லுக் அவுட் நோட்டீஸ் பற்றி.......
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
லுக் அவுட் நோட்டீஸ் என்றால் என்ன?
இதனை ஆங்கிலத்தில் Look out Circular சொல்கிறார்கள். தமிழில் கவன ஈர்ப்பு சுற்றறிக்கை என்று அழகாக கூறப்படுகிறது. குற்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஒருவர் அல்லது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வருகின்ற ஒரு நபர் சொந்த நாட்டை விட்டு, வேறு நாட்டுக்கு சென்றுவிடாமல் இருப்பதற்காகவும், வெளிநாடுகளில் இருந்து நமது நாட்டுக்குள் ஊடுருவி விடாமல் இருப்பதற்காகவும் வெளியிடப்படுகின்ற ஒரு அறிக்கை ஆகும்.
யாரால் வெளியிடப்படுகிறது?
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடக்கின்ற ஒருவரின் நடவடிக்கைகளைப் பொறுத்து மத்திய அரசு ஆணையின்படி, அல்லது CBI என்று சொல்லப்படுகின்ற (Central Bureau of Investigation) மத்தியப் புலனாய்வுத் துறை தன் மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்ற கைதிகளின் நடவடிக்கைகளைப் பொறுத்து, இந்திய காவல்துறையால் வெளியிடப்படுகின்ற ஒரு அறிக்கை ஆகும்.
யாருக்கு இது அனுப்பி வைக்கப்படுகிறது?
இந்த அறிக்கையானது குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் நமது நாட்டை விட்டு வெளியில் தப்பிச் செல்ல முடியாதவாறு, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் பன்னாட்டு எல்லைச் சாவடிகள் செயல்படுகின்ற (Immigration Department) குடிவரவு துறை அதிகாரிகளுக்கும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
அந்த அறிக்கையில் என்ன விபரங்கள் இருக்கும்?
அந்த சுற்றறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட நபரது பெயர், புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட் விபரங்கள் இருக்கும். ஒரு வேளை குற்றம் சாட்டப்பட்ட நபர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முற்படுகையில் மேற்கண்ட அதிகாரிகளால் கைது செய்யப்படுவார்.
கவன ஈர்ப்பு சுற்றறிக்கை ஆயுள் காலம் எவ்வளவு?
இதனது ஆயுள்காலம் அறிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்து ஒரு ஆண்டு காலம் ஆகும். அதற்குப் பிறகு இது காலாவதி ஆகிவிடும். தேவை என்றால், மறுபடி பிறப்பிக்கப்படும்.
இந்த அறிக்கையை சம்பந்தப்பட்டவர் எதிர்க்க முடியுமா?
முடியும். தன்னைப்பற்றிய முழு விபரங்கள் மற்றும் நடவடிக்கைகளை குறிப்பிட்டு , வழக்கு தாக்கல் செய்து, உச்சநீதிமன்றத்தில் இந்த அறிக்கைக்கு தடை பெறலாம். ஆனால், வழக்கின் போக்கை கருத்தில் கொண்டு தான் விதித்த தடையை உச்சநீதிமன்றம் திரும்பப் பெறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில், வழக்கின் தன்மையைப் பொறுத்து, லுக் அவுட் நோட்டீஸிற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் முதலிலேயே மறுப்பதும் உண்டு.
************************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 27.05.2019