disalbe Right click

Friday, November 30, 2018

செட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்!

செட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்!
சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும், 'செட்டில்மென்ட்' பத்திரங்களை, அதில் கூறப்பட்ட நிபந்தனைகள் நிறைவேறாத நிலையில், ரத்து செய்ய அனுமதிக்கலாம் என, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.பொதுவாக, குடும்ப தலைவர் பெயரில் உள்ள சொத்தை, உயில் வாயிலாக, வாரிசுகளுக்கு வழங்கலாம். இல்லையெனில், 'செட்டில்மென்ட்' எனப்படும், தானமாக எழுதி தரப்படும் பத்திரங்கள் வாயிலாகவும் கொடுக்கலாம்.
இவ்வகையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த, கண்ணன் என்ற விவசாயி, 'செட்டில்மென்ட்' வாயிலாக, மகன்களுக்கு நிலத்தை பங்கிட்டு கொடுத்துஉள்ளார். அதன்பின், மகன்கள், அவரை முறையாக பராமரிக்கவில்லை என, கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரை விசாரித்த, திருவண்ணாமலை கலெக்டர், சம்பந்தப்பட்ட நபர் எழுதி கொடுத்த, 'செட்டில்மென்ட்' பத்திரத்தின் பதிவையும், பட்டா மாறுதலையும் ரத்து செய்து, கண்ணன் பெயருக்கே, அந்த சொத்து திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்தார்.இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தற்போது, செட்டில்மென்ட் பத்திரங்களை எழுதி கொடுத்தவர், ரத்து செய்ய அணுகினால், அந்த கோரிக்கையை, எப்படி அணுக வேண்டும் என்பதில், குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன் பிறப்பித்துள்ள உத்தரவு:
எவ்வித நிபந்தனைகளும் இல்லாத, செட்டில்மென்ட் பத்திரங்களை எழுதி கொடுத்தவர் மட்டும், ரத்து செய்வதற்கான ஆவணத்தை தாக்கல் செய்தால், அதை ஏற்காமல், மறுப்பு சீட்டு வழங்கலாம்.
எழுதி கொடுத்தவர், பெற்றவர் இருவரும் நேரில் ஆஜராகி, ரத்து ஆவணம் அளித்தால், அதை ஏற்று, செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்யலாம்.
செட்டில்மென்ட் பெற்றவர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்று, ரத்து ஆவணம் தாக்கல் செய்தால், அதில் நிபந்தனைகளை ஆராய்ந்து, சார் -- பதிவாளர் முடிவு எடுக்கலாம்.
நிபந்தனைகள் நிறைவேற்றப்படாதது உறுதியாக தெரியும் நிலையில், ரத்து ஆவணத்தை, சார் - பதிவாளர்கள் ஏற்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
******************************************************நன்றி : தினமலர் நாளிதழ் - 30.11.2018

Thursday, November 29, 2018

பி.எட்., படிப்பு - புதிய வழிமுறை

4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம் பிளஸ் 2 முடித்ததும் சேரலாம்!
சென்னை:பி.எட்., படிப்பில், வரும் கல்வி ஆண்டு முதல், நான்கு ஆண்டு படிப்புகள் அறிமுகமாகின்றன. இந்த படிப்பை நடத்த, வரும், 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வழியாக, பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட கல்வியியல் படிப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், பி.எட்., படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இதில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கு, இரண்டு ஆண்டு கால வகுப்பு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், பிளஸ் 2 படித்து முடித்ததும், பி.எட்., சேரும் வகையில், புதிய திட்டத்தை, தேசிய கல்வியியல் கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, பிளஸ் 2 முடித்த மாணவர்கள், நேரடியாக இளநிலை பட்டம் மற்றும் பி.எட்., இரண்டையும் சேர்த்து படிக்கும் வகையில், நான்கு ஆண்டு, பி.எட்., படிப்பு, வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாகிறது.
இதுகுறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணை வேந்தர், தங்கசாமி அளித்த பேட்டி:
பள்ளிப் படிப்பை முடித்ததும், ஆசிரியர் படிப்பை மேற்கொள்ளும் வகையில், நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த, பி.எட்., படிப்பு, வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாகிறது. இந்த படிப்பை நடத்த விரும்பும் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், டிச., 3 முதல், 31க்குள், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பல்கலையிலும், கல்லுாரியிலும், இயற்பியல், மெக்கானிக்கல், தமிழ், ஆங்கிலம், தத்துவவியல் என, பல்வேறு துறைகள் இருப்பது போன்று, கல்வியியல் படிப்புக்கும், தனி துறை உருவாக்கப்படும். இதற்கும், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசின் சார்பில், கல்வியியல் பல்கலையின், ஐந்து உறுப்பு கல்லுாரிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விழுப்புரம் - மருதுார் மற்றும் சேலம் - எடப்பாடியில், இரண்டு கல்லுாரிகள், விரைவில் திறக்கப்பட உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
நன்றி : தினமலர் (கல்விமலர்) - 30.11.2018

