disalbe Right click

Showing posts with label இன்சூரன்ஸ். Show all posts
Showing posts with label இன்சூரன்ஸ். Show all posts

Thursday, September 27, 2018

விபத்துக் காப்பீடு பதினைந்து மடங்கு உயர்வு!

விபத்துக் காப்பீடு பதினைந்து மடங்கு உயர்வு!
தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகை பதினைந்து மடங்கு உயர்வு!
தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகையை, ஒரு லட்சத்திலிருந்து 15 லட்சம் ரூபாயாகக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் உயர்த்தி அறிவித்துள்ளது.
வாகன உரிமையாளர்களுக்கான குறைந்தபட்ச தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகையை, ஒரு லட்சத்திலிருந்து பதினைந்து லட்சம் ரூபாயாகக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் உயர்த்தி அறிவித்துள்ளது. சாலை விபத்தில் பாதிக்கப்படுகின்றவர்களுக்கு உதவும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது வரை கட்டாய தனி நபர் விபத்து பாலிசியின்படி, ஒரு வாகன உரிமையாளர் விபத்தில் இறந்தால், இரு சக்கர வாகன விபத்து என்றால், ஒரு லட்சம் ரூபாய், நான்கு சக்கர வாகன விபத்து என்றால், இரண்டு லட்சம் ரூபாய், இழப்பீடு தொகையை, இறந்தவருடைய வாரிசுகள் பெறலாம். இந்தத் திட்டம் கடந்த 2002 ஆகஸ்ட் மாதத்தில் அமலுக்கு வந்தது. அதற்கு முன்னால், எந்த இழப்பீட்டு தொகையும் விபத்தில் இறந்தவருக்கு கிடையாது.
ஆண்டு பிரிமியம் எவ்வளவு இனி கட்ட வேண்டும்?
ஆண்டு பிரிமியம் முன்னர் இரு சக்கர வாகனத்துக்கு 50 ரூபாயாகவும், நான்கு சக்கர வாகனத்துக்கு 100 ரூபாயாகவும் இருந்தது.தற்போது உயர்த்தப்பட்டுள்ள தனிநபர் விபத்து பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் 750 ரூபாயாகும்.
அதிக காப்பீட்டுத் தொகை
15 லட்சம் ரூபாய்க்கு மேல் காப்பீட்டுத் தொகையை விரும்புபவர்கள், அதிக தொகையிலான பிரீமியத்தை வாங்கிக்கொள்ளலாம் என்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (The Insurance Regulatory and Development Authority of India - IRDAI) அறிவித்துள்ளது.
பொதுமக்களின் கருத்து என்ன?
இது முக்கியமான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை என்றும், பாலிசிதாரர்கள் ஒருவேளை விபத்தில் காயமடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ, அவருக்கு அல்லது அவரின் குடும்பத்தினருக்கு ஒரு சிறந்த நிதி ஆதாரமாக இது அமையும் என்றும் பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தல்
சாலை விபத்து தொடர்பான வழக்கு ஒன்றை, கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது.
அது தனது தீர்ப்பில், தானாக யாரும் காயத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை; "கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையால்தான், விபத்து ஏற்படுகிறது. இறப்பதற்கும் முன்வருவதில்லை. வாகனங்களை ஓட்டும்போது, ஓட்டுநர் மற்றும் எதிர்தரப்பினர்களின் சிறிய தவறுகள், தடுமாற்றம் காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. வாகன உரிமையாளருக்கு ஏற்படும் உயிரிழப்பு, காயங்களால், அவர்களுடைய வாரிசுகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
தனி நபர் விபத்து காப்பீட்டுத் திட்டம், 15 ஆண்டுகளுக்கு முன், நடைமுறைக்கு வந்தது. அந்த நேரத்தில், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது, போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனால், தற்போது, மருத்துவ சிகிச்சை செலவு அதிகமாகிவிட்டது. வாகன விபத்துகளால் உயிரிழப்பு, படுகாயங்கள் ஏற்படும்போது பாதிக்கப்படுவது, வாகன ஓட்டிகளும் அவர்களின் வாரிசுகளும்தான். அவர்களின் குடும்பம் மொத்தமும் முடங்கிப் போய்விடுகிறது.
வாகனம் ஓட்டுபவரின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்தில், மூன்றாம் நபர் உயிரிழந்தாலோ, படுகாயம் ஏற்பட்டாலோ, அவரின் குடும்பத்துக்கு, காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து போதிய இழப்பீடு கிடைக்கும். அதுவே, வாகன உரிமையாளரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டு, உயிரிழந்தாலோ, காயம் அடைந்தாலோ, காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு அவர்களுக்கு கிடைக்காது; இது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
எனவே, அதிகரிக்கும் மருத்துவ சிகிச்சை செலவு, அன்றாட வாழ்க்கை செலவு உயர்வின் அடிப்படையில், கட்டாய தனிநபர் விபத்து பாலிசி தொகையினை, 15 லட்சத்துக்கும் குறையாமல் உயர்த்த வேண்டும்" எனக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்துக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 27.09.2018 

