disalbe Right click

Showing posts with label தொழில் தொடங்கலாம் வாங்க. Show all posts
Showing posts with label தொழில் தொடங்கலாம் வாங்க. Show all posts

Tuesday, June 27, 2017

15: நல்லது மட்டுமல்ல, புத்திசாலித்தனமும்கூட!

15: நல்லது மட்டுமல்ல, புத்திசாலித்தனமும்கூட!

எதையும் முறைப்படி செய்வது நல்லது. முதலில் எப்படியாவது தொழில் தொடங்கினால் போதும் என்று இருக்கும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற மனோபாவம் மேலோங்கி நிற்கும். குறிப்பாக இரண்டு விஷயங்களில் தவறு செய்ய வாய்ப்புகள் உள்ளன.
தடபுடலான தொடக்கம்
ஒன்று உங்கள் தொழில் பற்றிய சட்ட திட்டங்களைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பது. அதற்கான ஆவணங்களைச் சரியாகப் பெறாமல் இருப்பது. இப்போதைக்கு இது போதும் என முடிவெடுத்துச் செயல்பட ஆரம்பிக்கும்போது திடீரென ஒரு நோட்டீஸ் வந்து உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
நண்பர் ஒருவர் சென்னையின் மிக நவ நாகரிகப் பகுதி ஒன்றில் ஒரு குளிர்பானக் கடை தொடங்கத் திட்டமிட்டார். ஒரு முக்கியச் சாலையில், ஒரு வீட்டின் முன் பகுதியை வாடகைக்கு எடுத்தார். வீட்டுக்காரருக்கும் அரசாங்கம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்கானவர். பல ஆண்டுகளாக அங்கு இருப்பதால் மிகவும் பிரபலமானவரும்கூட. நல்ல வாடகை, அதிகச் சிக்கல் இல்லாத தொழில், படித்தவர் ஆரம்பிக்கிறார் என்று முழு ஆதரவு தந்தார். நண்பரும் மொத்த முதலீடும் செய்தார். இதற்காக வீட்டை மாற்றி, கடை அருகிலேயே புது வீடு புகுந்தார். தடபுடலாக நண்பர்களை அழைத்துத் தொழில் தொடங்கினார்.
இரண்டுமே கடினம்தான்!
சரியாக மூன்றாம் நாள் மாநகராட்சி ஆட்கள் வந்தார்கள். குடும்பங்கள் வாழும் பகுதியில் கடை நடத்த ஆட்சேபம் தெரிவித்து அங்கிருந்த குடியிருப்போர் சங்கம் புகார் தெரிவித்திருந்தது. சாலை நடை பாதை ஆக்கிரமிப்பு உட்படப் பல பிரிவுகளில் புகார்கள் இருந்தன. விசாரிக்கையில் அந்த வீடே அனுமதியின்றி விதிகள் மீறிக் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. நண்பரும் வீட்டுக்காரரும் நடையாய் நடந்தார்கள். எல்லா வழிகளிலும் முயன்றார்கள். பின்னணியில் வீட்டுக்காரருக்கு ஆகாத ஒரு காவல்துறை அதிகாரி செயல்படுவது தெரிந்தது. எதுவாயிருப்பின் என்ன? நண்பர் கடையை மூடினார். பெருத்த நஷ்டம். பின்னர் அதேபோல இடம் தேடி, குடும்பத்தைப் பழைய இடத்துக்கு மாற்றுவதற்குள் உயிர் போய் உயிர் வந்தது.
நீங்கள் தொழில் செய்ய யாருடைய ஆட்சேபணையும் இருக்கக் கூடாது. குறிப்பாக நீங்கள் சிறு தொழில் தொடங்குபவராகவோ அல்லது முதல் முறை தொழில் தொடங்குபவராகவோ இருந்தால் ஒரு முறைக்குப் பல முறை அனைத்தும் சரியாக உள்ளனவா என்று பார்த்துப் பின் முதலிடுவது நல்லது.
இந்தியாவில் தொழில் தொடங்குவது, அதைத் தொடர்ந்து நடத்துவது இரண்டுமே கடினமான காரியங்கள். Ease of Doing Business Index என்று ஒன்று உண்டு. எந்தெந்த நாடுகளில் தொழில் தொடங்குவது, நடத்துவது எளிது என்ற பட்டியல் இது. 160 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 130-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இப்போது புரிகிறதா இங்கு தொழில் செய்ய ஏன் இவ்வளவு சிரமங்கள் என்று?
ஆவணங்களைப் பாதுகாக்கவும்
அதனால் தொழில் தொடங்குவதற்கு முன் அனைத்து அரசாங்க சட்டத் திட்டங்கள் அறிந்து தகுந்த ஆவணங்கள் பெறுதல் முக்கியம். அதே போல என்னென்ன மாதாந்தர வருடாந்தர அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிந்துகொள்ளுங்கள். அலுவலகத்தில் இருக்க வேண்டிய சான்றிதழ்கள் என்னென்ன? தொழிலாளர் வருகைப்பதிவு போன்றவை நமக்காக மட்டுமல்ல. தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் வந்து சோதனையிடலாம். அதனால் தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் சரிவரப் பாதுகாத்துச் சமர்ப்பிப்பது நல்லது.
சட்டத்துக்குச் சின்ன வகையில்கூடப் புறம்பாகச் செயல்படாமல் இருப்பது நல்லது மட்டுமல்ல, புத்திசாலித்தனமும்கூட.
அடுத்த விஷயம், நிதி தொடர்பானது. உங்கள் வியாபாரத்துக்கான முதலீடு எங்கிருந்து வந்தது என்பது முதல் நிதி தொடர்பான எல்லாப் பரிமாற்றங்களையும் தகுந்த ஆதாரத்துடன் ஆவணப்படுத்துங்கள். வரி ஏய்ப்பு செய்யக் கறுப்பு பணத்தில் பரிமாற்றங்கள் நடத்தினால் என்றுமே ஆபத்துதான்.
பலர் தங்கள் லாபத்தைக் குறைத்துக் காண்பிப்பதையும், வங்கிக் கணக்குக்குப் பணம் வராமல் பார்த்துக்கொள்வதையும் சாமர்த்தியம் என்று நினைக்கின்றனர். இது குறுகிய காலச் சிந்தனை. உங்கள் வியாபாரத்தைப் பெருக்க நினைத்தால் இது உதவாது.
நீங்கள் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுவந்து, உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்து, லாபக் கணக்கு எழுதினால் தான் உங்கள் நிறுவனத்தின் மதிப்பீடு பெருகும். வங்கிக் கடன் தாராளமாகக் கிடைக்கும். வெளி முதலீட்டாளர்கள் வருவார்கள். உங்கள் தொழில் பெருகும்.
நாணயமாக இருந்து என்ன பயன்?
ஆனால், குறுகிய காலத்தில் வரிகள் உங்களை வாட்டியெடுக்கலாம். பணத் தட்டுப்பாடு வரலாம். உங்கள் நலம் விரும்பிகள் ‘பேசாமல் கறுப்பில் பரிமாற்றம் செய்’ என்பார்கள். இவ்வளவு நாணயமாக இருந்து என்ன பயன் என்று உங்களுக்கே தோன்றலாம்.
இதே அளவில் தொழிலில் இயங்க இந்தச் சிந்தனை உதவலாம். பன்மடங்காகப் பெருக உதவாது. வங்கிகள், வெளி முதலீட்டாளர்கள், தொழில் துறை நண்பர்கள் உங்கள் தொழிலைப் பரிசீலனை செய்ய உங்களுக்குப் போதிய சான்றுகள் வேண்டும்.
99 சதவீதத்தினர் தங்கள் வியாபாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயல்கின்றனர் அல்லது ஓரளவுக்கு உயர்த்துகின்றனர். 1 சதவீதத்துக்கும் குறைவானோர்தான் வியாபாரத்தைப் பன்மடங்காகப் பெருக்குபவர்கள். அவர்கள் அரசாங்கத்தையும் நிதி நிர்வாகத்தையும் சரியாகக் கையாளத் தெரிந்தவர்கள் என்பதுதான் உண்மை.
லாபத்தை மறைத்து நஷ்டக் கணக்கு எழுதுவதை விட லாபத்தைக் காட்டித் தொழிலைப் பெருக்குவதுதான் வியாபாரச் சூட்சமம்.
நம் பெரும்பாலான வியாபாரத் தவறுகள் பயத்தாலும் பேராசையினாலும் செய்யப்படுபவை. வரி ஏய்ப்புகள், அரசாங்க விதி மீறல்கள், கறுப்புப் பண நடமாட்டம் இவை யாவும் தொழில் தொடங்குவோர் கவனமாகத் தவிர்க்க வேண்டிய தவறுகள்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 16.05.2017

14: திட்டத்தை எழுதுங்கள்!

14: திட்டத்தை எழுதுங்கள்!

