ஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்னைத்தான் மலை போல நம்பி வந்திருக்கிறேன். தயவுசெய்து இல்லை என்று மட்டும் சொல்லிவிடாதே! என்று உங்களது நண்பரோ அல்லது உறவினரோ கண்கள் கலங்கியபடி, கைகளைப் பிசைந்து கொண்டு உங்கள் முன் கூனி குறுகி நிற்கும் போது இரக்கப்பட்டு நீங்கள் உங்கள் கையிலிருந்த பணத்தைக் கொடுத்து அவர்களுக்கு உதவியிருக்கலாம். அவர்களும் அந்த நன்றியை மறக்காமல் உங்கள் உறவை தொடர்ந்து கொண்டிருக்கலாம். இது ஒரு வகை.
ஒரு பிஸ்னஸ் ஒண்ணு ஆரம்பிச்சிருக்கேன். நல்லாப் போய்க்கிட்டிருக்கு. இன்னும் கொஞ்சம் விரிவா செய்யணும்னு நெனைக்கிறேன். பேங்கில லோனு தாரேங்கிறாங்க. ஆனா சூரிட்டி கேக்குறாங்க. எங்கிட்ட கொஞ்சம் கம்மியா இருக்கு. அதனால, நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு உங்கள் நண்பரோ அல்லது உறவினரோ ரொம்ப மிடுக்கோட காரில் வந்து இறங்கி, ஒரு தோரணையோடு கேப்பாங்க. இது இன்னொரு வகை.
வீடு, வாசல்னு பய நல்லா வசதியாத்தான் இருக்கான். இவன் சொல்ரது அத்தனையும் உண்மையாத்தான் இருக்கும். இன்னைக்கு இவனுக்கு நாம உதவி செஞ்சா, நாளைக்கி இவன் நமக்குச் செய்யப் போறான்னு நம்பி, நீங்க சூரிட்டி கையெழுத்து போட்டிருக்கலாம்.
எதிர்பாராதவிதமாகவோ அல்லது நீங்கள் உதவி செய்தவர்களின் தவறான நடவடிக்கைகளினாலோ அவர்கள் நடத்தி வருகின்ற பிஸ்னஸ் நஷ்டமடைந்து, வாங்கிய கடனை கட்டவில்லை என்றால், சூரிட்டி போட்ட உங்களது சொத்தை ஏலத்தில் விட்டு கடன் கொடுத்த வங்கி, தன்னை காப்பாற்றிக் கொள்ளும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சூரிட்டி கொடுத்த ஒருவரின் உண்மைக்கதை
எனது நண்பர் ஒருவர் வசதியானவர். அவருக்கு வேண்டிய ஒருவரது பையனின் பொறியியல் படிப்புக்காக வங்கியில் கல்விக்கடன் அவசரமாக வாங்க வேண்டிய சூழ்நிலை. சூரிட்டி இருந்தால்தான் கொடுப்போம் என்று வங்கி மேலாளர் சொல்லியதால், எனது நண்பர் சூரிட்டி கையெழுத்து போட்டார். ஒரு வருடம் ஆயிற்று. எதிர்பாராவிதமாக கல்விக்கடன் வாங்கிய மாணவன் விபத்து ஒன்றில் இறந்துவிட்டான். அவனுக்கு இன்சூரன்ஸ் செய்யவில்லை. வங்கி இரக்கம் பார்க்கவில்லை. வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி, சூரிட்டி போட்ட நண்பரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டுதான் விட்டார்கள்.
ஜாமீன் (SURETY) கையெழுத்து போடுபவர்கள் தங்களின் உரிமைகள் என்ன? கடமைகள் என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இந்தப் பதிவு.
இந்திய ஒப்பந்தச் சட்டம் (Indian Contract Act) - 1872
இந்த சட்டத்தின் 8 ஆம் பகுதியில் (Indemnity and Guaranty) இழப்பு, எதிர்காப்பு மற்றும் உத்தரவாதம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 124 வது பிரிவு முதல் 147 வது பிரிவு வரையில் SURETY பற்றி நாம் இந்த சட்டத்தில் விரிவாகக் காணலாம்.
SURETY கொடுப்பவரை உத்தரவாதம் கொடுப்பவர் என்பதால் உத்தரவாதி என்றும் தமிழில் கூறுகிறார்கள்.
SURETY LOAN என்றால்.....
மற்ற லோன்கள் வங்கியில் வாங்கும்போது கொடுப்பவர், வாங்குபவர் என்று இருவர் மட்டுமே இருப்பார்கள். அடமானக் கடன் என்றால், இவர்கள் இருவரைத் தவிர சொத்துக்கள் இருக்கும்.
ஆனால், இந்த சூரிட்டி லோனில் கடன் கொடுத்தவர் (Creditor), கடனை பெற்றவர் (Principal Debtor) மற்றும் உத்தரவாதம் அளித்தவர் (SURETY) என்று மூன்று நபர்கள் இருப்பார்கள்.
இவர்கள் மூன்று பேர்களில் பாதுகாப்பு இல்லாதவர் உத்தரவாதம் அளித்தவர்தான். ஆனால் உத்திரவாதம் அளித்தவருக்கும் சட்டம் மூன்று வகையான உரிமைகளை அளித்திருக்கிறது. அது என்ன என்று பார்ப்போம்.
1. கடன் பெற்றவருக்கு சட்ட அறிவிப்பு அனுப்பும் உரிமை.
வாங்கிய கடனை உரிய காலத்திற்குள் செலுத்தி அந்தக் கடனை உடனே தீர்க்க வேண்டும்! என்று கடன் வாங்கியவருக்கு சட்ட அறிவிப்பு அனுப்ப சூரிட்டி தந்தவருக்கு உரிமையுண்டு.
2. பற்று உரிமையை மாற்றிக் கொள்ளுதல்
கடன் வாங்கியவர் வங்கிக்கு கொடுக்க வேண்டிய தொகை முழுவதையும் வங்கியில் சூரிட்டி அளித்தவர் கட்டிவிட்டு, வங்கிக்கு இருந்த உரிமைகளை தனக்கு மாற்றிக் கொள்லலாம். இதனை ஆங்கிலத்தில் Subrogation (பற்று உரிமை மாற்று) என்று சொல்கிறார்கள்.
3. கடன் பெற்றவருக்குள்ள பத்திரங்கள்மீது உரிமை
பற்று உரிமையை மாற்றிக் கொண்ட பிறகு, கடன் வாங்கியவர் வங்கியில் இந்தக் கடனுக்காக அடமானமாக வைத்திருந்த சொத்துப் பத்திரங்களின்மீது, கடன் கொடுத்திருந்த வங்கி எடுக்கின்ற நடவடிக்கைகள் எல்லாவற்றையும் எடுக்கும் உரிமை பிரிவு 141-ன்படி கடன் கொடுத்தவருக்கு வந்துவிடும்.
3. கடன் பெற்றவருக்குள்ள பத்திரங்கள்மீது உரிமை
பற்று உரிமையை மாற்றிக் கொண்ட பிறகு, கடன் வாங்கியவர் வங்கியில் இந்தக் கடனுக்காக அடமானமாக வைத்திருந்த சொத்துப் பத்திரங்களின்மீது, கடன் கொடுத்திருந்த வங்கி எடுக்கின்ற நடவடிக்கைகள் எல்லாவற்றையும் எடுக்கும் உரிமை பிரிவு 141-ன்படி கடன் கொடுத்தவருக்கு வந்துவிடும்.
4. இழப்பு எதிர்காப்பு உரிமை - Indemnity
கடன் வாங்கியவர் சார்பாக சூரிட்டி கொடுத்தவர் வங்கியில் செலுத்திய தொகை முழுமைக்கும் இழப்பு எதிர்காப்பு உரிமை பிரிவு 149-ன்படி அவருக்கு உண்டு.
