disalbe Right click

Showing posts with label ஆக்கிரமிப்பு. Show all posts
Showing posts with label ஆக்கிரமிப்பு. Show all posts

Wednesday, February 19, 2020

அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால்

அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
அரசாணை 540 என்ன சொல்கிறது?
முதலில் தாசில்தாருக்கு புகார்மனு
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தின் புல எண் உள்ளிட்ட விவரங்களுடன் அரசாணை எண்-540 மூலம் அகற்றவேண்டும் எனக் குறிப்பிட்டு... அந்தப் பகுதியின் தாசிதார் அவர்களுக்கு பதிவுத் தபாலில் மனு ஒன்றை அனுப்ப வேண்டும்.
உடனே, தாசில்தார் ஆக்கிரமிப்புப் பகுதியைப் பார்வையிட்டு அதனை உறுதி செய்த பிறகு, ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளுங்கள் என்று ஆக்கிரமிப்பாளரின் முகவரிக்கு நோட்டீஸ் மூலம் உத்தரவிட வேண்டும்.
ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றால்...
வட்டாட்சியர், நில அளவையாளர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் நேரடியாக சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, அகற்றியது தொடர்பான நடவடிக்கை அறிக்கை நகலை மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளைப் பார்வையிடுதல், அகற்றுதல், மனுதாரருக்கு அறிக்கை அளித்தல் ஆகிய அனைத்து செயல்களையும் 60 நாட்களுக்குள் அதிகாரிகள் முடிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..
முதல் மேல்முறையீடு
ஆக்கிரமிப்பை தாசில்தார் அகற்றவில்லை என்றாலோ, அகற்றியதில் புகார்தாரருக்கு திருப்தி இல்லை என்றாலோ, வருவாய் கோட்டாட்சியருக்கு முதல் மேல்முறையீடு செய்யலாம். ஏற்கெனவே தாசில்தாரிடம் அளித்த மனுவின் நகலையும் இணைத்து மேல்முறையீடு செய்ய வேண்டும்.
முதல் மேல்முறையீடு மனுவை பெற்ற ஒரு மாதத்துக்குள் வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்து, மனுதாரருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் அது சம்பந்தமான தகவலைத் தெரிவிக்க வேண்டும்.
இரண்டாம் மேல்முறையீடு
மனுதாரருக்கு வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் நடவடிக்கையும் திருப்தி இல்லையென்றால், அந்த மாவட்டத்தின் வருவாய் அலுவலருக்கு இரண்டாம் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
மூன்றாம் மேல்முறையீடு
மாவட்டத்தின் வருவாய் அலுவலரது நடவடிக்கையிலும் மனுதாரருக்கு திருப்தி இல்லையென்றால், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், நில அளவைத் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் தலைமையில் செயல்படும் வழிகாட்டும் நெறிப்படுத்தும் குழுவிடம் மூன்றாம் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
கடைசியில் நீதிமன்றம்தான்!
அவர்களின் நடவடிக்கையிலும் மனுதாரருக்கு திருப்தி இல்லையென்றால், அனைத்து மனுக்களின் நகல்களையும் இணைத்து உயர்நீதிமன்றத்தில் பொது நல ரிட் மனு தாக்கல் செய்யலாம்.
எவ்வளவு பழமையான ஆக்கிரமிப்புகள் இருந்தாலும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு, உயர் நீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிடும்.
முகநூலில் கடந்த 01.11.2019ல் நான் பதிவிட்டது.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 19.02.2020

