disalbe Right click

Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

Friday, February 9, 2018

கணவன் மனைவி கடைபிடிக்க வேண்டியவை

ஒரு மனமாக இணைந்து இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
உங்களது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டம் உங்களது இருவரின் மனத்திலும் இருக்கும். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், உங்களில் ஒருவரது திட்டம் ஒருவருக்கு(ம்) தெரியாமல் போய்விடக் கூடாது என்ற எண்னத்தில்தான் நான் இதனை எழுதுகிறேன். 
இதுவரை உங்களது பெற்றோரின் பின்னால் இருந்து செயலாற்றிக் கொண்டிருந்த உங்களுக்கு என்று ஒரு தலையாய பொறுப்பை இந்த சமூகம் வழங்கி இருக்கிறது. இனியும் மற்றவர்கள் உங்களுக்கு ஆலோசணை வழங்கலாம். ஆனால், நீங்கள் செய்யப் போகின்ற செயல்கள் ஒவ்வொன்றிற்கும் நீங்களே முழுப் பொறுப்பு என்பதை மறவாதீர்கள்.
என்ன செய்ய வேண்டும்?
1. உங்களது திருமணத்தை முதலில் பதிவு செய்யுங்கள்.
2. உங்கள் இருவருக்கும் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு ஆகியவை ஏற்கனவே இருக்கலாம். அதில் உள்ள முகவரியை இருவரும் முதலில் மாற்ற வேண்டியது முக்கியம். மனைவி தனது கணவன் பெயரை அதில் இணைப்பது முக்கியம்.
3. இருவருக்குமான குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
4. வங்கியில் உள்ள அக்கவுண்ட் மற்றும் நிதி சார்ந்த அக்கவுண்டையும் உங்களது இருவரின் பெயரிலும் ஏற்படுத்திக் கொள்வது நல்லது.,உங்கள் இருவரில் யார் வேண்டுமானாலும் அதனை ‘ஆபரேட்செய்யும்படி உருவாக்கிக் கொள்ளுங்கள்
5. வருமான வரி செலுத்துவதற்கென்றோ அல்லது வேறு காரணங்களுக்காக தனித்தனியாக வங்கி மற்றும் நிதி சார்ந்த கணக்குகளை நீங்கள் வைத்துக்கொண்டால், உங்கள் இருவரில் ஒருவர் மற்றொருவரை நாமினியாக தேர்வு செய்துகொள்ளலாம்
6. உங்களில் ஒருவரின் அக்கவுண்டை மற்றொருவர் பார்க்கும்படி இருப்பதும் மிகவும் முக்கியம். யூஸர் .டி. மற்றும் பாஸ்வேர்டையும்  உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தயவு செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
7. உங்களது மனைவி ஹவுஸ் ஒய்ஃப் என்றால், அவரை உங்களது  வங்கி  மற்றும் நிதி சார்ந்த அக்கவுண்ட் செயல்களைச் செய்ய வழிவகுத்து உற்சாகப்படுத்துங்கள். வீட்டிற்குத் தேவையான வேலைகளை அவர்களே முடிவெடுத்து செய்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்.  
8.  நிதி சார்ந்த முடிவுகள் ஒவ்வொன்றையும் நீங்கள் இருவரும் சேர்ந்து ஆலோசனை செய்து எடுங்கள். 
9. உங்களில் ஒருவர் தங்களுடைய சொந்தங்களுக்கோ, நண்பர்களுக்கோ கைமாற்றாக பணம் கொடுத்தாலோ அல்லது அவர்களிடம் இருந்து கைமாற்றாக பணம் பெற்றாலோ அதனை  ஒரு டயரியில் தேதிவாரியாக எழுதி வருவது அவசியம். புரோ நோட்டின் அடிப்படையில் கடன் ஏதேனும் மேற்கண்டவர்களுக்கு கொடுத்திருந்தாலோ அல்லது வாங்கியிருந்தாலோ அவற்றிற்கு நகல் எடுத்து அவற்றை முறைப்படி ஃபைல் செய்து வையுங்கள்.
10. பங்குகள் மற்றும் டெபாசிட் போன்ற முதலீடுகளை இருவர் பெயரிலும் ஜாயிண்டாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை தனித்தனியாக செய்திருந்தால், அந்த முதலீடு பற்றிய ஆவணங்களை ஃபைல் செய்வதோடு, உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் மறக்காமல்  தெரிவியுங்கள்.
11. உங்களது நிதி ஆலோசகர், ஆடிட்டர், வங்கி மேலாளர் மற்றும் நிதி சம்பந்தமான தொடர்புகளின் முகவரி மற்றும் எண்களை ஒரு பொதுவான டைரியில் குறித்து வைத்து அதனைப் பற்றி உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் தெரிவியுங்கள்.
12. உங்களது முதலீடுகள், கடன்கள்,  இன்ஷூரன்ஸ், வங்கி மற்றும் நிதி சார்ந்த அனைத்து பேப்பர் டாக்குமென்டுகளையும் ஒரே ஃபைலில் வைத்திருப்பதுபோல, உங்களது  கம்ப்யூட்டரிலும் ஒரே ஃபோல்டரில் போட்டு வைத்து அதனைப் பற்றி உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் தெரியப்படுத்துங்கள்.
13. கணவன் மனைவி ஆகிய நீங்கள் இருவரும் தனித்தனியாக கிரெடிட் கார்டு வைத்துக்கொள்ளுங்கள். இதனால், உங்கள் இருவருக்கும் சிபிலில் கிரெடிட் ஸ்கோர் தனித்தனியாக பதிவாகும். அன்றாட வாழ்க்கையில் நீங்கள் கடன் வாங்க வங்கிக்குச் செல்லும்போது இது மிக உதவியாக இருக்கும். ஒருவேளை எதிர்காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், உங்களது லைப் பார்ட்னருக்கு இது கண்டிப்பாக உதவும்.
14. உங்களுக்கென்று மனை வாங்கினாலும் வீடு வாங்கினாலும் உங்கள் இருவரது பெயரிலும் ஜாயின்டாக வாங்குவது நல்லது. இதனால், இருவரும் தனித்தனியே வரிச் சலுகை  பெற முடியும்
15. நீங்கள் பயன்படுத்தும் செல்போன் எண்ணை எக்காரணம் கொண்டும் மாற்றாதீர்கள். ஒருவரது செல்போன் எண்ணை மற்றவர் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
16. உங்களது பான் கார்டுவாக்காளர் அடையாள அட்டைபாஸ்போர்ட் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு அட்டை, குடும்ப அட்டை, சொத்துப் பத்திரங்கள் ஆகியவற்றை ஸ்கேன் செய்து உங்களது கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
17உங்களது பான் கார்டுவாக்காளர் அடையாள அட்டைபாஸ்போர்ட் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண், குடும்ப அட்டை எண் சொத்துப் பத்திரங்கள் ஆகியவற்றின் நகல்களையும்  தனியாக ஒரு பைலில் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.
வருங்காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மேற்கண்ட நடவடிக்கைகள் உங்களுக்கு அல்லது உங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 09.02.2018 