இதுதான் தொழில் என்று முடிவு செய்துவிட்டீர்கள். ஓரளவு ஆராய்ச்சி செய்துவிட்டீர்கள். அடுத்தது என்ன? நல்ல தொழில் திட்ட அறிக்கை ஒன்று தயார் செய்யுங்கள். பிசினஸ் பிளான் எழுதுவது கடன் வாங்க மட்டுமல்ல. உங்கள் எண்ணத்தைத் தெளிவுபடுத்தவும்தான்.
இது பிசினஸ் பிளான் அல்ல!
என்னைப் பொறுத்தவரை பிசினஸ் பிளான் எழுதுவது திரைக்கதை எழுதுவது போலத்தான். மனதில் உள்ள கதையை நம் பார்வைக்குக் காட்சிவாரியாக வரிசைப்படுத்தித் தெளிவாகச் சொல்வது திரைக்கதை. அதே போல பிசினஸ் ஐடியாவைச் செயல்முறையில் வடிவமைத்துத் தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் தெளிவாகச் சொல்வது பிசினஸ் பிளான்.
எதையும் யோசிக்கையில் சுலபமாக இருக்கும். பார்வைக்குப் பகட்டாக இருக்கும். உட்கார்ந்து எழுதினால் நிதர்சனங்கள் புலப்படும். “இந்த ஏரியாவில் செம்ம கூட்டம். ஒரு டிஃபன் சென்டர் போடலாம். ஒரு ஆள் 50 ரூபாய்க்குச் சாப்பிட்டாக்கூட ஒரு நாளைக்கு 20,000 ரூபாய்க்கு விற்பனையாகும். நல்ல லாபம் பார்க்கலாம்” என்று தோராயக் கணக்குப்போடுவது பிசினஸ் பிளான் அல்ல.
அடுக்கடுக்காகக் கேள்விகள்
எவ்வளவு முதலீடு தேவைப்படும்? எத்தனை தொழிலாளிகள் வேலைக்குத் தேவைப்படுவார்கள்? தொழிலாளிகள் தொடர்ந்து கிடைக்க என்ன வழி? செலவு போக லாபம் எவ்வளவு நிற்கும்? உங்களின் நேரடி மேற்பார்வை எவ்வளவு நேரம் தேவைப்படும்? நீங்கள் இல்லாவிட்டால் யார் பார்ப்பார்கள்? ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள் கடை இருக்கும்? போட்டியாளர்கள் யார்? கடை வாடகைக்கு உள்ளது என்றால் மாற்ற வேண்டிவந்தால் என்ன செய்ய? சாலையோரக் கடை என்றால் சாலை விரிவாக்கத்தில் அடிபடுமா? இந்தக் கடை சார்ந்த அனைத்து அரசாங்க விதிகளும் உங்களுக்குத் தெரியுமா? போட்ட முதலீடு எத்தனை மாதங்களில்/ வருடங்களில் திரும்பக் கிடைக்கும்?
வங்கிக் கடன் கிடைக்குமா? அதற்கான தகுதி உள்ளதா? அல்லது வேறு ஏற்பாடு என்ன? மாதந்தோறும் கட்ட வேண்டிய கடன் எவ்வளவு? வருமானத்தில் கடனும் செலவும் போனால் நிற்கின்ற லாபத்தில் குடும்பம் நடத்த முடியுமா? அதற்கு வேறு ஏற்பாடு செய்தால் அதன் பாதிப்பு உங்கள் தொழிலில்/ வாழ்க்கையில் உண்டா? எத்தனை வருடங்கள் இந்தத் தொழிலை நடத்த எண்ணம்? நிர்வாகத்தில் உங்களுடன் பங்கு கொள்ளப்போவது யார்? இந்தத் தொழிலை விட்டு அடுத்த தொழிலுக்குப் போக நினைத்தால் இதை நல்ல விலைக்கு விற்க முடியுமா? லாபத்துடன் வெளியேற முடியுமா?
இதை எல்லாம் நீங்களும் நினைத்து வைத்திருப்பீர்கள். ஆனால் எழுத்தில் நிரப்பப்பட்ட அறிக்கை உள்ளதா? எழுதியதை மாற்றலாம், திருத்தலாம். ஆனால் ஆதார அறிக்கை ஒன்று அவசியம் வேண்டும். இப்படி எழுதுவதால் பல நஷ்டங்களை ஆரம்பக் காலத்திலேயே தவிர்க்கலாம்.
சிற்றூரில் நடக்குமா?
சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் தொழில் ஆலோசனைக்கு வந்தார். ஒரு சின்ன ஊரில் திருமண ஒப்பந்தக்காரர் ஆக அவருக்கு ஆசை. முதல் உள்ளது. சொந்தமாக இடம் உள்ளது. தெரிந்த மக்கள். மனைவியும் ஒத்தாசையாக இருக்கிறார். சொந்தக்காரர்களின் திருமணங்களை நடத்திவைத்தாலே நல்ல காசு பார்க்கலாம் என்றார். திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் குறைந்த செலவில் செய்துதரலாம் என்றார். மண்டபம், பத்திரிகை, சாப்பாடு, அலங்காரம், ஃபோட்டோ, வீடியோ என்று கட்டு சாப்பாடு வரை செய்யலாம் என்று பட்டியல் இட்டார். பெரிய நகரங்களில் இது பெரிய இண்டஸ்ட்ரியாக வளர்ந்து வருகிறது. ஆனால் அவர் வசிக்கும் சிற்றூரில் நடக்குமா? அதனால் பிசினஸ் பிளான் எழுதச் சொன்னேன். ஒரு மாதம் கழித்து விரிவாக எழுதி வந்தார்.
எழுதும்போதே பல தெளிவுகள் வந்தது அவருக்கு. பெரிய ஆஃபீஸ் போட்டு வாடிக்கையாளர்கள் பிடிக்கலாம் என்ற எண்ணம் மாறியிருந்தது. முதலீடு பணமாக அதிகம் வேண்டாம். சரியான முயற்சிகள்தான் தேவை எனப் புரிந்துகொண்டார். பின்னர் நான் பரிசீலிக்கையில் அவர் தன் தொழிலை B2C (Business to Consumers), அதாவது நுகர்வோரை நேரடியாகத் தொடர்புகொண்டு செய்யும் வணிகம் மாடலில் வடிவமைத்திருந்தார். நான் B2B (Business to Business), அதாவது தொழில் நிறுவனங்களுடன் தொழில் புரிவது எனும் வணிகம் செய்யலாம் என்று சொன்னேன்.
மனமாற்றம் தொழிலைக் காப்பாற்றியது
கல்யாணம் முடிவான குடும்பங்கள்தான் வாடிக்கையாளர்கள் என்று நினைத்தவருக்குக் கல்யாண மண்டப முதலாளிகள்தான் (பல இடங்களில் மேலாளர்கள்தான்!) வாடிக்கையாளர்கள் என்பது புரியவந்தது. ஆஃபிஸுக்குக் கொடுத்த அட்வான்ஸைச் சந்தோஷமாகத் திருப்பி வாங்கிக்கொண்டார். கல்யாணத்துக்கு வேலை / சேவை செய்யும் அனைத்து வியாபாரிகளிடமும் தன் வியாபாரத்தை அறிமுகப்படுத்தினார். இந்த மாடலில் ஒரு ஊர் என்று சுருங்கத் தேவையில்லை என்று புரிந்து கொண்டு மாவட்டத்தில் உள்ள எல்லா மண்டபங்களுடனும் ஒப்பந்தம் போட்டார்.
தானே இறங்கி வேலை செய்து விலையைக் குறைக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து மாறித் தரமான சேவையைச் சற்று அதிக விலைக்குக் கொடுக்கலாம் என்ற நிலைக்குவந்தார். இந்த மன மாற்றம் அவர் தொழிலைக் காப்பாற்றியது. முதலாண்டு செலவுக்கு இரண்டு லட்சம் என்று எடுத்து வைத்திருந்தவர் ஒரு ப்ரீ பெய்ட் மொபைலையும் மோட்டார் பைக்கையும் வைத்து வெற்றிகரமாகத் தொழிலை ஆரம்பித்தார்.
தொழில் திட்டத்தை எழுதுங்கள். ஆயிரம் கேள்விகள் வரும். சில கேள்விகளுக்கு விடை தெரியும். பல கேள்விகளுக்கு விடை தெரியாது. ஆனால் இந்தக் கேள்விகளைத் தொழில் தொடங்கும் முன் கேட்பது நல்லது. ஒரு தொழில் இப்படித்தான் நடக்கும் என யாராலும் சொல்ல முடியாது. ஆனால் தொழில் பற்றிய முதலீட்டு முடிவுகள் எடுப்பதற்கு முன் ஆயிரம் கேள்விகள் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 09.05.2017

13: சம்பாதிப்பதைச் சேமிக்கிறோமா?

13: சம்பாதிப்பதைச் சேமிக்கிறோமா?

உயிர் வாழ மூச்சு காத்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பணம். தொழில் தொடங்க, தொடர்ந்து நடத்த, தொழிலை முடிவுக்குக் கொண்டுவர என எல்லா நிலைகளிலும் பணம் தேவை. அதனால் நிதி பற்றிய அறிவும் முக்கியமாகிறது.
நுகர்வோர் சந்தையின் நிஜம்!
நம்மில் பலர் நீட்டிய பக்கத்திலெல்லாம் கையெழுத்து போடும் மனோபாவம் கொண்டவர்கள்தான். ஒரு கடனுக்கு விண்ணப்பித்தால்கூடக் கத்தை கத்தையாய்த் தாள்கள் கொடுத்துக் கையெழுத்து வாங்குவார்கள். சுழித்த இடங்களில் கையொப்பம் இடுவதற்கு முன்னால் அதைப் படித்துப் பார்க்கும் மனோபாவம் வேண்டும். கேள்விகள் கேட்க வேண்டும். புரியாதது நம் தவறில்லை. முட்டாளாகத் தெரியக்கூடாது என்று கேள்வி கேட்பதை நிறுத்தாதீர்கள். கேள்வி கேட்பது முட்டாள்தனம் அல்ல. தவறாக முடிவு செய்வதும், தகவல் இல்லாமல் முடிவு செய்வதும்தான் முட்டாள்தனம்.
இன்னொரு மனோபாவம் ஆபத்தானது. பணம் கிடைத்தால் வாரியிறைத்துச் செலவு செய்யலாம் என்பதுதான் அது. இன்றைய இளைஞர்கள் சேமிப்பதைவிட சம்பாதிப்பதிலும் செலவு செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அமெரிக்க வாழ்வியல் பாதிப்பு இன்று நம்மைக் கடன் கலாசாரத்துக்குத் தள்ளிவிட்டது. இருபது வருடங்களுக்கு முன்னால் வசதியல்லாதவர்கள் மளிகை கடைகளில் நோட்டு போட்டுக் கடன் சொல்லிப் பொருள் வாங்குவார்கள். இன்று வசதி படைத்தோர், இல்லாதோர் அனைவரும் கிரெடிட் கார்டில் (கடன் அட்டையில்) பொருள் வாங்கிப் பிறகு கடன் கட்டும் வழக்கத்துக்கு வந்துவிட்டோம். அதனால் பணம் இல்லாமல் (பல நேரங்களில் தேவைகூட இல்லாமல்) பொருள் வாங்குவது இன்றைய நுகர்வோர் சந்தையின் நிஜம்.
ரெண்டு யானை கொடுங்க!
ஒருவர் யானை விற்க வந்தாராம், வாடிக்கையாளர் சாதா சம்பளக்காரர். “எனக்கு எதற்கப்பா யானை? தவிர இதற்குத் தீனி போட்டு வளர்க்க, பணம், இடம், நேரம் எதுவுமே இல்லை. அதனால் வேண்டாம்!” என்றாராம். விற்பனை சிப்பந்தியோ யானையின் பெருமைகளை எடுத்துரைத்தார். “இந்த யானைக்கு மீதமுள்ள சோறு போட்டால் போதும். தெருவிலேயே விட்டுவிடலாம். எல்லோரும் யானையைப் பார்த்துக் காசு போடுவார்கள். யானைச் சாணத்தை விற்கலாம்…” என்றெல்லாம் சொன்னபோது மசியாதவர் கடைசியில் இதைக் கேட்டதில் விழுந்துவிட்டாராம். “சார், இப்போ பணம் எதுவும் கட்ட வேண்டாம். சுலபத் தவணை (ஈ.எம்.ஐ.) உண்டு. எப்ப முடியலைன்னாலும் ‘பே பேக்’ பாலிசியில் பாதி விலைக்கு எடுத்துக்குறோம்!”
“அப்ப ரெண்டு யானை கொடுங்க சார்!”
இந்தக் கடன் வாங்கிச் செலவு செய்யும் மனோபாவம் தொழிலுக்குக் உதவாது. தொழிலுக்கு கடன் வாங்கினால், கடன் கட்டும் தொகைக்கு மேல் பன்மடங்கு வருமானம் வரும் என்றால்தான் கடன் வாங்க வேண்டும். அதற்கு நுட்பமான நிதி அறிவு வேண்டும். எல்லாப் பெரிய நிறுவனங்களும் தொழிலுக்குக் கடன்வாங்குவதற்கு முன் அதன் நிதி மேலாளர்களைக் கொண்டு தீவிர ஆய்வு மேற்கொள்கின்றன. கடன், வட்டி, வருமானம், சந்தைப்போக்கு என அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் தான் கடன் பெறுகின்றன.
சிறிதாகத் தொழில் ஆரம்பிப்பவர்களும் இதைச் செய்ய வேண்டும் என்பதுதான் எனது அறிவுரை. ரூபாய் ஐம்பது லட்சம் மூலதனம் போட்டு மேலும் தேவைக்குத் தொழில் கடனில் வியாபாரத்தை ஆரம்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். எப்போதிலிருந்து லாபம் சம்பாதிக்க ஆரம்பிப்பீர்கள், எப்போது கடன் முடியும், எதிர்பாராத சூழல் வந்தால் அதற்கு மாற்றுத்திட்டங்கள் என்பதை முதலிலேயே யோசிக்க வேண்டும்.
தவறினால் இங்குப் பலருக்கு இருக்கும் ‘ரொட்டேஷன்’ வியாதி வந்துவிடும். இதை வாங்கி அதில் போட்டு, அதை வாங்கி இதில் போட்டு, சொந்தப் பணம், தொழில் பணம் எல்லாம் கரைந்து கடைசியில் கடனாளியாக்கும். தொழிலை ஒரு சூதாட்டமாக்கும். வெளியிலிருந்து பணம் கிடைத்தால் கரையேறலாம் என்ற தவறான மனப்போக்கைக் கொண்டுவரும். கடன் வாங்குவது பெரிதல்ல. கடனைத் தொழிலில் சரியாகச் செலுத்தி விரைவில் லாபம் பார்ப்பதுதான் திறமை.
உங்கள் தொழில் ஆரோக்கியத்தின் டாக்டர்
ஒரு நல்ல ஆடிட்டர் அனைவருக்கும் அவசியம். நாம் சொன்னதைச்செய்யும், வரியைக் குறைக்கும், கடன் வாங்க ஆலோசனை சொல்லும் ஆடிட்டர் போதும் என்பது தவறான அணுகுமுறை. உங்கள் தொழிலுக்குப் பணம் மூச்சு காற்று என்றால் அதைச் சீராக இயக்குகிறீர்களா என்று ஆய்வு மேற்கொள்ளும் அளவுக்கு உங்கள் ஆடிட்டர் செயலாற்ற வேண்டும். உங்கள் தொழில் ஆரோக்கியத்தின் டாக்டர் உங்கள் ஆடிட்டர்.
தொழிலின் ஆதாரம் நிதி என்றால் அந்த நிதியை நிர்வாகம் செய்யத் தெரிந்துகொள்வது ஒவ்வொரு தொழில் முனைவோரின் அத்தியாவசியத் தேவை. நிதியறிவு இல்லாமல் யாரும் ஜெயித்ததில்லை. அப்படியே ஜெயித்தாலும் நிலைத்ததில்லை!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 02.05.2017

12: மல்லையா அளவுக்குச் சிறு வியாபாரிகளை நம்புவதில்லையே!

