disalbe Right click

Showing posts with label உதவும் கரங்கள். Show all posts
Showing posts with label உதவும் கரங்கள். Show all posts

Tuesday, September 5, 2017

இதய நோயாளிகளுக்கான இலவச சிகிச்சைக்கு....

இதய நோயாளிகளுக்கான இலவச சிகிச்சைக்கு....
இந்த கட்டுரை கொஞ்சம் பின்னோக்கி அதாவது 2007ல் ஆரம்பிக்கிறது.
சென்னையில் வேலை பார்க்கும் ராஜ்குமார் தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் உள்ள குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு திரும்புகிறார்.
அவர் திரும்பும் அதே பஸ்சில் ஒரு கிராமத்து அம்மாவும்-மகளும் பயணிக்கின்றனர்.மகள் பெயர் மணிமேகலை வயது ஏழு என்பதும் கடுமையான இதய நோய் காரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிபாரிசு செய்யப்பட்டு வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் சென்னைக்கு புதிது என்பதுடன் கையில் போதுமான காசு இல்லை என்பதும் தெரியவந்தது.
சரி வீட்டிற்கு பிறகு போய்க்கொள்ளலாம் முதலில் இவர்களுக்கு உதவுவோம் என்று முடிவு செய்து அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அட்மிட் செய்கிறார். மணிமேகலையின் அழகுச்சிரிப்பும், பேச்சும் காந்தம் போல இழுக்க திரும்ப திரும்ப சென்று பார்த்து அன்பையும் ஆறுதலையும் வழங்குகிறார்.
அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ கட்டணம் கிடையாது ஆனால் தொடர்ந்து தங்கியிருக்கும் போது ஏற்படும் குடும்பத்தினரின் உபரி செலவிற்காக நண்பர்கள் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு போய்க் கொடுத்தார். இன்னும் கொஞ்சம் பணம் திரட்டினால் மணிமேகலையை விரைவில் குணப்படுத்தலாம் என்பது தெரியவரவே மீண்டும் பணத்தை திரட்ட தொடங்கினார்.
முன்பின் தெரியாத யாரோ ஒரு ஜீவனின் உயிருக்காக ராஜ்குமார் பாடுபடுவதைக் கேள்விப்பட்டது அவர் வேலை பார்க்கும் டாடா நிறுவனம். ராஜ்குமாரை அழைத்து உனக்கு தேவைப்படும் பணத்தை கம்பெனி அறக்கட்டளையில் இருந்து தருகிறோம் என்று சொல்லி தந்தும் விட்டனர்மணிமேகலையும் அபாயகட்டத்தை தாண்டி பிழைத்துக்கொண்டார்.
மணிமேகலையுடன் ராஜ்குமார் தனது சேவையை நிறுத்திக்கொள்வார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த போது இன்னும் பல மணிமேகலைக்கு நமது உதவி தேவை என்று முடிவு செய்து இதய நோயாளிகளுக்கான சிகிச்சை களத்தில் முழுமையாக இறங்கிவிட்டார்.
இவருக்கு பெரிதும் வழிகாட்டியாக இருந்தது தினமலரில் வரும் உயிர்காக்க உதவுங்கள் விளம்பரங்களே.அந்த விளம்பரங்களில் உள்ள நபர்களை நேரில் தொடர்பு கொள்வது,சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுடன் பேசுவது என்று நிறைய நேரம் செலவிட்டு கிடைத்த அவர்களின் விவரத்தை தேவையை டாடா அறக்கட்டளையிடம் கொடுத்துவிடுவார்.
அறக்கட்டளை அவர் சிபாரிசு செய்யும் நோயாளிகளுக்கு உதவ ஆரம்பித்தது இப்படி 2007ல் ஆரம்பித்த இந்த இதய நோயாளிகளுக்கான இலவச சிகிச்சைக்கான பயணம் 2017 வரை தொடர்கிறது இதுவரை 347 நோயாளிகள் சிகிச்சை பெற்று பூரணநலம் பெற்றுள்ளனர்.
ஒரு வேடிக்கை என்னவென்றால் ராஜ்குமார் டாடா நிறுவனத்தைவிட்டு வெளியேறி வேறு நிறுவன வேலையில் சேர்ந்துவிட்டார் ஆனாலும் அறக்கட்டளை இவர் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக இப்போதும் இவர் சிபாரிசு செய்யும் நோயாளிகளுக்கு உதவி வருகிறது.
இதய நோயாளிகளுக்கும் இதயம் இருக்கிறது சிகிச்சை எடுத்துக்கொண்டால் மற்றவர்களைப் போல சந்தோஷமாக வாழமுடியும் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் ராஜ்குமார் இதய நோயாளியான பத்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இப்போது சந்தோஷமாக குடும்பம் நடத்தும் தன் மனைவி பத்மா பெயரில் பத்மா அறக்கட்டளையை உருவாக்கி, சதிஷ்எல்டின் கெல்லி மற்றும் சிவராம் ஆகிய அறக்கட்டளை உறுப்பினர்களுடன் இணைந்து இதய நோயாளிகளுக்கான தொண்டை தற்போது விரிவு படுத்தியுள்ளார்.
டாடா அறக்கட்டளை தரும் பணத்தை தவிர வேறு யாரிடமும் பணம் வாங்குவதில்லை என்பது அறக்கட்டளையின் பிரதான குறிக்கோள்.இரண்டாவதாக இதய நோய் பற்றிய பயத்தை நோக்கி அவர்களுக்கான தரமான சிகிச்சை பெறவைப்பதுதான் முக்கிய நோக்கம். இதய நோய் சிகிச்சை பெற விரும்புபவர்கள் தமிழக அரசின் மருத்துவகாப்பீட்டு அட்டை வைத்திருக்கவேண்டியது அவசியம், அதன் மதிப்பீட்டைவிட அதிகமாக எவ்வளவு செலவானாலும் அறக்கட்டளை பார்த்துக்கொள்ளும் அந்த வகையில் முப்பது லட்ச ரூபாய் கூட செலவு செய்து சிலர் காப்பாற்றப்பட்டு உள்ளனர்.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவே பெரும்பாலான பள்ளிக்குழந்தைகள் இதய நோயினால் அவதியுறுகின்றனர் ஆகவே பள்ளிகளில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நடத்த வேண்டும் என்பதில் அறக்கட்டளை ஆர்வமாக உள்ளது.
தன் வேலை நேரம் போக மற்ற நேரம் முழுவதையும் இதய நோயாளிகளின் நலனிற்காகவே செலவிடும் ராஜ்குமார் கேட்டுக் கொள்வதெல்லாம் இதயத்தில் ஒட்டை , இதய வால்வு பாதிப்புஇதய வால்வு மாற்றம் என்று இதயம் சம்பந்தமான எந்த பிரச்னை என்றாலும் கவலைப்படவேண்டியது இல்லை, பணம் அதிகம் செலவாகுமோ என்று பயப்படவேண்டியதும் இல்லை 
ஒரே ஒரு போன் செய்யுங்கள் எங்களால் முடிந்தளவு உங்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லும் ராஜ்குமாரின் எண்கள் 7373748212, 8939057671.
-எல்.முருகராஜ் , murugaraj@dinamalar.in
நன்றி : தினமலர் நாளிதழ் - 18.08.2017