Monday, May 15, 2017

பெண்களின் சொத்துரிமையும், திருமண ஒப்பந்தங்களும்


பெண்களின் சொத்துரிமையும், திருமண ஒப்பந்தங்களும்

இன்று ஆணும் பெண்ணும் ஓரளவிற்கு மன முதிர்ச்சி அடைந்த பிறகே திருமணம் செய்து கொள்வதால், சமீப காலங்களாக, திருமணத்தை ஒரு ஒப்பந்தமாகப் பார்க்கும் பழக்கமும், அதன் அடிப்படையில் மேலை நாடுகளைப் போலவே, இந்தியாவிலும், திருமண ஒப்பந்தங்கள் போட்டுப் பதிவு செய்து கொள்வதும் புழக்கத்தில் வர ஆரம்பித்துவிட்ட்து. ஆகவே, சராசரி மக்களும் இது குறித்து அறிந்து கொள்வதும், இது பற்றிப் பேச வேண்டிய நேரமும் நெருங்கி விட்டது.திருமண ஒப்பந்தம் என்பது, திருமணத்திற்கு ஆகும் செலவு முதல், திருமணத்தின் பின், இணைந்து வாழும் தாம்பத்ய வாழ்க்கையில் ஆகும் செலவுகளும், ஒரு வேளை பிரிய நேர்ந்தால், எவருக்கு எந்த சொத்து உரிமையானது என்பது பற்றியும், ஒருவர் இறந்தால் அடுத்தவர் அந்த சொத்தை என்ன செய்ய வேண்டும் என்பது வரை திட்டமிட்டு, அதை ஒப்பந்தமாகப் பதிவு செய்வதும் ஆகும். இதில் ஆண் பெண் இருவரின் கடமைகளும், உரிமைகளும் இடம் பெறும்.
ஒப்பந்தம் தேவையா?
இந்தியாவில் இந்த வழக்கம் ஆரம்பித்திருக்கிறது என்றாலும், இங்கே, திருமணம் என்பது தனிப்பட்ட இரு நபர்களின் இணைவாகப் பார்க்கப்படாமல், குடும்ப இணைப்பாகவும், சமூக நிகழ்வாகவும் பார்க்கப்படுவதால், இது போன்ற திருமண ஒப்பந்தங்கள் போட்டுக் கொள்வதில் சிக்கித்தான் நிற்கிறது.
இந்திய வழக்கத்தில் இந்த ஒப்பந்த முறை வருமாயின், அதை எந்த அளவுக்கு அனுமதிக்கலாம், அப்படி அனுமதிக்கும் விசயங்களில் என்னென்ன மாறுதல்கள் தேவை அல்லது எவ்வெவற்றை நாம் சட்டபூர்வமாக மாற்ற வேண்டும் என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இஸ்லாமிய திருமணங்களில் அவை ஏற்கனவே ஒப்பந்தம் போலவே பாவிக்கப்படுகிறது. கிறித்தவர்களிடையேயும் ஓரளவிற்கு இதே நிலை. இந்து திருமணங்களில் தான் திருமணம் என்பது ஜன்ம பந்தம் என்பது போன்ற நம்பிக்கைகள் நிலவுவதால், அதை ஒட்டி எழுந்து, பின் மாற்றங்களுடன் உருவாக்கப்பட்ட இந்து சட்டங்கள்ஆனதால், திருமண ஒப்பந்தங்களுக்கு ஏற்ப தம்மை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது. அது மட்டுமன்றி, இந்து திருமண பந்த்த்தில் சாத்திரம் எனும் பெயரில் நிலவும் பாரபட்சமும் களையப்பட வேண்டி இருக்கிறது. அதற்கு இந்த ஒப்பந்தங்கள் ஓரளவுக்கு உதவுகின்றனதான்.
திருமணச் செலவுகள்
இந்திய திருமணத்தைப் பொருத்த வரையில், குறிப்பாக தமிழக இந்து திருமணத்தைப் பொருத்த வரையில், பெண்ணின் பெற்றோரே திருமணத்தின் முழு செலவையும் ஏற்கின்றனர்.அவளின் திருமண செலவானது, அந்த குடும்பத்தின் அந்தஸ்தை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. இங்கே திருமணச் செலவு என சொல்லப்படுவதில் அவளுக்கு தொகையாகவோ நகையாகவோ கொடுக்கப்படும் சொத்துக்கள் அல்லாமல், திருமணத்தை எந்த மண்டபத்தில் நடத்துவது, எத்தனை பேரை அழைப்பது, பத்திரிகை, உணவு, போன்றவற்றை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால், அது அந்த குடும்பத்தின் அந்தஸ்தைப் பிரதிபலிப்பதாகவே இருப்பதாக நினைக்கப்படுகிறது.பின் ஒரு நாளில், அந்த குடும்பத்தின், அதாவது அவளின் பெற்றோரின் சொத்தானது பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டால், குடும்ப அந்தஸ்துக்காக செலவழிக்கப்பட்ட தொகையும், அவளின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
உயில் எழுதாமல் பெற்றோர் இறந்தால்...?
உதாரணமாக ஒரு பெண், இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு குடும்பத்தில் இருக்கிறார்கள் எனில், பெற்றோர் இருவரும் உயில் எழுதாமல் இறந்திருந்தால், பெற்றோரின் சொத்து மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அதில் பெண்ணிற்கு ஏற்கனவே கொடுத்த தொகை மற்றும் நகை போன்றவற்றிற்கான தொகை பெண்ணின் கணக்கில் இருந்து கழிக்கப்பட்டு, அதன் பின் உள்ள தொகை பகிரப்பட வேண்டும். ஆனால், உண்மையில் அவளுக்கான தொகையில் , மொத்த குடும்பத்தின் அந்தஸ்திற்காக செலவழித்த தொகையும் அதாவது கல்யாண செலவும், கழிக்கப்படுகிறது. உண்மையில் அந்தத் தொகை அவள் கைக்கு வந்திருக்கவே இல்லை. அவள் கைக்கு வராத தொகை அவள் கணக்கில் இருந்தே எடுக்கப்படுகிறது. அது போலவே, அவளின் கைக்கு வராமலேயே, அவள் செலவாகவே, பிள்ளை பிறப்புச் செலவு, அந்த விசேசங்களுக்கு செலவழிக்கப்படும் தொகையும். புது குடும்பம்:
மனைவியின் பங்கு...?
அதே போல, உயில் ஏதும் எழுதாமல், ஒருவன் இறந்துவிட்டால், அவனின் சொத்தானது, அவனது மனைவிக்கும், குழந்தைகளுக்கும் சம பாகங்களாக பிரித்துக் கொடுக்கப்படும். மனைவியும், இரு பிள்ளைகளும் இருந்தால், மொத்த சொத்தும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒரு பங்கு மனைவிக்கு வரும்.உண்மையில் அந்த சொத்தை சம்பாதிக்க அவளின் உழைப்பும் அதில் இருந்திருக்கிறது. ஒரு வீட்டில், உணவுக்கானவற்றைப் பெற்றுவருதல், அப்படிப் பெற்று வந்தவற்றை உணவாக மாற்றுதல் என இரு வேலைகளே முதன்மையானவை. அதில் பிள்ளை பெறுதல் போன்ற வேலைகள் பெண் மட்டுமே செய்ய முடியும் என்பதால், அவள் வீட்டில் இருந்தபடி, பொருட்களை உணவாக மாற்றும் சமையல் வேலையையும், அதனாலேயே, மற்றொரு வேலையான உணவை சம்பாதித்து வரும் வேலையை ஆணும் கைக்கொள்கிறார்கள். குடும்பத்தின் மொத்த வேலைகளை ஆணும் பெண்ணும் பகிர்ந்து கொள்கிறார்கள். அவள் சமைத்த உணவு அவளுடையது அல்ல. அந்தக் குடும்பத்தினுடையது. அது போலவே அவன் சம்பாதித்தது அவனுடையது அல்ல. அந்தக் குடும்பத்தினுடையது. அந்த இருவர் ஆட்சியின் குடிமகன்களே பிள்ளைகள், பெற்றோர் எல்லாம்.அப்படி இருக்க, அவன் இறந்துவிட்டால், அந்த சொத்து முழுவதுமே அவளுடையது மட்டுமே. (இன்றைய சட்டம் அப்படிப் பார்க்கவில்லை)