12: மல்லையா அளவுக்குச் சிறு வியாபாரிகளை நம்புவதில்லையே!

யாரிடம் பணம் கேட்பது என்ற கேள்வி தொழில் தொடங்குவதில் முக்கியக் கேள்வி. முதல் போட்டால்தானே முதலாளி? முதலுக்கு எங்குப் போவது? யாரைக் கேட்பது? எப்படிக் கேட்பது? எவ்வளவு கேட்பது? இவை புதிதாகத் தொழில் யோசிப்போரை அலைக்கழிக்கும் கேள்விகள்.
வெறும் கை முழம் போடாது
பணம் இருந்தால் போதும் தொழில் செய்துவிடலாம் என்று நம்புவது எவ்வளவு மடத்தனமோ அதே போலப் பணமே இல்லாமல் தொழிலை ஆரம்பிக்கலாம் என்று எண்ணுவதும் மடமையே. விசிட்டிங் கார்ட் வைத்துக்கொண்டு ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் சேவைத் துறை தொழில்களுக்கும் முதல் தேவை.
அளவில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் வெறும் கை முழம் போடாது. பெரும்பாலும்! அதையும் மீறிப் போட்டவர்கள் இருக்கலாம். பல கிரிமினல் கதைகளில் இப்படி வெறும் கையால் முழம் போட்டு மேலே வந்தவர்கள் இருக்கலாம். ஆனால், உழைத்து வெற்றி பெறத் துடிக்கும் சிறு வியாபாரிகளுக்கு முதல் அவசியம் முதல்தான்.
தேவைப்படுவோருக்குப் போய்ச் சேர்கிறதா?
இந்தியச் சூழலில் தொழில் தொடங்குவது என்பது மிகவும் சிரமமான காரியம். பெரும்பாலான குடும்பங்கள் தொழில் என்றதும் பயப்படுவார்கள். தொழில் கடனுக்கு வங்கிகளை அணுகுவதில் பொது மக்களுக்குப் பெரும் தயக்கம் உள்ளது. தற்போது நிலைமை சிறிது மாறினாலும், வங்கிகள் என்றாலே கையை விரிப்பார்கள் என்ற எண்ணத்தைத்தான் அவர்கள் இதுநாள்வரை தோற்றுவித்துள்ளனர்.
சொல்லப்போனால் பல அரசாங்கத் திட்டங்கள் உள்ளன. ஆனால், அவை தேவைப்படுவோருக்கு முழுமையாகப் போய்ச் சேர்கிறதா என்றால் பதில் உங்களுக்கே தெரியும். தவிர அரசாங்க அலுவலகத்தில் சென்று ஒரு காரியம் முடிக்க வேண்டும் என்றால் நிறைய தனித்திறமைகள் தேவைப்படுகின்றன. அது முதல் முறையாகத் தொழில் முனைய நினைப்போரைச் சோர்வடையச் செய்துவிடும்.
சொல்லப்போனால் பல அரசாங்கத் திட்டங்கள் உள்ளன. ஆனால், அவை தேவைப்படுவோருக்கு முழுமையாகப் போய்ச் சேர்கிறதா என்றால் பதில் உங்களுக்கே தெரியும். தவிர அரசாங்க அலுவலகத்தில் சென்று ஒரு காரியம் முடிக்க வேண்டும் என்றால் நிறைய தனித்திறமைகள் தேவைப்படுகின்றன. அது முதல் முறையாகத் தொழில் முனைய நினைப்போரைச் சோர்வடையச் செய்துவிடும்.
வறுமையின் அபராதம்
இந்தக் காரணங்களால்தான் சொத்தை அடமானம் வைத்துத் தொழில் தொடங்குகிறார்கள் வசதி படைத்தவர்கள். நடுத்தர வர்க்கப் பாட்டு இதுதான்: “தங்கமே உன்ன நான் தேடி வந்தேன் நானே…” நலிந்த பிரிவினர் எல்லாம் அநியாய வட்டிக்கு அடிமையாகிவிடுகின்றனர். மறைந்த நிர்வாக மேதை சி.கே. பிரகலாத் இதை வறுமையின் அபராதம் என்று கூறுவார். அங்காடிகளில் முதல் புரட்டுபவர்கள் வாங்கும் கடனின் வருடாந்தர வட்டி சினிமா வட்டியை விடப் பன்மடங்கு அதிகம். காலையில் 900 ரூபாய் கொடுத்து மாலையில் 1000 ரூபாய் வசூலிப்பவர்கள் இருக்கிறார்கள். காலையில் கடன் வாங்கிப் பொருள் எடுத்து, நாள் முழுவதும் உழைத்து, விற்று, லாபத்தில் மாலையில் கடனை அடைக்கும் தினசரிச் சிறு வியாபாரிகள் இதனால் பலன் அடைகிறார்கள். அவர்கள் அன்றாட பிழைப்புக்கு வாங்கும் இந்த வட்டி விகிதத்தைக் கணக்கு போட்டுப் பாருங்கள். தலை சுற்றும்!
எது பெருமை?
இந்தியா முன்னேறச் சிறு மற்றும் குறு வியாபாரிகள் தழைக்க வேண்டும். உலகப் பணக்காரர்களில் முதல் நூறில் இந்தியாவின் பணக்காரர்கள் இருப்பது நமக்குப் பெருமை இல்லை. வறுமை நாடுகள் பட்டியலில் இந்தியா வெளியேற வேண்டும். அதுதான் பெருமை. அதற்கு ஒரே வழி சிறு தொழில் மேம்பாடுதான். வங்க தேசத்தில் பேராசிரியர் முகமது யூனஸ் கிராமீன் வங்கி (Grameen Bank) எனும் வங்கி மூலம் கடனுக்குத் தகுதியில்லாத நலிந்த பிரிவினருக்குக் கடனுதவி செய்து சாதனை படைத்தார். அதுவரை நிலவிவந்த ஒரு பெரும் பொய்யான பிம்பத்தை உடைத்ததுதான் என்னைப் பொறுத்த வரை நிஜமான சாதனை. பொருளாதார வசதி இல்லாதவருக்குக் கடன் தந்தால் திரும்ப வராது என்பதைப் பொய்யாக்கி ஏழை எளியவர்கள், மத்திய, மேல் தட்டு மக்களை விடக் கடன் தொகையைச் சரியாகத் திருப்பிக் கட்டுகிறார்கள் என்று வருடா வருடம் நிரூபித்தார். நம் நாட்டு வங்கி முதலாளிகள் மல்லையாவை நம்பும் அளவுக்குச் சிறு வியாபாரிகளை நம்புவதில்லை.
நம் கிராமங்களில் அபாரத் தொழில் எண்ணமும் ஆர்வமும் கொண்ட பலர் தொழில் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலர் பிழைப்புக்காக வேறு வேலைக்குப் போய்த் தங்கள் தொழில் ஆசையைத் தொலைத்துவிடுகிறார்கள். ஒரு கிராமத்துக்கு ஒருவர் நல்ல தொழில் புரிந்தாலே அந்தக் கிராமம் சுபிட்சம் பெறும். லட்சக்கணக்கான தொழிலதிபர்கள் வரும் அளவுக்கு இந்தியாவில் வளமும் சந்தையும் உள்ளது. இவர்களுக்குத் தேவை முதல் தொழிலுக்கான பயிற்சியும் ஊக்குவிப்பும் கடனுதவியும்தான்.
வணிகம் செய்யும் சவால்
கல்விக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வோம், வேலையே கிடைக்காவிட்டாலும். கல்யாணத்துக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வோம், அது வாழ்க்கைக்குப் பயன்படாவிட்டாலும். ஆனால், தொழில் செய்ய என்றால் முதல் கிடைப்பது மிகவும் சிரமம். இதுதான் நிதர்சனம்.
இதனால்தான் இங்கு தனியார் வங்கியில் தனிப்பட்ட கடன் (பர்சனல்லோன்) எடுப்பது. சீட்டு பணத்தைத் தள்ளி எடுப்பது, நகைகளை அடமானம் வைப்பது, சொத்துக்களை விற்பது எல்லாம் சகஜம். அவசரப் பணத் தேவைக்கு உள்ளவர்களை உறிஞ்சிக் கொழுக்கும் அமைப்புகள் செழிக்கின்றன. ஆனால், நல்ல தொழில் திட்டத்துக்கு நியாயமான வட்டியில் கடனுதவியும் கிடைப்பது அரிதாகிறது.
இந்த வறண்ட பூமியைப் பிளந்து வருவதுதான் வீரிய விதையின் சவால். தொழில் செய்பவர்களுக்கு எந்த வகையிலும் சலுகை காட்டாத சமூகத்தில் வணிகம் செய்யும் சவால் அது!
முடியாதது என்று எதுவுமில்லை. முடியும். முதலைப் பெறும் வெற்றிதான் தொழில் முனைவோரின் முதல் வெற்றி!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 25.04.2017

11: யாரைக் கண்டும் பயப்பட வேண்டாம்!

11: யாரைக் கண்டும் பயப்பட வேண்டாம்!

