disalbe Right click

Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Saturday, October 14, 2017

பொருளாதாரத்தை எப்படி மீட்கப் போகிறோம்?

பொருளாதாரத்தை எப்படி மீட்கப் போகிறோம்?
புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று தொடர்ந்து கூறி வந்த மோடி, இந்திய பொருளாதாரம் சரிவில் இருக்கிறது என்பதை முதன்முதலாக ஒப்புக் கொண்டுள்ளார். 
தொடர்ந்து ஊடகங்களும் எதிர்கட்சிகளும் பொருளாதார சரிவு குறித்து மோடி அரசை கடுமையமாக விமர்சித்து வந்தன. இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி, ``இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் தற்போது மட்டுமா 5.7 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதை விட வளர்ச்சி விகிதம் குறைந்த சம்பவங்களை என்னால் கூற முடியும்’’ என்று பதிலளித்து உள்ளார்.
பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக மோடி அரசு யோசித்து வருகிறது. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய், சுர்ஜித் பாலா, ரத்தின் ராய், அசிமா கோயல், ரத்தன் வாட்டாள் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதற்கிடையே அருண் ஜேட்லி, இந்தியாவின் பொருளாதார சூழலை மாற்றியமைக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாக தொடர்ந்து கூறிவருகிறார். இப்படி மத்திய அரசில் பொருளாதாரத்தை மீட்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறை திசையில் சென்று கொண்டிருக்கிறது. ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக இருக்கிறது. மற்ற பொருளாதார காரணிகளும் எதிர்மறையாக இருக்கின்றன. இதற்கு பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தியது என பொதுவான காரணங்கள் இருந்தாலும் இவற்றிலிருந்து எப்படி மீளப் போகிறோம் என்பதுதான் தற்போதைய பெரும் கேள்வியாக இருக்கிறது.
விவசாயத்துறை வளர்ச்சி
இந்திய பொருளாதாரத்தை தாங்கி நிற்க கூடிய முக்கியத்துறை விவசாயம். சம்பா (காரிப்) பருவம்தான் அதிக விவசாய உற்பத்தியை தரக்கூடியது. ஆனால் 2017-18-ம் நிதியாண்டில் சம்பா பருவத்தின் உற்பத்தி முந்தைய ஆண்டை விட 3 சதவீதம் குறைவாக இருக்கும் என்று மத்திய அரசு கணித்துள்ளது. அதாவது மொத்தமாக 134.67 மில்லியன் டன் மட்டுமே உற்பத்தி இருக்கும் என்று கூறியுள்ளது. சம்பா பருவம் என்பது ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ளது. கடந்த காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இந்த பருவத்தின் உற்பத்தி குறைந்ததும் காரணம். அடுத்த காலாண்டு முடிவிலேயும் இதன் பாதிப்பு இருக்கக் கூடும். ஆனால் குறுவை (ராபி) பருவத்தை மத்திய அரசு சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். உற்பத்தியை பெருக்குவதற்கும் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்வதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே குறுவை பருவத்தில் விவசாய வளர்ச்சி அதிகமாகும். அதுமட்டுமல்லாமல் வடகிழக்கு பருவமழை மூல மாக பயன்பெறும் தென்னிந்திய மாநிலங்களின் உற்பத்தியை பெருக்க வேண்டும். அப்படி செய்தால் நாட்டின் ஜிடிபி வளர்ச்சியில் விவசாயத்துறையின் பங்கு அதிகமாக இருக்கும்.
தனியார் முதலீடு
பெரு நிறுவனங்களின் முதலீடு நடப்பு நிதியாண்டில் சுத்தமாக இல்லை. 2009-ம் ஆண்டில் அதிக கடன் வாங்கிய நிறுவனங்களும் இன்னமும் அந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றன. இதன் தாக்கம் வங்கிகளின் கட்டமைப்பை தாக்கும் அளவுக்கு வந்துவிட்டன. இதன் காரணமாக வங்கிகள் கடன் அளிப்பதை குறைத்துவிட்டன. இந்தியாவில் தனியார் முதலீட்டில் 80 சதவீதம் நிதி வங்கிகள் மூலமாகவே வருகின்றன. வங்கிகள் நிதி அளிப்பது குறைந்ததனால் ஒட்டுமொத்த முதலீட்டு சூழலையே பாதித்துள்ளது. வங்கிகளை மறுசீரமைப்புச் செய்யாமல் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க முடியாது.