பெற்றோர்கள்?
ஆம். அந்த சொத்தில் அதாவது, அவளும் அவனும் இணைந்து சம்பாதித்த சொத்தில், அண்டி வாழும் நிலையில் இருக்கும் அந்த இருவரின் பிள்ளைகளும், அந்த இருவரின் பெற்றோர்களும் உதவி பெறத்தக்கவர்களே ஆவார்கள். கவனிக்க..இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது ”இருவரின் பெற்றோருமே.”ஆனால், உண்மையில், அந்த ஆண்/பெண் இருவரின் சம்பாதித்த சொத்தானது, அவனின் சொத்தாகவே கொள்ளப்பட்டு, அந்த சொத்தில், அவனின் மனைவி, அவனின் பெற்றோர், குழந்தைகள் மட்டுமே பெற முடிகிறது. அவளின் சம உழைப்பு அங்கு கவனிக்கப்படுவதே இல்லை. காரணம் நம் இந்திய மனங்களில், ஒரு திருமணம் என்பது ஒரு ஆண் பெண் -னின் இணைப்பு, ஒரு ”புது குடும்ப உருவாக்கல்” எனும் எண்ணம் இல்லாமல், பெண் வந்து ஆணின் குடும்பத்தோடு இணைவதாகவே பதிந்திருப்பதே காரணம்.இறந்த ஒருவனின் சொத்தில் மனைவிக்கு, ”அவனின் பெற்றோருக்கு”, அவனின் பிள்ளைகளுக்கு என ஆளுக்கு ஒரு பங்கு சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுவிட்டால், அங்கே கணக்கு முடிக்கப்படுவதாகவே பொருள். கமிட்மெண்ட் ஏதும் இல்லை என்றாகிவிடுகிறதல்லவா?
விவாகரத்து:
திருமணம் ஆன ஒரு தம்பதி விவாகரத்து செய்து கொள்கிறார்கள் எனில், அந்த விவாகரத்தின் பின் அதுவரை அவர்கள் சம்பாதித்த அவர்களின் சொத்தைப் பகிர்வதில் பெரும் சிக்கல்களைச் சந்திக்க நேர்கிறது.இருவரும் சேர்ந்து சம்பாதித்த சொத்தில், எவர் பெயரில் சொத்து இருக்கிறதோ அதை அவர் எடுத்துக் கொள்ள இயலாது. ஏனெனில், அது கூட்டு சம்பாத்தியம். அநேக சமயங்களில் சொத்துக்கள் ஒருவரின் பெயரில் மட்டுமே வாங்கப்படுகின்றன. அது பெரும்பாலும் அந்த வீட்டின் ஆணின் பெயரில். பெண்ணின், பிறந்த வீட்டில் அவளுக்கு கொடுக்கப்பட்ட நகைகளை வைத்து வாங்கிய சொத்து என்றால்தான் அது அவள் பெயரில் கிரயம் ஆகிறது. இது சரிதான். அதே போல, அவனின் பெற்றோர் அவனுக்குக் கொடுத்த சொத்தில் இருந்து வாங்கிய வீடு எனில் அவன் பெயரில் கிரயம் ஆகிறது. இதுவும் சரிதான். ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்து சம்பாதித்த சொத்து?
ஒப்பந்த விவரங்கள்
இந்த இடத்தில்தான் மேலைநாட்டு சட்டமும், சில இஸ்லாமிய சட்டங்களும் ஒப்பந்த வடிவில் இன்று புழக்கத்தில் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த ஒப்பந்தங்களில் திருமண செலவு, ஆண்/பெண் இருவரின் பொறுப்பும். அதை அவர்கள் தமது பெற்றோரிடமிருந்து பெறுகிறார்களா? அல்லது கடனாக வாங்குகிறார்களா? சம்பாதிக்கிறார்களா? என்பது அவர்கள் பிரச்சனை. ஒப்பந்தப்படி, திருமண செலவில் எதை எவர் செய்வது என்பது முடிவாகிறது. அதன் பின் அவர்கள் இருவரும் சம்பாதிக்கும் சொத்துக்கள் இருவரும் சேர்ந்திருந்தால் எப்படி அனுபவிப்பது, பிரிந்தால் எப்படி பிரித்துக் கொள்வது? ஒருவர் இறந்தால் அந்த சொத்தில் மற்றவருக்கு எந்த அளவுக்கு பாத்தியதை? என எல்லாமும் தெளிவாக குறிப்பிடப்படுகிறது. இஸ்லாத்தில், பெண்ணுக்கு ஆண் தரும் மஹர் தொகையானது, அவளுக்கு அவள் கணவன் தர வேண்டிய கடன் தொகை போலவே பாவிக்கப்படுகிறது. கணவனுடன் அவள் சேர்ந்து வாழ்ந்திருக்கையிலேயே, கணவனானவன், மனைவிக்குத் தர வேண்டிய மகர் தொகையைத் தந்திருக்காவிடில், அந்த்த் தொகையை கடனை வசூலிப்பது போல மனைவி வழக்கிட்டும் கூட வசூலிக்கலாம்.அது போலவே இந்த ஒப்பந்தங்களிலும், ஒருவர் மற்றவருக்குத் தர வேண்டிய கடப்பாடுகள் எவையும் இணைந்து வாழ்கையிலும் கடன் தொகை போலவே பாவிக்கப்படுகிறது.
பிள்ளையில்லா விதவை இறந்தபின்?
இந்து சொத்துரிமைச் சட்டத்தின்படி, பிள்ளை இல்லாத ஒரு விதவை தம் கணவனிடமிருந்து பெற்ற சொத்துக்கள், அவளது கணவனின் சகோதரர்களின் சொத்தாக அவன் பக்கம் மட்டுமே பிரிக்கப்படும். அதாவது, பிள்ளையில்லாத தம்பதிக்கு, கணவனின் குடும்ப சொத்து, தவிர, அவர்கள் இருவரும் சேர்ந்து இருந்த மண வாழ்க்கையில் சம்பாதித்த சொத்தானது, அந்த தம்பதி இருவருமே இறந்ததும், உயில் ஏதும் எழுதிவைக்காவிட்டால், அது அந்த ஆணின் சகோதர,சகோதரிகள் வசமே சென்றுவிடும். இதுதான் இப்போது நிகழ்வது. உண்மையில் அதில் அவளின் உழைப்பு?விதவையின் உயிலில்லா சொத்து:கணவனின் இறப்பிற்குப் பின் அவன் அந்த சொத்தை தன் மனைவிக்கு எழுதி வைக்கிறான். இந்நிலையில் அந்த சொத்தை அனுபவித்துவந்த மனைவியும், இறக்கிறாள் எனில், அந்த சொத்தானது, அவனது பிள்ளைகள் தவிர அவனது பெற்றோருக்கும் பங்காக பிரிக்கப்படுகிறது. இந்த சூழலில், அந்த மனைவி தம் பெற்றோரைப் பாதுகாத்து வந்திருந்தால் கூட இன்றைய நிலவரப்படி, அந்த சொத்தில் அவளின் பெற்றோருக்கு உரிமை இல்லை.
சட்டத்தில் இல்லாத அம்சம்
அதாவது, ஒரு குடும்பத்தில் அண்டி வாழும் நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு உள்ள உரிமை போலவே, ஆணின் பெற்றோருக்கும் சொத்துரிமை போய்ச் சேர்கிறது. மூத்தோர் பாதுகாப்புச் சட்டப்படி, பெண்ணுக்கும் தம் பெற்றோரைப் பாதுகாக்கும் கடமை இருப்பதைப் போலவே, அவர்களுக்கும் அந்த சொத்தில் உரிமை உண்டு எனினும் அது சட்டத்தால் தரப்படவில்லை என்பதே இன்றைய நிஜம். காலம் மாற மாற, சமூக சிந்தனைகள் மாற மாற சட்டமும் அதற்கேற்ப தன்னை மாற்றியே வருகிறது. ஆனால், ஆண்/பெண் உறவு முறை திருமணம் போன்றவற்றில் தம்மை மாற்றிக்கொள்ள சட்டத்திற்கு அதிக காலம் ஆவதாலேயே இது போன்ற ஒப்பந்தங்கள் மக்களுக்குள் புழக்கத்தில் வர ஆரம்பித்திருக்கிறது.இந்திய சமூகத்தில் திருமண ஒப்பந்தங்கள் வெல்லுமா? சட்டங்கள் உடனிருக்குமா?
- ஹன்ஸா ஹன்ஸா(வழக்கறிஞர்)Legally.hansa68@gmail.com
நன்றி : தினமலர் நாளிதழ் - 03.12.2016