எதுவும் எழுத்து மூலம் இருக்க வேண்டும் என்று சொல்வது சட்டரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் மிக அவசியம்.
வெற்றிக்கான வழிமுறைகளில் ஒன்று உங்கள் இலக்கை எழுத்துக்களாய், எண்களாய் எழுதிவைப்பது. அதையும் ரகசியமாக வைக்காமல் வெளிப்படையாக்குங்கள். சுவரில் தொங்க விடுங்கள். வீட்டிலும் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். எண்ணத் தெளிவு வரும். வைராக்கியம் வரும். உங்களுக்கு இலக்கு நோக்கி நகரத் தேவையான ஊக்கம் கிடைக்கும்.
தொடர்ந்து கவனம் செலுத்த…
மாணவர்கள் முதல் நிறுவனங்கள் வரை பின்பற்றுகின்ற உத்தி இது. 490 / 500 மதிப்பெண்கள் என்று எழுதிப் படிக்கும் மேஜை மேல் ஒட்டி வைத்தால் அது படிக்க உட்காரும்போதெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். பல உற்பத்தி நிறுவனங்கள் தரத்துக்கு, உற்பத்திக்கு என்று ஒரு இலக்கை நிர்ணயித்து அதைப் பணியிடமெல்லாம் ஒட்டி வைத்திருப்பார்கள். அது அங்குள்ள அனைவரையும் ஊக்கமாகப் பணி செய்ய வைக்கும். விற்பனைத் துறையிலும் இதைப் பின்பற்றுவார்கள்.
நிதியாண்டு தொடக்கத்தில் ஒரு இலக்கை நிர்ணயித்து அதை மந்திரம் போல ஜெபிக்கத் தொடங்குவார்கள் வருடம் முழுவதும். ஒவ்வொரு மீட்டிங்கிலும் இது அலசப்படும். நினைவூட்டப்படும். சற்றுப் பதற்றம் அளித்தாலும் மனதை இலக்கில் தொடர்ந்து கவனம் செலுத்த இத்தகைய உத்திகள் பயன்படும்.
ஒரு ஐடியா கொடுங்கள் சார்!
இதை ஒவ்வொரு தொழில் முனைவோரும் பயன்படுத்தலாம். தொழில் தொடங்கும் முன்னரே தெளிவு பெற உங்கள் திட்டத்தை முதலில் எழுதிப் பாருங்கள். எப்படி எழுதுவது என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். ஒரு கதைபோலக்கூட எல்லாவற்றையும் விவரமாக எழுதுங்கள். பின் உங்கள் நெருங்கிய வட்டத்திடம் கொடுத்துப் படிக்கச் சொன்னாலே அவர்கள் சில தகவல்கள் இல்லாததைச் சுட்டிக் காட்டுவார்கள். ஓரளவு எல்லாத் தகவல்களும் வந்த பின் இதைச் சுருக்கி ஒரு பக்கத்தில் எழுத முடியுமா என்று பாருங்கள்.
என்னிடம் தொழில் பற்றி ஆலோசனை கேட்டு வரும் பல கேள்விகள் மிகவும் மேம்போக்காக வரும். “ நான் நாகப்பட்டினத்தில் இருக்கிறேன். என்ன தொழில் செய்யலாம்?” “மெயின் ரோட்டில் இடம் உள்ளது. என்ன செய்யலாம்? “வேலையில் நாட்டமில்லை. தொழில் பண்ண ஒரு ஐடியா கொடுங்கள் சார்!” “கோடி ரூபாய் வருமானம் வரும் தொழில்கள் என்னென்ன?” இவை அனைத்தும் தொழிலைப் பரிசீலிக்கும் ஆரம்ப நிலை எண்ணங்கள். இதற்கு ஆலோசனை சொல்வது கடினம்.
“இந்தத் தொழில், இவ்வளவு முதலீடு, இது என் அனுபவம், இந்தச் சந்தையில் இப்படிச் செய்யலாமா?” என்று எழுதினால் ஓரளவு தொழில் பற்றி யோசித்திருக்கிறார்கள் என்று புலப்படும். பின் ஒரு நல்ல தொழில் திட்டம் எழுதவைத்தால் அவர்களுக்குத் தொழில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
ஆலோசனை கேளுங்கள்
எழுதாமல் பேசிக்கொண்டே இருந்தால் தினம் ஒரு புது எண்ணம் வரும். யாருக்குமே முதலில் பல தொழில் எண்ணங்கள் வருவது இயற்கை. பல தொழில்களைப் பரிசீலிப்பதும் நியாயமானதுதான். ஆனால் ஒரு கால கட்டத்தில் “இதுதான் உகந்தது” என்று ஒன்றை முடிவு செய்து தொழில் திட்டம் எழுதுவது நல்லது. எழுதும் போதுதான் உங்களுக்குப் பல கேள்விகள் வரும். படிப்பவர்களுக்கும் பல கேள்விகள் வரும். தொடர்ந்து அந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடுவதும், திட்டத்தை மெருகேற்றுவதும் நடக்கும்.
உங்கள் திட்டத்தை மற்றவர்களிடம் படிக்கக் கொடுத்து ஆலோசனை கேளுங்கள். அவர்கள் நிபுணர்களாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் எதிர்மறை உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் பயப்படாதீர்கள். அவர்கள் சொல்கிற விஷயம் தர்க்கரீதியாக உள்ளதா என்று மட்டும் பாருங்கள். யாரைக் கண்டும் பயப்பட வேண்டாம். யாரையும் உதாசீனப்படுத்தவும் வேண்டாம். உங்கள் ஐடியா களவு போய்விடும் என்று பயப்படாதீர்கள். அப்படி ஒரு மனிதராக இருந்தால் அவர் இந்நேரம் பெரிய தொழிலதிபராக ஆகியிருப்பார். அப்படிக் களவு கொள்ளத் தக்க தொழில் திட்டம் ஒன்று கையில் இருந்தால் அதை விடச் சிறப்பான இன்னொரு தொழில் திட்டத்தையும் உங்களால் உருவாக்க முடியும். அதனால் கவலை வேண்டாம்.
சட்ட உதவியை நாடலாம்
“எனக்கு நம்பிக்கை இல்லை சார். ஆரம்பிக்கும்வரை யாரிடமும் சொல்ல மாட்டேன்!” என்கிறீர்களா? நீங்கள் தொழில் முறை ஆலோசகர்களிடம் செல்லலாம். “அவர்களும் என் ஐடியாவை யாருக்காவது விற்றுவிட்டால்?” அதற்கும் வழி உள்ளது. பெரிய நிறுவனங்கள் Non Disclosure Agreement என்ற ஒன்றில் கண்டிப்பாக ஆலோசகர்களிடம் கையெழுத்து வாங்குவார்கள். நீங்களும் அப்படி ஒன்றை (சட்ட உதவியுடன்) தயார் செய்து, அதை ஆலோசனையின்போது ‘இந்தத் தொழில் திட்டம் சம்பந்தப்பட்ட எந்தத் தகவலும் என் மூலம் வெளியே போகாது என்று உறுதியளிக்கிறேன்’ என வாங்கிக்கொள்ளலாம்.
ஆலோசனை பெறுவதன் நோக்கம் உங்கள் தொழில் திட்டத்தைத் திடமானதாக ஆக்குவது. சரி, எழுதலாம். அதற்கான படிவம் என்று ஏதாவது உண்டா? உண்டு. ஆனால் அதற்கு முன் ஒரு பால பாடம். உங்கள் ஒரு பக்கத் திட்டத்தில் இந்த 7 கேள்விகளுக்குப் பதில் உள்ளதா என்று பாருங்கள்.
என்ன? (What?)
ஏன்? (Why?)
யார்?/ யாருக்கு? (Who?/ Whom?)
எப்போது? (When?)
எங்கு? (Where?)
எப்படி? (How?)
என்ன கணக்கு? (How much?)
5W2H என்ற இந்தச் சின்னச் சூத்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு பக்கத் தொழில் திட்டம் தயார் செய்யுங்கள். பின் விரிவான திட்டம் தீட்டலாம்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 18.04.2017

Saturday, June 24, 2017

10: நண்பனாய் இருப்பது தகுதி அல்ல!

10: நண்பனாய் இருப்பது தகுதி அல்ல!

கல்யாணத்தில் ஜோடி சேர்வதைப் போலத்தான் வியாபாரத்தில் பங்குதாரரைத் தேர்வு செய்தல். பார்ட்னரைத் தேர்ந்தெடுத்தல் தொழில் ஆரம்பிக்கும்போது கவனமாகச் செய்ய வேண்டிய ஒன்று. முதலில் நீங்கள் உங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி: எதற்காக இந்தப் பார்ட்னர்ஷிப்?
வியாபாரமும் நட்பும் சிக்கலில்
தனியாக ஆரம்பிக்க பயமாக இருக்கிறது. கூட ஒரு ஆள் இருந்தா சவுகரியம். நல்லது கெட்டதில் சம பங்கு இருக்கும் என்று நினைத்தால் உங்களுக்குத் தொழில் பற்றிய பாதுகாப்பின்மை உள்ளது. வாரன் பஃபே பங்குச் சந்தை வெற்றிக்குச் சொல்வது என்னைப் பொறுத்தவரை எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும். அவர் சொல்வது இதைத்தான்: “உங்கள் முடிவுகள் பயத்தாலோ பேராசையினாலோ எடுக்கப்பட்டு இருந்தால் நீங்கள் வெற்றி பெற முடியாது!”
அதனால் பயத்தினால் பார்ட்னர் தேடுவது நல்லதல்ல. ஆனால் படிக்கும் காலம் தொட்டே நமக்குக் கூட்டாளிகளோடு இருப்பது இயல்புதான். நண்பர்கள் சேர்ந்து வியாபாரம் தொடங்குவதும் இப்படித்தான். ஆனால் நண்பர்களைக் கொண்டு தொழில் தொடங்குதல் உங்கள் வியாபாரம், நட்பு இரண்டையும் பாதிக்கக் கூடியது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் சுற்று வட்டாரத்திலேயே பார்த்திருப்பீர்கள் ஆரம்பித்துச் சில காலத்தில் பிய்த்துக் கொண்டு போவதை. நண்பர்களைத் தொழிலில் பங்குதாரராய்ச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதல்ல என் வாதம். நண்பர்கள் என்பது மட்டும் தகுதி ஆகிவிடக் கூடாது. அது தான் முக்கியம்!
முழு முதலாளி ஆகியிருக்கலாமே?
என் நண்பர் ஒரு சேவை நிறுவனம் ஆரம்பிக்க நினைத்தார். கையில் பணமில்லை. நண்பர் ஒருவர் உதவவந்தார். ரூபாய் ஐந்து லட்சம் வரை கொடுத்துப் பார்ட்னரானார். தடபுடலாக ஆஃபீஸ் போட்டு பப்ளிசிட்டி செய்தார்கள். மெல்லத் தொழில் வளர்ந்தது. முதலாமவர் முழு உழைப்பில் காசு வர ஆரம்பித்தது. எதிர்பாராத வகையில் முதல் வருட லாபமே ரூபாய் பத்து லட்சத்தை தொட்டது. இப்போது நம் நண்பர் எதற்கு அந்த நண்பரை பார்ட்னராய்ச் சேர்த்தோம் எனப் புலம்ப ஆரம்பித்தார். “ரூபாய் ஐந்து லட்சத்தைக் கடன் வாங்கிப் போட்டிருந்தால் முழு முதலாளி ஆகியிருக்கலாமே? இவர் ஒரு முறை முதலீடு செய்துவிட்டு வேலை செய்யாமல் லாபம் பார்க்கிறாரே” என்று பேச ஆரம்பித்துவிட்டார்.
“நான் அந்த நேரத்தில் கொடுத்து உதவாவிட்டால் இப்படி வளர்ந்திருக்க முடியுமா? தவிர, நஷ்டம் அடைந்தால் நானும் தானே பாதிக்கப்பட்டிருப்பேன்?” என்று எதிர் வாதம் செய்தார் அவருடைய நண்பர். சில காலத்தில், ஏகப்பட்ட மனக்கசப்புகள், கடன், கெட்ட பெயருடன் அவர்கள் பார்ட்னர்ஷிப் முறிந்தது.
அந்நியராகப் பாவிப்பது நல்லது
எதற்குத் தொழிலில் பங்குதாரர் வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பணத்தேவை என்பதற்காகவா, அவரின் நேரம் மற்றும் பங்களிப்புக்காகவா, அவரின் சிறப்புத் தகுதிக்காகவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். ஒரு நெடுங்காலத் திட்டம் அவசியம். இன்றைய தேவைக்கு என்று நிறைய பேரைச் சேர்த்துக் கொள்ள வேண்டாம். ஆட்கள் சேரச் சேர ஒருங்கிணைப்புக்கான நேரமும் சக்தியும் அதிகம் முதலீடு செய்ய வேண்டும்.
உறவினர்களைப் பங்குதாரர்கள் ஆக்குவதிலும் கவனமாக இருங்கள். காரணம் அங்கு வியாபாரத்துடன் உங்கள் குடும்ப உறவும் சேர்ந்து பாதிக்கப்படும். ஆனால் யாராக இருந்தாலும் அந்நியர் போலப் பாவித்துச் சில புரிதல்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.
வெற்றி நழுவியது ஏன்?
அதேபோல கம்பெனியில் பங்கு உரிமை உள்ளது என்பதற்காக நிர்வாகத்தில் தலையிட வேண்டிய அவசியமில்லை. எனக்குத் தெரிந்து பத்துப் பேர் சேர்ந்து ஆரம்பித்த ஒரு வியாபாரம், அவர்களில் ஒருவர் மட்டுமே நிர்வாகம் செய்யச் செழிப்பாக வருகிறது. அதிலும் நிர்வாக இயக்குநர் என அந்த ஒருவர் இருந்தாலும் தலைமை செயல் அதிகாரி என வெளியாள் ஒருவர் புரபெஷனலாக நடத்திக் கொண்டிருக்கிறார். அத்தனை பங்குதாரர்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தவறாமல் சந்தித்து வியாபாரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டி வைத்துப் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், வியாபார முடிவுகள் அந்த ஒருவரிடம்தான். அதை நடத்திக் கொடுக்க ஒருவர் இருக்கிறார். அவர் தலைமையில் நிர்வாகம் உள்ளது.
தமிழகத்தில் உள்ள சில பொறியியல் கல்லூரிகள் வெற்றியடையாமல் போனதற்குக் காரணம் பணம் போட்ட குடும்பத்தினர் நேரடியாக நிர்வாகத்தில் தலையிட்டதுதான்.
நிறுவன உறவுகள் முக்கியம்
என்னிடம் ஒரு பேராசிரியர் சொன்னார்: “மாதம் ரூபாய் மூன்று லட்சம் கொடுத்து ஒரு பெரிய பேராசிரியரைப் பணிக்கு அமர்த்த முடிகிறது இவர்களால். ஆனால் அவரை எப்படிச் சிறப்பாகப் பணி செய்யவைப்பது என்ற நிர்வாகத் திறன் இல்லை. பணம் கொடுக்கிறோம் என்று இஷ்டத்துக்கு வளைத்ததால் அவர் வந்த வழியே போய்விட்டார்!”
வியாபாரத்தில் பங்குகொள்வது வேறு. நிர்வாகம் செய்வது வேறு. யார் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆவதற்குச் சில அடிப்படை நோக்கங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். விழுமியங்கள் ஒத்துப் போக வேண்டும், கலாச்சார ஒற்றுமைகள் வேண்டும். எல்லாவற்றையும் பேசி, எழுத்து மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். யார் பிரிந்து செல்ல நேரிட்டாலும் கவுரவம் கெடாமல் வெளியேற இடம் தர வேண்டும். உங்களின் நல்லுணர்வு தூதுவராக அவர் வெளியில் பேசும் அளவுக்கு உங்கள் நிறுவன உறவுகள் இருக்க வேண்டும்.
ஊர் கூடித் தேர் இழுப்பது போல, கூட்டுறவு செயல்பாடு போல, பலர் சேர்ந்து தொழில் தொடங்குவது சிறப்புதான். ஆனால் கூட்டின் கட்டுமானம் திடமாகத் தெளிவாக இருந்தால்தான், அதன் மேல் எழுப்பப்படும் வியாபாரம் பிரம்மாண்டமாக ஓங்கி வளரும்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 11.04.2017