Tuesday, November 27, 2018

புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்

கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு
உரிய காரணத்தை குறிப்பிட்டு ரசீது தராமல் பத்திரம் பதிவு செய்ய மறுத்தால் புகார் அளிக்கலாம்: கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு
பத்திரப்பதிவின்போது, நிலுவை மற்றும் பதிவு மறுப்பு ஆகியவற்றுக்கு உரிய காரணத்துடன் சீட்டு வழங்காமல், வாய்மொழியாக சார்பதிவாளர் மறுத்தால் பொதுமக்கள் 18001025174 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என பதிவுத்தறை தலைவர் ஜெ.குமர குருபரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு
பதிவுத் துறைக்கான ஒருங்கி ணைந்த வலை அமைப்பான ஸ்டார் 2.0 திட்டம் கடந்த பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக இதுவரை 19 லட்சத்து 20,174 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பத்திரம் முறையாக பதிவு செய்யப்பட்டு அதற்கான ரசீது சார்பதிவாளரால் கையொப்பமிடப்பட்டு வழங்கப்படும்.
பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பட்டா உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்க வேண்டியிருக்கும் போதும், தேவையான முத்திரைத் தீர்வை செலுத்தாத போதும் இன்னும் சில வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காகவும் பத்திரம் நிலுவையாக பதிவு செய்யப்பட்டு, நிலுவைக்கான காரணம் ரசீதில் அச்சடிக்கப்பட்டு சார்பதிவாளரால் வழங்கப்படும். நிலுவைக்கான காரணம் சரி செய்யப்பட்டதும் பத்திரம் முறையாக பதிவு செய்யப்பட்டு திரும்ப வழங்கப் படும்.
பதிவுச்சட்டம், பதிவு விதிகள், அரசாணைகள் மற்றும் பதிவுத்துறைத் தலைவர் சுற்றறிக்கையில் கூறியுள்ளபடி தேவையான விவரங்களுடன் பத்திரம் தாக்கல் செய்யப்படாத நிலையில், பத்திரப்பதிவு மறுக்கப்படும். இவ்வாறு பதிவு மறுக்கப்படும் நிகழ்வுகளில் என்ன காரணத்துக்காக பதிவு மறுக்கப்பட்டது போன்ற விவரங்களுடன் பதிவு மறுப்புச்சீட்டு அச்சிடப்பட்டு சார்பதிவாளரால் வழங்கப்படும். இந்த நிகழ்வுகளில், பதிவு மறுப்புச்சீட்டில் தெரிவிக் கப்பட்டுள்ள காரணங்களை சரிசெய்து மீண்டும் பத்திரத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே, ஒரு பத்திரம் பதிவுக்கு அனுமதிக்கப்பட்டு முறையாக பதிவு செய்யப்பட்டாலோ, நிலுவை வைக்கப்பட்டாலோ, அல்லது பதிவு மறுக்கப்பட்டாலோ எந்த நிகழ்வாக இருந்தாலும் காரணம் குறிப்பிட்டு சார்பதிவாளரால் ஆவணதாரருக்கு ரசீது வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறில்லாமல் வாய் மொழியாக சார்பதிவாளர் ஆவணப்பதிவை மறுத்தால் 18001025174 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
**********************************நன்றி : இந்து தமிழ் நாளிதழ் - 28.11.2018