disalbe Right click

Showing posts with label இந்திய தண்டணைச் சட்டம். Show all posts
Showing posts with label இந்திய தண்டணைச் சட்டம். Show all posts

Wednesday, April 17, 2019

இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 182 & 211 இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?


இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 182 & 211 இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
  • இந்திய தண்டணைச் சட்டம்-1860ல் 182-வது பிரிவும், 211வது பிரிவும் பொது ஊழியருக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டப்படியான அதிகாரத்தை பயன்படுத்தி வேறு ஒருவருக்கு கேடு விளைவிக்க பொய்யான தகவலை தருவதைப் பற்றியும், அதற்கான தண்டணையைப் பற்றியும் நமக்குத் தெரிவிக்கின்ற பிரிவுகள் ஆகும்.
  • இந்த இரண்டு பிரிவுகளும் ஒன்றுபோல இருந்தாலும், இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளது. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.
இந்திய தண்டணைச் சட்டம், 182-வது பிரிவு
  • அது ஒரு பொய்யான தகவல் என்பதையும், அந்த தகவலினால், வேறு ஒருவருக்கு அல்லது பலருக்கு கேடு நேரிடும் என்பதையும் தாம் நன்கு அறிந்திருந்தும் பொது ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வேறு ஒருவருக்கு அல்லது பலருக்கு கேடு விளைவிக்கும் எண்ணத்துடன் அந்த பொது ஊழியரிடம் பொய்யான தகவலைத்தருவது ஆகும்.
  • உதாரணமாக ஒரு பொது ஊழியரிடம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வேட்பாளர் ஒருவர் குடோனில் மூட்டை, மூட்டையாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒருவர் (அது பொய்யான தகவல் என்பதையும், அதனால், அந்த வேட்பாளருக்கு தொல்லைகள் நேரிடும் என்பதையும் நன்கு அறிந்தே) தகவல் அளிக்கிறார்! என்றால் அவருக்கு இந்தப் பிரிவின் கீழ் ஆறு மாத சிறைத்தண்டணை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்த தண்டணை வழங்கப்படும்.
இந்திய தண்டணைச் சட்டம், 211-வது பிரிவு
  • ஒருவருக்கு அல்லது பலருக்கு கேடு விளைவிக்கும் எண்ணத்துடன், அந்த குற்றச்சாட்டுக்கு நியாயமான, சட்டப்படியான ஆதாரம் ஏதும் இல்லை என்று தான் நன்கு தெரிந்திருந்தும் ஒருவர் மீது அல்லது பலரின் மீது காவல்நிலையத்தில் பொய்புகார் அளிக்கின்ற அல்லது நீதிமன்றத்தில் வழக்கு எதனையும் தொடுக்கின்ற எவர் ஒருவருக்கும் இரண்டு ஆண்டுகள் தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்த தண்டணை வழங்கப்படும்.
  • இதில் மரணம், ஆயுள் சிறை அல்லது ஏழு ஆண்டுகள் தண்டணை விதிக்கக்கூடிய ஒரு குற்றம் பற்றி, அந்த குற்றச்சாட்டுக்கு நியாயமான, சட்டப்படியான ஆதாரம் ஏதும் இல்லை என்று நன்கு தெரிந்திருந்தும் ஒருவர் அல்லது பலரின் மீது பொய்யான புகார் அளிப்பவரை அல்லது பொய்யான வழக்கு தொடுப்பவர் எவர் ஒருவருக்கும் ஏழு ஆண்டுகள் தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்த தண்டணை வழங்கப்படும்.
சுருக்கமாகச் சொன்னால்,
  • இந்திய தண்டணைச் சட்டம், 182-வது பிரிவு என்பது அது பொய்யான தகவல் என்பதையும், அதனால், ஒருவருக்கு அல்லது பலருக்கு தொல்லைகள் நேரிடும் என்பதையும் நன்கு அறிந்த ஒருவர், பொது ஊழியரிடம் பொய்யான தகவல் அளிப்பது (மட்டும்) ஆகும்.
  • இந்திய தண்டணைச் சட்டம், 211-வது பிரிவு என்பது அந்த குற்றச்சாட்டுக்கு நியாயமான, சட்டப்படியான ஆதாரம் ஏதுமில்லை என்று நன்கு தெரிந்திருந்தும் ஒருவர் அல்லது பலரின் மீது பொது ஊழியரிடம் பொய்யான புகார் அளிக்கும் அல்லது நீதிமன்றத்தில் பொய்யான வழக்கு தொடுக்கும் குற்றம் சம்பந்தப்பட்டது ஆகும்
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.04.2019

Thursday, June 14, 2018

இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 197 & பிரிவு 219

இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 197 & பிரிவு 219
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
  • இந்திய தண்டணைச் சட்டத்தில் பிரிவு 197ம், பிரிவு 219ம் நீதிமன்ற நடவடிக்கைகளில் பொய்யான சாட்சியங்கள் புனைபவருக்கு அல்லது பொய்யான ஆவணங்கள் புனைபவருக்கு விதிக்கப்படுகின்ற தண்டணையைப் பற்றிக் கூறுகிறது.
  • இரண்டிற்கும் தண்டணை என்னமோ, ஒன்றுதான்! ஆனால், இரண்டிற்கும் ஒரு வித்தியாசம் உண்டு.
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
  • சிறு வித்தியாசம்தான்.
  • முதலில் சொல்லப்பட்ட இந்தியதண்டணைச்சட்டம் பிரிவு 197 - சாதாரண பொதுமக்களுக்கு உரியது.
  • இரண்டாவதாக சொல்லப்பட்ட இந்தியதண்டணைச்சட்டம் பிரிவு 219 ஆனது பொது (அரசு) ஊழியர்களுக்கு உரியது.
இந்தியதண்டணைச்சட்டம் பிரிவு 197
  • ஒரு நீதிமன்ற நடவடிக்கையின் எந்தக் கட்டத்திலாவது, உட்கருத்தோடு, பொய்சாட்சியம் தருகின்ற அல்லது ஒரு நீதிமன்ற நடவடிக்கையின் எந்தக் கட்டத்திலாவது, உபயோகிக்கப்படும் பொருட்டு, பொய்சாட்சியம் புனைகிற எவரொருவரும், ஏழு ஆண்டுகள் வரையில் நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச் சிறைத் தண்டணை வகைகள் இரண்டில் ஒன்று விதித்து தண்டிக்கப் படுதல் வேண்டும். மற்றும் அவரை அவராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்.
இந்தியதண்டணைச்சட்டம் பிரிவு 219
  • பொது ஊழியராக இருந்து கொண்டு ஒரு நீதிமன்ற நடவடிக்கையின் எந்தக் கட்டத்திலும் சட்டத்திற்கு முரணானது, என்று அவர் அறிந்திருக்கின்ற அறிக்கை, கட்டளை, தீர்ப்பு அல்லது எதனையும் நெறிகேடான முறையில் அல்லது குரோதத்துடன் செய்கின்ற அல்லது பகிர்கின்ற எவராயினும், ஏழு ஆண்டுகள் வரையில் நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச் சிறைத் தண்டணை வகைகள் இரண்டில் ஒன்றோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.
  • இதன்படி நீதிபதிக்கும் தண்டணை எற்றுத் தரலாம்.
************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 14.06.2018

Wednesday, October 4, 2017

இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு - 354

Image may contain: text
இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு - 354 
இந்தியப் பெண்களுக்குக் கைகொடுக்கும் கூரான சட்ட ஆயுதம், இந்த இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு - 354 ஆகும். வெளியிடத்தில் மட்டுமல்ல, வீட்டிலும்கூட ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் விதமான வார்த்தைகள் தாக்குதலோ அல்லது உடல் ரீதியான தாக்குதலோ நிகழ்த்தும் எவரின் மீதும், இந்தச் சட்டத்தின் கீழ் பெண்கள் புகார் அளிக்கலாம்.