Wednesday, November 22, 2017

வாகன காப்பீடு

சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு அவசியமானது. வாகன காப்பீடு, அதன் அவசியம், பயன்கள் உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். மேலும், வாகனக் காப்பீட்டில் இருக்கும் சில முக்கிய தகவல்கள் மற்றும் இழப்பீடு கோருவதற்கான முறைகளையும் பார்க்கலாம்.
வாகன காப்பீட்டு திட்டத்தின் கால அளவு?
பொதுவாக, மோட்டார் வாகன இன்ஸ்யூரன்ஸ் பாலிசிகள் ஓர் ஆண்டு செல்லத்தக்க கால அளவை கொண்டிருக்கும். ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
வாகன காப்பீட்டு திட்டத்தின் வகைகள் என்ன?
இரண்டு வகையான வாகன காப்பீட்டு திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. முதலாவது, மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம், இரண்டாவது, ஒருங்கிணைந்த வாகன காப்பீட்டுத் திட்டம். இதில், மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம் அவசியமானது. ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டமானது ஒட்டுமொத்த இழப்பீடுகளை பெற வழி வகை உள்ளதால் அவசர சமயங்களில் மிகுந்த உதவிகரமாக இருக்கும்
பிரிமியம் தொகையை நிர்ணயிக்கும் காரணிகள்?
எஞ்சினின் சிசி எனப்படும் கியூபிக் திறன் வாகனத்தின் வயது பகுதி வாகன மாடல் ஐடிவி எனப்படும் காப்புத் தொகை மதிப்பு
மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?
வாகனங்களால் எதிரில் வருபவர்க்கும், பொருட்களுக்கும் இழப்பீடு கோரும் காப்பீட்டு திட்டத்துக்கு மூன்றாம் நபர் காப்பீடு எனப்படுகிறது. இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் பாலிசிதாரரால் மூன்றாம் நபருக்கு ஏற்படும் நிரந்தர ஊனம், இறப்பு மற்றும் பொருட்சேதங்களுக்கு இழப்பீடு வழங்க இயலும். உங்களது வாகனத்தால் ஏற்படும் எதிரில் வருபவர்களுக்கும், பொருட்களுக்கும் ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கும் இழப்பீடு கோர முடியும். ஆனால், பாலிசிதாரரின் வாகனத்திற்கும், அவருக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு கிடைக்காது. மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தில் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.7.5 லட்சம் வரையிலும், இருசக்கர வாகனங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் வரையிலும் இழப்பீடு கோர முடியும்.
ஒருங்கிணைந்த வாகன காப்பீட்டு திட்டம்
மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தைவிட கூடுதல் பயனளிக்கும் திட்டம் இது. மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தில் கிடைக்கும் பணப் பாதுகாப்பையும் சேர்த்து உங்களது வாகனத்திற்கு விபத்து, தீ விபத்து, வெள்ளம், நில நடுக்கம், வன்முறை சம்பவங்கள் போன்றவற்றால் ஏற்படும் திடீர் பாதிப்புகளுக்கு இந்த ஒருங்கிணைந்த வாகன காப்பீட்டு திட்டத்தின் மூலம் பணப் பாதுகாப்பை பெற முடியும். இதுதவிர, காரின் மியூசிக் சிஸ்டம், ஏசி உள்ளிட்ட ஆக்சஸெரீஸ்களுக்கும் காப்பீடு செய்துகொள்ள முடியும். இதற்காக, கூடுதல் பிரிமியம் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
நோ கிளெய்ம் போனஸின்(NCB)
நோ கிளெய்ம் போனஸின்(NCB) பயன்கள் என்ன?
பாலிசியின் ஓர் ஆண்டு காலத்தில் இழப்பீடு கோரவில்லையெனில், புதுப்பிக்கும்போது வழங்கப்படும் தள்ளுபடிதான் நோ கிளெய்ம் போனஸ் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து பாலிசி புதுப்பித்துக் கொண்டே வரும்போது அதிகபட்சமாக 50 சதவீதம் வரை நோ கிளெய்ம் போனஸ் எனப்படும் தள்ளுபடியை ஒரு பாலிசியில் பெறலாம். அதன் விபரத்தை கீழே காணலாம்.
