின் அடியில் தங்குவதால் உடல் வீக்கமடைந்து விடுகிறது. சில சமயங்களில் இந்த வீக்கம் முகம் மற்றும் பாகங்களின் உருவ அமைப்பையே மாற்றி நெருங்கிய உறவினர்களால் கூட அடையாளம் காட்ட முடியாத அளவுக்கு சிதைத்து விடுகிறது.
மரணம் நிகழ்ந்து 36 மணி நேரத்துக்கு பிறகு சடலத்தின் இயற்கையான மற்றும் செயற்கையாக ஏற்பட்ட துவாரங்கள் (காயங்கள்) ஆகியவற்றில் ஈக்கள் முட்டை இடுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில், அந்த முட்டைகளிலிருந்து 'லார்வாக்கள்' எனப்படும் புழுக்கள் வெளிப்படுகிறது. அரிசியின் அளவே உடைய மண்புழு போன்ற தோற்றம் கொண்ட இந்த 'லார்வாக்கள்' சடலத்தின் மீது நெளிய ஆரம்பிக்கிறது. அடுத்த 4 அல்லது 5 நாட்களில் இந்த 'லார்வாக்கள்' பியூப்பா எனப்படும் கூட்டுப்புழுக்களாக மாறுகின்றன. அதற்கு அடுத்த 4 அல்லது 5 நாட்களில் 'பியூப்பாக்கள்' முழு வளர்ச்சி பெற்ற ஈக்களாகி பறந்து விடுகிறது. இதனடிப்படையில் மரணம் நிகழ்ந்த நேரத்தை தோராயமாக கணிக்கலாம்.
1. சடலத்தின் மீது ஈக்களின் முட்டைகள் காணப்பட்டால் மரணம் சுமார் 36 மணி நேரத்துக்கு முன்னர் நிகழந்திருக்க வேண்டும்.
2. சடலத்தின் மீது லார்வாக்கள் காணப்பட்டால் மரணம் நிகழ்ந்து 60 மணி நேரம் ஆகியிருக்கலாம்
3. சடலத்தின் மீது 'பியூப்பா' எனப்படும் கூட்டுப்புழுக்கள் காணப்பட்டால் மரணம் 6 நாட்களுக்கு முன்பு நிகழந்திருக்க வேண்டும். பொதுவாக மரணம் நிகழ்ந்து 2 நாட்களுக்கு பின்னர் சடலத்தின் மீது லார்வாக்கள் தோன்றுகின்றன. பின்னர் அவை பியூப்பாவாக மாற 4 தினங்கள் பிடிக்கின்றன.
4. சடலத்தின் மீது முழு வளர்ச்சி அடைந்து ஈக்களாகி பறந்து விட்ட பியூப்பாக்களின் காலியான வெளி ஓடுகள் மட்டுமே இருப்பின் மரணம் நிகழ்ந்து குறைந்தது 10 நாட்கள் ஆகி இருக்க வேண்டும்.
5. இறப்பு நேர்ந்த பின் 3 நாட்கள் கழித்து நகங்கள் பிடிமானம் இழந்துவிடும்.
6. அதேபோல் இறப்பு நிகழ்ந்து 4 நாட்கள் கழித்து பற்கள், ஈறுகளின் பிடிமானத்தை இழந்து ஆடத் தொடங்கும்.
7. சடலத்தின் மூளைப் பகுதி திரவமாக மாறி விட்டிருந்தால், இறப்பு நிகழ்ந்து 5 நாட்கள் ஆகி இருக்க வேண்டும்.
8. மரணம் நிகழ்ந்து 12 க்கும் 14 க்கும் இடைப்பட்ட நாட்களில் சடலத்தின் உள்ளே பாக்டீரியா நுண்ணுயிரிகளால் உருவாக்கப்படும் வாயுக்களால், வீக்கம் உச்சகட்டத்தை அடைந்து வயிறு வெடித்து விடும்.
9. மரணம் நிகழ்ந்த பிறகு உடலின் தசைகளில் ஏற்படும் இரசாயன மாற்றங்களின் விளைவாக தசைகள் சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடும். இந்த நிலை மரணம் நிகழ்ந்த மூன்றிலிருந்து 6 மணி நேரத்திற்குள் முழுமை அடையும்.
10. ஆனால் நம் நாட்டில் வெப்பம் அதிகமாக இருப்பதால் 2 அல்லது 3 மணி நேரங்களில் மரண விறைப்பு நிலை ஏற்பட்டுவிடும்.