Saturday, February 11, 2017

பெண் - தன் மதிப்பு அறியாதவள்

Image may contain: 1 person, text

பெண் - தன் மதிப்பு அறியாதவள்

குட்டிக் கதைபெண்... கல் தோன்றி மண் தோன்றாத காலத்தில் இருந்து கவிஞர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்களின் சிந்தனைக்கு வற்றாத அட்சயப்பத்திரமாக விளங்கி வரும் கருப்பொருள். பெண்களைப் போற்றியும், தூற்றியும், கிண்டலடித்தும் எழுதப்பட்ட கருத்துகள், கவிதைகள், கதைகள்... எண்ணில் அடங்காதவை!

சமீபத்தில் ‘வாட்ஸ்அப்’பில் உலாவரும், பெண்ணின் சிருஷ்டி பற்றிய, உள்ளத்தைத் தொடும் ஒரு கதை இங்கே... 

ஆண் உட்பட எல்லா உயிரினங்களை யும் படைத்து முடித்த கடவுள், இறுதியாகப் பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல... தொடர்ந்து ஆறு நாட்களாகப் பெண்ணைப் படைத்துக்கொண்டிருந்தார். அனைத்தை யும் கவனித்துக்கொண்டிருந்த தேவதை ஒன்று, `‘ஏன் இந்தப் படைப்புக்கு மட்டும் இவ்வளவு நாட்கள்?’’ என்று கேட்டது.

அதற்குக் கடவுள், `‘இந்தப் படைப்புக் குள் நான் நிறைய விஷயங்களை உள்ளடக்க வேண்டும். இந்தப் பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதைச் சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்னக் காயத்திலிருந்து உடைந்துபோன மனது வரை எல்லா வற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில் லாதபோதும் அவளே அவளைக் குணப் படுத்திக்கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும்தான் இருக்கும்’’ என்று விளக்கமாகச் சொன்னார்.

`‘இது அத்தனைக்கும் இரண்டே கைகளா?!’’ என்று ஆச்சர்யப்பட்டது தேவதை. ஆர்வத்துடன் லேசாகப் பெண்ணைத் தொட்டுப்பார்த்துவிட்டு, `‘ஆனால், இவளை மென்மையாகப் படைத்திருக்கிறீர்களே?’’ என்று கேட்டது.

`‘இவள் உடலளவில் மென்மை யானவள். ஆனால், மனதளவில் மிகவும் பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்துவிடுவாள். அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக்கொள்ளத் தெரியும். கோபம் வந்தாலும் அதைப் புன்னகை மீறாமலே வெளிப்படுத்தும் தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப்படுகிற விஷயத்துக்காகப் போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர் பார்க்காமல் அன்பை மட்டுமே அளவில்லாமல் தருவாள்’’ என்றார்.
``ஓ... இந்தளவுக்குப் பெண்ணால் யோசிக்க முடியுமா?!’’ என்றது தேவதை ஆச்சர்யம் விலகாமல்.

`‘எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல, அவற்றுக்குத் தீர்வையும் அவளால் சொல்ல முடியும்’’ என்றார் கடவுள்.

தேவதை, பெண்ணின் கன்னங்களைத் தொட்டுப்பார்த்துவிட்டு, `‘இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?’’ என்றது.

‘`அது கண்ணீர். அவளுடைய கவலை, துக்கம், துயரம், ஏமாற்றம், புறக்கணிப்பு, நிராகரிப்பு என்று எல்லா வலிகளுக்கும் அவளின் ஒரே எதிர்வினை அது மட்டும்தான்’’ என்றார் கடவுள்.

ஆச்சர்யமான தேவதை, `‘உங்கள் படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்தப் படைப்பில் எந்தக் குறையுமே கிடையாதா..?’’ என்று கேட்டது.

`‘தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது!’’ - குற்ற உணர்வுடன் பதிலளித்தார் கடவுள்.

நன்றி : அவள்விகடன் - 09.02.2016

மனைவி

Image may contain: text

மனைவி

இதுதான்... இவ்வளவுதான் அவள் உங்களிடம் எதிர்பார்ப்பது!

ஆண் - பெண் உறவில், பெண் தன் நேசத்தில் நிறைந்து தளும்புகிறவளாக இருக்கிறாள். அவள் காதலை மட்டும் கடலெனப் பருகிவிட்டு, அவன் அவளுக்கு பதிலுக்குக் கொடுப்பது, காகம் கல்லைப்போட்டுக் குடித்த தண்ணீரைப்போல தூரில் கிடக்கும் பிரியம் மட்டுமே. நியாயம்தானா இது? 