09: இதில் எந்த துரோகமுமில்லை!

09: இதில் எந்த துரோகமுமில்லை!

நீங்கள் என்ன தொழில் செய்யலாம் என்று முடிவுசெய்துவிட்டீர்கள். அதற்குத் தேவையான ஆராய்ச்சி எல்லாம் செய்துவிட்டீர்கள். சந்தை நிலவரம், தொழில் வாய்ப்பு பற்றியெல்லாம் தெரிந்துகொண்டுவிட்டீர்கள். பணம் கிடைத்தவுடன் தொழில் ஆரம்பிக்கலாம். பெயர், இடம், நல்ல நேரம் என யோசிக்கிறீர்கள். அப்புறம் என்ன, “ஸ்டார்ட் மியூசிக்” என்று ஆரம்பிக்க வேண்டியது தானே?
300 சதவீதம் லாபமா?
கொஞ்சம் பொறுங்கள்! உங்கள் ஆராய்ச்சி எப்படி நடந்தது என்று முதலில் கூறுங்கள்! “கூகுள் பண்ணினேன், பத்திரிகைகளில் இது பற்றி படித்தேன், தெரிந்த சில பேரிடம் பேசினேன், அப்புறம் என்ன..” என்கிறீர்களா? இது போதாது. உங்கள் தொழில் பற்றிய சமீபத்திய வெள்ளை அறிக்கைகள் ஏதேனும் உண்டா? உங்களுக்குக் கிடைத்த எண்கள் நம்பத்தகுந்தவையா? இந்தக் கேள்விகள் மிக முக்கியமானவை.
என் நண்பர் ஒருவர் சொன்னார்: “ஓட்டல் பிசினஸில் 300 சதவீதம் லாபம்னு எல்லாரும் சொன்னாங்க. கையில் உள்ளதைப் போட்டுப் பெரிசா ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் கொடுத்த தரத்தை நாளடைவில் கொடுக்க முடியலை. ஆட்கள் கிடைப்பது இவ்வளவு கஷ்டம்னு ஆரம்பத்துல தெரியலை. தொடர்ந்து வந்த போட்டிகள்ல விற்பனை நிறைய குறைஞ்சு போச்சு. இப்ப மெஸ்ஸா மாத்தலாமான்னு யோசிக்கிறேன். இவ்வளவு இண்டீரியர்ஸ் பண்ணி வச்சிருக்கேன். எப்படிப் பிசினஸையே மாத்தறதுன்னு தெரியலை. இப்படி ஆகும்னு நினைக்கல!”
ஆராய்ந்ததும் ஆரம்பித்ததும்
எங்கு தவறு நடந்தது? அவர் `எஃப் அண்ட் பி’ மேகசின்ஸ் (உணவு வணிகம்) நிறைய படித்திருக்கிறார். பல நாட்டு ரெஸ்டாரெண்ட் அதிபர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. கையில் பணம் இருந்ததால் யாரிடமும் கடன் கேட்கவில்லை.
இந்தத் தொழிலில் இருந்த ஆர்வத்திலும் நம்பிக்கையிலும் எல்லாப் பணத்தையும் இதில் முடக்கியிருக்கிறார். ஆனால், இவர் ஆராய்ந்த ஓட்டல்களும் இவர் ஆரம்பித்த ஓட்டலும் வேறு வேறு பிசினஸ் மாடல்கள் கொண்டவை. ஒரு வங்கியிடம் போய்க் கடன் கேட்டிருந்தால்கூட ஆயிரம் கேள்விகளில் ஒன்றிலாவது இவர் அதை உணர்ந்திருப்பார். சொந்தக் காசு. கேள்வி கேட்கப் பார்ட்னரும் இல்லை. மிகப் பிரமாதமாய் ஆரம்பித்துத் தற்போது பெரும் குழப்பத்தில் இருக்கிறார். “300% லாபம் வரும் என்ற சொன்னவர்களைத் தேடிப் போய் உதைக்கப் போகிறேன்” என்றார் விரக்தியுடன்.
போட்டியாளரிடம் வேலை பாருங்கள்
இதற்குத்தான் நான் ஒரு ஆலோசனை சொல்வேன். உங்கள் போட்டியாளர்களை நன்றாக ஆராயுங்கள். முடிந்தால் அங்கு வேலைக்குச் சேருங்கள். ஒரு வருடமாவது வேலை பாருங்கள். தொழிலில் யாரும் சொல்லாத நெளிவு சுளிவுகள் புரியும். பிறரிடம் தொழில் கற்கச் சம்பளம் வேறு கிடைக்கிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள். சம்பளத்துக்கு மேல் வேலை செய்யுங்கள். இதில் எந்தத் துரோகமுமில்லை. நம்மிடம் பணியாற்றுபவர்கள் நம்மிடம் தொழில் கற்றுப் பிரிந்து போவது எல்லாத் தொழில்களிலும் நடப்பவைதானே? ஆனால் வாங்கும் சம்பளத்துக்கு நியாயமாய் நேர்மையாய் இருப்பது அவசியம்.
நீங்கள் வேலை செய்யத் தேர்ந்தெடுக்கும் போட்டியாளர் உங்களுக்கு நிகரானவராக இருக்கணும். அளவில் ஓரளவு சமமாக இருக்கணும். மிகப்பெரிய போட்டியாளரிடம் சென்றால் அவர் பிரச்சினைகள் வேறாக இருக்கும். மிகக் குறைந்த இடத்திலும் உங்களுக்கான கற்றல் இருக்காது.
கேட்டு வாங்குங்கள்
உங்களுக்குப் போட்டியாளரிடம் வேலை செய்வதில் சிரமம் உள்ளதென்றால், அவசியம் ஒரு மார்க்கெட் ரிசர்ச் (சந்தை ஆராய்ச்சி) செய்யுங்கள். இதற்கு நீங்கள் பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்குச் சென்று தொழில் மூலதனத்தில் பாதியை ஃபீஸாகக் கொடுக்க வேண்டும் என்று பொருளில்லை. உங்கள் வசதிக்கு ஏற்ப ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்து அந்தப் பொறுப்பை ஒப்படையுங்கள். சில நிர்வாகப் பள்ளிகள் இதை இலவசமாகக்கூடச் செய்து தரலாம். ஆனால், உங்களுக்குத் தேவையான அனைத்து விபரங்களையும் பட்டியல் இடுங்கள். அவை அனைத்தையும் கேட்டு வாங்குங்கள்.
இந்தத் தொழிலின் வளர்ச்சி விகிதம் என்ன? தொழில் சார்ந்த சட்டங்கள், வரிகள் என்ன? தொழில் விரிவாக்க வாய்ப்புகள் உள்ளனவா? போட்டியாளர்கள் யார்? பணியாளர் செலவு எவ்வளவு இருக்கும்? லாப விகிதம் எப்படி இருக்கும்? தொழிலில் ஆபத்துகள் என்ன? இதற்குக் கடன் அளிப்பவர்கள் யார்? அரசு உதவி உண்டா? மூலதனமாகத் தேவதை முதலீட்டாளர்கள் (ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ்) வரச் சாத்தியம் உள்ளதா? அரசின் கொள்கை மாறுதல்களால் பாதிப்புகள் வருமா? இப்படி நிறைய கேள்விகளை முதலிலேயே கேட்பது நல்லது.
ஆழம் தெரியாமல்…
சந்தை ஆராய்ச்சி என்பது பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல. எல்லாத் தொழில் முனைவுகளுக்கும் இது அவசியம். ஒரு தொழில் முனைவரால் எல்லாத் துறைகளிலும் நிபுணத்துவத்துடன் இருக்க முடியாது. அதனால் உங்கள் தொழில் பற்றிய எல்லா விதக் கேள்விகளையும் அந்தந்தத் துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு நம்பத்தகுந்த ஆய்வு செய்து பதில்களை அறிவது நல்லது.
பலர் இதை ஒரு செலவாக நினைத்து ஓரம் கட்டிவிடுகிறார்கள். பெரிய தொழில் முதலீட்டில் இது ஒரு சிறு பகுதி என்பதை உணர வேண்டும். ஒரு காப்பீடு போல நினைத்து இதைச் செய்ய வேண்டும். மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு முன் ஒரு ஹெல்த் செக் அப் நல்லதில்லையா?
‘ஆழம் தெரியாமல் காலை விடாதே’ என்பது எப்பேர்ப்பட்ட அனுபவ மொழி. என்ன நீச்சல் தெரிந்தாலும் ஆழம் அறிதல் அவசியம். தொழில் முனைவு என்பது காலை விடுதல் மட்டுமல்ல, உள்ளே குதித்தல். ஆழ அகலம் தெரிவது நல்லது. நீங்கள் ஆரம்பிக்க நினைக்கும் தொழிலைப் பற்றி அறிய முயற்சி எடுங்கள். அதற்குச் செலவாகும் பணம், நேரம், உழைப்பு அனைத்தும் மூலதனம்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 04.04.2017

08: தோல்வி அவமானம் அல்ல!

08: தோல்வி அவமானம் அல்ல!