11. குளிர் காலங்களில் விறைப்பு நிலை 24 முதல் 28 மணி நேரம் வரையிலும், கோடை காலத்தில் 18 லிருந்து 36 மணி நேரம் வரையிலும் நீடிக்கும்.
12. பிரேத பரிசோதனையின் போது உடல் விறைப்பாகவும், அதன் தலையை, மார்பை நோக்கி வளைக்க முடியாத நிலையிலும் இருந்தால், மரணம் பிரேத பரிசோதனை செய்யப்படும் நேரத்திலிருந்து 6 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பாக நிகழ்ந்து இருக்க வேண்டும்.
13. அசைவ உணவு அதிகமாகவும், காய்கறிகள் குறைவாகவும் சாப்பிட்ட உணவு 4 லிருந்து 5 மணி நேரத்திற்குள் முழுமையாக செரிக்கப்பட்டு, கழிவுகள் ஜீரணப் பாதையை விட்டு வெளியேறிவிடும். சைவ உணவு 6 லிருந்து 7 மணி நேரத்திற்குள் முற்றிலுமாக ஜீரணிக்கப்பட்டு கழிவாக மாறிவிடும்.
14. படுக்கையில் இறந்து கிடப்பவரின் சிறுநீர்ப்பையில் சிறுநீர் நிறைய இருந்தால் அவர் படுத்த பின் சற்று நேரம் உயிரோடு இருந்திருக்கிறார் என்று அர்த்தம்.
15. சடலத்தின் சிறுநீர் பை காலியாக இருந்தால் அந்த நபர் காலையில் எழுந்து சிறுநீர் கழித்த பிறகுதான் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அர்த்தம்.
16. சடலத்தின் பெருங்குடலில் உணவு முற்றிலுமாக செரிக்கப்பட்டு மலமாக இருந்தால், அந்த நபர் காலைக் கடன்களை கழிப்பதற்கு முன்னர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அர்த்தம்.

நன்றி : முகநூல் நண்பர் வழக்கறிஞர் திரு Dhanesh Balamurugan

Tuesday, May 9, 2017

போட்டுக்கொடுத்தாரா பல்லாவரம் நகராட்சி அதிகாரி?

போட்டுக்கொடுத்தாரா பல்லாவரம் நகராட்சி அதிகாரி?
ஆர்டிஐ ஆர்வலர்களைப் போட்டுக்கொடுத்தாரா பல்லாவரம் நகராட்சி அதிகாரி?
விதிமுறைமீறல்கள், முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
கொடூரக் கொலை
சென்னையில் பாரஸ்மால் என்ற ஆர்டிஐ ஆர்வலர், கட்டட விதிமுறைகள் குறித்து ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டார். இந்தத் தகவல்கள் சம்பந்தப்பட்ட பில்டருக்குத் தெரிந்துவிட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாரஸ்மால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ஆர்டிஐ மூலம் விண்ணப்பித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட பில்டருக்குத் தெரிந்தது எப்படி என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விதிமுறை மீறல் கட்டடம்
இது ஒருபுறம் இருக்க குரோம்பேட்டை ராதா நகரிலுள்ள ஒரு குடியிருப்பில் கார் பார்க்கிங் பகுதிக்கு ஒதுக்கிய இடத்தில் கட்டடம் கட்டி இருக்கிறார்கள்.
இது குறித்து அந்தப் பகுதியிலுள்ள அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் மனோகரன் மற்றும் 5 பேர் பல்லாவரம் நகராட்சிக்கு ஆர்.டி. மூலம் தகவல் கேட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட கட்டடத்தில் பிளான், அப்ரூவல் நகல் ஆகியவற்றை அனுப்பும்படி கேட்டிருக்கின்றனர். ஏறக்குறைய பல மாதங்களுக்குப் பின்னும் ஆர்.டி. கேள்விகளுக்கு பல்லாவரம் நகராட்சி பொதுத்தகவல் அலுவலர் உரிய பதிலளிக்கவில்லை.
ஆர்வலர்களுக்கு மிரட்டல்
இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.டி. விண்ணப்பம் செய்த ஒருவரின் வீட்டுக்கு வந்த சிலர், 'என்ன எங்க பில்டர் பத்தி புகார் சொல்றீங்களா. தொலைச்சுப்புடுவோம். ஜாக்கிரதை' என்று மிரட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர். ஆர்.டி. போட்ட இன்னொருவர் பெண். பெண்கள் விடுதியில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வருகிறார். அவருடைய விடுதிக்குச் சென்ற சிலர், அந்தப் பெண்ணோடு தங்கியிருக்கும் இன்னொரு பெண்ணிடம் செல்போனை வாங்கி சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு போன் செய்தனர். 'என்னம்மா ஆர்.டி.- போட்டு கேள்வி கேட்கிறாயா? உனக்கு வேலை வெட்டி இல்லையா . இனிமேல் அதுமாதிரி எல்லாம் செய்யாதே' என்று மிரட்டி இருக்கின்னர். அதில் அந்தப் பெண் பயந்து போயிருக்கிறார்.