Tuesday, July 2, 2019

போக்குவரத்துக்கு தடையாக இருக்கும் வழிபாட்டு ஸ்தலங்கள்

போக்குவரத்துக்கு தடையாக இருக்கும் வழிபாட்டு ஸ்தலங்கள்
நமது நாட்டில் நடப்பதற்கே சிரமமான தெருக்களில் கூட பல கோவில்கள் திடீரென உருவாக்கப் பட்டிருக்கும். கோவில்தானே என்று யாரும் அதனை கண்டு கொள்வதில்லை. முதலில் சின்னதாக ஒரு சிலை வைப்பார்கள். பின்பு மேடை கட்டுவார்கள். அதன் பிறகு சுற்றுப் பிரகாரம், கோபுரம் என்று வெகு வேகமாக அந்த இடம் ஆக்கிரமிக்கப்படும். ஏதோ ஒரு காரணத்தினால் ஈர்க்கப்பட்டு மக்களும் வழிபாட்டிற்காக அங்கு செல்வார்கள். இதற்கென்று விழாக் கமிட்டியார், தர்மகர்த்தா தேர்ந்தெடுக்கப்பட்டு தலைக்கட்டு வரி, நன்கொடை வசூல் என்று அந்தப் பகுதியே அமர்க்களப்படும். 
அதிகாரிகள் தலையிடுவதில்லை
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று புகார் அளித்தாலும், பக்தி காரணமாக அதிகாரிகள் அதனை அகற்ற பயந்து, புகார் மனுக்களை கண்டு கொள்வதில்லை. இதனை நாம் பல இடங்களில் பார்த்துவிட்டு என்ன செய்வது? என்றே தெரியாமல் அதனை கடந்து தினசரி சென்று கொண்டிருக்கிறோம். ஆனால், இதனை அகற்ற ஒரு வழியை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது தெரியுமா?
உச்சநீதிமன்ற தீர்ப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் இப்படி ஒரு வழிபாட்டு ஸ்தலத்தை அகற்ற சிக்கல் வந்தது. உள்ளூரில் ஆரம்பித்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்த சிக்கலான பிரச்சனைக்குரிய வழக்கு மதிப்பிற்குரிய நீதிபதிகள் சுதிர் அகர்வால் மற்றும் ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அழுத்தமான தீர்ப்பு ஒன்றை அவர்கள் வழங்கினர். அதன்படி 
⧭  போக்குவரத்துக்கு தடையாக உள்ள எந்த ஒரு வழிபாட்டு ஸ்தலமும் கடந்த 2011ம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு கட்டப்பட்டிருந்தால்,  அவை அனைத்தும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.
⧭  அரசாங்கத்துக்குச் சொந்தமான காலி இடங்கள், சிறிய தெருக்கள்,  நெடுஞ்சாலைகள்,   பாதைகள்,  போன்ற எந்த ஒரு இடத்திலும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள எந்த ஒரு கோவிலையும் கட்ட சட்டம் அனுமதிக்கக்கூடாது.
⧭  அவ்வாறு கட்டப்பட்டிருந்தால், அதனை ஆறுமாத காலத்திற்குள் வேறு இடத்திற்கு உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
⧭  இது பற்றிய விபரங்களை மாவட்ட ஆணையர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள், மாநில தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும்.
⧭  இந்த தீர்ப்பு வந்த (10.06.2016) நாள் முதல் ஏதாவது கோவில் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு நடந்தால், அதற்கு அந்த மாவட்டத்தை சேர்ந்த துணை ஆட்சியர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுமே முழுப்பொறுப்பு ஆவார்கள்.
⧭  கோவில் கட்டியவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்து, கிரிமினல் குற்றம் செய்ததற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
வழக்கு எண்: Supreme Court of India, Lavkush vs State of UP, 2016, Decided on 10.06.2016
****************************************** நன்றி : லாயர்ஸ் லைன், செப், 2016 

Monday, June 5, 2017

ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு
அவமதிப்பு வழக்கில் கலெக்டர் ஆஜர்  
மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், புதுக்கோட்டை கலெக்டர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரானார். ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை புத்தாம்பூர் குமரேசன் தாக்கல் செய்த மனு: 
புதுக்கோட்டையில் நீர்நிலைகள், ரோடு, பொது இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர், அதிகாரிகளிடம் மனு அளித்தேன். நடவடிக்கை இல்லை. உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தேன். நீதிபதிகள், 'ஆக்கிரமிப்புகளை ஒரு மாதத்திற்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என பிப்.,2 ல் உத்தரவிட்டனர். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுப்பிரமணியன், நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் செந்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய (என்.எச்.ஏ.ஐ.,) திட்ட இயக்குனர் முத்துடையார் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குமரேசன் மனு செய்திருந்தார். நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் கொண்ட அமர்வு விசாரித்தது.
கலெக்டர் கணேஷ் உட்பட நான்கு அதிகாரிகள் ஆஜராயினர்.

