disalbe Right click

Showing posts with label தாய்மை. Show all posts
Showing posts with label தாய்மை. Show all posts

Monday, November 5, 2018

போஸ்ட்பார்ட்டம் என்றால் என்ன?

போஸ்ட்பார்ட்டம் என்றால் என்ன?
போஸ்ட்பார்ட்டம்கடப்பது எப்படி?
போஸ்ட்பார்ட்டம்’ – இந்த வார்த்தையைப் பலர் அறிந்திருப்போம். ‘பார்ட்டம்என்றால், `பிரசவம்என்று அர்த்தம். பிரசவத்துக்குப் பிறகான காலகட்டம் என்பதுதான் `போஸ்ட்பார்ட்டம்(Postpartum) என்று அழைக்கப்படுகிறது.
குழந்தை பிறந்த முதல் ஆறு வாரங்கள் வரையிலான காலத்தை, `ஆரம்பநிலை போஸ்ட்பார்ட்டம்என்றும், அதற்கு அடுத்த மூன்று மாதங்கள் வரையிலான காலத்தைடிலேய்டு போஸ்ட்பார்ட்டம்’ (Delayed Postpartum) என்றும் சொல்கிறோம். கருவுறும்போது பெண்கள் எப்படி உடல், மனரீதியிலான மாற்றங்களைச் சந்திக்கிறார்களோ, அதேபோல் இந்த போஸ்ட்பார்ட்டம் காலத்திலும் பல மாற்றங்களைச் சந்திக்கிறார்கள். அவற்றை விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் சித்ரா.
உடல்ரீதியாக என்னென்ன மாற்றங்கள்?
ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது உடலளவில் என்னென்ன மாற்றங்களைச் சந்தித்தாளோ, பிரசவத்துக்குப் பிறகு அதிலிருந்து அந்தப் பெண் கொஞ்சம் கொஞ்சமாகப் பழையநிலைக்குத் திரும்ப ஆரம்பிப்பாள். அவள் எடை குறைய ஆரம்பிக்கும். குறிப்பாகத் தாய்ப்பால் கொடுக்கக் கொடுக்கத் தாயின் எடை பழையநிலைக்குத் திரும்ப ஆரம்பிக்கும்.
பிரசவத் தழும்புகள் குறிப்பிடத் தகுந்த அளவில் மறைய ஆரம்பிக்கும். கருவுற்ற காலகட்டத்தில் ஏற்பட்ட கைகால் வீக்கம் குறைய ஆரம்பிக்கும். மொத்தத்தில், கருவுற்றதால் மாற்றங்களைச் சந்தித்த உடல் உறுப்புகள், பழையநிலையை அடைய ஆரம்பிக்கும். பொதுவாக, பெண்கள் கருவுற்றிருக்கும்போது அவர்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்களின் அளவு, இயல்பைவிட 50 மடங்கு அதிகமாக இருக்கும். இப்படி அதிகரித்த இந்த ஹார்மோன்களின் அளவு இந்தக் காலகட்டத்தில் மெள்ள குறைந்து சாதாரணநிலைக்கு வர ஆரம்பிக்கும்.
போஸ்ட்பார்ட்டம் காலத்தில் தாய் சந்திக்கும் பிரச்னைகள், சவால்கள் என்னென்ன?
எல்லா தாய்மார்களுக்கும், குழந்தை பிறந்தவுடனேயே தங்கள் குழந்தையின் மீது பிணைப்பு வந்துவிடும் என்று சொல்ல முடியாது. பல தாய்மார்களுக்கு இந்தப் பிணைப்பு உடனடியாக வராது. கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை பிரசவவலியை அனுபவித்த பிறகுதான், ஒரு தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். இதன் காரணமாக அவள் மிகவும் சோர்வாகயிருப்பாள். சிசேரியன் என்றால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தாய்க்கு அது சார்ந்த வலி, சோர்வு இரண்டுமே இருக்கும். அலுத்துக் களைத்திருக்கும் தாயின் மனம் ஓய்வை நாடும். இதற்கிடையே, அந்த நேரத்தில் பிறந்த பிஞ்சுக்குழந்தை அழுதுகொண்டே இருக்கும். நேரம் பார்த்து, தாய் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒருபக்கம் உடல் அவஸ்தைகள், மறுபக்கம் குழந்தைப் பராமரிப்பு என்று அழுத்த, அந்தத் தாய்க்கு தூக்கம் சரியாகயிருக்காது.
முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப முறை பழக்கத்தில் இருந்தது. அதனால் வீட்டுப் பெரியவர்கள் வழிகாட்ட, அத்தை, சித்தி என்று மற்ற பெண்மணிகள் ஒத்தாசை செய்ய, புதிதாகப் பூமிக்கு வரும் குழந்தையை ஒரு தாயால் நிம்மதியுடன் எதிர்கொள்ள முடிந்தது. ஆனால், இப்போது அவரவர் அம்மா அல்லது மாமியார் மட்டுமே பிரசவத்துக்குத் துணையாக இருக்கிறார்கள். எப்படி தன் மகளுக்கு/மருமகளுக்கு இது போன்ற சமயங்களில் தோள்கொடுக்க வேண்டும் என்று இவர்களில் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இதன் காரணமாக, குழந்தையைச் சரியாகப் பார்த்துக்கொள்கிறோமா, இல்லையா என்கிற மனப் பதற்றத்துக்குத் தாய் ஆளாகிவிடுகிறாள். இது குறித்த கவலையே அவளைப் பிரதானமாக ஆக்கிரமித்துக் கொள்வதால், பல தாய்மார்களுக்கு பிரசவித்த உடனேயே தங்கள் குழந்தை மேல் பிணைப்பு வந்துவிடுவதில்லை. அதற்கு அவர்களுக்குக் குறைந்தது இரண்டு வாரங்களாவது தேவைப்படலாம். இன்னும் சிலருக்கு மூன்று மாதங்கள்கூட பிடிக்கலாம். ஏனென்றால், குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்கள்வரை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது, சுத்தம் செய்வது, குளிப்பாட்டுவது என்றிருக்கத்தான் தாய்க்கு நேரம் சரியாக இருக்கும். மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் குழந்தை, தாயின் செய்கைகளுக்குப் பதில் கொடுக்க ஆரம்பிக்கும். தாய் சிரித்தால் குழந்தையும் சிரிக்கும். கொஞ்சி அழைத்தால், திரும்பிப் பார்க்கும். தாயுடன் விளையாட ஆரம்பிக்கும். இப்படித்தான் ஒரு தாய்க்குத் தன் குழந்தை மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பிணைப்பு வர ஆரம்பிக்கும். அதனால் போஸ்ட்பார்ட்டம் காலகட்டத்தில், ‘என்னடா நமக்கு நம் குழந்தையின் மேல் பிணைப்பே வரவில்லைஎன்று தாய் வருந்தவேண்டிய அவசியம் இல்லை.
உடல் நடுக்கம் ஏன் ஏற்படுகிறது?
குழந்தை பிறந்த அரை மணி அல்லது ஒரு மணி நேரத்துக்குள் தாய்க்கு உடல் நடுக்கம் ஏற்படலாம். பிரசவித்த எல்லா பெண்களுக்குமே இந்த உடல்நடுக்கம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. சுகப்பிரசவத்தில் குழந்தை பெறும் சில பெண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படலாம். சுகப்பிரசவத்தில் ஒரு பெண் அதிக முயற்சி செய்து, வலியைத் தாங்கி குழந்தையைப் பெற்ற பிறகு, அவளது உடலிலிருக்கும் ஹார்மோன்களின் அளவு சட்டென்று உச்சத்துக்குச் சென்று கீழிறங்கும். இதன் காரணமாக உடல் நடுக்கம் ஏற்படலாம். அது போன்ற தருணங்களில் அவள் உடலைப் போர்வையால் போர்த்தி, உதவி செய்யலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு கொடுத்து சாதாரணநிலைக்குக் கொண்டுவரலாம். இது பயப்படவேண்டிய ஒரு பிரச்னை இல்லை. அதே நேரம் கண்டுகொள்ளாமலும்விடக் கூடாது.