தகவல் எப்படி லீக் ஆகிறது?
இது குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் மனோகரனிடம் பேசினோம்.
"நான் இந்த பகுதியில் உள்ள கட்டட விதிமுறைகள் குறித்த நிறைய மனுக்கள் செய்திருக்கிறேன். 12 கட்டடங்கள் விதிமுறையை மீறி இருப்பதாக சிஎம்.டி. வுக்குக் கடந்த 2015 டிசம்பரில்-ல் விண்ணப்பம் போட்டேன். அவர்கள் 12 கட்டடங்களை ஆய்வு செய்து பல்லாவரம் நகராட்சியிடம் நடவடிக்கை எடுக்கும்படி சொன்னார்கள். சி.எம்.டி.-விலிருந்து பல்லாவரம் நகராட்சிக்கு 4 முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பி விட்டனர்.
ஆனால், அதன்பிறகும் 12 கட்டடங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இது மட்டுமில்லை. ஒரு குறிப்பிட்ட சாலையில் சாலை போடும் பணியில் விதிமுறை மீறல் இருந்தது தெரியவந்தது. அது குறித்து பல்லாவரம் நகராட்சியிடம், சாலை போடும் பணி யாருக்குக் கொடுக்கப்பட்டது என்று தகவல் கேட்டோம். உடனே அரசியல்வாதிகள், கவுன்சிலர், ஒப்பந்ததாரர்களிடம் சொல்லி விட்டனர். அவர்கள் வந்து எங்களை மிரட்டினர். மிரட்டி விட்டால், ஆர்.டி. போடமாட்டார்கள் என்று அவர்கள் கருதுகின்றனர். நீர் நிலைகள் ஆக்கிரமிப்புப் பற்றி கேட்டதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி ஆக்கிரமிப்பாளர்களிடம் சொல்லிவிட்டார். அவர்கள் ஆர்.டி. மனுப்போட்டவரை மிரட்டினர். இப்போது, குரோம்பேட்டை ராதா நகரிலுள்ள கட்டடம் குறித்து மார்ச் 17-ம் தேதி ஒரு ஆர்.டி. போட்டேன். கட்டடத்தை முறையாக ஆய்வு செய்தீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தேன். கட்டடத்தின் பிளான் நகல் தரும்படியும் கேட்டிருந்தேன். ஏப்ரல் 10 வரை பதில் வரவில்லை. இதே போல மேலும் 2 பேர் மனு செய்திருந்தனர்.
பதில் வரவில்லை என்பதால் அறப்போரிலிருந்து மேலும் 3 பேர் மனுப்போட்டனர் . 14-ம் தேதி வணிக வளாகத்தில் கட்டடம் திறக்கப்பட்டது. ஆர்.டி. போட்ட இரண்டு மிரட்டி இருக்கின்றனர்.
ஆர்.டி. விண்ணப்பம் குறித்த தகவல்களை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்பது விதிமுறை. ஆனால், பல்லாவரம் பொதுத் தகவல் அதிகாரிக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் இருந்த முகவரி எப்படி சம்பந்தப்பட்ட பில்டரிடம் கொடுக்கப்பட்டது. இது பொதுத்தகவல் அதிகாரியைத் தவிர வேறு யாரும் இது போல செய்திருக்க முடியாது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் புகார் செய்திருக்கிறோம்" என்றார்.
விசாரணை நடக்கிறது
இது குறித்து பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு திட்ட அலுவலர் சிவக்குமாரிடம் கேட்டோம்.
"ஆர்.டி. மனு செய்தவர் பற்றி நான் யாரிடமும் கூறவில்லை. அது தவறான தகவல். இது குறித்து புகார் கொடுத்திருக்கின்றனர். உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். என்னுடைய தரப்பிலிருந்து அந்த தகவல் சொல்லப்படவில்லை. உரிய விசாரணைக்குப்
பின்னர்தான் யார் தவறு செய்தார்கள் என்பது தெரியவரும்" என்றார்.
கே.பாலசுப்பிரமணி
நன்றி : விகடன் செய்திகள் - 09.05.2017