Wednesday, September 13, 2017

பொய் சாட்சியம் புனைதல்

பொய் சாட்சியம் புனைதல்
நமது நாட்டில் தண்டணைக்குரிய தப்பை செய்துவிட்டு ”பணம் படைத்தவர்களும், அரசியல்வாதிகளும், ரௌடிகளும்” தைரியமாக, உலாவிக் கொண்டு இருப்பதற்குக் காரணமான சட்டப் பிரிவு என்று ஒன்று உண்டென்றால் அது இந்திய தண்டணைச் சட்டம் 192வது பிரிவுதான்.
  • தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் முயற்சி செய்து முனையும்போது அவர்களை காவல்துறையினர் தடம் மாற, தடுமாற வைப்பது இந்தப் பிரிவின் மூலமாகத்தான்.
  • இந்தப் பிரிவை நாம் தெரிந்துகொண்டு பயன்படுத்தாமல், சட்ட விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதுதான், நாட்டில் குற்றங்கள் பெருக வழி வகுக்கிறது.
  • பொதுவாக காவல் நிலையத்தில் நாம், கடும் தண்டணைக்குரிய ஒரு குற்றம் சம்பந்தமாக ஆதாரங்களுடன் புகார் அளித்தால், முதலில் அதனை வாங்கவே மாட்டார்கள்.
  • அப்படியே வாங்கினாலும் அதற்குரிய ஒப்புதல் ரசீது (CSR) தரமாட்டார்கள்.
  • ரசீது தந்தாலும் விசாரணை செய்ய மாட்டார்கள்.
  • ஒருவேளை விசாரணை நடத்தினாலும், முதல் தகவல் அறிக்கை (F.I.R) பதிவு செய்ய மாட்டார்கள்.
  • முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலும், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை (Police Report) தாக்கல் செய்ய மாட்டார்கள்.
  • குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தாலும், எத்தனை ஆதாரங்களை நாம் அளித்திருந்தாலும் எதிரி குற்றமே செய்யாதது போல் பொய் சாட்சியங்களை புனைந்து அந்த வழக்கை முடித்து வைத்து விடுவார்கள்.
இதனைக் கடந்து போவதற்கு சட்டம் நமக்கு வழி வகுத்திருந்தாலும், இந்தப்பிரிவானது காவல்துறையினர் மூலம் நமக்கு தடங்கலை ஏற்படுத்தி விடுகிறது.
  • பலர் தவங்கி விடுகிறார்கள்.
  • இதற்கு அடுத்துச் செல்ல தய்ங்குகிறார்கள்.
  • இதனைக் கடந்து சென்று எதிரிக்கு தண்டணை வாங்கித் தருகின்ற போராளிகளும் கூட, பொய்சாட்சியம் புனைந்த காவல்துறையினர்க்கு தண்டணை வாங்கித்தர வாய்ப்புகள் இருந்தும், ஏனோ அதுபோன்ற நடவடிக்கை எதுவும் எடுக்காமல், எதிரிக்கு தண்டணை வாங்கித் தந்த திருப்தியில் பேசாமல் இருந்து விடுகிறார்கள்.
  • பொய் சாட்சியம் புனைந்த காவல்துறையினருக்கு சட்டப்போராளிகள் இந்தப் பிரிவின் மூலம் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு கடுமையான தண்டணை பெற்றுத் தரலாம்.
  • அவ்வாறு சிலர் செய்தாலே போதும்.
  • பொய்சாட்சியம் புனைவதற்கு காவல்துறையினர் பயப்படுவார்கள்.
  • நமது நாட்டில் குற்றங்கள் குறையும். நீதி தழைக்கும்.
அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பிரிவில்? வாருங்கள் பார்க்கலாம்!
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-192
  • புத்தகம் அல்லது பதிவேடு (Document) அல்லது மின்னணுப் பதிவுறு (Online Certificates) ஆகியவற்றில் சூழ்நிலை அல்லது பொய்யான பதிவு எதையேனும் அல்லது பொய்யுரையைக் கொண்ட பத்திரங்கள் எதையேனும் ஒரு நீதிமன்ற நடவடிக்கையில் ஒரு பொது ஊழியர் என்ற முறையில் ஒரு சாட்சியத்தின்படி தீர்ப்பு வழங்க வேண்டிதிருக்கும் போது, அந்த சாட்சியத்தில் தவறான எண்ணம் கொள்ளுமாறு உட்கருத்துடன் பொய்யான கருத்துக்களை புனைந்து நீதிமன்றத்தில் சம்ர்ப்பிக்கின்ற எவர் ஒருவரும் பொய் சாட்சியம் புனைபவர் ஆவார்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-193
  • ஒரு நீதிமன்ற நடவடிக்கைகளின் எந்தக் கட்டத்திலும், உட்கருத்தோடு பொய் சாட்சியம் தருகின்ற அல்லது ஒரு நீதிமன்ற நடவடிக்கைகளின் எந்தக் கட்டத்திலும் பொய்சாட்சியம் புனைகின்றவர் யாராக இருந்தாலும், அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கப்படுவார்கள். மேலும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.
*************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Monday, August 21, 2017

குற்ற உடந்தை Abetment

குற்ற உடந்தை Abetment
கடந்த 17.02.2017 அன்று கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, நடிகை பாவனா அவர்கள் கடத்தப்பட்டார். அந்தக் காரில் வைத்தே, கடத்தியவர்களால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்.
  • அடுத்த சில நாட்களில் குற்றவாளிகளான அந்த கார் டிரைவர் மார்ட்டின் மற்றும் பல்சர் சுனில் என்ற இருவர் உள்பட 6 பேர்கள் கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
  • இந்நிலையில், அந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கேரள மாநில பிரபல நடிகர் திலீப் அவர்கள் 10.07.2017 அன்று கைது செய்யப்பட்டார். அந்தக் குற்றத்தைச் செய்ய மேற்கண்ட ஆறு பேர்களையும் தூண்டிய காரணத்தினாலேயே நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
  • உடந்தைக் குற்றவாளி என்றால் யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வதற்காகவே அனைவருக்கும் தெரிந்த மேற்கண்ட நிகழ்வை முதலிலேயே இங்கு கூறியுள்ளேன்.
இந்திய தண்டணைச் சட்டத்தின் கீழ் குற்ற உடந்தை என்றால் என்ன? உடந்தைக் குற்றவாளிகள் என்றால் யார்? என்பதைப் பற்றி விரிவாக கீழே காண்போம்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 107
ஒரு குற்றச் செயலை செய்வதற்கு ஒருவருடன் வேறு ஒருவர் கீழ்க்கண்ட மூன்று வழிகளில் உடந்தையாக இருந்தால் அவர் உடந்தைக் குற்றவாளி ஆவார்.
  • ➤ முதலாவதாக, ஒரு குற்றச் செயலை யாரையாவது செய்யத் தூண்டுவது.
  • ➤ இரண்டாவதாக, ஒரு குற்றச் செயலை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் இணைந்து சட்டவிரோதமாக அதனைச் செய்வது.
  • ➤ மூன்றாவதாக, ஒரு குற்றச் செயலை செய்வதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு ஆலோசணை வழங்குவது.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 108
குற்ற உடந்தையர் (Abettor)
  • ஒரு குற்றச் செயலுக்கு யார் உடந்தையாக இருக்கிறாரோ அல்லது ஒரு குற்றத்தில் முடிகின்ற செயலுக்கு யார் உடந்தையாக இருக்கிறாரோ அவர் அந்தக் குற்றத்தின் உடந்தையர் ஆவார்.
  • ஆனால், செய்யப்பட்ட குற்றமானது குற்ற உடந்தையருக்கு இருக்கின்ற ஒத்த கருத்துடனும், அறிவுடனும் கூடிய திறனுடைய நபரால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
குற்ற உடந்தையின் முக்கியமான ஐந்து ஆக்கக் கூறுகள்
  1. சட்டப்படி செய்ய வேண்டிய செயலை செய்யாமலிருப்பவருக்கு உடந்தையாக இருப்பதும் குற்ற உடந்தையாகும்.
  2. ஒருவர் ஒரு குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்து, ஆனால் அந்தச் செயலின் விளைவானது குற்றமாக அமையாவிட்டாலும் அவர் குற்ற உடந்தையராகவே கொள்ளப்படுவார்.
  3. குற்ற உடந்தையாக இருக்கின்ற நபர் சட்டத் தகுதி பெற்றிருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அதே போல அந்தக் குற்றத்தை புரிபவன் அதே கருத்தை கொண்டிருக்க வேண்டும் என்பத்ம் அவசியமில்லை.
  4. குற்ற உடந்தைக்கே உடந்தையாக இருப்பதும் குற்றம்தான்.
  5. சதி ஒன்று நடைபெறுவதற்கு உடந்தையாக இருக்கின்ற குற்ற உடந்தையாளர் அந்த சதியின் மூலமாக நடைபெறுகின்ற குற்றத்தில் பங்கு பெற வேண்டும் என்பது இல்லை.
குற்ற உடந்தைக்கு தண்டணை- பிரிவு 109
எந்தக் குற்றம் ந்டைபெற உடந்தையாக ஒருவர் இருக்கின்றாரோ, அவரும் அந்தக் குற்றத்திற்கு இந்திய தண்டணைச் சட்டம் வகுத்துள்ள தண்டணையை அனுபவிக்க வேண்டும்.
******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி

”குற்றமுறு சதி”யின்னா என்னாங்க?

”குற்றமுறு சதி”யின்னா என்னாங்க?
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-120A
இந்திய தண்டணைச் சட்டத்தில், பிரிவு 120A குற்றமுறு சதியைப் பற்றி தெளிவாக குறிப்பிடுகிறது.
  • குறைந்தது இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் சட்டத்திற்கு விரோதமான ஒரு செயலை அல்லது சட்டத்திற்கு முரணான வழியில் ஒரு செயலை செய்வதற்கு அவர்கள் உடன்படுகின்ற செயலானது “குற்றமுறு சதி” எனப்படும்.
  • இந்த குற்றமுறு சதியைப் பொறுத்த அளவில் ஒரு செயலை செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு நபர்கள் உடன்பட்டிருக்க வேண்டும். இது மிக முக்கியமானதாகும்.
சரி, இதற்கு சட்டம் தருகின்ற தண்டணை என்ன?
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-120B
  • மரணதண்டணை, ஆயுள் தண்டணை வழங்கப்படும் குற்றங்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டணை அல்லது அதற்கு மேற்பட்ட கால அளவிற்கு சிறைத்தண்டணை விதித்து தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தை செய்வதற்கான குற்றமுறு சதியில் பங்கு கொள்கின்ற யாராக இருந்தாலும் (அது போன்ற ஒரு குற்றமுறு சதியை இந்திய தண்டணைச் சட்டத்தின் கீழ் தண்டிப்பதற்கு வழிமுறைகள் எதுவும் ஏற்படுத்தாமல் இருந்தால்) அத்தகைய குற்றத்திற்கு உடந்தையாக இருந்தது போலவே அவர் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
  • மேலே கூறப்பட்ட கடுமையான குற்றங்களாக இல்லாமல் இருந்து வேறு சிறிய குற்றங்களுக்கு என சதி செய்யப்பட்டு இருந்தால், சதியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு மேற்படாத கடுங்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
  • செயல் நடைபெறாமல் குற்றமுறு சதிக்காக மட்டும் நடவடிக்கை எடுக்கலாம்
  • குற்றச் செயல்கள் எதுவும் நடைபெற்று இருக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை.
  • குற்றச் செயலை செய்வதற்கு இரண்டு நபர்கள் உடன்பட்டாலே போதும். அதனைக் கொண்டே குற்றமுறு சதிக்காக அவர்களை தண்டிக்கலாம்.
  • உதாரணமாக, ஒரு பெண்ணை அவளது மாமியாரும், கணவரும் சேர்ந்து விஷம் கொடுத்து கொல்ல வேண்டும் என்று சதி செய்கின்றனர்! என்று வைத்துக் கொள்வோம்.
  • அதனை நிறைவேற்ற செயலில் இறங்கினர் என்று நிரூபிக்க வேண்டியதில்லை. இரண்டு பேரும் அதற்கு உடன்பட்டனர் என்பதற்கான திட்டத்தை நிரூபித்தாலே போதுமானது.
State of Andhra Pradesh vs I.B.S.Prasad Rao and Others - A.I.R. 1970 S.C.648
  • மேற்கண்ட வழக்கில் நான்கு பேர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
  • அவர்கள் நால்வரும் ஆந்திர மாநில மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை செய்பவர்கள்.
  • போலியான வரைவோலைகள் மற்றும் ரசீதுகளை தயார் செய்து தாங்கள் வேலை செய்கின்ற வங்கியை ஏமாற்ற இவர்கள் நால்வரும் சதித்திட்டம் தீட்டினர்.
  • ஆனால், ஏமாற்றவில்லை. அதற்குள் இவர்களது சதி கண்டுபிடிக்கப்பட்டு நால்வரும் இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 420 மற்றும் 120B ன் கீழ் தண்டிக்கப்பட்டனர்.
****************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

இந்திய தண்டணைச் சட்டத்தின் கீழ் குற்றம்!

இந்திய தண்டணைச் சட்டத்தின் கீழ் குற்றம்!
குற்றம் குற்றமே!
  • நினைப்பது எல்லாம் நடப்பதில்லை.
  • செய்வது எல்லாம் ஜெயிப்பதில்லை.
  • இது குற்றம் புரிபவர்களுக்கும் பொருந்தும்.
  • அதனால், அவர் குற்றம் செய்யவில்லை, குற்றம் செய்வதற்கு முயற்சிதான் செய்தார்! இதனால், யாருக்கும் எந்தவித இழப்பும் இல்லை!, எந்தவித நஷ்டமும் இல்லை! என்று யாரையும் சட்டம் தண்டிக்காமல் விடாது.
  • அப்படிச் செய்தால் அவர்கள் கண்டிப்பாக மீண்டும் அந்தக் குற்றத்தைச் செய்ய முயற்சி செய்வார்கள்.
  • ஆகையால், குற்றம் செய்வதற்கு முயல்வதையும் ஒரு தனிக்குற்றமாக இந்திய தண்டணைச் சட்டம் எடுத்துக் கொள்கிறது.
”சரி, சரி விடுப்பா. ஏதோ தெரிஞ்சோ, தெரியாமயோ நடந்திருச்சி, ஒனக்கு ஒண்ணும் ஆகலல்ல! அவன் இனிமே அப்படிச் செய்யமாட்டான்!”ன்னு கிராம பஞ்சாயத்துகளில் நாட்டாண்மை என்பவர் பேசுவதை நீங்கள் திரைப் படங்களில் பார்த்திருக்கலாம்.
  • இந்திய தண்டணைச் சட்டமானது ஒரு குற்றச் செயலுக்கான முயற்சியைக்கூட சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. அதற்கும் தண்டணை உண்டு.
  • திருடுவது குற்றம் என்றால், கொலை செய்வது குற்றம் என்றால், திருடுவதற்கு, கொலை செய்வதற்கு முயற்சி செய்வதும் குற்றம்தான்.
  • பொதுவாக ஒரு குற்றச் செயலை அரங்கேற்ற வேண்டுமென்றால், நான்கு விதமான நிலைகளை குற்றம் செய்பவர் கடக்க வேண்டியதிருக்கும்.
1.கருத்து:
  • ஒருவரின் எந்த ஒரு செயலுக்கும் முதல் காரணமாக இருப்பது அவரது எண்ணங்களே ஆகும்.
  • ஆனால், செயல் எதுவுமே நடைபெறாமல், ஒருவர் குற்றம் செய்ய நினைத்தார்! என்பதை மட்டும் வைத்து அவரை சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது.
2.முன்னேற்பாடு:
  • ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்வதற்கு திட்டமிடுவதோ, நடவடிக்கை எதனையும் மேற்கொள்வதோ முன்னேற்பாடு என்கிறோம்.
  • இந்த முன்னேற்பாடுகளால் பொது மக்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாத காரணத்தால், சட்டத்தின் கீழ் இதனை தண்டிக்க முடியாது.
3.முயற்சி:
  • ஒருவர் ஒரு குற்றச்செயலை செய்வதற்கு இது மிகவும் அவசியம்.
  • தனது எண்ணத்தின்படி திட்டமிட்டு, ஒரு குற்றச் செயலை ஒருவர் செய்வதற்கு முயற்சி செய்கிறார்.
  • அது வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை. தோற்றாலும் கூட அது சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும்.
  • இந்த முயற்சியின் காரணமாக தனிப்பட்ட ஒருவருக்கோ அல்லது பலருக்கோ அல்லது பொது மக்களின் உடலுக்கும், உடைமைக்கும் ஏதோ ஒரு வகையில் தீங்கு, அழிவு ஏற்படுகிறது.
  • எனவே இந்திய தண்டணைச் சட்டமானது பல்வேறு பிரிவுகளின் கீழ், இதனை தண்டிக்கிறது.
4.செயல்:
  • முதலில் மனதில் நினைக்கப்பட்டு, அதற்காக சில முன்னேற்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, அதனை முடிப்பதற்கு முயற்சி செய்யப்பட்டு, இறுதியில் ஒரு குற்றச் செயலானது ஒருவரால் அல்லது பலரால் முடிக்கப்பட்டுகிறது.
  • குற்ற முயற்சியையே தண்டிக்கும் சட்டமானது குற்றச் செயலை தண்டிக்காமல் எப்படி விட முடியும்?
  • இந்திய தண்டணைச் சட்டமானது பல்வேறு பிரிவுகளின் மூலமாக அந்தக் குற்றங்களுக்கு ஏற்றாற்போல கடுமையான தண்டணைகளை வழங்குகிறது.
*******************************அன்புடன் செவம் பழனிச்சாமி