அசௌகர்யம் தரும் உதிரப்போக்கு!
போஸ்ட்பார்ட்டம் நிலையில் தாய்மார்கள் சந்திக்கிற மிக முக்கியப் பிரச்னை, உதிரப்போக்கு. பிரசவித்த எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியாக உதிரப்போக்கு இருக்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு மூன்று, நான்கு நாள்கள் மட்டும் உதிரப்போக்கு இருக்கும்; பிறகு சில நாள்கள் இடைவெளிவிட்டு மறுபடியும் உதிரப்போக்கு ஏற்படும். சிலருக்கு இரண்டு வாரங்கள்வரைகூட உதிரப்போக்கு நீடிக்கும். பிரசவித்த ஆறு வாரங்கள்வரை விட்டு விட்டு இப்படி உதிரப்போக்கு இருக்கலாம். இவை அனைத்துமே இயல்பானதுதான். ஆனால், நாப்கின் தாங்காத அளவுக்கான உதிரப்போக்கு, கட்டிகட்டியாக உதிரப்போக்கு, மயக்கம் வரும் அளவுக்கு மிக அதிகமாக உதிரப்போக்கு போன்றவை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்
தாயின் மார்புச்சூடு!
தாயின் கருவறையில் சிசு, கதகதப்பாக வளர்ந்து பழக்கப்பட்டிருக்கும். பூமிக்கு வந்தவுடன் குழந்தையால் இந்த வெப்பநிலையைத் தாங்க முடியாது; குளிரால் நடுங்க ஆரம்பிக்கும். அதனால்தான் குழந்தை பிறந்தவுடன் அதைத் துணியால் போர்த்திவைக்க வேண்டும் என்று சொல்கிறோம். இயல்பு வெப்பநிலையைத் தாங்கும் சக்தி குழந்தைக்கு வர ஒன்று முதல் மூன்று மாதங்கள்வரை ஆகலாம். அதனால் குழந்தையை, தாய் மார்புடன் அணைத்துக்கொண்டு கதகதப்பான உணர்வைக் கொடுக்க வேண்டும். போஸ்ட்பார்ட்டம் காலத்தில் குழந்தையை, தன் மார்போடு அணைத்துக்கொள்ள தாய் மிகவும் விரும்புவாள். இந்த நேரத்தில் குழந்தைக்குக் கதகதப்பு தேவைப்படும் என்று உள்ளுணர்வின் மூலம் அறிந்துகொள்ளும் தாய், யாரும் அறிவுறுத்தாமல் தானாகவே தன் குழந்தையை அணைத்துக் கதகதப்பைக் கொடுக்கிறாள். இது உண்மையில் அதிசயத்திலும் அதிசயம்!
தாய்ப்பால்குழந்தைக்கும் தாய்க்குமான பிணைப்பை அதிகரிக்கும்!
தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கும் தாய்க்குமான பிணைப்பை அதிகப்படுத்தும் என்று சொல்லிவிட முடியாது. அன்பைக் காட்டுவதன் மூலம், தன் நேரத்தை அதிகளவில் குழந்தையுடன் செலவிடுவதன் மூலம் என ஒரு தாய் தன் குழந்தையுடனான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கான சூழல்கள் நிறைய. என்றாலும், தாய்ப்பால் குழந்தைக்குக் கொடுக்கப்படும்போது குழந்தை தன் தாயுடன் இன்னும் நெருக்கமாகிறது. தன்னுடைய உயிர் என்கிற உணர்வு தாய்க்கும் அதிகமாகிறது. மொத்தத்தில் தாய்ப்பால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் அடர்ந்ததோர் அன்புப் பாலமாக இருக்கிறது.
மனரீதியான போஸ்ட்பார்ட்டம் பாதிப்புகள்!
