காவல்துறை அலுவலர் புலனாய்வு செய்வதற்கான நடைமுறை
ஒரு குற்றம் நடைபெற்றுள்ளது என்று உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்தால், அந்தப் புகாரினை ஏற்றுக்கொண்டு முதலில் அவருக்கு காவல்துறை அலுவலர் CSR (Community Service Register) எனப்ப்டுகின்ற “மனு ஏற்புச் சான்றிதழ்” அளிக்க வேண்டும்.
கைது செய்யப்படக் கூடிய குற்றமாக இருந்தால்...
அந்தப் புகாரின்படி கைது செய்யப்படக்கூடிய குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிய வந்தாலோ அல்லது ஒரு காவல் அலுவலர்க்கு தானாகவே தெரிய வந்தாலோ குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 154ன்படி, அவர் முதலில் முதல் தகவல் அறிக்கை தயார் செய்ய வேண்டும்.
அந்தப் புகாரின்படி ஒன்றுக்கு மேற்பட்ட குற்றங்கள் நடந்திருப்பது தெரிய வந்து, அவற்றுள் ஏதேனும் ஒன்று கைது செய்யப்படக்கூடிய குற்றம் என்றால், அந்த வழக்கை கைது செய்யப்படக்கூடிய குற்ற வழக்காக குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 155(4)ன்படி, காவல்துறை அலுவலர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீதிமன்ற உத்தரவு தேவையில்லை
கைது செய்யப்படக்கூடிய குற்றம் என்றால், நீதிமன்ற நடுவரின் உத்தரவு இல்லாமலேயே, குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 156(1)ன்படி, காவல்துறை அலுவலர், அந்த வழக்கை புலனாய்வு செய்யலாம்.
அவசியம் ஏற்பட்டால், நடுவரின் அனுமதியின்றி குற்றவாளிகளை கைது செய்யவும் விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.
புலனாய்வு செய்வதற்கு அதிகாரம் அளிக்கப்படாத ஒரு காவல் அலுவலர் இந்த வழக்கை புலனாய்வு செய்துள்ளார். எனவே அதனை ஏற்கக்கூடாது! என்று அந்தக் காவலர் எடுத்த எந்த ஒரு நடவடிக்கையையும் குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 156(2)ன்படி யாரும் ஆட்சேபிக்க முடியாது.
நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்
கொடுக்கப்பட்ட புகாரின் மூலமாகவோ அல்லது விசாரணையில் கிடைத்த தகவல் மூலமாகவோ கைது செய்யப்பட வேண்டிய குற்றம் ஒன்று நடைபெற்று உள்ளது என்று அந்த வழக்கை புலனாய்வு செய்கின்ற அலுவலருக்கு சந்தேகிக்க காரணம் இருந்தால், குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 157(1)ன்படி அதற்குரிய நீதிமன்ற நடுவருக்கு உடனடியாக அவர் அது பற்றிய அறிக்கையினை அனுப்ப வேண்டும்.
அந்த அறிக்கையினை அவர் தனக்கு மேலுள்ள அதிகாரியின் மூலம் குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 158(1)ன்படி நடுவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலதிகாரி அந்த வழக்கு சம்பந்தமாக சில அறிவுரைகளை விசாரணை அதிகாரிக்கு வழங்கலாம். அந்த அறிவுறுத்தல்களை குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 158(2) அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
சாட்சிகளை விசாரிக்க....
அந்த வழக்கு சம்பந்தமாக யாரையேனும் விசாரிக்க வேண்டியது இருந்தால், அந்த விசாரணை அலுவலர் குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 160ன்படி சம்மன் அனுப்பி காவல்நிலையத்தில் ஆஜராக உத்தரவிடலாம். சம்மன் பெற்றவர் அந்த உத்தரவுக்கு கட்டுப்பட்டு காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும்.
சாட்சிகளில் பெண்கள் இருந்தாலோ அல்லது 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களாக இருந்தாலோ அவர்களை காவல்நிலையத்திற்கு அழைக்காமல், அவர்கள் குடி இருக்கும் இடத்திற்கே சென்று விசாரிக்க வேண்டும்.
கையெழுத்து போட தேவையில்லை
சாட்சிகளை விசாரிக்கும் அலுவலர் வழக்கு சம்பந்தமான விசாரணையில் சாட்சிகள் ஒவ்வொருவரும் கூறிக்கொள்வதை குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 161ன்படி எழுதிக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு எழுதிக் கொள்ளும் அறிக்கையில் குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 162ன்படி சாட்சிகள் கையெழுத்து போடக்கூடாது.
புலனாய்வு செய்யத் தேவையில்லை என்றால்...
வழக்கு சம்பந்தமாக காவல் அலுவலர் ஒருவர் புலன் விசாரணை செய்ததில், குற்றம் நடைபெற்றதற்கான போதுமான காரணங்கள் இல்லையென்பது தெரிய வந்தால், குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 157(2)ன்படி, புகார் அளித்தவருக்கு அதனை எழுத்து மூலமாக அவர் தெரிவிக்க வேண்டும்.
காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்...
மேற்கண்டவாறு காவல்துறையினர் கைது செய்யப்படக்கூடிய புகார் ஒன்றில் நடவடிக்கை எதுவும் எடுக்காத பட்சத்தில், மனுதாரர் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 156(3)ன் கீழ், நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம்.
கோர்ட் டைரக்ஷன்
அந்த குற்ற வழக்கினைப் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றமானது குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 190-ன்படி, உத்தரவிட முடியும்.
புலன் விசாரணையை முடித்த பிறகு
புலனாய்வை முடித்த பிறகு நீதிமன்ற நடுவருக்கு விசாரணை அதிகாரி குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173(2)ன் கீழ், விரிவான அறிக்கை அனுப்ப வேண்டும்.
************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி