disalbe Right click

Wednesday, October 31, 2018

ஒழுங்கு நடவடிக்கை பணி நீக்கம் வழக்கு

மாற்றாவணங்கள் சட்டம் பிரிவு 138 & குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 320(8)

மஞ்சுளா என்பவர் காரைக்குடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் தட்டச்சராக பணியாற்றி வந்தார். அவருடைய கணவர் வீடு கட்டுவதற்காக பலரிடமிருந்து பணம் கடன் பெற்றுள்ளார் மேலும் அவர் தன் மனைவியான மஞ்சுளாவிடம் கடன்களை கூட்டாக பெற வேண்டும் என்று வற்புறுத்தியதோடு மட்டுமில்லாமல் மஞ்சுளாவின் கையோப்பத்தோடு கூடிய காசோலைகளையும் கடன் கொடுத்தவர்களுக்கு கொடுத்துள்ளார்.
அப்படி கடன் கொடுத்தவர்களில் ஒருவர் மஞ்சுளா மீது மாற்றாவணங்கள் சட்டம் பிரிவு 138 ன் கீழ் ஒரு வழக்கினை தாக்கல் செய்தார். அந்த வழக்கில் மஞ்சுளாவிற்கு 6 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5000/- அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மற்றொரு வழக்கில் ஓராண்டு தண்டனையும், ரூ. 1,00,000/- அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
புகார்தாரர்களுடன் சமரசம்
அந்த தண்டனைகளை எதிர்த்து, மஞ்சுளா மேல்முறையீடுகளை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் மஞ்சுளா புகார்தாரர்களுடன் சமரசம் செய்து கொண்டார். அதன்பேரில் சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் குழு மஞ்சுளாவை மேற்படி வழக்குகளிலிருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
மஞ்சுளாவிற்கும் அவரது கணவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழங்கி 2004 ஆம் ஆண்டு தீர்ப்பு கூறப்பட்டது.
துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை அதன் காரணமாக பணிநீக்கம்
இதற்கிடையில் குற்ற வழக்கில் தண்டனை பெற்றுள்ள உங்களை ஏன் பணியிலிருந்து நீக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு 2007 ஆம் ஆண்டு மஞ்சுளாவிற்கு ஒரு அறிவிப்பு அனுப்பப்பட்டது. அதன்பிறகு அவரை பணியிலிருந்து நீக்கி ஓர் உத்தரவினை 02.09.2010 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட நீதிபதி பிறப்பித்தார்
பணிநீக்கத்தை எதிர்த்து செய்த மேல்முறையீடு தள்ளுபடி
அந்த உத்தரவை எதிர்த்து மஞ்சுளா உயர்நீதிமன்ற நிர்வாக நீதிபதியிடம் ஒரு மேல்முறையீட்டை தாக்கல் செய்தார். அந்த மேல்முறையீட்டை நிர்வாக நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
தள்ளுபடி உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு
அந்த உத்தரவை எதிர்த்து மஞ்சுளா இந்த ரிட் மனுவை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நீதியரசர்கள் R. சுதாகர் மற்றும் V. M. வேலுமணி ஆகியோர்கள் விசாரித்தனர். மஞ்சுளா தரப்பில் மூத்த வழக்கறிஞர் திரு. T. லஜபதிராய் அவர்களும், அரசு தரப்பில் திரு. மனோகரன் அவர்களும் ஆஜராகி வாதிட்டனர்.
மேற்கோள் காட்டிய வாதியின் வழக்கறிஞர்
மஞ்சுளா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், மனுதாரரால் தாக்கல் செய்யப்பட்ட சத்திய பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டவற்றை எடுத்துக் கூறினார். மேலும் மதுரை உயர்நீதிமன்றத்தால் "M. H. தாமோதரன் Vs சிறப்பு அலுவலர், மதுரை, Indian Canoon. Org/doc/138483 என்று வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். மேலும் மஞ்சுளா மீதான குற்ற வழக்குகளிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டு விட்டதால் அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், அந்த குற்ற வழக்குகள் அனைத்தும் சமரசமாக முடிக்கப்பட்டுள்ளதை