disalbe Right click

Tuesday, July 31, 2018

தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்

தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்
கடந்த 1993ம் ஆண்டு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தில் மாநில மகளிர் ஆணையத் தலைவி மற்றும் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மகளிர் ஆணையம் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பெண்களுக்கு சமத்துவம் வழங்கவும்,
பெண்களுக்கெதிரான அனைத்து வகை இன்னல்களிருந்து பாதுகாப்பினை உறுதி செய்யவும் மற்றும் குடும்பத்திலும், சமுதாயத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான அதிகாரங்களைப் பெற்ற ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும். மேலும் மகளிர் ஆணையம் பெண்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை கண்டறிந்து அது தொடர்பான ஆராய்ச்சிகளையும் மேற்கொள்கிறது. இந்த ஆணையம் நமது மாநிலத்தில் பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆணையத்தின் குறிக்கோள்கள்கள் என்னென்ன?
1. மகளிரின் நலனை உறுதி செய்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.
2. பாலினப்பாகுபாடு குறித்த விவகாரங்களை கவனித்தல்.
3. பெண்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆணையத்தின் பரிந்துரையை அரசுக்கு அனுப்பி வைத்தல்.
மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகள் என்னென்ன?
1. இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சட்ட பிரிவுகள் பாதுகாப்புகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்தான விபரங்களை கவனித்தல்.
2. பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முறையாக செயல்படுத்தப்படாத போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்
3. பெண்களுக்கு நீதி கிடைக்க தவறும் பட்சத்தில் தேவையான நீதியைப் பெறுவதற்கு உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளஅரசுக்கு பரிந்துரை செய்தல்.
4. பெண்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிகழ்வுகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உரிய அதிகாரம் பெற்ற அலுவலர்கள் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கண்டுள்ளவாறு பாதுகாப்பிற்கான உத்திரவாதம் வழங்கப்படாத நிலையிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மகளிர் ஆணையத்தை நேரிடையாக அணுகலாம்.
என்ன தீர்வு கிடைக்கும்?
யாராவது மனு கொடுத்தார்கள் என்றால், எதிர் மனுதாரருக்குச் சம்மன் அனுப்பி, அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவும், உரிய துறைகளுக்கு மனுவை அனுப்பி தகுந்த நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரை செய்யவும் இந்த ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களில் அவர்களுக்கு பாதகமான அம்சங்கள் ஏதேனும் இருக்குமானால் அதில் திருத்தங்கள் செய்யும்படி பரிந்துரைக்கவும் இவ்வாணையத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால் அந்தப் பிரச்சினைக்கு அதிகாரப்பூர்வமான தண்டனையோ, தீர்ப்போ சொல்லுகின்ற அதிகாரம் இந்த ஆணையத்திற்கு வழங்கப்படவில்லை. வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறிப்பிட்ட வரையறைகளுக்குள் அடங்கிய அதிகாரங்களாகவேதான் இருக்கின்றன.
இதன் முகவரி:
தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்,
தேவநேயப் பாவாணர் நூலகம், 2வது மாடி,
735, அண்ணா சாலை,
சென்னை
தொலைபேசி எண்: 044 25264568

Saturday, July 28, 2018

புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் – 2018

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு 
இரு மடங்காக உயர்த்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் தொகை!
தமிழக அரசால் கடந்த 01.04.2014 அன்று துவங்கப்பட்ட தமிழக அரசு ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர் களுக்கானபுதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்2014.’ கடந்த 30.06.2018 அன்று முடிவடைந்துவிட்டது. கடந்த 01.07.2018 முதல் 30.06.2022 வரை நீட்டிக்கப்பட்டு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம்2018.’ தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் புதிய பயன்கள் என்ன?
  1. காப்பீட்டுக் காலமான நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவ உதவி (Medical Assistance) ரூ. 2 லட்சம் மட்டுமே இதற்கு முன்பு வழங்கப்பட்டு வந்தது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில் இதன் மருத்துவ வசதி (இரண்டு மடங்காக) ரூ. 4 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.
  2. ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மட்டுமே பயன் தந்துவந்த இந்தத் திட்டமானது தற்போது உடற்குறை உள்ள ஓய்வூதியதாரரின் மகன் மற்றும் திருமணமாகாத மகளுக்கும் பயன்தரும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளதுஇதனால், ஓய்வூதியதாரர்களின் குடும்பத்திலுள்ள  அனைத்து வகையான உடல் நலமின்மை, வாழ்வாதாரத்துக்குச் சம்பாதிக்க முடியாதபடி மனநலமின்மை, உடல் ஊனம் அல்லது பிற வகை இயலாமைகள் இருப்பவர்களும் இந்த திட்டத்தின் கீழ் மருத்துவ வசதி பெறலாம்.
  3. திருமணமாகாத / விவாகரத்தான / விதவையான ஓய்வூதியதாரரின் மகளுக்கும் சில நிபந்தனைகளுடன் இந்த திட்டத்தில் மருத்துவ வசதி பெறலாம்.
  4.  இத்திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை, கெமோதெரபி, ரேடியோ தெரபி, இம்யூனோதெரபி போன்ற உயிருக்கு ஆபத்தான அனைத்து சிகிச்சைகள், ஈரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகள், காம்ப்ளெக்ஸ் ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை போன்றவை மற்றும் தீக்காயம் பராமரிப்பு போன்ற பல சிகிச்சைகள் செய்துகொள்வதற்கும் அனுமதி கிடைக்கும்இத்துடன், விபத்துக்கான அவசரச் சிகிச்சைக்கும்  மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம்.
  5. மூத்த குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான கண்புரை சிகிச்சைக்கான வரம்பு ரூ.15,000 -லிருந்து ரூ.20,000 உயர்த்தப்பட்டுள்ளது. கர்ப்பப்பை அகற்றுவதற்கு ரூ.40,000 வரையும் மருத்துவ உதவி உயர்த்தப்பட்டுள்ளது.

எந்த எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்?  
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்த திட்டத்தின் கீழ் புதுச்சேரி, திருவனந்தபுரம், டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைகள் உட்பட மொத்தம் 913 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். பட்டியலில் இடம் பெறாத மருத்துவமனைகளிலும் இதற்கான சிகிச்சைகளைப் பெற முடியும். 
இதற்காக செலுத்தும் மாதச் சந்தா எவ்வளவு?
யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் கம்பெனி இந்த திட்டத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஜூன் 2018 வரையான மாதச் சந்தா ரூ.150, ஜூலை 2018 முதல் மாதம் ரூ.350 வீதம் சந்தா தொகை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தில் அரசால் பிடித்தம் செய்யப்படும்.
தமிழக அரசு ஓய்வூதியதாரர் / குடும்ப ஓய்வூதியதாரர் அல்லாமல், உள்ளாட்சிகள், சட்டப்பூர்வ கழகங்கள் (Statutory Boards) தமிழக அரசு பொறுப்பேற்று நடத்தி வருகின்ற பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் ஓய்வூதியதாரர்களுக்கும் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இந்தத் திட்டத்தை நீட்டித்து அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு.
மேலும், இந்த திட்டத்தில் தன் நிறுவன நிதியிலிருந்து ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் வழங்கிவரும் மாநில அரசின் இதர நிறுவனங்களும் பங்கு பெறலாம். ஆனால், நிறுவனப் பங்குத் தொகையை நிறுவனமே செலுத்த வேண்டும் என்பது முக்கியம்.
***************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 27.07.2018