தொழில் செய்து தோற்றால் எப்படி உணர்வீர்கள்?
இதற்கான பதிலில் உங்களுக்குத் தொழில் ஒத்து வருமா என்று சொல்லிவிடலாம்.
யார் மீது பழி போடலாம்?
உங்களுக்குத் தெரிந்து தொழில் செய்து தோற்றவர்களைக் கேளுங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று. “ஃபைனான்ஸ்தான் பிரச்சினை. தொடர்ந்து கொட்டப் பணமில்லை.” “பார்ட்னர் ஏமாத்திட்டாரு.” “பேமென்ட் நிறைய நின்னுப்போச்சு. காசு திரும்ப வாங்கறதுக்குள்ள உயிர் போச்சு” “ஃபாரின் மார்க்கெட் விழுந்ததில நமக்குப் பெரிய அடி!” “கஸ்டமர் டேஸ்ட் மாறிப்போச்சு!”
இப்படி வெளிப்புறக் காரணிகளைக் குறை கூறுவோர் பொதுவாகத் தொடர்ந்து தொழில் செய்தாலும் தோல்வியைத்தான் தழுவுவர். ஆனால் தோல்விக்கு முழுதாகத் தான் பொறுப்பேற்கும்போது தோல்வியில் கிடைக்கும் பாடங்களைச் சுலபமாக உள்வாங்க முடியும்.
தோல்விக்கு யார் மீது பழி போடலாம் என்ற எண்ணம் தன்னம்பிக்கையின்மையால்தான் வரும். தன் மீது தவறில்லை என்பதை நிலைநாட்ட எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உண்மையைச் சந்திக்கும் தைரியமின்மையைத்தான் காட்டும். அதற்குப் பதில் ‘என்ன செய்தால் இதைத் தவிர்த்திருக்கலாம்?’ என்று யோசிக்கையில் நம் பொறுப்புகள் புரியும்.
எங்கே கணக்கு?
எனக்கு நேர்ந்த வியாபார அனுபவம் இது. ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் தொடர்ந்து சில ஆண்டுகளாகப் பயிற்சியும் தனிநபர் ஆலோசனைகளும் நடத்திக்கொண்டிருந்தேன். அனைவரும் பாராட்டும்விதமாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது, எப்போதும் பேமெண்ட் சற்றுத் தாமதமாகத்தான் வரும். துறைத்தலைவர் தெரிந்தவர். அதனால் எதையும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.
ஒரு நாள் அந்தத் துறைத்தலைவர் வேலையை விட்டுச்சென்றார். அடுத்து வந்தவர் என் ஆறு மாதப் பேமெண்ட்டை நிலுவையில் வைத்தார். நேரில் சென்று கேட்டபோது, கடந்த ஆறு மாதங்களாக நீங்கள் அக்ரிமெண்ட்டை ரென்யூ செய்யவில்லை என்றார் (அதெல்லாம் அவசரமில்லை என்று சொல்லியிருந்தார் பழைய துறைத் தலைவர்!). புதியவர் என்னைப் பார்த்துக் கேட்டார், “எந்தக் கணக்கில் இதை நான் கொடுப்பது?” அப்போது, அவர் மீது மிகுந்த ஆத்திரம் வந்தது. சாட்சிக்கு ஆயிரம் பேரைக் கூட்டினாலும் இருக்க வேண்டிய முக்கிய ஒப்பந்தம் கையில் இல்லை. கேஸ் நிக்காது. சில லட்சங்கள் நஷ்டம்.
படிப்பினைக்கு ஃபீஸ்
திரும்பி வருகையில் ஒன்று புரிந்தது. அந்த ஆளை, பழைய ஆளை, கம்பெனியைக் குற்றம் சொல்வதில் எந்தப் பயனும் இல்லை. சரியான ஒப்பந்தம் இல்லாமல் வாய் வழியாக வேலையை ஏற்றுக்கொள்வது எவ்வளவு பேராபத்து என்பதை உணர்ந்தேன். இந்தப் படிப்பினைக்கு நான் கொடுத்த ஃபீஸ் அந்தச் சில லட்சங்கள். மனம் மிகவும் லகுவானது. என்னால் மீண்டு வரக்கூடிய தொகையில், விலையில் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டேனே என்று நன்றியோடு எண்ணிக்கொண்டேன். அதனால் தான் இன்று பன்னீரில் நனைத்துப் பேசி அழைத்தாலும் ஒப்பந்தம் போடாமல் ஒரு நாள் கூட வேலை செய்வதில்லை என்பதைக் கொள்கையாக வைத்துள்ளேன்.
எங்கு, எப்படித் தோற்றோம்!
இப்படி ஒவ்வொரு தோல்வியிலும் நாம் கற்க வேண்டிய பாடங்கள் உள்ளன. பல பாடங்கள் பிஸினஸில் இருந்தே கற்றுக்கொள்ள வேண்டிவரும். வெகு சில நேரம் அது உங்கள் தொழிலையே ஒரு ஆட்டு ஆட்டும். தொழிலைவிட்டே வெளியே வரும் சூழல் வரலாம். அதுவும் ஒரு தொழில் முடிவுதானே தவிரத் தனிப்பட்ட தோல்வி என எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
முதல் தொழிலே பெரும் வெற்றியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. கமல் பாடியது போல, “ஒண்ணு இரண்டு எஸ்கேப் ஆன பின்னே, உன் லவ்தான் மூணா சுத்துல முழுமை காணுமேடா!” என்பது உண்மையாகலாம்.
இங்கு பிஸினஸில் தோல்வி என்று குறிப்பிடுவதை அவமானமாக நினைக்கிறார்கள். எம்.பி.ஏ. போன்ற படிப்புகளுக்கு உங்கள் வியாபார அனுபவம் மிகப்பெரிய பிளஸ். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் பலவற்றில் உங்கள் வெற்றியடையாத் தொழில் முனைவுகளுக்கு மதிப்பு தந்து அட்மிஷனில் முன்னுரிமை தருகிறார்கள். தொழிலே செய்யாதவனை விடத் தொழில் செய்து தோற்றவனுக்குக் கண்டிப்பாகப் பிஸினஸ் கற்கும் ஆர்வம் அதிகம் இருக்கும். எங்கு எப்படித் தோற்றோம் என்று அறியத்தான்!
ஆங்க்ரி பேர்ட் கதை தெரியுமா?
பணம் கிடைத்தவுடன் கடின உழைப்பில் சில காலத்தில் ஒரே ஒரு உற்சாகப் பாட்டில் தொழிலில் வெற்றி பெற்று நிலைக்கலாம் என்பது விடலை லட்சியம். உங்களுக்கு உங்களைப் பற்றித் தெரியவே ஒரு சில தொழில் முனைவுகள் தேவைப்படலாம். அதனால்தான் எடுத்தவுடன் அகலக்கால் வைக்க வேண்டாம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
ஆங்க்ரி பேர்ட் என்ற மொபைல் விளையாட்டு எவ்வளவு பிரபலம் என்று உங்களுக்குத் தெரியும்? ஆனால் அவர்கள் அதற்கு முன் நூற்றுக்கு மேற்பட்ட விளையாட்டுகளை ஆப்களாக வெளியிட்டு அனைத்தும் தோல்வியைத் தழுவ, கம்பெனியை மூடும் சமயம் வெளிவந்ததுதான் ஆங்க்ரி பேர்ட். பின் லாபம் கொழிக்கும் மிகப் பெரிய நிறுவனமானது அது.
நாம் செய்வது தவறா சரியா என்று செய்யும்போது உணர முடியாது. அதனால் தான் தொழில் முனைவோர் எல்லா நேரத்திலும் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
தோல்வி என்பது ‘இது வேலை செய்யாது’ என்ற கற்றலையும் வெற்றி என்பது ‘இது வேலை செய்கிறது’ என்ற கற்றலையும் தருபவையே. இரண்டுக்கும் நான் பொறுப்பு என்ற மனநிலை வருகையில் நீங்கள் தொழில் முனைவராகத் தகுதி அடைந்து விடுகிறீர்கள்.
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 28.03.2017

07: மனோ நிலைதான் முக்கிய மூலதனம்

07: மனோ நிலைதான் முக்கிய மூலதனம்

பலர் பிஸினஸில் ஜெயிக்காததற்கு முக்கிய காரணம், பணம் பற்றிய தவறான அல்லது குழப்பமான எண்ணங்கள்தான். தொழில் செய்யப் பணம் வேண்டும். பணம் செய்யத் தொழில் வேண்டும். அதனால் இவ்விரண்டைப் பற்றிய ஆதார எண்ணங்கள் உங்கள் ஒவ்வொரு முடிவையும் பாதிக்கும்.
நம் பிரச்சினை பணம் பற்றிய எண்ணங்கள். ‘பணம் என்ன மரத்திலா காய்க்கிறது வாரி இறைக்கிறதுக்கு?’
இப்படி சொல்லி வளர்க்கப்பட்டிருந்தால் ஒரு பற்றாக்குறை மனோபாவம் சுலபமாக வந்துவிடும். பணம் வந்தால் முடக்க வேண்டும். அடுத்து என்னாகும் என்று தெரியாது. இருப்பதை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். கொடுக்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். இப்படி நினைத்தால் முதலீடு செய்யவோ, தொழிலில் செலவு செய்யவோ, கடன் வாங்கவோ தைரியம் வராது. இவர்கள் தொழிலுக்கு வரமாட்டார்கள். வந்தாலும் முதல் தேக்கத்தில் வெளியேறிவிடுவார்கள்.
மாஸ் ஹீரோவின் வசனம்!
“பணம் அளவா இருக்கற வரைக்கும் தான் நிம்மதி. அளவுக்கு மேல் வந்தால் பிரச்சினை.”
எல்லா மாஸ் ஹீரோவும் நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு பேசும் வசனம் இது. மதங்களும் காசு மனிதனை பாவம் செய்யத் தூண்டும் என்று போதிக்கிறது. ஆனால் பெரும்பாலான ஆலயங்களில் உண்டியலில் வசூலிக்கிறார்கள். பணக்கார வழிபாட்டு தலங்களில்தான் அதிக கூட்டமே சேருகிறது. அதேபோல பணக்காரர் ஆனால் நோய்கள் பெருகுமாம். ஏழைகளின் ஆரோக்கியத்துக்கு பங்கம் வராதாம். சம்பாதித்தால் வரி கட்டணும். சம்பாதிக்காவிட்டால் சலுகைகள் கிடைக்கும். இப்படி சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட ஒரு தேக்க மனோபாவம் தொழில் செய்வதில் பெரிய தடையாக இருக்கும்.
“பணக்காரன் அயோக்கியன். தவறு செய்யாமல் பெரிய தொழிலதிபர் ஆக முடியாது!”
நம் ஏழை மாஸ் ஹீரோ பணக்கார வில்லனுடன் மோதுவதை எத்தனை ஆயிரம் முறை பார்த்திருக்கிறோம். (ஆனால், பணக்கார வில்லனின் மகள் ஓ.கே.!).
பலர் தோற்க சிலர் ஜெயிப்பது
பலரை ஏமாற்றிவிட்டுத்தான் சிலர் முன்னேற முடியும் என்ற கருத்து இங்கு தொடர்ந்து சொல்லப்படுகிறது. அதனால்தான் பணம் வைத்திருப்பவர் மேல் ஒரு வன்மம் வருகிறது. ஆனால், நம்மிடமிருந்து பணத்தாசையும் விலகுவதில்லை. அதனால்தான் நாம் பணம் சம்பாதிக்கும்வரை சம்பாதிப்பவரை நமக்குப் பிடிப்பதில்லை. பலர் தோற்க சிலர் ஜெயிப்பது என்பது வாழ்வின் எல்லா துறையிலும் நிகழ்பவை. இருந்தும் தொழிலதிபர் என்றாலே மோசமாக சித்தரிக்கப்படுகிறது. இதனால் நல்ல முறையில் தொழில் செய்து பணம் சேர்க்க முடியும் என்ற அடிப்படை எண்ணம் அடிபட்டுப் போய்விடுகிறது.
“பணம் வரும் போகும். பிஸினஸ் எல்லாம் சூதாட்டம் மாதிரிதான்!”
தொழிலின் நிலையில்லாத் தன்மை பற்றி கூறுவது போலத் தெரிந்தாலும் அடிப்படையில் சொல்லப்படும் செய்தி இதுதான்: “ நீ என்ன செய்தாலும் வந்தா வரும். போனால் போகும்!” இது ஒரு நம்பிக்கையில்லா மனநிலையை உருவாக்கும். இதற்கு நூறு உதாரணங்கள் கண்ணில் தென்படும். நமக்கு இதெல்லாம் அவசியமா என்ற கேள்வி வரும். அதீத பாதுகாப்பு உணர்வுதான் மிஞ்சி நிற்கும். நமக்கு சரிப்படாது என்று விலகி நிற்க வைக்கும்.
மனசு போல வாழ்க்கை!
“நம்ம ராசி, உப்பு விக்க போனா மழை வரும். உமி விக்கப் போனா காத்தடிக்கும்!”
நான் பல முறை எழுதிய விஷயம்தான். மனசு போல வாழ்க்கை! எந்த எண்ணம் வலுவாக உள்ளதோ, அது நிஜம் என்று நிரூபிப்பது போன்ற காரியங்கள் நிகழும். ராசி என்பார்களே அது இப்படித்தான் நிகழும். வெற்றிகள் வெற்றியை கவர்வதும் தோல்விகள் தோல்விகளை கவர்வதும் இதனால்தான். ஒருவர் தொடர்ந்து தோல்விகளை எதிர்கொள்கிறார் என்றால் நிச்சயம் அவர் எண்ணங்கள் தோல்விகளுக்காக வடிவமைக்கப்பட்டவை என்று புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக பயம், சந்தேகம், குரோதம், நம்பிக்கையின்மை என்று எதிர்மறை எண்ணங்கள் வலுவாக உள்ளவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது கடினம்.
தொழில் பற்றி ஆலோசனைக்கு வருவோர் பலருக்கு நிஜமான தேவை தொழிலதிபருக்கான உளவியல் ஆலோசனைதான். முதலாளி எடுக்கும் ஒரு முடிவு அவரை, அவர் சம்பந்தப்பட்டோரை, சம்பந்தப்பட்ட தொழிலை முழுமையாக பாதிக்கும். அதனால் தொழில்முனைவோரின் மனோ நிலைதான் ஒரு தொழிலின் முக்கிய மூலதனம்!
பணத்தை மதிக்க வேண்டும்
பணம் பற்றி நேர்மறையான எண்ணங்கள் தொழில் புரிய அவசியம். பொருள் ஈட்டுவதும், லாபமடைவதும், பிறரை வளர்ப்பதிலும் மகிழ்வு கொள்பவர்களுக்கு தொழில் சிறக்கும். செல்வம் ஈட்ட, கடினமாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். பிறருடன் சேர்ந்து பணம் போடவும், பணம் பெருக்கவும், பணத்தைக் கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும். பணம் தரும் தொழில் சார்ந்த செயல்கள் மட்டும் செய்ய கவனக்குவிப்பு வேண்டும்.
முக்கியமாக பணத்தை மதிக்க வேண்டும்.தொழில் கூடத்தில் கடவுள் உருவப்படம் எதற்கு? செல்வம் தெய்வீகமானது என்று உணர்த்தத்தான். பணம் பலரின் வாழ்க்கை பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியது. பல வளர்ச்சித் திட்டங்களுக்கு உயிர் கொடுக்கக் கூடியது.
எந்த இனம் செல்வத்தை தெய்வமாக மதித்து, அதை சரியான வழியில் பராமரித்து, அதன் பலனை மொத்த சமுதாயத்துக்கு பங்கிட்டுத் தருகிறதோ அதுவே செழிக்கும் என்பது உலக வரலாறு. பிறரை சுரண்டிச் சேர்க்கும் காசு காலப்போக்கில் புரட்சி மூலம் சமநிலைப்படும். ஆனால் நல்ல வழியில், கடின உழைப்பில், சமூக நோக்கில் செய்யப்படும் தொழில்கள் காலம் காலமாக தழைத்து நிற்கும். அனைவரின் கடின உழைப்பால், தியாகத்தால், சிறப்பான நிர்வாகத்தால், மக்களின் திறனால், அனைவரின் ஒத்துழைப்புடன் மட்டுமே லாபமான தொழிலை நிலைக்கச் செய்ய முடியும். இதற்கு குறுக்கு வழிகள் இல்லை. இதை நிரூபிக்க ஆயிரம் தொழில் கதைகள் உள்ளன. ஆனால், அவை அனைத்தையும் அண்ணாந்து பார்க்கத் தேவை நம்பிக்கை.
பணம் பற்றிய நம்பிக்கை. தொழில் பற்றிய நம்பிக்கை. வாழ்க்கை பற்றிய நம்பிக்கை. தன்னம்பிக்கை!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 21.03.2017