நீதிபதிகள் உத்தரவு: 

இந்நீதிமன்றம் பிப்.,2 ல் உத்தரவிட்டதன் அடிப்படையில், ஆக்கிரமிப்புகளை ஜூன் 27 க்குள் அகற்ற வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கலெக்டர் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். ஜூன் 28 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 05.06.2017


Wednesday, May 17, 2017

இடையூறாக உள்ள ஆட்டோ ஸ்டாண்டை முன்னறிவிப்பின்றி அகற்றலாம்:

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள நடைபாதை ஆட்டோ ஸ்டாண்டை முன்னறிவிப்பின்றி அகற்றலாம்:
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை ஆவடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் காந்திராஜ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஆவடி அரசு பேருந்து பணிமனைக்கு பின்புறம் அண்ணா சிலை அருகே ஆட்டோ ஸ்டாண்டு வைத்துள்ளோம். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இதை அகற்றும் நடவடிக்கையில் காவல்துறையும், ஆவடி நகராட்சியும் ஈடுபட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் எம்.கே.சுப்பிரமணியம் ஆஜராகி, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடை யூறு செய்யும் வகையில் ஆட்டோ ஸ்டாண்டு அமைத்துள்ளதாக கூறினார்.
அண்ணா சிலை அருகே ஆட்டோக்களை நிறுத்திக் கொள்ள காவல்துறையினர் அனுமதி அளித்திருப்பதாகக் கூறிய மனுதாரரின் வழக்கறிஞர், அதற்கான ஆவணத்தை தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையை வழிமறித்து பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ ஸ்டாண்டு அமைக்க மனுதாரருக்கு உரிமை இல்லை. தவிர, அங்கு அதிகபட்சம் 5 ஆட்டோக்களை சுழற்சிமுறையில் நிறுத்திக்கொள்ளவே காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அந்த இடத்தில் ஸ்டாண்டு அமைக்க அனுமதிக்க முடியாது.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக நடைபாதையில் ஆட்டோ ஸ்டாண்டு அமைத்தால், அதை முன்னறிவிப்பு இல்லாமல் அகற்ற காவல்துறையினருக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் உரிமை உள்ளது’’ என்று கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 17.05.2017

Tuesday, April 21, 2015

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற


அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற என்ன செய்ய வேண்டும்?
*********************************************************************************
          சென்னை உயர்நீதிமன்றப் பேராணை மனு எண்:26722/2013-க்கு 11.08.2014 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி அரசாணை எண்:540 வருவாய் எல் டி 6 (2) துறை நாள்  : 04.12.2014-ல் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள்மீது நடவடிக்கை மேற்கொண்டு முடிவு செய்வதற்கு வட்ட/கோட்ட/மாவட்ட அளவில் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 
வட்ட அளவிலான குழு:
                       1.வருவாய் வட்டாட்சியர் 2. காவல் ஆய்வாளர் 3. வட்ட துணை ஆய்வாளர் (நில அளவை) 
கோட்ட அளவிலான மேல் முறையீட்டுக் குழு:
                           1. சார் ஆட்சியர் / வருவாய் கோட்டாட்சியர் 3. துணை காவல் கண்காணிப்பாளர் 3. உதவி இயக்குநர் (நில அளவை)
                    ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு அளிக்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அவர்களுக்கு மனு அளிக்க வேண்டும்.
      ஷை வட்டாட்சியர் அவர்கள் 60 நாட்களில் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றாலோ அல்லது ஷை வட்டாட்சியர் அவர்களின்  பதில் திருப்திகரமாக இல்லை என்றாலோ , 60 தினங்களுக்குப் பிறகு கோட்ட அளவிலான மேல்முறையீட்டுக்குழுத் தலைவரான சார் ஆட்சியர்/ வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம்  மேல்முறையீடு செய்ய வேண்டும். இம் மேல்முறையீட்டு மனு 30 நாட்களுக்குள் விசாரணை செய்து ஆணை வழங்கப்படும். 
       கோட்ட அளவிலான மேல்முறையீட்டுக் குழுவின் ஆணை கிடைக்கப்பெறவில்லை என்றாலோ அல்லது அவர்கள் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்றாலோ, 30 தினங்களுக்குப் பிறகு, மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு தலைவரான மாவட்ட வருவாய் ஆய்வாளர் அவர்களுக்கு ஆய்வு மனு செய்ய வேண்டும். இம்மனுமீது 30 தினங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மனுதாரருக்கு ஆணை வழங்கப்படும். 
அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஆணையின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது