ஜி.எஸ்.டி விதிமீறல்… எவ்வளவு அபராதம்?
ஜி.எஸ்.டி வரிச் சட்டப்பிரிவு 122-ன்படி, 21 விதமான விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப் படுகிறது. குறைந்தபட்ச அபராதமாக 10,000 ரூபாயும், அதிகபட்ச அபராதமாக எவ்வளவு வரி இருக் கிறதோ அல்லது வரி ஏய்க்கப்பட்டிருக்கிறதோ, அது அதிகபட்ச வரியாக வசூலிக்கப்படும். இந்த அபராதம் சி.ஜி.எஸ்.டி மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி சட்டத்திலும் தனித்தனியாக வசூலிக்கப்படும்.
பொதுவாக, ஆரம்பக்காலத்தில் ஜி.எஸ்.டி-யில் அபராதமோ, தண்டனையோ பெரிதாக வழங்கப்பட வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், ஜி.எஸ்.டி சட்டப் பிரிவு 122-ன்படி, 22 வகையான விதிமீறல்களுக்கு அபராதத்தை விதிக்கும் அதிகாரத்தை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தரும்வகையில், சட்டம் வழி செய்து தந்திருக்கிறது.
அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு…
1. வரிதாரர், வரிக்கான இன்வாய்ஸ் (Tax Invoice) இல்லாமல், தவறான அல்லது உண்மைக்கு மாறான இன்வாய்ஸைத் தயாரித்திருத்தல்,
2. ஜி.எஸ்.டி சட்டப் பிரிவுகளுக்குப் புறம்பாக பொருளுக்கோ அல்லது சேவைக்கோ இன்வாய்ஸ் வழங்குதல்,
3. ஜி.எஸ்.டி வரியை வசூல் செய்து, அதனை அரசாங்கத்திடம் மூன்று மாத காலத்துக்குள் செலுத்தத் தவறுதல்,
4. ஜி.எஸ்.டி சட்டத்துக்குப் புறம்பாக வரி வசூல் செய்தல்,
5. பொருளையோ அல்லது சேவையையோ பெறாமல் உள்ளீட்டு வரியை எடுத்துக்கொள்ளுதல்.
6. அரசை ஏமாற்றுகிற முறையில் நடவடிக்கை இருத்தல்,
7. உள்ளீட்டு வரியை வரம்புக்கு மீறி எடுத்துக்கொள்ளுதல்,
8. கணக்குகளைத் திருத்துவது மற்றும் தவறான நிதிக் கணக்குகளை உள்சேர்த்தல்,
9. ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பதிவு செய்யாமல் இருத்தல்,
10. விற்பனையைக் குறைத்து கணக்கில் காண்பித்தல்,
11. கணக்குகளைச் சரியான முறையில் பராமரிக்காமல் இருத்தல்.
மேற்கண்ட செயல்களுக்கு ஜி.எஸ்.டி சட்டப் பிரிவின்படி, அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, வர்த்தகர்கள் இந்தப் பதினொரு விஷயங்களில் எந்தத் தவறும் செய்யாமல் இருப்பது நல்லது!
நன்றி : நாணயம் விகடன் - 01.10.2017