disalbe Right click

Showing posts with label இந்து வாரிசுரிமைச் சட்டம். Show all posts
Showing posts with label இந்து வாரிசுரிமைச் சட்டம். Show all posts

Tuesday, December 18, 2018

வாரிசுரிமை வழக்கின் தீர்ப்பு

வாரிசுரிமை வழக்கின் தீர்ப்பு 
தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்ற ஒரு இந்துப் பெண்ணிற்கு குழந்தைகள் எதுவும் இல்லாமல் இருந்து, அந்த பெண் இறந்துவிட்ட நிலையில், அந்த சொத்துக்களை பெறுவதற்கு இந்து வாரிசுரிமை சட்டப்படி கணவருக்கு உரிமை உள்ளதா? அல்லது அந்த சொத்துக்கள் அந்த பெண்ணின் தந்தை வழி வாரிசுகளுக்கு சென்றடைய வேண்டுமா?
இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 15
இந்துப் பெண்ணின் வாரிசு பற்றிய பொதுவிதிகள்
பிரிவு 15(1)ன்படி உயில் எழுதாமல் இறந்து போன இந்துப் பெண் ஒருவரின் சொத்தை, பிரிவு 16 ன் குறிப்பிட்டபடி கீழ்க்கண்ட வாரிசுகள் அடைவார்கள்.
1. முதலாவதாக இறந்த பெண்ணின் மகன்கள் மற்றும் மகள்கள் (முன்னதாக இறந்து போன மகனின் அல்லது மகளின் குழந்தைகள் உட்பட) கணவனும் அடைவார்கள்.
2. இரண்டாவதாக கணவனின் வாரிசுகள் அடைவார்கள்
3. மூன்றாவதாக தாயும், தந்தையும் அடைவார்கள்
4. நான்காவதாக தந்தையின் வாரிசுகள் அடைவார்கள்
5. கடைசியாக தாயின் வாரிசுகள் அடைவார்கள்
பிரிவு 15(2)ன்படி பிரிவு 15(1) ல் என்ன கூறியிருந்தபோதிலும்,
இந்துப் பெண் ஒருவர் தன்னுடைய தந்தை அல்லது தாயின் வாரிசு என்ற முறையில் அடைந்த சொத்துக்களை, அவளுக்கு மகனோ அல்லது மகளோ (முன்னதாக இறந்து போன மகனின் அல்லது மகளின் குழந்தைகள் உள்ளடங்கலாக) இல்லாதபோது, உட்பிரிவு 15(1)ல் குறிப்பிட்டுள்ள மற்ற வாரிசுகளுக்கு பொருந்தாது. ஆனால் தந்தையின் வாரிசுகளுக்கு பொருந்தும்.
அதேபோல் இந்துப் பெண் ஒருவர் தன்னுடைய கணவன் அல்லது மாமனாரின் வாரிசு என்ற முறையில் அடைந்த சொத்துக்களை, அவளுக்கு மகனோ அல்லது மகளோ (முன்னதாக இறந்து போன மகனின் அல்லது மகளின் குழந்தைகள் உள்ளடங்கலாக) இல்லாதபோது, உட்பிரிவு 15(1)ல் கூறப்பட்டுள்ள வாரிசுகள் அடைய மாட்டார்கள். அவளது கணவனின் வாரிசுகள் அடைவார்கள்.
இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 16
ஒரு இந்துப் பெண்ணிற்குள்ள வாரிசுகளுக்கிடையே சொத்துக்கள் எப்படி பிரிக்கப்பட வேண்டும்? 
மேலே கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தை தெளிவாக படித்துப் பார்த்தால், இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 15(2) யை, பிரிவு 16 எந்த வகையிலும் கட்டுப்படுத்துவதில்லை. பிரிவுகள் 15(1) மற்றும் 15(2) ஆகியவற்றை படித்து பார்க்கும் பொழுது பிரிவு 15(2) ஒரு விதிவிலக்கான சட்டப் பிரிவாக அமைந்துள்ளது தெரிய வரும். தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்றிருக்கும் ஒரு இந்துப் பெண் இறந்துவிடும் நிலையில், அந்த சொத்துக்களை எவ்வாறு பிரித்தளிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒரு மாறுபட்ட நடைமுறை பிரிவு 15(2) ல் கூறப்பட்டுள்ளது.
வாரிசுரிமை அடிப்படையில் தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்ற ஒரு இந்துப் பெண்ணிற்கு குழந்தைகள் எதுவும் இல்லாமல் இருந்தால், அந்த பெண் இறந்ததற்கு பின்னர், அந்த பெண்ணின் தந்தையுடைய வாரிசுகளுக்கு தான் அந்த சொத்துக்கள் சென்றடையும். மாறாக அந்த சொத்து இறந்து போன பெண்ணின் கணவருக்கு சென்றடையாது.
இது குறித்து உச்சநீதிமன்றத்தில்
இராதிகா Vs அக்னுராம் மாத்தோ (1994-5-SCC-761) மற்றும் 
பகவத் ராம் Vs தேஜ் சிங் (1999-2-LW-520)” ஆகிய வழக்குகளில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.
எனவே ஒரு இந்துப் பெண் தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்ற அனுபவித்து வரும் நிலையில் குழந்தைகள் ஏதும் இல்லாமல் இறந்து போனால், மேற்படி சொத்துகள் இந்து வாரிசுரிமை சட்டப்படி அந்த இறந்து போன பெண்ணின் தந்தை வழி வாரிசுகளுக்கு தான் சென்றடையும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
நன்றி..முகநூல் நண்பர் திரு எஸ்.முருகேசன் அவர்கள்

