disalbe Right click

Showing posts with label ஜப்தி. Show all posts
Showing posts with label ஜப்தி. Show all posts

Tuesday, October 10, 2017

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் ஜப்தி!

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் ஜப்தி!
கலெக்டர் ஆபீசில், 'ஜப்தி' : தர்மபுரியில் பரபரப்பு
தர்மபுரி: நில ஆர்ஜிதம் செய்த வழக்கில், 2.75 கோடி ரூபாய் இழப்பீடு வழங்காததால், தர்மபுரி கலெக்டர் அலுவலக பொருட்களை, நீதிமன்ற பணியாளர்கள், 'ஜப்தி' செய்ய வந்தனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சேர்ந்தவர், குருசாமி. இவரது மனைவி, லட்சுமி. இவருக்கு சொந்தமான, 1.34 ஹெக்டேர் நிலத்தை, ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனை வழங்க, 1998ல், தமிழக அரசு ஆர்ஜிதம் செய்தது.
இந்நிலத்துக்கு, அரசு கொடுத்த இழப்பீடு தொகை குறைவாக உள்ளதாகக் கூறி, தர்மபுரி சார்பு நீதிமன்றத்தில், லட்சுமி வழக்கு தொடர்ந்தார்.
கடந்த, 2011 ஜூலை, 15ல், 'மாவட்ட நிர்வாகம், 2.75 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், மாவட்ட நிர்வாகம், நீதிமன்ற உத்தரவுப்படி, இழப்பீடு தொகை வழங்கவில்லை.
இந்நிலையில், லட்சுமி இறந்ததை அடுத்து, இந்த வழக்கை, அவரது வாரிசுகள் நடத்தி வந்தனர்.
அவர்கள், நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்ததில், ஆக., 31ல், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் கலெக்டரின் காரை, 'ஜப்தி' செய்ய, நீதிபதி உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து, நேற்று, நீதிமன்ற ஆணை நிறைவேற்றுனருடன், லட்சுமியின் வாரிசுதாரர்கள், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து, எடுத்துச் செல்ல வந்தனர்.
அங்கிருந்த அதிகாரிகள், 10 நாட்களுக்குள், இழப்பீடு தொகையை வழங்கி விடுவதாக உறுதியளித்ததை அடுத்து, ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

நன்றி : தினமலர் நாளிதழ் -10.10.2017