Saturday, May 27, 2017

போலி ஆவணங்களைப் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

போலி ஆவணங்களைப் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய தண்டணைச் சட்டத்தில் போலி (பொய்) ஆவணங்கள் பற்றி பிரிவு 463 முதல் பிரிவு 474 வரை குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 463
  • யாருக்காவது சேதம் அல்லது கேடு விளைவிக்கின்ற அல்லது மோசடி செய்ய அல்லது மோசடி செய்யப்படலாம் என்ற எண்ணத்துடன் ஒரு பொய்யான பத்திரம் அல்லது அதன் ஒரு பகுதியை தயாரிப்பவர் பொய் ஆவணம் புனைந்தவர் ஆவார்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 464
  • கையெழுத்து போடத் தெரிந்த ஒருவர், கையெழுத்து போட வேண்டிய இடத்தில் தன்னுடைய கையெழுத்தை போடாமல், தன்னுடைய பெயரை எழுதினால், அவர் பொய் ஆவணம் தயாரித்த குற்றம் செய்தவர் ஆகிறார்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 465
  • பொய்யாவணம் புனைகின்ற எவரொருவருக்கும் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறைத் தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டுமோ விதித்து தீர்ப்பு வழங்கப்படும். இதற்கு பிடியாணை வேண்டும். ஜாமீன் உண்டு.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 466
  • ஒரு நீதிமன்றத்தில் உள்ள பதிவுக்கட்டு அல்லது பொது ஊழியரால் ஒரு துறையில் பதிவேடாக வைத்து பராமரித்து வருகின்ற பத்திரத்தை அல்லது ஆவணத்தை பொய்யாக புனைகின்ற எவரும் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை வித்தித்து தண்டிக்கத் தக்கவராவார். மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 467
  • மதிப்புமிக்க பத்திரம் அல்லது உயில் அல்லது காசோலை எதையும் பொய்யாக புனைகின்ற எவரும் ஆயுள் தண்டணை அல்லது பத்து ஆண்டுகள் நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 468
  • பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற உட்கருத்துடன் பொய் ஆவணம் புனைகின்ற எவரும் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கத் தக்கவராவார்.
  • மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.
  • இதுபோன்ற குற்றத்தைச் செய்தவரை கைது செய்ய பிடியாணை வேண்டியதில்லை.
  • மேலும் இக்குற்றம் புரிந்தவருக்கு ஜாமீனும் கிடையாது
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 469
  • யாருடைய பெயரையாவது கெடுக்க வேண்டும் என்று எண்ணி ஒரு பத்திரத்தினை பொய்யாக புனைகின்ற எவரும் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கத் தக்கவராவார்.
  • மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 470
  • ஒரு பத்திரத்தின் அல்லது ஆவணத்தின் ஒரு பகுதியானது பொய்யாக புனையப்பட்டு இருந்தால், அந்தப் பத்திரம் அல்லது அந்த ஆவணம் முழுவதுமே பொய் ஆவணம் ஆகும்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 471
  • பொய்யாக புனையப்பட்ட ஒரு பத்திரத்தை அல்லது ஒரு ஆவணத்தை அது பொய்யானது என்று தனக்குத் தெரிந்திருந்தே பயன்படுத்துபவர் எவரையும் அந்த பத்திரத்தை அவர் புனைந்தது போன்றே தண்டிக்கப்படுதல் வேண்டும்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 472
  • இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 467ல் கூறப்பட்டுள்ள பொய் ஆவணம் அல்லது போலி பத்திரம் தயாரிப்பதற்கு முத்திரை அல்லது வேறு கருவி ஏதேனும் அத்தகைய எண்னத்துடன் வைத்திருப்பவர் எவர் ஒருவரும் ஆயுள் சிறை அல்லது ஏழு ஆண்டுகள் நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 473
  • இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 467ல் கூறப்பட்டுள்ள பிரிவின்படி இல்லாமல் இந்த அத்தியாயத்தில் இருக்கின்ற ஏதேனும் ஒரு பிரிவின்படி பொய் ஆவணம் புனையும் பொருட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என்று முத்திரை அல்லது வேறு கருவி ஏதேனும் தயாரிக்கின்ற அல்லது அது கள்ளத்தனமாக தயாரிக்கப்பட்டது என்று தெரிந்திருந்தே வைத்திருப்பவர் எவர் ஒருவரும் ஏழு ஆண்டுகள் நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 474
  • இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 466 மற்றும் பிரிவு 467களில் கூறப்பட்டுள்ள பொய் ஆவணத்தை அல்லது போலி பத்திரத்தை அது போலியானது என்று தெரிந்தே தம்வசம் வைத்துள்ள எவர் ஒருவரும் ஏழு ஆண்டுகள் நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.

***********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Friday, January 13, 2017

முதல் தகவல் அறிக்கை பதிவு சட்டம்

முதல் தகவல் அறிக்கை பதிவு சட்டம் 


நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல் துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதும் அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும் காவல் துறையினர் மீது தொடர்ச்சியாக இருந்துவரும் குற்றச்சாட்டுகள் ஆகும்.
வழக்குகளை பதிவுசெய்வதில் சில எளிய முறைகளை பின்பற்றுதல், காவல் துறையினருக்கு உள்ள கடமைகள், நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு உரிய முறையில் அணுகுதல் ஆகியவை மேற்கண்ட பிரச்னைகளில் இருந்து பாதிக்கபட்டோர் விடுபட உதவும்.