Friday, April 13, 2018

மதம் மாறினால் வாரிசு உரிமை என்னாகும்?

முடியும், ஆனால் முடியாது!
இந்துவாக இருக்கின்ற ஒருவர் கிறிஸ்துவ மதத்திற்கோ, முஸ்லீம் மதத்திற்கோ மாறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது தந்தையின் சொத்தில் அவருக்கு கண்டிப்பாக பங்கு உண்டு. ஆனால், அவரது பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் பங்கு கிடையாது. 
இந்து வாரிசுரிமைச் சட்டம், பிரிவு-26
மேற்கண்ட குழப்பங்களுக்கு இந்து வாரிசுரிமைச் சட்டம், பிரிவு - 26 தீர்வு தருகிறது.  இந்து மதத்தைச் சேர்ந்த தகப்பனார் ஒருவர் இறந்து போனால், அவரது வாரிசான அவரது மகனுக்கு அல்லது மகளுக்கு   (அந்த மகன்/மகள் மதம் மாறி இருந்தாலும்) அவரது சொத்துக்கள் சேரும்.  அதோடு வாரிசுரிமை ஒரு முடிவுக்கு வந்துவிடும். மகனின் மகன்களுக்கு அதாவது பேரன்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது.
தந்தை இறப்புக்கு முன்னரே மகன்/மகள் இறந்திருந்தால்?
தந்தையார் உயிரோடு இருக்கிறார். அவருக்கு முன்னரே மதம் மாறிய அவரது மகன்/மகள் இறந்துவிட்டார். ஆனால், மகனின்  மகன் மகள் அல்லது மகளின் மகன் மகள்  அதாவது பேரன் பேத்தி உயிரோடு இருக்கிறார். இந்த நிலையில் தாத்தா இறந்து விடுகிறார். தாத்தாவின் சொத்தில் மதம் மாறிய தந்தைக்கு வரவேண்டிய பங்கு, மேற்கண்ட எந்த பேரனுக்கும் எந்த பேத்திக்கும் கிடைக்காது. 
சுருக்கமானச் சொல்வதென்றால், இறந்து போன ஒரு இந்துவின் சொத்துக்களை நேரடியான அவரது வாரிசுகள் அடைந்து கொள்ளலாம். அவர்கள் எந்த மதத்திற்கு மாறியிருந்தாலும் சரி. ஆனால், மதம் மாறிய வாரிசின் வாரிசுகளுக்கு அந்த உரிமை ரத்தாகிறது. இதுவே  இந்து வாரிசுரிமைச் சட்டம், பிரிவு - 26 தருகின்ற  தீர்வாகும்.
E. ரமேஷ் மற்றும் ஒருவர் Vs P. ரஜினி மற்றும் இருவர் (2002-MLJ-216)" என்ற வழக்கில், ஜாதிக் குறைபாடுகளை போக்கும் சட்டத்தின் பிரிவு 1ன்படி, ஒரு இந்து மற்றொரு மதத்திற்கு மாறுவதால், அவருக்கு தனது சொத்தை இழந்து விடுவார் என்பது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே  தீர்ப்பளித்துள்ளது
***************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 13.04.2018 