‘நான் என்னதான் செய்யணும்... அப்படி அவளுக்கு என்னதான் வேணும்?’ என்ற ஆண்களின் கேள்விகள் வேண்டுமானால், அதை ஒரு சிக்கலான விஷயம்போல சித்தரிக்கலாம். ஆனால் அதற்கான பதிலும், அவள் எதிர்பார்ப்பும் மிகவும் எளிமையானவை. உங்கள் காதலி, மனைவி உங்களிடம் வேண்டுவது, ஏங்குவது, அன்பின் பரிமாற்றமே! 

உங்களுடன் பேச வேண்டும்!
அவளுக்கு உங்களுடன் பேச வேண்டும். எவ்வளவு பரிதாபமான கோரிக்கை இது? ஆனால் அதுதான் அவள் நிலை. அவள் சந்தோஷங்களை, துக்கங்களை, அச்சங்களை, கேளிக்கைகளை அவள் உங்களிடம் பேச வேண்டும், பகிர வேண்டும். யோசித்துப் பாருங்கள்... சமையல் குறித்த கட்டளைகள், பள்ளி, ட்யூஷன், ஃபீஸ் என்று குழந்தைகள் குறித்த விசாரிப்புகள், அலுவலகம், தொழிலில் நீங்கள் பெற்று வரும் அழுத்தங்களை வெளிப்படுத்தும் கோபங்கள், தலைவலி, கால்வலி என்று உங்கள் உடல் நோவைச் சரிசெய்யச் சொல்லும் ஏற்பாடுகள்... இதுதான் உங்களுக்கும் அவளுக்குமான உரையாடலாக இருக்கிறது. 

என்றாவது அவளிடம், உங்கள் தொழிலின் வெற்றித் தருணங்களை, அலுவலகத்தில் அன்று பெற்ற பாராட்டை, வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் ரசித்த ஒரு பதிவை அவளுடன் பகிர்ந்திருக்கிறீர்களா? அல்லது, அவளது செடி பூத்த முதல் மலரை, அவள் ரசித்த பாடலை, அவள் ஊரின் கதைகளைப் பற்றி அவள் உங்களுடன் பேசி மகிழும் மணித்துளிகளை அவளுக்குத் தந்திருக்கிறீர்களா? அதைவிட மேலான வேலைகள் உங்களுக்கு இருப்பதாக இப்போதும் நீங்கள் நினைத்தால், ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்அப்பிலும் வெட்டியாகக் கழிக்கும் பொழுதுகளைச் சுட்டிக்காட்டட்டும் உங்கள் மனசாட்சி உங்களுக்கு! 

சின்னச் சின்ன அக்கறை வேண்டும்!
சமையல் அறையில் குக்கர்பட்ட சூடு, காய் நறுக்கும்போது கத்தி அறுத்த வெட்டு, வழுக்கி விழுந்த ரத்தக்கட்டு, வேலைக்கு விரைந்து ஓடுகையில் எங்கோ இடித்து கன்னிப்போயிருக்கும் வலிகளில் இருந்து பிரசவத் தையல்கள் வரை... அவளின் எந்தக் காயங்களும் உங்களுக்குப் பதறாதுதான். அதனால் இப்போதெல்லாம் அவளுக்கு எல்லாக் காயங்களும் ஊமைக்காயங்களே. ஆனால், இத்தனை வலிகளையும் அவள் உங்களுக்காக, உங்களாலேயே அனுபவிக்கிறாள் என்ற உண்மையும் உங்களால் உணரப்படாமல் ஊமையாகிக்கிடப்பதுதான் வேதனை. 

ஒரு காய்ச்சல் என்றால்கூட அம்மாவையோ, மனைவியையோ படுத்தியெடுக்கும் ஆண்களின் சௌகரியம் எல்லாம் அறியாதவள் அவள். ஒருவேளை அவளது தலைவலியை அவள் வாய்விட்டுச் சொன்னால், முதுகு வலிப்பதாகச் சொன்னால், பித்தவெடிப்பில் ரத்தம் கசிவதாகச் சொன்னால், சொன்னதில் இருந்து மறுமுறை, ஒரே ஒருமுறை, ‘சரியாயிடுச்சா?’ என்று மனதிலிருந்து கேளுங்கள். காலையில் சொன்ன அவளின் வலியை, அந்த நாளின் முடிவில் நீங்கள் நினைவுவைத்துக் கேட்பதிலேயே பாதி நோவு பறந்துவிடும் அவளுக்கு!

அவள் சுமை உணர வேண்டும்! 
வீடு, வேலை என்று இரட்டைச் சுமையில் தள்ளாடும் பெண்களைப் பற்றி பேசினாலே பிடிப்பதில்லை உங்களுக்கு. உங்களின் தேவைகள், உங்கள் வீட்டின் ஒழுங்கு, உங்கள் பிள்ளைகளின் பொறுப்புகள் இவற்றில் எல்லாம் எந்தக் குறையும் இல்லாதவாறு, அவள் பணிக்குச் செல்ல ஆட்சேபம் சொல்லாத மகத்தான சுதந்திரம் நீங்கள் அவளுக்குக் கொடுத்திருப்பது. ஆம், அவள் தலையணை உறை மாற்றி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டதுதான். ஆம், அவள் இந்த வீட்டை இன்னும் நேர்த்தியாக வைத்துக்கொள்ள வேண்டும்தான். ஆம், நீங்கள் மெத்தைமீது வீசிவிட்டுப் போகும் ஈரத்துண்டை அப்புறப்படுத்துவதைத் தவிர அவளுக்கு வேறு முக்கிய வேலைகள் இல்லைதான். செய்கிறாள். சிணுங்கிக்கொண்டோ, முணங்கிக்கொண்டோ, விம்மிக்கொண்டே அவள் இதையெல்லாம் செய்கிறாள். 

அலுவலகத்தின் திறன் ஓட்டத்தில், முதுகில் உங்கள் வீட்டைச் சுமந்தபடியே ஓடும் அவளை, கால்கள் இரண்டையும், கைகள் இரண்டையும் காற்றின் விசையில் வீசி ஓடும் அவளின் சக ஆண் போட்டியாளர் கடந்துசென்று எக்களிக்கும்போதும், அவள் துவண்டுபோய்விடுவதில்லை. ஏனெனில், தன் வீட்டை விலையாகக்கொடுத்து ஈட்டும் எந்த வெற்றியும் வெற்றியல்ல என்பதை அவள் அறிவாள்.

அப்படியிருந்தும், ‘வீட்டை ஒழுங்காவே பார்க்கிறதில்ல’ என்ற உங்களின் நன்றியில்லாத பேச்சுதான் அவளைத் துண்டு துண்டாக்கிவிடுகிறது. பெரிதாக அடுக்குவதால், பெரிதாக எதுவும் கேட்கவரவில்லை. அவள் தன் இரட்டைச் சுமை பற்றிப் புலம்பும்போது, அதை நம்புங்கள். அவள் சிரமங்களை ஒப்புக்கொள்ளுங்கள். ‘ரொம்ப வேலையா... ரெஸ்ட் எடுத்துக்கோ’ என்ற உங்களின் வார்த்தைகளே, அவள் இயக்குத்துக்கான எரிபொருள்! 

