disalbe Right click

Showing posts with label கிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம். Show all posts
Showing posts with label கிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம். Show all posts

Sunday, January 28, 2018

கிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம்

கிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம்
முன்னோர்களின் சொத்தானது பாகம் பிரிப்பதற்கு முன் ஒரு இந்து கூட்டு குடும்பத்தில் குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டால், அந்தச் சொத்தில் அவருக்கு சேர வேண்டிய பங்கு அவரின் விதவை மனைவி மற்றும் பிள்ளைகளுக்குச் சேரும். இது சம்பந்தமாக முதலில் இந்து பெண் சொத்துரிமைச் சட்டம்-1937ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது
கடந்த 1956ம் ஆண்டில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்து வாரிசு சட்டத்தில் (1956) ஒரு இந்து குடும்ப உறுப்பினர் (ஆண்) மரணமடையும் போது, முன்னோர்களின் சொத்தில் அவருக்கு சேர வேண்டிய பங்கு அவருடைய மனைவி, மகன்கள், மகள்கள் என ரத்த சம்மந்தமான உறவினர்களுக்கு சேர்வதுடன், அந்த சொத்தை அவர்கள் சுதந்திரமாக பயன்படுத்துவது, விற்பனை செய்வது அல்லது விரும்பியவருக்கு எழுதி கொடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படிதான் இந்துக்கள் தங்களது சொத்துக்களை பிரித்துக் கொள்கிறார்கள்.
மாறுபடுகின்றது
ஆனால் கிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டத்தில் இது மாறுபடுகிறது. ஒரு கிறிஸ்துவருக்கு ஏதாவது ஒரு சொத்து அவரது தந்தை வழியிலோ அல்லது தாய் வழியிலோ அல்லது ரத்த சம்மந்தமான உறவினர்கள் மூலமாகவோ அல்லது உயில் மூலமாகவோ அல்லது தானமாகவோ பெற்றிருந்தால், அது அவரது சொந்த சொத்தாக உறுதி செய்யப்படுகிறது. இப்படி சொத்து பெற்றிருப்பவர், தான் வாழும் காலத்தில் அந்த சொத்தின் ஏகோபித்த உரிமையாளர் ஆவார்.
அந்த சொத்தின் மீது அவரது மனைவியோ, அவரது மகன்களோ அல்லது மகள்களோ மற்றும் ரத்த சம்மந்தமான அவரது உறவினர்கள் யாருமே உரிமை கொண்டாட முடியாது. ஏதும் எழுதி வைக்காமல் அவர் இறந்திருந்தால், அவரது மரணத்திற்கு பிறகுதான் மேற்கண்டவர்கள் அந்த சொத்தின்மீது உரிமை கொண்டாட முடியும்.
அல்லது அந்த கிறிஸ்துவர் தான் வாழும் காலத்தில், தனக்குச் சொந்தமான சொத்துக்களை தனது மரணத்திற்கு பின் யார் யார் அனுபவிக்க வேண்டும்? என்று உயில் எழுதி வைக்கிறாரோ அதன் படி தான் அனுபவிக்க முடியும்.
உயில் எழுதி வைக்காமல் திருமணமான ஒரு ஆண் இறந்திருந்தால்....?
கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஆண் தனது பெயரிலுள்ள சொத்து தொடர்பாக உயில் எதுவும் எழுதி வைக்காமல் இறந்திருந்தால், அவரது பெயரில் உள்ள சொத்துக்கள் இறந்தவர் ஒரு ஆணாக இருக்கும் பட்சத்தில், அவரது மனைவி மற்றும் மகன், மகள்களுக்கும், இறந்தவர் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவரது கணவர் மற்றும் மகன், மகள்களுக்கும், சேரும். இதனை இந்திய வாரிசு சட்டம்-1925 உறுதி செய்கிறது.
யார் யாருக்கு எவ்வளவு பங்கு?