5. கடனாளியை கட்டாயப்படுத்தும்
உரிமை
சூரிட்டி கொடுத்தவர், வங்கியின் நெருக்கடி காரணமாக, கடன் வாங்கியவர் சார்பாக வங்கியில் பணம் செலுத்துவதற்கு
முன்பாக கடன் வாங்கியவரிடம் தன்னை, கடனைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து
விடுவிக்குமாறு கேட்கலாம்.
தனது சூரிட்டியை ஏற்று கடன் கொடுத்தவருக்கு
எதிரான உத்தரவாதியின்
உரிமைகள்
1. வங்கியில் உள்ள, கடன் வாங்கியவரின் பத்திரங்களை கடனாளிக்கு பதிலாக உத்தரவாதி பணத்தை செலுத்தி கடனை தீர்த்திருந்தால், தன்வசம் ஒப்படைக்க கோரலாம்.
2. கடன் வாங்கியவர் அவருக்குச் சொந்தமான சொத்துக்களின் பத்திரங்களை ஏற்கனவே தான் வாங்கிய கடனுக்கு சூரிட்டியாக வங்கியிடம் கொடுத்திருப்பார். அந்த சொத்துக்களை முதலில் விற்று, அந்த தொகையில் வங்கிக்கு சேரவேண்டிய கடன் தொகையை முதலில் எடுத்துக் கொள்ளச் சொல்லும் உரிமை உத்தரவாதிக்கு உள்ளது.
3. வங்கியாளர் பணம் கேட்டு தன்னிடம் வரும் போது, அவர்களிடம் கொடுத்த கடன் தொகையை வசூல் செய்ய கடன் வாங்கியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்க உத்தரவாதிக்கு உரிமை உண்டு.
இணை உத்தரவாதிகளுக்கு
எதிராக உத்தரவாதியின் உரிமைகள்
கடன் வாங்கியவர் தன் கடனை தீர்க்காமல் போய்விடும் நேரத்தில், உத்தரவாதியை அந்தக் கடனை தீர்க்கச் சொல்லி வங்கி நெருக்கடி கொடுக்கும். அந்த நேரத்தில் உத்தரவாதி இதர இணை உத்தரவாதிகளையும் அதில் பங்கு பெறுமாறு கேட்க உரிமை உண்டு. அப்போது உத்தரவாதியும் மற்றும் இதர இணை உத்தரவாதிகளும் இணைந்து ஒவ்வொருவரும் சமமாக வங்கிக்கு செலுத்தப்படுகின்ற தொகையில் பங்கு பெற வேண்டும். இவ்வாறாக, அணைத்து உத்தரவாதிகளும் சேர்ந்து கடன் வாங்கியவரின் கடன் முழுவதையும் வங்கியில் தீர்த்த பிறகு, வங்கியின் வசம் இருக்கின்ற கடன் வாங்கியவரது சொத்துப் பத்திரங்களில் அவர்கள் அனைவருக்கும் உரிமை வந்துவிடும்.
அவர்கள் ஒவ்வொருவரும் அந்தச் சொத்தில் அவரவர்களுக்குரிய பங்கினை பெற்றுக் கொள்ளலாம்.
உத்தரவாதத்திலிருந்து வெளியேறுதல்
கொடுத்த உத்தரவாதத்தை திரும்பப் பெற முடியுமா?
இந்திய ஒப்பந்தச் சட்டம் - 130,131 மற்றும் 133 ஆகிய பிரிவுகளில், உத்தரவாதி தான் கொடுத்த உத்தரவாதத்திலிருந்து எந்தெந்த சூழ்நிலையில் வெளியேறலாம்? என்பதைக் கூறுகிறது.
பிரிவு - 130 - உத்தரவாதத்தை
திரும்ப பெறும் அறிவிப்பு ஒன்றினை வங்கிக்கு எழுத்து மூலமாக கொடுப்பதன் மூலம்
பிரிவு - 131- உத்தரவாதி இறந்து போனால்.
பிரிவு - 133- ஒப்பந்த விதிமுறைகளில் ஏதேனும் மாறுபாடுகள் ஏற்படுத்தப்படும் போது
************************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 15.03.2018
No comments:
Post a Comment