அதுமட்டுமல்லாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசு முதலீட்டு விகிதம் கடந்த எட்டு ஆண்டுகளாக 35 சதவீதமாக இருந்து வந்தது. தற்போது 30 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் உள்கட்டமைப்பு மேம்படவில்லை. உள்கட்டமைப்பை மேம்படுத்தாத வரையில் அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வராது. 1991-ம் ஆண்டில் தனியார்- அரசு முதலீடுகளை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தியது போல் தற்போது பயன்படுத்த வேண்டும்.
கீன்ஸ் பொருளாதாரம் உதவுமா?
பொருளாதாரம் மந்தமடையும் போது பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசு அதிக முதலீடு செய்து தேவையை (Demand) அதிகப்படுத்த வேண்டும் என்று 1930-ம் ஆண்டு பொருளாதார அறிஞர் மோனார்ட் கீன்ஸ் எனும் பொருளியல் அறிஞர் கூறினார். இதன்படி பார்த்தால் தற்போது இந்தியாவை பொருளாதார சரிவிலிருந்து மீட்பதற்கு அரசுக்கு 50,000 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. 
வங்கிகளை மறுசீரமைப்பு செய்வதற்கும் முதலீடு செய்யவேண்டும். ஆக தற்போது அரசு முதலீடு செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஆனால் அதற்கான நிதியை எங்கிருந்து பெறுவது?. இந்தியாவில் 240 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 19 லட்சம் கோடி ரூபாய். அதுமட்டுமல்லாமல் பொதுத்துறை நிறுவனங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மதிப்பு பல லட்சம் கோடி மதிப்புகளை கொண்டிருக்கிறது. இவற்றில் பெரும்பாலான சொத்துகள் யாவும் எதற்கு பயன்படாமல் முடங்கி கிடக்கிறது. இதில் தேவையில்லாத சொத்துகளை விற்பதன் மூலம் உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு போன்ற துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளமுடியும்.
கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைப்பதன் 10 சதவீதமாக குறைப்பதன் மூலமாகவும் அரசின் வருமானத்தை பெருக்க முடியும். வரி வகிதத்தை குறைக்கும் போது அரசின் வருவாய் அதிகரிப்பதாகவும் வரி விகிதத்தை அதிகரிக்கும் போது அரசின் வருவாய் குறைவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு ஒரு உதாரணமும் இருக்கிறது
1983-ம் ஆண்டு அமெரிக்கா பொருளாதார சிக்கலில் இருக்கும் பொழுது, பொருளாதாரத்தை மேம்படுத்த ரொனால்டு ரீகன் வரி விகிதத்தை குறைத்தார். அப்படி செய்ததன் மூலம் பொருளாதார வளர்ச்சி இருமடங்காக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 ஆண்டுகளாக மோடி அரசும் அமைச்சர்களும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து கூறிவந்தனர். ஆனால் இன்று அப்பட்டமாக பொதுவெளிக்கு இந்தியாவின் பொருளாதார நிலை என்ன என்பது தெரியவந்துவிட்டது. அருண் ஜேட்லியும் மோடியும் அதை ஒப்புக் கொண்டுவிட்டனர். அரசியல் ரீதியாக பின்னடைவு என்றாலும் மக்களுக்கு உண்மை நிலை தெரிந்துவிட்டது.
விவசாயத்தை மேம்படுத்துவது, தனியார் முதலீடுகளை அதிகப்படுத்துவது, வங்கிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டியது என பல சவால் நிறைந்த பணிகள் மோடி அரசுக்கு காத்துக்கிடக்கின்றன
இவற்றை சரிசெய்து பொருளாதாரத்தை மீட்பாரா மோடி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது, மோடியின் வெளிநாட்டு பயணங்கள் இனி குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
-devaraj.p@thehindutamil.co.in
பெ.தேவராஜ்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 09.10.201