இறந்தவர் ஆணாக இருந்து , அவருக்கு திருமணமும் ஆகி, பிள்ளைகளும் இருந்தால் அவரது மனைவிக்கு மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கும், மீதமுள்ள சொத்தில் இரண்டு பங்கை அவரது பிள்ளைகளும் (அது எத்தனை பிள்ளைகளாக இருந்தாலும்) பெற முடியும் என்று சட்டப்பிரிவு 33 ()வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறந்த ஆணுக்கு திருமணமாகி மனைவி மட்டும் இருந்து பிள்ளைகள் யாரும் இல்லாத பட்சத்தில், அவருடைய மொத்த சொத்தில் பாதி பங்கு அவருடைய மனைவிக்கும், மீதமுள்ள பாதி பங்குகளை இறந்தவருடைய ரத்த சம்மந்தமான உறவினர்கள் பெற தகுதியுடையவர்கள் என்று சட்ட பிரிவு 33 (பி)யில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறந்த ஆணுக்கு திருமணமாகி பிள்ளைகளும், ரத்த சம்மந்தமான உறவினர்களும் யாருமே இல்லாத பட்சத்தில் முழுச் சொத்தின் உரிமையும் அவரது மனைவிக்குச் சேரும் என்று சட்டப்பிரிவு 33 (சி)யில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறந்த ஆணுக்கு திருமணம் ஆகாமலோ அல்லது அவருக்குத் திருமணமாகி மனைவியோ மற்றும் பிள்ளைகளோ யாருமே இல்லாத பட்சத்தில் அவருடைய முழு சொத்தையும் அவரது ரத்த சம்மந்தமான உறவினர்கள் அனுபவிக்கலாம் என்று சட்டப்பிரிவு 34ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறந்த ஆணுக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் மேலும் ரத்த சம்மந்தமான உறவினர்கள் என்று யாருமே இல்லை என்றால், அவர் பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களும் அரசாங்க சொத்தாக மாறிவிடும்.
உயில் எழுதி வைக்காமல் திருமணமாகாத ஒரு ஆண் இறந்திருந்தால்....?
இறந்த ஆணின் தந்தையார் உயிரோடு இருந்தால், திருமணம் ஆகாமல் இறந்துபோன மகனின் பெயரிலுள்ள மொத்த சொத்துக்கும் உரிமையாளராவார் என்று சட்டப்பிரிவு 42ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தந்தை மற்றும் உடன்பிறந்தவர்கள் உயிரோடு இல்லை என்றால்....?
திருமணமாகாமல் இறந்த ஆணின் தந்தையார் அந்த சமயத்தில் உயிரோடு இல்லை என்றால் மேலும் இறந்த ஆணின் உடன்பிறந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் யாரும் உயிருடன் இல்லாமல், பெற்ற தாய் மட்டும் உயிருடன் இருந்தால், மொத்த சொத்திற்கும் அவர் உரிமையாளராவார் என்று சட்டப்பிரிவு 46ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயில் எழுதி வைக்காமல் ஒரு பெண் இறந்திருந்தால்....?
இறந்தவர் பெண்ணாக இருந்து , அவருக்கு திருமணமும் ஆகி, பிள்ளைகளும் இருந்தால், அவரது கணவருக்கு மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கும், மீதமுள்ள சொத்தில் இரண்டு பங்கை அவரது பிள்ளைகளும் (அது எத்தனை பிள்ளைகளாக இருந்தாலும்) பெற முடியும் என்று சட்டப்பிரிவு 35ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறந்த பெண்ணுக்கு திருமணமாகி, கணவர் ஏற்கனவே இறந்து போயிருந்தால் ஒரே ஒரு வாரிசு இருந்தால் (அது ஆணாக இருந்தாலும், அல்லது பெண்ணாக இருந்தாலும்) இறந்தவரின் பெயரிலுள்ள முழுச் சொத்தும் அவருக்கு சொந்தமாகிவிடும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால், அவர்கள் அனைவரும் அந்த சொத்தை சமமாக பங்கு பிரித்து கொள்ளலாம். இறந்த பெண்ணின் கணவரும், அவரது பிள்ளைகளும் ஏற்கனவே மரணமடைந்திருந்தால், அவர்களுடைய பிள்ளைகள் (பேரன், பேத்திகள்) அந்தச் சொத்துக்கு சொந்தம் கொண்டாட முடியும் என்று சட்டப்பிரிவு 37ல் குறிப்பிடப்பட்டுள்ளது
இறந்து போன பெண்ணுக்கு கணவர் மற்றும் பிள்ளைகள் மேலும் அவர்களின் பிள்ளைகளான பேரன், பேத்திகள் இல்லாத நிலையில் அந்தப் பெண்ணின் கொள்ளுப் பேரன், பேத்திகள் அந்த சொத்தை சமமாக பிரித்து கொள்ளலாம் என்று சட்டப்பிரிவு 38ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
**************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 29.01.2018