Friday, April 6, 2018

மருமகளுக்கு சொத்தில் பங்கு

கணவனை இழந்த ஒரு வயதான பெண்மணி. சுயசம்பாத்தியத்தில் அவருக்கென்று பல சொத்துக்கள் இருக்கிறது.  அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். துரதிருஷ்டவசமாக மகன் இறந்துவிடுகிறார். மருமகள் விதவை ஆகிறார். மகனுக்கென்று குழந்தைகள் இல்லை. இந்த சூழ்நிலையில்  எதிர்பாராவிதமாக அந்தப் பெண்மணியும் இறந்துவிடுகிறார். தான் சம்பாதித்து தனது பெயரில் வைத்துள்ள சொத்துகள் யார் யாருக்கு சேரவேண்டும் என்று எந்த ஒரு முன்னேற்பாடும் அந்தப் பெண்மணி செய்து வைக்கவில்லை. 
எனக்கும் பங்கு இருக்கிறது!
எனது கணவர் உயிரோடு இருந்தால் அவருக்கு சொத்தில் பங்கு கொடுப்பீர்கள்தானே! நான் அவருடைய வாரிசு என்பதால் எனக்கும் அந்த சொத்தில் உரிமை இருக்கிறது. அந்த சொத்தினை மூன்று சமபங்காக போட்டு, எனக்கு ஒரு பங்கு தர வேண்டும் என்று இறந்துபோன பெண்ணின் மருமகள் கேட்கிறார். கேட்பவர்களுக்கு இது நியாயந்தானே! என்று தோன்றும்.
சொத்து எங்களுக்கு மட்டும்தான்! 
இறந்துபோன பெண்ணின் மகள்கள் இருவரும், எங்கள் அம்மா பெயரில் இருக்கின்ற சொத்துக்கள் அனைத்தும் எங்களுக்கே சொந்தம் என்று தங்களது அண்ணனின் மனைவிக்கு பங்குதர மறுக்கிறார்கள். இது அநியாயம், அந்தப் பெண்ணிற்கு ஒரு பங்கு கொடுத்தால் என்ன? அவருடைய கணவன் பங்கைத்தானே அவர் கேட்கிறார் என்று நமக்குத் தோன்றும். பிரச்சனை தீர ஊர் பெரியவர்கள் இறந்து போன பெண்ணின் மகள்களிடம்  பேசிப் பார்க்கிறார்கள். அவர்கள் ஒரே பிடிவாதமாக பங்கு தர மறுக்கிறார்கள். இந்த வழக்கு கோர்ட்டுக்குச் செல்கிறது. நீதிமன்றம் அந்த விதவை மருமகளுக்கு, மாமியாரின் சொத்தில் பங்கு இல்லை என்று தீர்ப்பளித்தது. 
சட்டத்தின் கொடுமை இது!
இதை கேட்பதற்கே நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா? தனது பெற்றோரை, உடன் பிறந்தோரை, பழகிய பக்கத்து வீட்டு நண்பர்களை, சொந்த பந்தங்களை எல்லாம் விட்டுவிட்டு கணவனை மட்டுமே நம்பி, வாழ வந்த ஒரு பெண்ணுக்கு, கணவன் இறந்து போய்விட்ட சூழ்நிலையில் அவரது கணவனுக்கு உரிமையுள்ள சொத்தும் இல்லை என்றால், இது மிக மிக அநியாயமாக அல்லவா இருக்கிறது! 
சட்டம் என்ன சொல்கிறது?
மேற்கண்டது போல சுய சம்பாத்திய சொத்துக்கள் கொண்ட பெண் ஒருவர், அந்த சொத்துக்கள் குறித்து முன்னேற்பாடாக ஏதும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால், அந்த சொத்துக்கள் அவரது வாரிசுகளான, கணவர், மகன்கள், மகள்கள் ஆகியோருக்குச் சேரும் என்றும், ஒருவேளை மகனோ அல்லது மகளோ ஏற்கனவே இறந்துபோயிருந்தால் அவர்களது குழந்தைகளுக்குச் சேரும் என்று சட்டம் சொல்கிறது. மகனின் மனைவிக்கோ, மகளின் கணவனுக்கோ அந்த சொத்து சேராது. 
குறிப்பு: இந்த வழக்கு சம்பந்தமான விபரங்களை PROPERTY RIGHTS என்ற தலைப்பில் மரியாதைக்குரிய வழக்கறிஞர் திரு  த.இராமலிங்கம் அவர்கள் பேசி You Tube ல் பதிவு செய்துள்ள  வீடியோவில் இருந்து தெரிந்து கொண்டேன். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.04.2018 