நோ கிளெய்ம் போனஸ் தள்ளுபடி விபரம்
முதல் ஆண்டு பாலிசியில் இழப்பீடு கோராதபட்சத்தில் புதுப்பிக்கும்போது 20 சதவீத தள்ளுபடி தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு இழப்பீடு கோராதபட்சத்தில் 25 சதவீதம் தள்ளுபடி தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு இழப்பீடு கோராதபட்சத்தில் 35 சதவீத தள்ளுபடி தொடர்ந்து நான்காண்டுகளுக்கு இழப்பீடு கோராதபட்சத்தில் 45 சதவீத தள்ளுபடி தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு இழப்பீடு கோராதபட்சத்தில் 50 சதவீத தள்ளுபடி
வாகன பழுது காப்பீட்டு திட்டம்
விபத்து, இயற்கை சீற்றங்களை தவிர்த்து வாகனங்களில் திடீரென ஏற்படும் பழுது மற்றும் தேய்மான பாகங்களை மாற்றித் தரும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்கு பணப் பாதுகாப்பு தரும் காப்பீட்டு திட்டம் இது. இதில், வாகனத்தில் ஏற்படும் திடீர் பழுது மற்றும் தேய்மான பாகங்களுக்கான காப்பீட்டு ஆகியவற்றை தனித்தனியாகவும் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் அனைத்து பழுது மற்றும தேய்மான பாகங்களுக்கான இழப்பீட்டை இந்த திட்டங்கள் மூலம் பெறலாம்.
இழப்பீடு கோரும் முறைகள்
வாகன காப்பீட்டு திட்டத்தின் மூலம் இழப்பீடு கோரும்போது முறையான ஆவணங்களுடன் காப்பீட்டு நிறுவனத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். காப்பீட்டு ஆவணம், வாகனத்தின் பதிவு சான்று, விபத்தின்போது ஓட்டியவரின் ஓட்டுனர் உரிமம், பாதிப்புகளின் விபரம் குறித்து சர்வீஸ் மையத்திலிருந்து எவ்வளவு செலவாகும் என்று அளிக்கப்படும் ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
மதிப்பீட்டாளர் ஆய்வு
ஆவணங்கள் சமர்ப்பித்த பின்னர் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் ஒருவர் வாகனம் மற்றும் இதர பாதிப்புகள், சேதாரங்களை மதிப்பீடு செய்வார். சர்வீஸ் மையத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் இழப்பீடுக்கான தொகை சரியாக உள்ளதா என்பதையும் ஒப்பிட்டு பார்த்து காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிப்பார். அதன்பிறகே, வாகனத்தை சரி செய்ய முடியும். வாகனத்தை சரிசெய்த பின்னர் சர்வீஸ் மையத்திலிருந்து வழங்கப்படும் ஒரிஜினல் ரசீதுகளை காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்பிக்க வேண்டும். காரை டெலிவிரி எடுக்கும்போது மீண்டும் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் இழப்பீடு கோரிய பாகங்கள் மாற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வார்.
திருடு போனால்
கார் திருடுபோகும் பட்சத்தில், அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிப்பதோடு, காப்பீட்டு நிறுவனத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், கார் திருடுபோகும்போது அதற்கான இழப்பீட்டை உடனடியாக பெற இயலாது. காரை கண்டுபிடித்து தருவதற்கு காவல் நிலையத்தில் குறிப்பிட்ட கால அவகாசம் கேட்பார்கள். அந்த கால அளவை தாண்டிய பின்னரே காரை கண்டுபிடித்து தர முடியவில்லை என்று சான்று வழங்குவார்கள். அந்த சான்றையும், வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து ஒரு சான்றையும் பெற்று காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதாரம் : வட்டாரப் போக்குவரத்து கழகம்