சிரிப்பில் கரைய வேண்டும்! 
அவளை நீங்கள் கடைசியாக சிரிக்கவைத்தது எப்போது? மிகக் கடினமான கேள்வி இது. சரி, அவளிடம் நீங்கள் கடைசியாக சிரித்துப் பேசியது எப்போது? அதனினும் கடினமான கேள்வியாக இருக்கக்கூடும். அலுவலகம், முகநூல், வாட்ஸ்அப் குரூப்கள் என்று எங்கும் பொங்கிப் பிரவாகமெடுக்கும் உங்கள் நகைச்சுவை உணர்வால், உலகத்தையே சிரிக்கவைக்க மெனக்கெடுகிறீர்கள். உங்கள் அலைபேசியில் உள்ள பெண் கான்டாக்ட்களுக்கு செய்தி அனுப்பும்போது, அது அலுவல் செய்தியாக இருந்தாலும்கூட குறைந்தபட்சம் ஒரு ஸ்மைலி இல்லாமல் அனுப்புவதில்லை. 

ஆனால், அவளிடம் நீங்கள் சிரித்துப் பேசவும், அவளை நீங்கள் சிரிக்கவைக்கவுமான தகுதியற்றவளாக அவள் ஆகிப்போனது துயரம். ஓர் உண்மை என்னவெனில், நீங்கள் சிரிக்கப் பேசும்போது மற்றவர்கள் எல்லாம் நீங்கள் உதிர்க்கும் சிரிப்புத் துணுக்குகளை ரசிப்பவர்கள். அவள், அந்தச் சிரிப்பில் பூக்கும் உங்களை ரசிப்பவள். மகிழ்ந்து, லயித்து நீங்கள் அவளிடம் ஒரு நகைச்சுவையை பகிரும்போது, மின்னும் உங்கள் கண்களில் காதல் கொள்பவள். யார் யாருக்கோ விதவிதமான ஸ்மைலிங் எமோஜிகளை தேடித் தேடித் தட்டும் நீங்கள், சின்ன ஸ்பரிசம் தரும் அருகாமையில் அவளிடம் அமர்ந்து சிரித்துப் பேசினால்போதும், அருவி அன்பு அது அவளுக்கு. நனைந்து கரைந்துபோவாள்! 

காற்றலையில் அனுப்பும் காதல் வேண்டும்!
வீட்டைவிட்டு வெளியேறும்போது அவளை மறந்துபோகிறீர்கள். மீண்டும் வீட்டுக்குள் நுழையும்போதே உங்கள் உலகில் அவள் நுழைகிறாள். ஆனால் அவளால் அவ்வாறு உங்கள் நினைவின்றி இருக்க முடியாது. அந்தத் தனிமையை துரத்தத்தான் டிவியில் இருந்து இணையம்வரை தன்னை ஒப்படைக்கிறாள். அந்தப் பகல்களில் அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி, ஓர் அலைபேசி அழைப்பு உங்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றால், அவளின் அந்த நாள் அத்தனை அழகாகிவிடும். 

சப்பாத்திக்கு மாவு பிசைந்துவைப்பதில் இருந்து, பிள்ளைகள் இரைத்துவிட்டிருந்த பொருட்களை எடுத்து வைப்பதுவரை, பின் இரவு நீங்கள் வீடு திரும்பும் சூழலை சுகமாக்குவதற்கான வேலைகளை முன் இரவே முடித்துவைப்பவள் அவள். காலணி கழட்டும்போது அவளைக் கண்டுகொள்ளாமல் கவிழ்ந்துகொண்டாலும்கூட, உங்கள் கண்களை விடாமல் துரத்தி அசதியா, அழுத்தமா, சந்தோஷமா, கோபமா என்று உங்கள் முகத்தில் மனதைத் தேடி நிற்பவள் அவள். அவள் பகல்களை மலரச் செய்யும் பிரியத்தை காற்றலையில் அனுப்பலாம்தானே?! 

அவள் புரிந்துகொள்ளப்படப் பிறந்தவள் அல்ல. நேசிக்கப்படப் பிறந்தவள். அவள் தன்னைப்பற்றி விளக்கத் தேவையில்லாத அளவுக்கு நீங்கள் அவளுக்குக் கிடைத்துவிட்டால், அவள்தான் இந்த உலகின் மிக சந்தோஷமான, ஆசிர்வதிக்கப்பட்ட பெண்!

உங்கள் வீட்டில் அப்படி ஒருத்தி இருக்கிறாளா?!

- தீபிகா (விகடன் செய்திகள் - 10.05.2016)

போதைக்கு அடிமையான அப்பாவிற்கு

Image may contain: text

போதைக்கு அடிமையான அப்பாவிற்கு .....

அந்த பழக்கம் உங்களுக்கு இல்லாமல் இருந்திருந்தால் இந்த கடிதத்தை எழுதும் அவசியம் இருந்திருக்காது அப்பா...!'

அன்புள்ள அப்பா,

காலம் எவ்வளவு வேகமாக உருண்டோடிவிட்டது....?! ஆனால், எல்லாமே நேற்று நடந்தது போல உள்ளது... இன்றோடு 10 ஆண்டுகள் ஆகின்றன. என்னால் நம்ப முடியவில்லை. 

10 ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய தினம்தான் என்னிடம் இருந்து, இல்லை எங்களிடம் இருந்து பிரியா விடை பெற்றீர்கள் அப்பா! நினைக்கும்போதே என்னவோ செய்கிறது.

அப்பா, இப்போது எனக்கு 24 வயதாகிறது. என்னைச் சுற்றி என் வயதுடையவர்கள் படித்து முடித்து விட்டார்கள். சிலருக்கு திருமணமும் முடிந்து விட்டது. ஆனால், நான் நீங்கள் பாதியில் விட்டுச் சென்ற பயணத்தைத் தொடர, இப்போது ஒரு துணிக்கடையில் வேலை செய்கிறேன். 10 வருடங்களாக பல வேலைகளைச் செய்து வருகிறேன். 

ஆம் அப்பா, நீங்கள் சென்றதில் இருந்து நான் பள்ளிக்குச் செல்லவே இல்லை. மூத்த பெண் குழந்தையைச் செல்லமாக வளர்த்தீர்கள். தம்பிகள் இருவரும் உங்களைப் பார்த்தே வளர்ந்தார்கள். உங்களைப் பற்றியே கேட்டு கேட்டு, இன்று அவர்களின் நிலையைக் காண நீங்கள் இல்லை. அது ஒருபுறம் இருக்க, 'அவர்களையாவது படிக்க வைக்க வேண்டும்' என்ற மிகப் பெரிய பொறுப்பு என்மீது இருந்தது.

நீங்கள் தொடர்ந்து புகையிலையைப் பயன்படுத்தியதால் அம்மாவிற்கு காச நோய் வந்துவிட்டது. நீங்கள் இறந்துபோனதும், அம்மாவை வேலைக்கு அனுப்பினாலும், அதிகமாக வேலை செய்ய முடிந்ததில்லை. அதனால், அப்போது நான் செங்கல் செய்யும் வேலைக்குச் சென்றேன். இது அனைத்தையும் நீங்கள் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டு இருப்பீர்கள் என நினைத்து சமாதானப்படுத்திக் கொண்டேன். அங்கு இரவு 12 மணிக்கெல்லாம் எழுப்பி விடுவார்கள். 