Saturday, November 4, 2017

ஒரு பெண்ணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்


ஒரு பெண்ணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில்  அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்டப்படி  யாருக்குப் போய்ச் சேரும்?
கோமதி என்பவர் திடீரென்று இறந்துவிடுகிறார்! என்று வைத்துக் கொள்வோம். அவரது சுயசம்பாத்தியமாக அவரது வங்கிக் கணக்கில் 12 லட்ச ரூபாய் இருக்கிறது.  இந்த பணத்திற்கு கோமதியின் கணவன் , மகன், மகள் ஆகியோர்கள் முதல் நிலை வாரிசுதாரர்கள் ஆவார்கள். வங்கியில் உள்ள 12 லட்ச ரூபாயை மூன்று சமபங்காக பிரித்து ஒவ்வொருவருக்கும் 4 லட்ச ரூபாய் வீதம் கொடுக்க வேண்டும். 
கோமதியின்  மகன்  இறந்து போயிருந்தால்?
கோமதியின் மகன் கோமதி  இறப்பதற்கு முன்னாலேயே இறந்துவிட்டால், அந்த மகனின் பிள்ளைகளுக்கு அவரது பங்கான ரூபாய் 4 லட்சம் மட்டும் சரிசமமாக பிரித்துக் கொடுக்கப்படும். 
கோமதியின் மகள்  இறந்து போயிருந்தால்?
கோமதியின் மகள் கோமதி இறப்பதற்கு முன்னாலேயே இறந்துவிட்டால், அந்த மகளின் பிள்ளைகளுக்கு ரூபாய் 4 லட்சம் சரிசமமாக பிரித்துக் கொடுக்கப்படும். 
கோமதியின் கணவன் இறந்து போயிருந்து, குழந்தைகளும் இல்லாமல் இருந்தால்?
கோமதி இறப்பதற்கு முன்னாலேயே கோமதியின் கணவனும் இறந்து போயிருந்து, குழந்தைகளும் இல்லை என்றால், (இரண்டாம் நிலை வாரிசுதாரர்களான) கோமதியின் கணவனது வாரிசுதாரர்களுக்கு ரூ.12 லட்ச ரூபாய் சரிசமமாக பங்கிட்டு கொடுக்கப்படும்.
கணவனது வாரிசுதாரர்களும் இல்லையென்றால்?
கோமதியின் கணவனது வாரிசுதாரர்களும் இல்லையென்றால், (மூன்றாம் நிலை வாரிசுதாரர்களான)  கோமதியின் பெற்றோர்களுக்கு ரூ.12 லட்சம் போய்ச் சேரும்.
கோமதியின் பெற்றோர்களும் இல்லை என்றால்?
கோமதியின் பெற்றோர்களும் உயிருடன் இல்லை என்றால், அந்த பெற்றோர்களுடைய வாரிசுகளுக்கு ரூ.12 லட்சம் போய்ச் சேரும்.
கோமதியின் தந்தைக்கு இரண்டு மனைவிகள் என்றால்?
கோமதியின் தந்தைக்கு இரண்டு மணைவிகள் என்றும், கோமதியின் தாயார் , கோமதியின் தந்தைக்கு மூத்த தாரம் என்றும் வைத்துக் கொள்வோம். கோமதியின் சித்தி (Stepmother) கோமதியின் தந்தைக்கு  முறைப்படி மனைவியாக ஆகியிருந்தாலும், அவரும், அவரது குழந்தைகளும் (Half blood sister & brothers)  கோமதியின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடியாது. கோமதியின் தாய் வயிற்றில் பிறந்த சகோதர, சகோதரிகளே (Full blood sister & brothers)   கோமதியின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடியும்.
கோமதியின் சொத்துக்களுக்கு முதல் கணவர் உரிமை கொண்டாட முடியுமா?
கோமதி தனது முதல் கணவரை விட்டு முறைப்படி விவாகரத்து செய்து விலகி வேறு திருமணம் செய்திருந்தாலும்,  தனது சொத்துக்கள் பற்றி எதுவும் எழுதி வைக்காத நிலையில் அவர் இறந்துவிட்டால், கோமதியின் முதல் கணவரும், அவரது வாரிசுகளும் அந்த சொத்தில் உரிமை கொண்டாடலாம். இரண்டாவது கணவருக்கு உரிமை கிடையாது. ஆனால், இரண்டாவது கணவர் மூலமாக பிறந்த குழந்தைகளுக்கு அந்த சொத்தில் உரிமை உண்டு.
****************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

ஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்

ஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில்  அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்டப்படி  யாருக்குப் போய்ச் சேரும்?
கோபால் என்பவர் திடீரென்று இறந்துவிடுகிறார்! என்று வைத்துக் கொள்வோம். அவரது சுயசம்பாத்தியமாக அவரது வங்கிக் கணக்கில் 12 லட்ச ரூபாய் இருக்கிறது.  இந்த பணத்திற்கு கோபாலின் மனைவி, மகன், மகள் மற்றும் தாய் ஆகியோர்கள் முதல் நிலை வாரிசுதாரர்கள் ஆவார்கள். வங்கியில் உள்ள 12 லட்ச ரூபாயை நான்கு சமபங்காக பிரித்து ஒவ்வொருவருக்கும் 3 லட்ச ரூபாய் வீதம் கொடுக்க வேண்டும். கோபாலின் தந்தைக்கு பங்கு கிடையாது. அவர் இரண்டாம் நிலை வாரிசுதாரர் ஆவார்.
மகனின் சொத்துக்கள் தந்தைக்கு எப்போது கிடைக்கும்?
கோபாலுக்கு திருமணம் ஆகவில்லை, கோபால் இறப்பதற்கு முன்னாலேயே தாயும் இறந்துபோய்விட்டார் என்றால், அந்த 12 லட்ச ரூபாயும் நேரடியாக கோபாலின்  தந்தைக்கு போய்ச் சேரும்.
கோபாலின் மகன்  இறந்து போயிருந்தால்?
கோபாலின் மகன் கோபால் இறப்பதற்கு முன்னாலேயே இறந்துவிட்டால், அந்த மகனின் பிள்ளைகளுக்கு ரூபாய் 3 லட்சம் சரிசமமாக பிரித்துக் கொடுக்கப்படும். 
கோபாலின் மகள்  இறந்து போயிருந்தால்?
கோபாலின் மகன் கோபால் இறப்பதற்கு முன்னாலேயே இறந்துவிட்டால், அந்த மகளின் பிள்ளைகளுக்கு ரூபாய் 3 லட்சம் சரிசமமாக பிரித்துக் கொடுக்கப்படும். 
கோபாலின் தந்தையும் இறந்து போயிருந்தால்?
கோபால் இறப்பதற்கு முன்னாலேயே தந்தையும்  இறந்துபோய்விட்டார் என்றால், கோபால் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு ரூ.12 லட்ச ரூபாய் சரிசமமாக பங்கிட்டு கொடுக்கப்படும்.
****************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி