பிறக்கப் போகின்ற குழந்தை ஆணா? பெண்ணா?
பிறக்கப் போகின்ற குழந்தை ஆணா? பெண்ணா? என்று அறிந்து கொள்ளுகின்ற ஆசை அனைவருக்குமே
உண்டு. சில குடும்பத்தில் மட்டுமே என்ன குழந்தையாக இருந்தால் என்ன? நல்லபடியாக பிறந்தால் சரிதான் என்பார்கள். இப்போது என்ன குழந்தை பிறக்கப்போகிறது? என்பதை துல்லியமாக கண்டறிய ஸ்கேன் வசதி இருக்கிறது. அதனை பலரும் தவறாக பயன்படுத்துவதால்
நமது அரசாங்கம் அதற்கு தடைவிதித்துள்ளது.
முன்பெல்லாம்
என்ன குழந்தை பிறக்கப்போகிறது? என்பதை கண்டுபிடிக்க
நமது முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் சில அறிகுறிகளை கண்டுபிடித்து
வைத்திருந்தார்கள். தாய்மை அடைந்துள்ள பெண் மிகவும் அசதியாக இருந்தால், ஆண்குழந்தை பிறக்கும் என்பார்கள். மிகச் சாதாரணமாக இருந்தால் பெண்குழந்தை பிறக்கும் என்பார்கள். ஆனால், இவை நூற்றுக்கு நூறு அப்படியே பலிப்பதில்லை.
எனது நேரடி அனுபவம்
27 வருடங்களுக்கு
முன்னால், எனது மனைவி தாய்மை அடைந்திருந்த
போது எனக்கும் அந்த ஆவல் இருந்தது. அந்த காலகட்டத்தில்
எனது மனைவி மிகவும் களைப்பாகவே இருந்தார். அதனை வைத்து வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆண்குழந்தைதான்
பிறக்கும் என்றார்கள். அதன்படியே ஆண்குழந்தை பிறந்தது.
சீன அரசரது கல்லறையில் கிடைத்த அட்டவணை
அடுத்து எனது மனைவி தாய்மை அடைந்திருந்த போது, அப்போது வெளிவந்த (1991/1992) குமுதம் வார இதழில் ஒரு கட்டுரை அட்டவணையுடன் வெளியாகி இருந்தது. அந்த கட்டுரையில் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த அட்டவணையானது
ஒரு சீன அரசரின் கல்லறையில் இருந்து எடுக்கப்பட்டது என்றும், அந்த அரசர் இறந்து ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்றும், அந்த அட்டவணையில் குறிப்பிட்டுள்ள வயதுடைய பெண்கள் குறிப்பிட்டுள்ள மாதத்தில் கருத்தரித்தால்
இன்ன குழந்தைதான் பிறக்கும் என்றும் இந்த அட்டவணையின்படி பலருக்கு சோதித்துப் பார்த்ததில் 99% பெண்களுக்கு சரியாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சோதித்துப் பார்த்தேன், ஆச்சர்யம் அடைந்தேன்!
எனக்கும் அதனை சோதித்து பார்க்க ஆசையாக இருந்தது. எனக்கு அறிமுகமான பலரிடத்திலும் இந்த அட்டவணையைக் காட்டி சோதித்தேன். சரியாகவே இருந்தது. தாய்மை அடைந்திருந்த எனது மனைவிக்கு பெண்குழந்தை பிறக்கும் என்று அட்டவணை காட்டியது. அதன்படி எனக்கு இரண்டாவதாக பெண்குழந்தையே
பிறந்தது. எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. அட்டவணையை பத்திரப்படுத்தினேன்.
கிடைத்தது மீண்டும்
கடந்த சில நாட்களுக்கு முன்னர், வீட்டில் இருந்த பழைய புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தபோது
இந்த அட்டவணை மீண்டும் எனது கைகளில் கிடைத்தது. இந்த அட்டவணையின்படி
X என்பது ஆண்குழந்தை, O என்பது பெண்குழந்தை ஆகும்.
அட்டவணை தங்களது மேலான பார்வைக்காக.
***********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி – 18.10.2018