கருவுற்ற காலத்தில் மனஅழுத்தத்தைச் சந்தித்த பெண்கள், குழந்தைப் பேற்றுக்குப் பிறகு மறுபடியும் அதே பிரச்னையைச் சந்திக்க அதிகளவில் வாய்ப்பிருக்கிறது. சரியாகச் சாப்பிடாமல், போராடி குழந்தை பெற்று, குழந்தை பிறந்த பிறகு சரியாகத் தூங்காமல் நாள்களை நகர்த்தவேண்டிய சூழ்நிலை ஒரு தாய்க்கு ஏற்படுகிறது. குறிப்பாக முதல் குழந்தையின் தாய் என்றால், அந்தத் தாய்க்கு குழந்தை வளர்ப்பு குறித்த பயமும், சந்தேகங்களும், குழப்பங்களும் நிறைய இருக்கும். ‘நான் ஒரு சிறந்த அம்மாவாக இருக்க முடியுமாஎன் குழந்தையை நல்லபடியாக வளர்க்க முடியுமா?’ என்று அவர்கள் அதிகம் கவலைப்பட ஆரம்பிப்பார்கள்.
இதெல்லாம் ஒண்ணுமே இல்லை, நாங்க உன்கூட இருக்கோம்கவலைப்படாதேஎன்று ஆற்றவும் தேற்றவும் வீட்டில் பெரியவர்கள் இருக்கும்பட்சத்தில் இந்த நிலையிலிருந்து ஒரு பெண்ணால் சுலபமாக வெளியே வந்துவிட முடியும். அப்படி உதவிக்கு யாரும் இல்லாமல் வீடு, குழந்தை வளர்ப்பு என்று சகலத்தையும் தான் ஒருவர் மட்டுமே பார்த்தாக வேண்டும் என்கிற சூழ்நிலையில் இருக்கும் பெண்கள் அதிகளவில் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். கோபம், அழுகை, இயலாமை, சோர்வு இவையெல்லாம் அவர்களை ஆட்கொண்டுவிடுகின்றன. இந்தச் சிக்கல்களைத் தவிர்க்க, பிரசவித்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு துணை தேவைப்படுகிறது. அதனால் அந்தப் பெண்ணின் தாய் அல்லது மாமியார் அவருடன் இருப்பது நலம்.
கணவர் கைகொடுக்க வேண்டும்!
இவை எல்லாவற்றையும்விட, போஸ்ட்பார்ட்டம் நிலையை ஒரு பெண் இயல்பாகக் கடக்க அந்தப் பெண்ணின் கணவர் அவளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பாலூட்டுதல் தவிர்த்து, ஒரு தந்தை, தாய்க்கு இணையாகக் குழந்தையை எல்லாவிதத்திலும் பார்த்துக்கொள்ள முடியும். பிரசவத்துக்காக மாமியார் வீட்டிலிருக்கும் மனைவியையும் குழந்தையையும் வார இறுதி நாள்களில் வெறுமனே பார்த்துவிட்டுப் போவதை மட்டும் செய்யாமல், குழந்தையைத் தூங்கவைப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்து மனைவிக்குச் சற்று ஓய்வு கொடுக்கலாம். அன்பாக, ஆதரவாக மனைவியிடம் பேசலாம். கணவரின் இது போன்ற சின்னச் சின்ன உதவிகள், மெனக்கெடல்கள் பிரசவித்த பெண் தன்னை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் மீட்டெடுக்கக் கைகொடுக்கும்.’’
தண்ணீர் முக்கியம்!
பிரசவித்த தாய்மார்களுக்கு தண்ணீர் நிறைய கொடுக்க வேண்டும். அவர்கள் சத்தான, நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் யூரினரி இன்ஃபெக்ஷன், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகாமல் இருக்க முடியும். ஒருவேளை அவர்கள் இந்தப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டால், அது அவர்களை மிகவும் வேதனைப்படுத்தும் என்பதால் அவர்களை நன்கு கவனித்து உணவு கொடுக்கவேண்டியது அவசியம்.
நன்றி : விகடன் செய்திகள் - 16.10.2018