உங்கள் அருகில் உறங்கியது போல நிம்மதியாக என்னால் உறங்க முடிந்ததே இல்லை. அங்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால், யாரிடமும் கூறிக் கொள்ளவில்லை. என் படிப்பு போனதுதான் மிகுந்த வருத்தத்தை அளித்தது. ஆனால், தம்பிகள் படிக்க வேண்டும் அல்லவா? அவர்கள் நிச்சயம் பெரிய ஆளாக வருவார்கள் என, கேட்டதை எல்லாம் செய்தேன். ஆனால், அவர்கள் அருகில் இருந்து என்னால் கண்டித்து வளர்க்க முடியவில்லை. அது எவ்வளவு பெரிய தவறு என இப்போது தெரிகிறது!

செங்கல் சூளையில் தரும் 300 ரூபாயில் அம்மாவின் மருந்து செலவு, தம்பிகளின் படிப்பு, சாப்பாடு என அனைத்தையும் பார்க்க மிகவும் கஷ்டப்பட்டேன். அதனால், துணி மில்லுக்கு வேலைக்குச் சென்றேன். அங்கு இதைவிட வலி அதிகம் அப்பா. நான் அழாத நாட்களே இல்லை. நான் பெண் என்பதால் ஒரு தந்தையிடம் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்தேன். 

ஆனால், தம்பிகளின் படிப்பிற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன். அவர்களுடைய அனைத்து தேவைகளுக்கும் பணம் கொடுத்த நான், அந்தப் பணத்தை என்ன செய்கிறார்கள் எனக் கவனிக்கத் தவறினேன். நீங்கள் இருந்து இருந்தால் நிச்சயம் இப்படி நடந்திருக்காது, என நினைக்கிறேன்!

அம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டு இருக்கிறது. அம்மாவுடன் இருக்க வேண்டும் என்பதால் வேலையை விட்டு வந்தேன். இங்கு துணிக் கடையில் மாதம் ரூ.3,000 த்திற்கு வேலை செய்கிறேன். உங்களிடம் சிலவற்றை கேட்க வேண்டும் என்ற எண்ணம், என்னை இப்போது அதிகளவு தொற்றிக் கொண்டுள்ளது. அதனால்தான் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

ஒரு அப்பாவின் அரவணைப்பில் நான் இருந்த காலம் மிகவும் குறைவு. உங்களின் சிரிப்பு மட்டுமே என் நினைவில் உள்ளது. நான் உங்களிடம் ஆறாவது பிறந்தநாள் அன்று பரிசாக ஒரு வரம்... ஆம் வரம் என்றே கூறலாம். வரம் கேட்டேன். "அப்பா புகையிலை பழக்கத்தை விட்டு விடுங்கள்" என்று. 

ஆனால், அதை ஏனோ எனக்குத் தர மறுத்து விட்டீர்கள். அதனால், நாங்கள் அனாதையாக மாறினோம். அன்று நாங்கள் ஆதரவின்றி போனோம் என்று மட்டும்தான் எண்ணினேன். ஆனால் இப்பொழுதுதான் தெரிகிறது உங்கள் இருப்பின் தாக்கமும், இறப்பின் தாக்கமும் எந்தளவு தொக்கி நிற்கிறது என்று. உங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால், இதுநாள் வரை எனக்கு உங்கள் மீது கோபம் வந்ததே இல்லை. 

இப்போது வருகிறது அப்பா. அதிகமாக வருகிறது. நீங்கள் எங்களைப் பார்த்துக் கொண்டுதானே, உங்களின் இன்பத்திற்காக, சுயநலத்திற்காக புகையிலை உபயோகித்தீர்கள். எங்கள் மீது நீங்கள் வைத்திருந்த அன்பைக் காட்டிலும் புகையிலை முக்கியமாகப் போனது. அதனால்தான் நான் இன்று கண்ணீரால் இக்கடிதத்தை எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் உங்களுக்கு இல்லாமல் இருந்திருந்தால் இன்று நான் இந்த கடிதத்தை எழுதும் அவசியம் இருந்திருக்காது அப்பா...!

புற்றுநோயினால் நீங்கள் அவதிப்பட்டு, இறந்து போன நொடிகளில் என் பாதி உயிர் போனது. என் மீதி உயிரைக் கொடுத்து படிக்க வைத்த என் தம்பிகள், இன்று புகையிலைக்கு அடிமையாகி விட்டார்கள். எப்படி என்று தெரியவில்லை. அம்மாவின் இயலாமையைப் பயன்படுத்தி இப்படி செய்துள்ளார்கள் அப்பா.

பீடியோ, சிகரெட்டோ, பொடியோ ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்கு போதை தேவைப்படுகிறது. நான் என்ன செய்ய முடியும்...? நீங்கள் அம்மாவை அடித்து காசு வாங்கிச் செல்வது போல, அவனும் வாங்குகிறான். சிறு வயதில், உங்கள் செயல்கள் அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டன. ஒரு அப்பாதான் தன் பிள்ளைகளின் ஹீரோ. 

ஆனால் ஏனோ உங்கள் செயலால்தான் இன்று தம்பிகள் மெல்ல மெல்ல புகையிலைக்கு அடிமையாகி விட்டார்கள். பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டார்கள். பயமாக உள்ளது. இவர்களின் இந்த பழக்கத்தால், நாளை மீண்டும் என்னைப் போல ஒரு மகனோ, மகளோ இதுபோல அவனுக்குக் கடிதம் எழுதும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது. 

அப்பா, இன்று இரண்டாம் முறையாக உங்களிடம் ஒரு வரம் கேட்கிறேன். அவர்களைத் எப்படித் திருத்துவது என ஒரு வழி கூறுங்கள் அப்பா. என் கண்ணீர் நிச்சயமாக உங்களை வந்து சேரும் என்ற நம்பிக்கையோடு கடிதத்தை முடிக்கிறேன் அப்பா.

இப்படிக்கு உங்கள் செல்ல மகள்......
(புகையிலை போதைக்கு அடிமையான அனைத்து அப்பாக்களுக்கும் சமர்ப்பணம்)
நன்றி : விகடன் செய்திகள் - 31.05.2016



அப்பா

Image may contain: one or more people and text

அப்பா

'அப்பாக்களின் வாழ்வில் நெகிழ்ச்சியான தருணங்கள்'

வாழ்வில், ஆணானாலும் பெண்ணானாலும் பல பரிணாமங்களைக் கடக்கின்றனர். ஒரு பெண் மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாக, தோழியாக எனப் பலவற்றைக் கூறலாம். ஆனால், நாம் யாரும் அநேகமாக பெண்ணுக்கு நிகரான ஆணின் பங்கைப் பற்றி பேசுவதில்லை. அதுவும் முக்கியமாக ஓர் ஆண் 'அப்பா'வாக மாறுவதைப் பற்றி யாரும் உரையாடுவது இல்லை. தாய்மை பற்றியும், குழந்தைப் பேறு பற்றியும் கவிதைகள் எழுதி எழுதி, அப்பாவைப் பற்றி சற்று யோசிக்க மறந்து விட்டோம். எந்த அளவுக்கு எனில் 'தாய்மை' என்ற சொல்லுக்கு இணையான ஆண்பால் சொல்லே நமக்குத் தெரியாதே! 