06: உடைத்துப் பேசுவது நல்லது!

06: உடைத்துப் பேசுவது நல்லது!

சொந்தத் தொழில் செய்வது என்பது வாழ்க்கையின் முக்கிய முடிவு. அதனால் உங்கள் குடும்பத்தின் ஆதரவும் புரிதலும் உங்களுக்கு நிச்சயம் தேவை. முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு இது அத்தியாவசியம். சொந்தத் தொழில் பற்றி ஒவ்வொரு குடும்பத்துக்கும் கலாசாரம் சார்ந்த பார்வை ஒன்று உண்டு. “இந்தத் தொழில் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருமா?”, “இந்தத் தொழில் செஞ்சா உனக்குப் பொண்ணு குடுக்க யோசிப்பாங்க!” போன்ற கேள்விகள் வரும்.
எதிர்பார்ப்புகள் உடையும்!
அதேபோல உங்கள் வாழ்க்கை முறையை முழுவதும் மாற்றக்கூடியது உங்கள் தொழில். அதை உங்கள் குடும்பத்தினர் புரிந்துகொள்ள வேண்டும். பாரம்பரியமாகத் தொழில் புரிபவர் வீட்டில் இது இயல்பாக நடக்கும். “அவரு கடையை மூடிட்டு வீட்டுக்கு வர ராத்திரி 11 ஆகும்!”, “வெளியூர் போகறதுன்னா நிறைய பிளான் பண்ணனும்!” “சதா செல்ஃபோன்லதான் இருப்பார். ஏன்னா கஸ்டமர் எப்ப கூப்பிட்டாலும் எடுக்கணும்!”
ஆனால் வேலைக்குச் செல்பவர்கள் வீட்டிலிருந்து புதிதாக ஒருவர் தொழில் செய்ய ஆரம்பிக்கும்போது நிறைய எதிர்பார்ப்புகள் உடைந்துபோகும். “வியாழன் பண்டிகை லீவு. வெள்ளி லீவு போட்டா சனி, ஞாயிறு சேத்து நாலு நாள் ஃப்ரீ. எங்காவது போகலாம்” என்று நினைப்பது வேலை பார்ப்பவர் மனோபாவம். “பண்டிகை, மழை, லீவு நாள் எல்லாம் சேத்து 21 நாள்தான் இந்த மாசம் புரொடக்ட்டிவா இருக்கு. அதுக்குள்ள டார்கெட்ட முடிக்கணும்” என்று நினைப்பது தொழில் செய்பவர் எண்ணம்.
அதிலும் தமிழ் சமூகத்தில் பாராட்டுதல் முக்கியம். சொந்த வீடு இருக்கணும். செய்யும் வேலை அல்லது தொழில் பெருமையாய்ச் சொல்லிக் கொள்வதாய் இருக்கணும். இப்படி நிறைய சொல்லலாம். அதனால்தான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் ஹோம் லோன் போட்டு ஃப்ளாட் வாங்கி ‘ஈஎம்ஐ’யால் நம்மைச் சிறைப்படுத்திக் கொள்கிறோம். நாம் செய்ய முடியாதவை அனைத்துக்கும் இதைக் காரணமாகச் சொல்வோம். “மாசாமாசம் முப்பதாயிரம் ஈஎம்ஐ. இது முடியாம வேற எந்த ரிஸ்கும் எடுக்க முடியாது!”
வீட்டிலேயே ஐடியா இருக்கும்
வட மாநிலத்தைச் சேர்ந்த பெரிய வியாபாரிகளை சென்னையில் பார்த்திருப்பீர்கள். அவர்கள் வசிப்பிடத்தைப் பார்த்திருக்கிறீர்களா? குறுகலான சவுகார்பேட்டைத் தெருக்களில் கூட்டுக் குடும்பமாக வாடகை வீட்டில் வசிப்பார்கள். வீடு, ஆஃபீஸ், கார் என்பதில் பகட்டு இருக்காது. மொத்தக் கவனமும் தொழிலில் மட்டும்தான்.
நம் சமூகம் அப்படியில்லை. தொழில் ஸ்திரப்படும் முன்னே ஆபீஸ் வைக்கப் பிரமாதமாய்ச் செலவு செய்வார்கள். விசிட்டிங் கார்டை அசத்தலாக அச்சிடுவார்கள். புதுமனை புகு விழா போல ஊரை அழைத்துச் சொல்வார்கள். பாங்க் லோனையும் தெரிந்தவர்களிடம் கடனையும் கிடைத்த மட்டும் வாங்குவார்கள். வருமானம் வருவதற்கு முன்பே செலவுகளை ஏற்றிக்கொள்வது காலில் கல்லைக் கட்டிக்கொண்டு ஓடுவது போலத்தான்.
முதலாவதாக, உங்கள் குடும்பத்தினரிடம் நீங்கள் அவசியம் பேச வேண்டும். பெற்றோர், வாழ்க்கை துணை, பிள்ளைகள் எல்லோரும் அவசியம். என்னிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களைப் பெரும்பாலும் குடும்பமாகத்தான் வரச்சொல்வேன். அவர்கள் பின்புலம் அறிய மட்டுமல்ல, தொழிலால் ஏற்படக்கூடிய குடும்பச் சிக்கல்களையும் ஆரம்பக் காலத்திலேயே சரி செய்யத்தான். பல நேரங்களில் வீட்டிலேயே நல்ல பிஸினஸ் ஐடியாக்கள் இருக்கும். ஆனால் அவற்றைக் குறைத்து மதிப்பிட்டு விடுவோம். அதே போலச் சில நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை முதலிலேயே விவாதிக்காமல் விட்டுவிடும் அபாயமும் உண்டு.
எல்லாவற்றையும் உடைத்துப் பேசுவது நல்லது. மூன்று வருடங்கள் போராடினால்தான் ‘பிரேக் ஈவன் வரும். அதாவது, போட்ட முதலுக்கு இணையான வருமானம் கையில் கிடைக்கும். வருமானம் வந்தாலும் அதை மீண்டும் முதலீடு செய்ய வேண்டிவரும். அதுவரை பொருளாதாரச் சுமை இருக்கும். சொந்தக் காரியத்துக்கு வெளியூர் பிரயாணம் முடியாது. குடும்பச் செலவுகூடக் குறைக்க வேண்டியிருக்கும். இது புரிதலுக்கும் திட்டமிடலுக்கும் கவனக் குவிப்புக்கும் உதவும்.
இது வேலை நேரம்
வீட்டிலேயே கொஞ்சக் காலம் ஆபீஸ் நடத்த வேண்டி வரலாம். அப்போது கட்டுப்பாடுகள் மிக அவசியம். உங்கள் கட்டுப்பாடுதான் உங்கள் குடும்பத்தினரிடமும் கட்டுப்பாட்டை வரவழைக்கும். நேரங்காலமின்றி வீட்டிலேயே புதிய தொழிலுக்கான திட்டமிடலை நடத்தும்போது, ஆரம்பத்தில் உங்கள் குடும்பத்தினருக்குப் புரிய வாய்ப்பு இல்லை. நீங்கள் ஒரு முக்கிய வியாபார வியூகம் அமைக்கச் சிந்திக்கையில், “கொஞ்சம் ஃப்ரீயா இருந்தா கடைக்குப் போய்க் கொஞ்சம் வெங்காயமும் தக்காளியும் வாங்கிட்டு வாங்களேன்” என அனுப்பப்படலாம்.
அதனால் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் இருந்தால், நீங்கள் வியாபார வேலை செய்கிறீர்கள் என்பதை உணர்த்த வேண்டும். இன்று தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் பல தொழில்களுக்கும் ஆரம்பப் பொருள் சார்ந்த மூலதனம் ஒரு கணினிதான். உங்கள் நேரமும் இயக்கமும்தான் அறிவு சார்ந்த மூலதனம். அதனால் அதற்குப் பங்கம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பல தொழில்களில், ஒரு அலுவலகம் அமைக்கும் அவசியம் வரும் வரை வீட்டிலிருந்து செயல்படலாம். ஆனால் குடும்ப உறவுகளையும் தொழில் இயக்கத்தைச் சரிவரச் சமாளிக்கத் தெரியாமல்தான் பலர், பள பளா ஆபீஸ் போட்டுத் தனியாக உட்கார்ந்து வேலை செய்கின்றனர்.
குடும்பத்தாருக்குப் புரியவையுங்கள்!
ஆகவேதான், முதலில் குடும்பத்துடன் பேசித் தொழில் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டும். வீடா தனி அலுவலகமா என்பதல்ல இங்குப் பிரச்சினை. உங்களுடைய தொழிலுக்கு உங்கள் குடும்பம் முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறதா என்பதுதான் கேள்வி. நீங்கள் தளரும் போது உங்களைத் தாங்கிப் பிடிக்கும் சக்தி கொண்டது உங்கள் குடும்பம்.
“இவ்வளவு கஷ்டம் எதுக்கு? ஒரு வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க முடியாதா?” என்ற கேள்வி வந்தால் உங்கள் தன்னம்பிக்கை கண்டிப்பாக அடிபடும். “எது ஆனாலும் பரவாயில்லை. சமாளிக்கலாம்.” என்று சொல்லும் வகையில் இருந்தால் உங்கள் சிந்தனை தொழிலில் ஜெயிப்பதில் மட்டும் இருக்கும். குடும்பத்தைச் சரிக்கட்டுவதில் இருக்காது.
சிலருக்குக் குடும்பத்தை மீறித் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கலாம். இது அவர்களுக்கான ஆலோசனை அல்ல. ஆனால் பெரும்பாலானவர்கள் குடும்ப ஆதரவு பெற வாய்ப்பு உள்ளது. அதேநேரம் குடும்பத்தினரைத் தொழிலில் முழுமையாக ஈடுபடுத்தலாமா என்றால், அது வேறு விஷயம். அதைப் பற்றி பிறகு விரிவாகப் பேசலாம்.
ஆக, தொழில் எண்ணம் வந்தவுடன் முதலில் பேச வேண்டியது உங்கள் குடும்பத்துடன். ஒரு முதலீட்டாளருக்குப் பிரசன்டேஷன் செய்ய வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்வீர்களோ அதே சிரத்தையுடன் எல்லாவற்றையும் குடும்பத்தினரிடம் சொல்லுங்கள்.
முதலில் உங்கள் வாழ்க்கை இணையைச் சம்மதிக்க வையுங்கள். பிற்காலத்தில் கஸ்டமர்களைச் சம்மதிக்க வைப்பதில் பெரிய சிரமம் தெரியாது!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 14.03.2017