வழக்குகள் இரண்டு வகை

முதலில் ஒரு குற்றச்சாட்டில் பல்வேறு தன்மைகள் உள்ளது. பொதுவாக குற்றங்கள் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் என்று இருவகைகள் உள்ளது. இதில் உரிமையியல் சார்ந்த வழக்குகளில் காவல் துறையினர் தன்னிச்சையாக செயல்பட எந்தவித சட்ட உரிமையும் இல்லை. பொதுவாக இரண்டு தனிப்பட்ட தரப்பினருக்கு இடைப்பட்ட சொத்து மற்றும் அதன் மீதுள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான பிரச்னைகளை உரிமையியல் (சிவில்) வழக்குகள் என்று வரையரை செய்யப்பட்டுள்ளது.
சிவில் வழக்கு கிரிமினல் வழக்காக மாறுவது எப்போது?

இந்த உரிமையியல் பிரச்னைகள் கூட அடிதடி தகராறுகள், ஆவணங்களை போலியாக உருவாக்குதல், அத்துமீறி நுழைதல், நம்பிக்கை மோசடி ஆகியவற்றோடு வரும்போது அந்த செயல்களை பொறுத்தவரை குற்றவியல் (கிரிமினல் வழக்கு) தன்மை பெறுகின்றன.
குற்றவியல் வழக்குகளை பொறுத்தவரை அவை இரண்டு தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையே ஏற்பட்டாலும் சமுதாயத்திற்கெதிராக ஏற்பட்டாலும் அவை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களாக கருதுவதுடன் காவல் துறையினரின் விசாரணை, கைது போன்றவற்றிற்கும் வழிவகுக்கின்றன.

கிரிமினல் வழக்குகள் எவை?

பொதுவாக அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் போன்றவை குற்றவியல் வழக்குகளாகும்.

கிரிமினல் வழக்குகளின் பிரிவுகள்

குற்றவியல் வழக்குகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை
1) நீதிமன்றத்தின் உத்தரவோ அனுமதியோ இன்றி காவல் துறையினர் தானாக விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள்

2)  நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாகும்.

அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, வெட்டுகுத்து, பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைத்தல் பொதுச்சொத்துகளை சூறையாடுதல், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடத்தல் போன்றவை காவல் துறையினர் தானாக விரைந்து செயல்பட வேண்டிய வழக்குகளாக இருப்பதால் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளாகும்.

இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார், தன்மீது அவதூறு பரப்பிவிட்டார், அஜாக்கிரதையாக காயம் ஏற்படுத்திவிட்டார், பொய்யான ஆவணம் தயாரித்துவிட்டார் போன்ற குற்றச்சாட்டுகளில் பாதிக்கப்படுவோர் புகார் கொடுத்தால், காவல் துறையினரின் நடவடிக்கை தேவைப்படுகிறது

அதே சமயத்தில் காவல் துறையினர் மிக அவசரமாக செயல்பட வேண்டிய அவசியமில்லாததாலும் அவற்றில் உரிமையியல் விஷயங்கள் சற்றுக்கூடுதலாக கலந்திருப்பதாலும் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக கருதப்படுகின்றன.

சிவில் வழக்கு கிரிமினல் வழக்காக மாறுவது எப்படி?

நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக இருந்தாலும் ஒரே ஒரு வழக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக இருப்பினும் அவ்வழக்கு முழுமையுமே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக கருதப்படும்.
இந்திய தண்டணைச் சட்டம் - குறிப்பு

எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகள் என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் ஒவ்வொறு தண்டனைக்கு அருகிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் கடமை என்ன?

நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து யாரேனும் காவல் துறையினருக்கு தகவல் தந்தாலோ அல்லது காவல் துறையினரின் நேரடி கவனத்திற்கு வந்தாலோ அதன் மீது விசாரணை நடத்துவது காவல் துறையினரின் கட்டாயமான கடமையாகும். இதிலிருந்து தவறும் காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க காவல் துறையின் நிலையாணையின் (Police Standing Order) படியும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படியும் வழியுள்ளது.
முதல் தகவல் அறிக்கை - பதிவு எப்போது?

நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து தகவல் தெரிந்தால் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 154படி முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவுசெய்து விசாரிக்க வேண்டியது காவல் துறையினரின் கட்டாய கடமையாகும்.
முதல் தகவல் அறிக்கை - பதிவு செய்ய மறுத்தால்?

அவ்வாறு காவல் துறையினர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளில் முதல் தகவலறிக்கையை காவல் அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்தால் நடை முறை ரீதியில் எளிமையாக அதே புகாரை பதிவுத் தபாலில் அதே காவல் நிலையத்திற்கு அனுப்பி ஆதாரத்தை வைத்துக்கொண்டால் காவல் துறையினர் தானாக வழக்கை பதிவுசெய்யவும், பாதிக்கப்பட்ட புகார்தாரர் பின்னாளில் நீதிமன்றத்தை அணுகவும் உதவியாக இருக்கும்.
மேலும் உடல் காயமடைந்த யாரேனும் ஒருவரின் புகாரை காவல் துறையினர்  பதிவுசெய்ய மறுத்தால் ஏதேனும் மருத்துவமனையில் அதுவும் இயன்றவரை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக காயத்திற்கான காரணத்தைச் சொல்லி சேர்ந்து கொண்டால் அங்கிருந்தே காவல் நிலையத்திற்கு தானாக தகவல் செல்லவும் அந்த மருத்துவமனைப்பதிவை புகார் பதிவிற்கு பயன்படுத்தவும் வாய்ப்புண்டு.

மேல்முறையீடு யாருக்கு செய்ய வேண்டும்?

குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 154 (3) ன் கீழ் மாவட்ட கண்காணிப்பாளருக்கோ, பெருநகரங்களில் காவல் துறை ஆணையாளருக்கோ பதிவு தபாலில் அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும் புகாரை அத்தகைய அதிகாரி தானாக விசாரிக்கலாம் அல்லது தகுதியுடைய ஒரு காவல்துறை அதிகாரியை விசாரணை நடத்தவும் உத்தரவிடலாம்.
நீதிமன்றம் செல்வது எப்போது?

புகார் பதிவு செய்யப்படாவிட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 156(3) ன் கீழ் அக்குற்றச்சாட்டு நடைபெற்ற எல்லையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம்.
கோர்ட் டைரக்‌ஷன்

புகாரில் உண்மை இருப்பதாக நீதித்துறை நடுவர் திருப்தி அடைந்தால், அவ்வழக்கை முதல் தகவலறிக்கை பதிவு செய்து விசாரிக்குமாறு சம்மந்தப்பட்ட காவல் துறையினருக்கு உத்தரவிடலாம். அவ்வாறு உத்தரவிடப்பட்டால் காவல் துறையினர் வழக்கை பதிவு செய்து விசாரிப்பதை தவிர வேறு வழியில்லை. மேலும் வழக்கை பதிவுசெய்து விசாரிக்க ஆணையிட்ட நடுவர் நீதிமன்றம் வழக்கின் விசாரணையையும் மேற்பார்வையிடலாம்.
இப்பிரிவின் கீழ் ஒரு புகார்தாரர் நீதிமன்றத்தை அணுகும்போது குற்றம் சாட்டப்படுபவரை  நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவ்வாறு நீதிமன்றத்தை அணுக குற்றம் சாட்டப்படுபவருக்கு எந்த உரிமையும் இல்லையென்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுகின்றன.

இருப்பினும் எந்திரகதியில் அதிகாரவரம்பு இல்லாமல் அவ்வாறு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 156 (3)ன் கீழ் ஆணையிடப்பட்டால் அவ்வாணையையும் அவ்வாணையினால் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் குற்றவியல் சட்டப்பிரிவு 482ன் கீழ் அவ்வாணையால் பாதிக்கப்பட்டவர் கேள்விக்குள்ளாக்கி நீக்கலாம் என குருதத் பிரபு மற்றும் பிறர் எதிர் எம். எஸ். கிருஷ்ணாபட் மற்றும் பிறர் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வழக்கு குறிப்பிடுகின்றது.

எனினும் இப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை குறித்து தெளிவான தீர்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.

