disalbe Right click

Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Wednesday, May 11, 2016

இண்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ்


இண்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் பெற என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவிலிருந்து, வெளி நாடுகளுக்குச் செல்பவர்கள், அங்கே சென்றவுடனே வாகனம் ஓட்ட வேண்டிய அவசியம் ஏற்படலாம். அந்த நாட்டில் உள்ள அதற்குரிய அலுவலகத்தில் டிரைவிங் லைசென்ஸுக்கு விண்ணப்பித்து, அது கிடைக்கும் வரை காத்திருக்க முடியாத சூழ்நிலையில், செல்லும்போது இங்கிருந்தே இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பர்மிட் வாங்கிக்கொண்டு செல்லலாம்.
மற்ற உலக நாடுகளுக்கும் நம் நாட்டிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் வாங்குகின்ற டிரைவிங் பர்மிட், வெளிநாடுகளில் ஓராண்டு காலத்துக்கு மட்டும்தான் செல்லுபடியாகும்.
நமது நாட்டில் வசிக்கும் ஒருவர் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் மட்டுமே, இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் லைசென்ஸ் வேண்டி விண்ணப்பிக்க முடியும். அதற்குரிய 4ஏ விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதனுடன் டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், விண்ணப்பதாரர் எந்த நாட்டுக்குச் செல்கிறாரோ அதற்குரிய விசா, பயண டிக்கெட் பிரதி, மருத்துவச் சான்றிதழ், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் ஆகியவற்றின் ந்கல்களை இணைத்து் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இதனை பெறுவதற்கு 30 நாட்கள் பிடிக்கும்.
நமது நாட்டில் பெறுகின்ற சாதாரண டிரைவிங் லைசன்ஸை வைத்து, சில வெளிநாடுகளில் மட்டும் IDL இல்லாமலே்யே வாகனங்களை ஓட்டலாம்.
ஜெர்மனி:
ஜெர்மனியில் நுழைந்த நாள் முதல் 6 மாதங்களுக்கு இந்திய லைசென்ஸை வைத்துக் கொண்டு கார், பைக் ஓட்ட முடியும். 
ஆனால், உங்களது டிரைவிங் லைசென்ஸின் மொழியாக்கம் செய்யப்பட்ட நகலை தூதரகத்திலிருந்து பெற்றுக் கொள்வது அவசியம். இல்லையெனில், சர்வதேச ஓட்டுனர் பர்மிட் இருந்தால் பிரச்னை இல்லை. வேக வரம்பு இல்லாத ஆட்டோபான் சாலைகளில் காரில் ஒரு சூப்பரான டிரிப் அடித்து வர இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலியாவிலும் இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்து கார், பைக் ஓட்ட அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், உங்களது பாஸ்போர்ட்டும், டிரைவிங் லைசென்ஸும் ஆங்கிலத்தில் இருத்தல் அவசியம். அத்துடன் இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் இருக்க வேண்டும்.
சுவிட்சர்லாந்து:
பலரின் கனவு சுற்றுலா பிரதேசமாக விளங்கும் சுவிட்சர்லாந்து நாட்டிலும் ஓர் ஆண்டுக்கு தாய் நாட்டு டிரைவிங் லைசென்ஸை வைத்து கார், பைக் ஓட்ட அனுமதிக்கப்படுகிறது. 
அங்குள்ள செயின்ட் கோத்தார்டு கணவாய்க்கு ஒரு ரவுண்டு செல்ல மறவாதீர்.
நியூஸிலாந்து:
நியூஸிலாந்து நாட்டிலும் இந்திய டிரைவிங் லைசென்ஸ் வைத்து வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதியுண்டு. அங்குள்ள தேம்ஸ் பகுதியிலிருந்து கோரமென்டெல் சாலையில் பயணிக்க தவறாதீர்.
மொரிஷியஸ் தீவு:
மொரிஷியஸ் தீவிலும் இந்திய டிரைவிங் லைசென்ஸுடன் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கப்படுகிறது.
பிரான்ஸ்:
பிரான்ஸ் நாட்டிலும் இந்திய ஓட்டுனர் உரிமத்துக்கு அனுமதி உண்டு. ஆனால், உங்களது டிரைவிங் லைசென்ஸை இந்திய தூதரகம் மூலமாக பிரெஞ்ச் மொழியில் மொழியாக்கம் செய்து கொள்வது அவசியம். அங்குள்ள கார்சிகா மலைப்பகுதி சாலையில் உங்களது ஓட்டுனர் திறனுக்கு சவால் விடும் சாலைகளில் பயணிக்க தவறாதீர்.
நார்வே:
உலகின் அழகிய பிரதேசங்களில் ஒன்றான நார்வே நாட்டிலும் இந்திய ஓட்டுனர் உரிமத்துடன் வாகனங்களை இயக்க முடியும். மூன்று மாதங்களுக்கு மட்டும் இந்த அனுமதி. நடுராத்தியில் சூரியன் உதிக்கும் நாடு என்று பெருமையுடைய நார்வேயின் இயற்கை அழகை காண செல்லும் இந்தியர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
இங்கிலாந்து:
இங்கிலாந்தில் ஓர் ஆண்டுக்கு இந்திய டிரைவிங் லைசென்ஸுடன் கார், பைக்குகளை ஓட்ட முடியும். சரி, இங்கிலாந்து புறப்பட்டு விடலாம் என்று முடிவு செய்திருக்கும் ஆட்டோமொபைல் பிரியர்கள், ஐலே ஆஃப் மேன் சாலையில் பயணிக்க தவறாதீர். இங்கு வேக வரம்பு இல்லை என்பதையும் மனதில் வையுங்கள்.
அமெரிக்கா:
சொந்தக்காரர், நட்பு வட்டத்தில் விசாரணையை போட்டால் முக்கால்வாசி பேரின் வீட்டில் ஒருவராவது அமெரிக்காவில் இருப்பதாக சொல்கின்றனர். எனவே, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு மிக நெருக்கமாகிவிட்டது. எனவே, சுற்றமும், நட்பும் வட்டாரத்தை வைத்து சுற்றுலா சென்றாலும், பணி நிமித்தமாக சென்றாலும் இந்திய ஓட்டுனர் உரிமத்திற்கு ஓர் ஆண்டு அனுமதி உண்டு. ஆனால், சர்வதேச ஓட்டுனர் பர்மிட்டும் அவசியமாகிறது. அங்குள்ள ரூட்-66 சாலையில் செல்ல தவறிவிடாதீர்.

இதுதவிர, ஸ்பெயின், கனடா, இத்தாலி, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய டிரைவிங் லைசென்ஸிற்கு அனுமதியுண்டு. ஆனால், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரங்களை அணுகி வழிமுறைகளை தெரிந்து கொள்வதுடன், குறிப்பிட்ட நாடுகளுக்கு சென்றவுடன் அங்குள்ள இந்திய தூதரகங்களிலும் வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை தெரிந்துகொண்டு செல்வது அவசியம்.
வெளிநாட்டில் கார் ஓட்டுவது பரவசத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அங்குள்ள சாலைகள் தட அமைப்பு, இடது புற ஸ்டீயரிங் வீல் அமைப்பு, சாலை விதிகள், சாலை நிலைகள் போன்றவற்றை உணர்ந்து கொள்வதில் சிரமங்கள் உண்டு. எனவே, ஓரளவு பரிட்சயமான இடங்களிலும், வழிகாட்டியை வைத்துக் கொள்வதும் பயன் தரும்.

தகவல் உதவி : டிரைவ் ஸ்பார்க் * எப்படி - 11.05.2016