Friday, June 23, 2017

05: முதல் முறை என்ன தேவை?

05: முதல் முறை என்ன தேவை?

ஒரு தொழில் செய்வதற்கு முன் சின்னதாய் ஒரு ஆராய்ச்சி அவசியம்.
கண்ணில் படும் வாய்ப்புகளெல்லாம் கவர்ச்சியாகத் தெரியும். குறிப்பாக ‘ஸ்டார்ட் அப்’ பற்றி வரும் செய்திகள் ரொம்பவும் தெம்பு கொடுக்கும். குறுகிய காலத்தில் இத்தனை கோடி வருமானம், இத்தனை கோடி முதலீடு, இவ்வளவு பெரிய வளர்ச்சி என்று படிக்கையில் நாமும் அப்படி ஒன்று தொடங்கினால் என்ன என்று தோன்றும்.
ஆனால் முழு பக்க விளம்பரம் தரும் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன என்றால் நம்புவீர்களா? முதலீடு செய்யப் பெரும் தந்திரம் தெரிந்த பலர் வியாபாரம் மூலம் பணம் பண்ண முடிவதில்லை. அதைவிடவும் முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து கம்பெனியின் மதிப்பை ஏற்றி, நல்ல நிலையில் உள்ளபோது தங்கள் பங்குகளை விற்று வெளியேறி வேறு தொழிலில் செட்டில் ஆவார்கள். Golden Tap எனும் புத்தகத்தைப் படிக்கையில் இந்த வியாபாரச் சூழல் புரியும்.
சந்தை ஆராய்ச்சி அவசியம்
அதனால் நீங்கள் ஆரம்பிக்கும் தொழிலின் சந்தை பற்றியும், அதில் ஏற்கெனவே உள்ள கம்பெனிகளின் நிலை, சந்தையின் வளர்ச்சி விகிதம், முக்கிய சவால்கள் என அனைத்தையும் ஆராயுங்கள். கட்டிடம் கட்டி விற்பது என்று முடிவெடுத்தால், ரியல் எஸ்டேட் பற்றிய ஆய்வுகள், அறிக்கைகள், அரசாங்கத் திட்டங்கள், முக்கியப் போக்குகள் எல்லாவற்றையும் படியுங்கள். எல்லாப் பெரிய நிறுவனங்களும் இப்படி ஒரு சந்தை ஆராய்ச்சி செய்யாமல் எந்தப் புதிய தொழிலிலும் இறங்குவதில்லை.
என்னைக் கேட்டால் பெரிய நிறுவனங்கள் செய்வதைவிட முதல் முறை தொழில் செய்ய நினைப்பவர்கள், இப்படி ஆராய்ச்சி செய்வது அத்தியாவசியம். தொழில் ஆலோசகர்களை நாடி அவர்களின் உதவியுடன் இதைப் புரஃபெஷனலாகச் செய்வது நல்லது.
எனக்குத் தெரிந்த ஒரு ஆடிட்டர் தன் மகனுக்குக் கார் பொட்டீக் (காரின் உள்புற வேலைப்பாடுகளுக்காக) ஒன்று வைத்துக் கொடுத்தார். வெறும் பிஸினஸ் மாடல் மட்டும் போட்டுப் பார்த்து, கையில் உள்ள பணத்தால் நல்ல இடத்தில்தான் தொழில் ஆரம்பித்தார். ஆனால் இரு ஆண்டுகள் ஆகியும் போதிய வியாபாரம் ஆகவில்லை. தொழிலை நடத்தவே மாதா மாதம் பணம் செலவானது. முதலில் சந்தை ஆராய்ச்சி செய்ய யோசித்தவர் தற்போது ‘பிஸினஸ் டயக்னாஸ்டிக்ஸ்’காக என்னிடம் வந்தார். கட்டிடம் கட்டுவதற்கு முன் பிளான் போடுவதற்கும் கட்டி முடித்த பின் மாற்றியமைக்கப் பிளான் போடுவதற்கும் எவ்வளவு வித்தியாசம்?
இதற்கு இன்னொரு சிறந்த வழி தொழிலுக்கு வங்கி அல்லது தனியாரிடம் கடன் கேட்டுச் செல்வது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்கள் வேண்டுமென்றால் நிச்சயம் ஒரு ஸ்டடி செய்வது நல்லது.
குறை சொல்பவர்கள் வேண்டும்
பாஸிடிவாக யோசிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் தொழிலில் நெகடிவாக உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்துகொள்வது. குறை கண்டு பிடிப்பதுகூட இங்குப் பெரும் திறன். அதனால் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கியவர்களைத் தேடிப் பிடித்து உங்கள் ஐடியாவைச் சொல்லுங்கள். நீங்கள் பார்க்காத பல அபாயங்களை அவர்கள் பார்க்கலாம். அதற்காகத் தொழிலைக் கைவிட வேண்டாம். உங்கள் திட்டத்தை இன்னமும் வலுப்படுத்திக் கொள்ளலாம்.
பலரின் கேள்விகளாலும் புறக்கணிப்புகளாலும் உங்கள் தொழில் எண்ணம் மெருகேறும். இளைஞர்களுக்கு ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் தொடர்ந்து அளித்துவரும் நான் பிஸினஸ் என்று ஆலோசனைக்கு வருகையில் மட்டும் முதலில் அவர்கள் திட்டத்திலுள்ள குறைகளுடன்தான் செஷனை ஆரம்பிப்பேன். பிழை நீக்க மட்டுமல்ல, அவர்கள் இந்தத் தொழிலில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள் என்று அறியவும் இதைச் செய்வேன்.
உங்களுடைய முடிவுதான்!
பல திரைப்பட இயக்குநர்களுக்கு முதல் படம் தரும் வெற்றி இரண்டாம் தராது. காரணம் என்ன? ஒரு கதையை வருடக்கணக்கில் யோசித்து, நூற்றுக்கணக்கான கம்பெனிகள் ஏறி இறங்கிக் கதை சொல்லி, அவர்களில் பலர் கதையை நையப்புடைத்து, ஆயிரம் கேள்விகள் கேட்டு, பலரின் யோசனைகள் கேட்டு, பல பல மாறுதல்கள் செய்து, கடைசியாக ஒரு புரொடியூசர் சிக்குகையில் ஒரு காவியம் தயாராக இருக்கும்! அதனால்தான் சினிமாவில் கதை எழுதுவதைவிடக் கதையை விவாதிப்பார்கள். தயாரிப்பாளர் முதல் கடைசி அசிஸ்டெண்ட்வரை கருத்து சொல்லலாம். முதல் பட வெற்றிக்குப் பிறகு உடனடியாக அட்வான்ஸ் வாங்கித் தனியாகக் கதை யோசித்து அவசரமாக எடுக்கையில் படம் படுக்க வாய்ப்புகள் அதிகம்.
எத்தனை பேர் கருத்து சொன்னாலும் கடைசியாக எதை எடுப்பது, எதை விடுப்பது என்பது இயக்குனரின் தேர்வு. அது போலதான் தொழில் ஆலோசகர், வங்கி மேலாளர், முதலீட்டாளர், கடன் தரும் நண்பர் என யார் என்ன சொன்னாலும் கடைசியாக இந்தத் தொழிலை எப்படி நடத்துவது என்பது உங்களுடைய முடிவுதான்! பின் ஏன் இதை எல்லோரும் செய்வதில்லை? அவசரம் தான். தனக்கு நிறைய தெரியும் என்ற எண்ணம். பிறரைக் கேட்டால் குழப்பி விடுவார்கள் என்ற பயம். இப்படி நிறைய இருக்கும்.
ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா?
பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு கார்ப்பரேட் ஃபிலிம் எடுத்த போது படத்தைத் தொகுத்துக் கொண்டிருந்த எடிட்டர் சொன்னார்: “எஃப்.சி.பி. தான் இனி மேல் எல்லாம். ஒரு கம்ப்யூட்டரும் இந்த சாஃப்ட்வேரும் வாங்கிப் போட்டா அந்தக் காசை மூணு பட எடிட்டிங்கில எடுத்துடலாம். தவிர சீரியல் ஒண்ணு கையில் இருந்தா ரொம்ப சேஃப். அஞ்சு லட்சம் ரூபாய் போதும். அதிகப் பட்சம் ஆறு மாசத்துல பெரிசா லாபம் பார்க்கலாம்!”
தொழில் ஆரம்பித்த பின்புதான் எப்படித் தடாலடியாக தொழில்நுட்பத்தின் விலை குறையும், படங்கள் உள்ளே வருவதில் எவ்வளவு சிக்கல், சீரியலில் பேமெண்ட் வாங்குவதில் எவ்வளவு தாமதம் என எல்லாம் தெரிந்தது. சொன்ன நண்பர் ஆறு மாதத்தில் கம்பி நீட்டிவிட்டார். கடைசியாக மொத்தத்தையும் பாதி விலைக்குக் கொடுத்து வெளியே வந்தேன்.
“என்ன சார் நீங்க போய் இப்படிப் பண்ணீட்டீங்க? என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா?” என்று விஷயம் கேள்விப்பட்ட திரைப்படம் சார்ந்தவர்கள், ஒரு டஜன் பேராவது என்னிடம் கேட்டிருப்பார்கள். ஆனால், தொழில் தொடங்க நினைத்த போது யாரிடமும் ஆலோசனை கேட்கும் மனநிலை எனக்கு இல்லை.
பிறரிடம் ஆலோசனையோ உதவியோ கேட்கத் தயங்குபவர்கள் தொழிலில் ஜெயிப்பது சிரமம்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 07.03.2017