நீதிமன்றத்தில் தனிப்புகார்

குற்றச்சாட்டை பதிவுசெய்வதில் உள்ள மற்றொரு முக்கியமான பிரிவுதான் தனிப்புகார் ஆகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 200ன் கீழ் தொடுக்கப்படும் இப்புகார், பிரிவு 190(1) ன் கீழாக புலன்கொள்ளப்பட்டு முதலில் புகார்தாரர் சத்தியபிரமானத்தின் மூலம் விசாரிக்கப்படுகிறார். அவ்வாறு விசாரிக்கப்படும் போது  தேவைப்படின் சாட்சிகள் யாரேனும் இருந்தால் அவர்களையும் நீதித்துறை நடுவர் விசாரிக்கலாம்.
தேவைப்படின் பிரிவு 202ன் கீழ் காவல் துறை அதிகாரிகளையோ அல்லது தகுதியுள்ள பிறரையோ கூட விசாரிக்கலாம். அவ்வாறு விசாரித்தபின் புகாரை விசாரிப்பதற்கு சாராம்சம் இல்லையென கருதினால் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 203ன் கீழ் வழக்கை தள்ளுபடி செய்யலாம்.  மாறாக வழக்கை விசாரிக்க சாராம்சம் இருக்குமென கருதினால் குற்றம் சாட்டப்படுவருக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 204ன் கீழ் அழைப்பாணை அனுப்பி வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம்.

நீதிமன்றத்தின் அதிகாரம்

இதைப்போலவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளில் காவல் துறையினரை விசாரிக்க நீதித்துறை நடுவருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 155(3) ன் கீழ் அதிகாரமுள்ளது. அவ்வாறு நீதித்துறை நடுவரால் உத்தரவிடப்பட்டால் அவ்வழக்கை காவல் துறையினர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குபோல் விசாரிக்கலாம். ஆனால் கைது செய்வது மட்டும் நீதிமன்ற ஆணையின்றி செய்ய இயலாது.

நேரடியாக நீதிமன்றத்தில் புகார் செய்யலாம் (பிரிவு-482)

மேற்கண்ட முறைகளைவிட சற்று எளியதும் சற்று கூடுதல் ஆற்றலுடையுதுமான வழிதான் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளுக்கு உயர்நீதிமன்றத்தின் தன்னிச்சை அதிகார பிரிவான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482 ஆகும்.

இப்பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட நபர் தனது புகாரை காவல்துறையினர் பதிவு செய்யவேண்டுமென்று கூறி நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம்.

பிரிவு 482 குற்றவியல் வழக்குகளில் உயர்நீதி மன்றத்திற்கு உள்ள தன்னிச்சை அதிகாரத்தை வழங்குவதாலும் உயர்நீதிமன்றமே புகாரை பதிவு செய்ய ஆணையிடும்போது அதிலிருந்து தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போன்றவற்றை சந்திக்க வேண்டி வரும் என்பதாலும் இப்பிரிவின் முக்கியத்துவம் புகார்களை பதிய வைப்பதில் சற்று கூடுதலாகும்.

நன்றி : தினகரன் நாளிதழ் - 03.01.2017

Tuesday, August 2, 2016

குற்றவியல் திருத்தச் சட்டம், 2013


குற்றவியல் திருத்தச் சட்டம், 2013 - என்ன செய்ய வேண்டும்? 

உலக நாடுகளின் முன் இந்தியாவை வெட்கி தலை குனிய வைத்த அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் நடந்தேறிய நாள் 2012 டிசம்பர் 16.  இந்தியத் தலைநகரான புதுடெல்லி யில் மருத்துவ மாணவி ஒருவர் தன் ஆண் நண்பருடன் இரவு வேளையில் திரைப்படம் பார்த்துவிட்டு வருகின்ற போது கயவர்கள் சிலரால் வஞ்சகமாக ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டு... அதன் பிறகு இருவருக்கும் நடந்த விஷயங்கள் உலகம் அறிந்த ஒரு செய்தி.  

பெண்ணை  போற்றுகிறோம் என்று பறைசாற்றும் இந்த தேசத்தில் பெண்ணினத்துக்கு ஏற்பட்ட மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சி, அதனால் ஏற்பட்ட உயிர்பலி - ‘நிர்பயா’ என்று ஊடகங்களால் பெயரிடப்பட்ட அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட சம்பவம் - குற்றவியல் சட்டங்களின் திருத்தத்துக்கு வழிவகை செய்தது.  

நிர்பயா வழக்குக்கு முன்னரும் பின்னரும் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கும் அமில வீச்சுக்கும் பலியாகி தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். இதோடு, உடலளவிலும் மனதளவிலும் காயப்பட்டவர்கள் பலர் உண்டு. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பாலியல் வன்முறைகளும் தொடர் சம்பவமாகிவிட்ட நிலையில் நீதியரசர் வர்மா கமிஷனின் பரிந்துரையின் பேரில் திருத்தம் செய்யப்பட்டு, 2013 பிப்ரவரி 3 முதல் அமலுக்கு வந்திருக்கும் குற்றவியல் சட்டத்திலிருக்கும் சில முக்கிய திருத்தங்கள் என்னவெனப் பார்ப்போம்.

அமில வீச்சும் அதற்கான தண்டனையும்

அமில வீச்சினால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு இந்த சட்ட திருத்தம் வரும்வரை ஒரு குற்றமாக இந்திய தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.  புதிய திருத்தம் பிரிவு 326A யின் படி எவர் ஒருவர் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ அமில வீச்சினாலோ, அமிலத்தை புகட்டியதினாலோ, உடலுக்கோ அல்லது உடலின் ஒரு சில பாகங்களுக்கோ ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் எண்ணத்தில் இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தால் அவர்களுக்குத் தண்டனையாக 10 ஆண்டுகள் முதல் வாழ்நாள் சிறையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும். அந்த அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவச் செலவுக்காகவும் அவரின் நலனுக்காகவும்  நஷ்டஈடாக  கொடுக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.  

புதிய திருத்தம் 326 B யின் படி 

எவர் ஒருவர் மற்றொருவரின் உடலுக்கு நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ பாதிப்பு ஏற்படுத்தும் எண்ணத்தில் அவர் மீது அமிலத்தை வீசவோ, அமிலத்தை புகட்டவோ முயற்சி செய்யும் பட்சத்தில் அவருக்கு 5 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.  அமிலம் என்பது ஒருவரின் உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதோ, உடல் பாகத்தை அரித்தெடுப்பதோ, மாறாத வடுவை ஏற்படுத்தும் ஒரு திரவமே ஆகும். மத்திய, மாநில அரசாங்கங்கள் இந்த கொடிய அமிலத்தை எளிதாக விற்பனை செய்வதைத் தடை செய்யும் முயற்சியை வெறும் பெயரளவுக்கு இல்லாமல் செவ்வனே செய்ய வேண்டிய நேரம் இது.  

இந்திய தண்டனைச் சட்டம் 354வது பிரிவின்படி யார் ஒருவர் ஒரு பெண்ணின் பெண்மையை நிலைகுலைக்கும் எண்ணத்துடனோ, அவமானப்படுத்தும் தவறான எண்ணத்துடனோ, தங்களுடைய பலம் கொண்டு செயலாற்றுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்தப் பிரிவுடன் புதிய பிரிவுகளாக சேர்க்கப்பட்டுள்ளவை 

354 A  

பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் அதற்கான தண்டனை.

(i)     உடல் ரீதியான தொடுதல், உரசுதல் அல்லது தவறான எண்ணத்துடன் பாலியல் ரீதியாக ஒரு பெண்ணின்  உடலைக் கையாளுதல்.
(ii)     தவறான எண்ணத்துடன் உடல் 
இச்சையை பூர்த்தி செய்ய அழைப்பது அல்லது கட்டாயப்படுத்துவது.
(iii)    பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக 
ஆபாசமான பாலியல்களை காட்சிக்கு வைத்தல்.
(iv)    ஆபாசமான கொச்சை வார்த்தைகளால் பெண்ணை கேலி செய்வது.