அடிப்படையாக கொண்டு தான் மஞ்சுளா விடுதலை செய்யப்பட்டுள்ளதால் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டவராக கருத முடியாது என்றார். மேலும் பணி நீக்கம் உத்தரவில் சரியான காரணங்களை குறிப்பிட்டுள்ளதால் அந்த உத்தரவில் குறைபாடு உள்ளது என்று கூறுவதை ஏற்க முடியாது என்றார்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மஞ்சுளாவின் கணவர் அவருடைய பெயரில் வீடு கட்டுவதற்காக பலரிடமிருந்து பணம் கடன் வாங்கியுள்ளார் என்பதும், மஞ்சுளாவையும் கூட்டாக சேர்த்து கடன் வாங்கியுள்ளதும், மஞ்சுளாவின் கையொப்பமிட்ட காசோலைகளை கடன்காரர்களுக்கு அவரது கணவர் கொடுத்துள்ள விஷயமும் வழக்கு ஆவணங்களிலிருந்து தெரிய வருகிறது என்று கூறினர். மேலும், அவர்களுடைய திருமணம் நீதிமன்றத்தால் கலைக்கப்பட்டது என்ற விவரமும் தெளிவாக தெரிகிறது என்றனர். மேலும் மஞ்சுளாவிற்கு தண்டனை வழங்கப்பட்ட விவரமும் அதன்பிறகு அந்த வழக்குகள் சமரச மையம் மூலமாக முடிக்கப்பட்ட விவரமும் தெரிய வருகிறது என்றனர்.
மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 138  என்ன சொல்கிறது?
இந்த வழக்கில் மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 138 ன் கீழான ஒரு குற்றச் செயலுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நெறிமுறைக்கு மாறாக ஒழுங்கீனமாக செயல்பட்டதற்கு அளிக்கப்பட்ட தண்டனையாக கருத முடியுமா? என்பதே பிரதான பிரச்சினை என்று கேள்வி எழுப்பி வழக்கை விசாரித்தனர்.
மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 138 யை படித்துப் பார்க்கும் போது, அந்த பிரிவின் கீழான குற்றச் செயல் பொருளாதார அடிப்படையிலான ஒரு குற்றச் செயலாக தான் கூறப்பட்டுள்ளதே தவிர, ஒழுக்கக் குறைவான ஒரு குற்றச் செயல் சம்பந்தப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. வேறு விதமாக கூற வேண்டுமானால் மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 138 ன் கீழான குற்றத்திற்கு அளிக்கப்பட்ட தண்டனையை ஒழுக்கம் சார்ந்த ஒரு குற்றச் செயலுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாக கருத முடியாது
வாதிக்கு கைகொடுத்த மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 147 
மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 147 ன் கீழ் மாற்றாவணங்கள் சட்டப்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள காசோலை குறித்த வழக்குகளை சமரசமாக முடித்துக் கொள்ளலாம். அதன்படி மஞ்சுளா மீதான வழக்கு சமரசமாக முடிக்கப்பட்டு விட்டது என சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் குழு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
வாதியை காப்பாற்றிய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 320(8)
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 320(8) ன் படி ஒரு குற்றச் செயல் சமரசமாக முடிக்கப்பட்டு விட்டால், அது அந்த வழக்கிலிருந்து அந்த எதிரியை விடுதலை செய்ததற்கு ஒப்பானதாக கருதப்படும். எனவே துறை ரீதியான நடவடிக்கையின் அடிப்படையில் மஞ்சுளாவை பணி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படி செல்லாது என்று கூறி அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
W. P. NO - 7510/2014, DT - 13.12.2015
L. மஞ்சுளா Vs தமிழ்நாடு அரசிற்காக அதன் செயலாளர் மற்றும் பலர்
2016-2-MLJ-416

நன்றி : எனது முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான Dhanesh Balamurugan

*************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 31.10.2018