இவற்றை பாலியல் வன்முறையாக இந்தப் பிரிவு குறிப்பிடுகிறது.  முதல் மூன்று உட்பிரிவுகளுக்கு 
3 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.  நான்காவது உட்பிரிவுக்கு ஒரு ஆண்டு சிறைத்
தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும். 

354 B 

 ஒரு பெண்ணின் மீது தவறான எண்ணத்துடன் பலம் கொண்டு அவருடைய உடையை களைந்து கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்குவது குற்றமாகக் கருதப்படுகிறது. அதற்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும்  (வட இந்தியாவில் பெரும்பாலும் இவ்வாறான குற்றங்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்கள் மீது அவர்களை அவமானப்படுத்தவும், அவர்களை தன் சொற்படி நடக்கச் செய்யவும் நடத்தப்படுகிறது). 

354 C  

ஒரு ஆண், ஒரு பெண் அந்தரங்கமாக இருக்கும்போது தவறான எண்ணத்துடன் அவரைப் பார்ப்பது, அந்த அந்தரங்க நிலையை படம் பிடிப்பது ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாக சட்டம் வரையறைத்துள்ளது  (ஒரு பெண் உடை மாற்றும் போதோ, கழிப்பறை, குளியலறையை பயன்படுத்தும்போதா நிர்வாணமாகவோ, வெறும் உள்ளாடைகளுடன் இருக்கும் போது பார்ப்பதோ, படமெடுப்பதோ) முதன்முறையாக செய்யப்படும் இந்தக் குற்றத்துக்கு ஒன்றிலிருந்து 3 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும், தொடர்ந்து இதே குற்றத்தை செய்யும் பட்சத்தில் 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

354 D 

 ஒரு ஆண், ஒரு பெண்ணை தொடர்புகொள்ள முயற்சித்து அவரை பின்தொடர்தல், இவரின் இந்த செய்கையை அந்தப் பெண் எதிர்த்தும் தொடர்வது, மேலும் மின்னஞ்சல் போன்ற விஞ்ஞான சாதனத்தின் மூலம் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ய முயற்சி செய்தல் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுகின்றன.  முதன்முறையாக செய்யப்படும் இந்தக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும், தொடர்ந்து இதே குற்றத்தை செய்யும் பட்சத்தில் 5 ஆண்டுகள் அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். இதற்கு விதிவிலக்காக எந்த ஒரு குற்றச்செயலை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் அல்லது சட்டத்தின் உதவியுடன் ஒருவர் ஒரு பெண்ணை பின்தொடர்வது குற்றமாக கருதப்படமாட்டாது.  

370

370 இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வியாபார நோக்கில் ஆட்கடத்தல் செய்வது குற்றமாகக் கருதப்படுகிறது. அதனை இந்த புதிய சட்ட திருத்தத்தின் மூலம் சற்று விரிவுபடுத்தியுள்ளார்கள்.  எவர் ஒருவர் மற்றொரு நபரையோ அல்லது நபர்களையோ தவறாக பயன்படுத்துவதற்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ப்பது, யார் கண்ணிலும் தெரியாமல் மறைத்து வைப்பது, தவறான நோக்கில் வேறொருவரிடமிருந்து தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவது, இவற்றை மிரட்டல் மூலமாகவோ, கட்டாயத்தின் மூலமாகவோ, ஆட்கடத்தலின் மூலமாகவோ, தன்னுடைய அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து தன்வசப்படுத்துவதோ, வியாபார நோக்கில் செய்யப்படும் ஆட்கடத்தல் குற்றமாக கருதப்படுகிறது. 

பெரும்பாலும் இந்த ஆட்கடத்தல் குற்றம் பாலியல் தொழிலுக்காகவோ, கடுமையான வேலை செய்ய கொத்தடிமைகளாக பயன்படுத்துவதற்காகவோ, உடல் உறுப்புகளை திருடுவதற்காகவோ நடைபெறுகிறது.  கடத்தப்படும் நபர் தன்னுடைய ஒப்புதலை கொடுத்தாரா என்பதை சட்டம் பார்க்காது.  

யாரொருவர் வியாபாரத்துக்காக ஆட்கடத்தல் குற்றம் செய்கிறாரோ, அவருக்கு 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். யாரொருவர், ஒருவருக்கு மேற்பட்ட நபர்களை வியாபார ரீதியான நோக்கத்தில் ஆட்கடத்தல் செய்யும் பட்சத்தில் அந்தக் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். 

யாரொருவர் வயது வராத சிறுவனையோ, சிறுமியையோ வியாபார ரீதியாக ஆட்கடத்தல் குற்றம் செய்ததற்கு 10 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.  யாரொருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர்களை வியாபார ரீதியாக ஆட்கடத்தல் குற்றம் செய்யும் பட்சத்தில் அவருக்கு 14 ஆண்டுகள் அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

யாரொருவர் ஒரு சிறுவனை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வியாபார ரீதியாக ஆட்கடத்தல் செய்கிறாரோ அவருக்கு அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஒரு காவல் துறை அதிகாரியோ, பொது அலுவலரோ வியாபார ரீதியாக ஆட்கடத்தலில் ஈடுபடும்போது அவருக்கு தன் வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிப்பதற்கான தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

பிரிவு 370 A 

 யாரொருவர் பாலியல் ரீதியாக பயன்படுத்துவதற்காக சிறார்கள் மீது ஆட்கடத்தல் குற்றம் செய்கிறாரோ அவர்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும். யாரொருவர் ஆட்கடத்தல் மூலம் தாங்கள் வசப்படுத்திய ஒரு நபரை பாலியல் ரீதியாக பயன்படுத்தினால் அதற்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.

பாலியல் வன்புணர்ச்சி

பிரிவு 375 

-ஒரு ஆண் மகன் தவறான நோக்கில் ஒரு பெண்ணின்  மீது  பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு அவருடைய அந்தரங்க பாகங்களை தொடுவது, காயப்படுத்துவது அல்லது வேறு ஏதேனும் முறையில் அந்தப் பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுப்பது, அதுவும் அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக அவளின் அனுமதியின்றி, மேலும் அவளிடம் அனுமதி பெற்றாலும் அந்த அனுமதி அவள் பிரியப்பட்ட ஒரு நபரை பணயம் வைத்து அவளை பயமுறுத்தி பெற்ற அனுமதியாக இருப்பினும், மேலும் கணவரல்லாத ஒரு நபர் கணவர் என்ற போர்வையில் உறவு வைத்துக்கொள்வதும், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அல்லது நடக்கும் செய்கையை புரிந்துகொள்ள இயலாத நிலையிலிருக்கும் ஒரு பெண் அல்லது 18 வயதுக்குட்பட்ட ஒரு பெண் ஆகியோருடன் வைத்துக் கொண்டிருக்கும் பாலியல் உறவுகள் பாலியல் வன்புணர்ச்சி குற்றத்துக்குச் சமம். 

பிரிவு 376ன் கீழ் இதற்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் சிறைத் தண்டனை உண்டு. 

ஒரு காவல் துறை அதிகாரி தான் பணிபுரியும் காவல் நிலையத்திலேயோ அல்லது அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பெண்ணிடமோ பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது... 

ஒரு பொது அலுவலர் தன்னுடைய பாதுகாப்பில் இருக்கும் ஒரு பெண்ணிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ராணுவத்தில் பணிபுரிபவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் ஒரு பெண்ணுடன் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

சிறைக் காவலர் அல்லது சிறை அதிகாரி அல்லது பெண்களும் குழந்தைகளும் தங்கும் பாதுகாப்பு இல்லங்களின் பொறுப்பாளர் மற்றும் 
விடுதியிலிருப்பவர் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

மருத்துவமனையின் பராமரிப்பில் இருப்பவர் அல்லது அதில் பணிபுரிபவர் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ஒரு பெண்ணின் உறவினரோ, காப்பாளரோ, ஆசிரியரோ அவர் பாதுகாப்புக்கு நம்பிக்கையானவரோ பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ஜாதிக் கலவரத்தின் போது ஏற்படுத்தும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது...

கர்ப்பிணி என்று தெரிந்தும் ஒரு பெண்ணின் மீது பாலியல் வன்முறையில் ஈடுபடுவது...

16 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ஒப்புதல் கொடுக்க இயலாத நிலையிலிருக்கும் ஒரு பெண்ணுடன் வல்லுறவு கொள்வது...

மனநலம் அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் மாற்றுத்திறனாளியின் மீது பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ஒரே பெண்ணின் மீது மீண்டும் மீண்டும் வல்லுறவு வைத்துக்கொள்வது...

ஒரு பெண்ணின் மீது பாலியல் உறவின் போது அவள் உடலைக் காயப்படுத்துவதோ, அவள் உயிருக்கு பங்கம் விளைவிப்பதோ... 

இவையனைத்துக்கும் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனையும், அதிக பட்சமாக 
வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிப்பதற்கான அபராதத்துடன் கூடிய தண்டனையும் விதிக்கப்படும்.  

பிரிவு 376 A  ’

யாரொருவரின்  பாலியல் வன்புணர்ச்சி செய்கையினால் ஒரு பெண்ணுக்கு மரணம் ஏற்படின் அல்லது மரக்கட்டை போன்ற ஒரு நிலை ஏற்படின்... குற்றம் இழைத்த அந்த நபருக்கு 20 ஆண்டுகள் வரை அல்லது சாகும் வரை வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்கும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 376 B 

யாரொருவர் நீதிமன்ற அனுமதியுடனோ, தன்னிச்சையாகவோ பிரிந்து வாழும் தன் மனைவியின் முன் அனுமதி இல்லாமல்  பாலியல் உறவில் ஈடுபடுகிறாரோ அவருக்கு குறைந்த பட்சம்  2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய  சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 376 C

யாரொருவர் தன் பதவி மற்றும் அதிகாரத்தின் மூலம் தனக்கு அடங்கி இருப்பவர் மீது  பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுகிறாரோ  அந்த நபருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான  அபராதத்துடன் கூடிய  சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 376 D 

 ஒரு பெண்ணின் மீது கூட்டு பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொரு வருக்கும் 20 ஆண்டுகளிலிருந்து ஆயுட்காலம் வரை அபராதத்துடன் கூடிய  வாழ்நாள்  சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 376 E 

 யாரொருவர் ஏற்கனவே குற்றவாளியாக நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் அதே பாலியல் வன்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபடுவாராயின் அவருக்கு, வாழ்நாள் சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். இதுவரை இந்திய தண்டனைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சில சட்ட திருத்தங்களைப் பற்றி பார்த்தோம். 

இனி, குற்றவியல் நடைமுறை சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தங்களைப் பற்றி பார்ப்போம்.

பிரிவு 54 A
  
இந்தப் புதிய திருத்தத்தின் கீழ் ஒருவர் குற்றம் சாட்டப்பட்ட நபரை அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில், மன நலமோ, உடல் நலமோ பாதிக்கப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும் பட்சத்தில் அவரை அடையாளம் காண்பது குற்றவியல் நீதிபதி முன்னர் நடைபெற வேண்டும். 

குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காணும் நபர் மனநலமோ, உடல்நலமோ பாதிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் அந்த அடையாள அணிவகுப்பை படப்பதிவு செய்வது அவசியம். 

பிரிவு 154

 இந்தச் சட்ட திருத்தத்தின் கீழ் அமில வீச்சு, பாலியல் வன்முறை, கற்பழிப்பு போன்ற பெரும் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரணை செய்ய ஒரு பெண் காவலரையே நியமிக்க வேண்டும்.

தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ, மனதளவிலோ, உடலளவிலோ பாதிக்கப்பட்டிருக்கும் நபரை அவருடைய இல்லத்திலோ,  அவருக்கு சௌகர்யமான இடத்திலோ, அவருடைய செய்கை மொழியை மொழிமாற்றம் செய்யத் தெரிந்தவர் முன்னிலையிலேயோ அல்லது சிறப்புக் கல்வியாளர் முன்னிலையிலேயோ விசாரணை மேற்கொள்வது அவசியம்.  மேலும் அவ்விசாரணையை படப்பதிவு செய்வது நன்மை பயக்கும்.

பிரிவு 161 

 இந்தப் பிரிவின் கீழ் அமில வீச்சு, பாலியல் வன்முறை, கற்பழிப்பு போன்ற பெரும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து வாக்குமூலம் கோரும்போது அவ்வாறான வாக்குமூலத்தை ஒரு பெண் காவல் அதிகாரி பதிவு செய்வது அவசியம்.  

பிரிவு 357 B  

இந்தப் பிரிவின் கீழ் பெரும் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் நஷ்ட ஈடு, இந்திய தண்டனைச் சட்டம் 

பிரிவு 326 அல்லது 376ன் கீழ் கொடுக்கப்படும் நஷ்டஈடுக்கு கூடுதலாக கொடுக்கப்படுவதேயாகும்.   

பிரிவு 357 C 
  
மத்திய, மாநில மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அமில வீச்சு, கற்பழிப்பு போன்ற குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு இலவச முதல் உதவியோ, மருத்துவ உதவியோ செய்யத் தவறும் பட்சத்தில் அதைப் பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். இந்திய சாட்சிய சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட திருத்தங்களைப் பற்றி பார்ப்போம்

பிரிவு 53 A 
  
பாலியல் வன்முறை அல்லது கற்பழிப்பு குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்ணின் நன்னடத்தை பற்றியோ, அதற்கு முன்னர் இருக்கும் பாலியல் அனுபவம் பற்றி கேட்பது சாட்சி விசாரணையின்போது அவசியமானதல்ல. 

பிரிவு 114 A 
  
கொடுமையான பாலியல் வன்முறை அல்லது பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண், தான் அந்த பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் நீதிமன்றம் அதனை அவ்வாறே ஏற்றுக் கொள்ளும். 

பிரிவு 119
  
ஒரு வழக்கின் சாட்சி பேச முடியாதவராயிருப்பின் அவர் நீதிமன்றத்தின் முன் எழுத்து மூலமாகவோ, சைகை மூலமாகவோ  மற்றவருக்குப் புரியும் வண்ணம் கொடுக்கும் சாட்சியம் வாய்மொழி சாட்சியத்துக்கு ஒப்பாக ஏற்றுக் கொள்ளப்படும். 2013ம் ஆண்டு குற்றவியல் திருத்த சட்டத்தின் சில முக்கிய திருத்தங்களைப் பற்றி பார்த்தோம். 

மேலும் நிர்பயாவின் மரணம் பல பெண்களின் மானம் காக்க சட்ட திருத்தமாக உருப்பெற்றுவிட்டாலும், பெண்களுக்கு எதிரான இவ்வாறான கொடுமையான குற்றங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டுமென்றால், நம் சமுதாயம் ஒரு பெண்ணை ஆணுக்கு இணையாகவே பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களுக்கான சட்டங்களும் சட்ட திருத்தங்களும் மட்டுமே அவளுக்குப் பாதுகாப்பல்ல. எனினும், பெண்களை பாதுகாக்கும் இந்த சட்ட திருத்தம் பெண்ணினத்துக்கு ஒரு வரப் பிரசாதமே. குற்றமற்ற சமுதாயமே பெண்களுக்கு பாதுகாப்பு!

நன்றி குங்குமம் தோழி

சட்டம் உன் கையில்: 
வழக்கறிஞரும் குடும்பநல ஆலோசகருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி



-----------------------------------------------------------28.06.2014 தினகரன் நாளிதழில் இருந்து