தாயின் மனநிலையை பலமுறை, பல கோணங்களில் கேள்விப்பட்ட நாம் இன்று, சில நொடிகள் நம் தந்தையைப் பற்றிச் சிந்திக்கலாம். சில நேரங்களில் செல்லமாகவும், அநேகமாக கறாராகவும் இருக்கும் நம் அப்பாக்களின் வாழ்வில், அவர்கள் ஆழ் மனதில் புதைந்து கிடக்கும் மறக்க முடியாத தருணங்கள் பற்பல.

1. முதல் முத்தம்!
முதன்முதலில், தன் குழந்தையின் முகத்தைப் பார்த்து முத்தமிட்ட அந்த நொடி! அந்த உணர்ச்சியை எந்த கவிஞனாலும், எழுத்தாளனாலும் இன்று வரை கூற முடிந்ததே இல்லை. தன் ரத்தம், தன் வாரிசு, தன் குழந்தை, அடுத்த சில வருடங்களில் தன்னைத் தாங்கப் போகும் தூணான, அக்குழந்தையை முதன்முதலில் கையில் ஏந்தி, முத்தம் கொடுத்த அந்த நொடியை எந்த ஒரு அப்பாவாலும் மறக்கவோ, விளக்கவோ முடியாது.

2. ஆள்காட்டி விரல்!
குழந்தை தன் பிஞ்சு கைகளால், அந்த மெல்லிய விரல்களால், முழு கையையும் வைத்து அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பிடிக்கும். அந்த அழகை ரசிக்கவே அப்பாவிற்கு ஆயிரம் கண்கள் வேண்டுமே! என்ன செய்வார் அவர்? நேரம் கிடைக்கும் போது எல்லாம் தன் விரலை குழந்தையிடம் நீட்டி நீட்டி விளையாடும் அப்பாக்களை தினமும் பார்க்கலாம். அதன் பின்னால், எவ்வளவு பேரானந்தம் ஒளிந்து இருக்கிறது என்பதை நம்மால் ஒருகாலமும் உணர முடியாது.

3. ராஜகுமாரியின் சேட்டைகள்!
ஒரு அப்பாவுக்குப் பெண் குழந்தை பிறந்து விட்டால் கேட்கவே வேண்டாம். அந்த குட்டி தேவதையை தன் மடியைவிட்டு இறக்கவே மாட்டார். தன் மார்பில் அவள் எட்டி உதைக்கும் சுகமும், அவளின் அழகிய கொஞ்சல் சிரிப்பும் அப்பாவை வீழ்த்தும் அஸ்திரங்கள். ராஜகுமாரியை கொஞ்சி கொஞ்சி நாட்களைக் கழிக்கும் அப்பாவின் மனதில் இருக்கும் ஒருவித உணர்ச்சி... அதை குறிக்க சொற்களை கண்டுபிடிக்கத்தான் வேண்டும்!

4. அப்பா...!
'ங', 'க', 'ஆ', 'ஊ' என தன் குழந்தையின் ஓசைகளையும், அழுகுரலையும் கேட்டு கேட்டு திருப்தி அடைவதற்குள் 'அப்பா' என ஒரு குரல் கேட்கும்! கட்டுக்கடங்காத காட்டாறு போன்ற மகிழ்ச்சிதான் அங்கு பாயும். ஆனால், நம் அப்பாக்களுக்குத்தான் அம்மாவைப் போல மகிழ்ச்சியை வெளிப்படுத்த தெரியாதே, அதனால் வாயெல்லாம் பல்லாக, 'அப்பா சொல்லு, அப்பா சொல்லு' எனக் கூறிக் கொண்டே இருப்பார்கள்!

5. முதல் அடி!
தன் மார்பிலும், முதுகிலும், தோளிலும் தவழ்ந்த அந்த பிஞ்சு பாதங்கள் முதல் அடியை எடுத்து வைத்ததும், அம்மாவின் சிரித்த முகம்தான் அநேகமாக முதலில் தெரியும். ஆனால், அப்பாவின் ஆனந்தக் கண்ணீரும், மகிழ்ச்சியும் நமக்கு அவ்வளவாக தெரிவதில்லை. காரணம், அவர்கள் நாம் விழாமல் இருக்க நமக்குப் பின்னால் நம்மைத் தாங்கிக் கொண்டு இருப்பார்கள்.

6. வெற்றி இல்லை சாதனை!
மெல்ல அப்பாவின் சுண்டு விரலை பிடித்து நடை பயின்ற தன் கண்மணியின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அப்பாவின் வெளிப்படுத்தப்படாத குதூகலம் ஒளிந்து இருக்கும். நம்முடைய ஒவ்வொரு சிறு வெற்றியைக் கூட மிகப் பெரிய சாதனையாக எண்ணி நம் அப்பா கர்வப்படுவார். நம்முடைய ஒவ்வொரு செயலையும் சாதனையாக மாற்றுவதில் அப்பாவிற்கு பெரும் பங்கு இருக்கிறது! ஆனால், நம் அப்பா எதையும் வெளிக்காட்டுவதில்லை, கண்டிப்பைத் தவிர! ஆனால், அதே கண்டிப்புதான் நம்மை ஒரு சிறந்த ஆளுமையாக மாற்றுகிறது என்பதை காலம்தாதான் நமக்கு உணர்த்தும்.

7. குட்டிதேவதை வளர்ந்த நொடி!
தன் விரல் பிடித்து நடந்த தன் குட்டி தேவதை பருவ வயதில், பூப்பெய்தியதும், தன்னை அறியாமல் ஒரு ஆனந்தமும், பயமும் அப்பாவின் உடல் எங்கும் பரவும். அந்த உணர்வை எப்படி சொல்லலாம்? தன் பெண்ணைப் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும், அவளுக்குத் தேவையானதைச் சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பும், இன்னும் வெகுசில வருடங்களில் அவள் இன்னொருவனின் மனைவி என்கிற எண்ணத்தின் தாக்கமும், பேரானந்தமும் ஒருசேர ஒருவித உணர்ச்சியை அப்பாவின் மனதில் உருவாக்கும். அதைப் பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்களால் மட்டுமே உணர முடியும்.

8. திருமணம்!
காலங்கள் உருண்டோட 'நேற்று பிறந்த குழந்தை போல' தோன்றும் தன் பிள்ளைக்கு திருமண நாள் குறிக்கப்படும். மகனாக இருந்தால், அவனை நல்ல ஒரு ஆண்மகனாக வளர்த்து, தன்னை நம்பி வரும் பெண்ணை தன் தாய்க்கு நிகராக நடத்துபவனாக மாற்றி இருக்க வேண்டும். மகளாக இருந்தால், அவளுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். தன் மகளின் கைகளை தன்னைவிட பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் ஓர் ஆடவனிடம் ஒப்படைக்கும் நொடி... நம் மகளின் வாழ்வு நிறைவானதாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் ஒருபுறமும், இனி இவள் மீது இவள் கணவனுக்கே முதல் உரிமை என்ற நிதர்சனமான உண்மை மறுபுறமும் மாறி மாறி அலைக்கழிக்கும். ஆனாலும், உதட்டில் புன்னகையுடனும், கண்களில் ஒளிந்திருக்கும் கண்ணீருடனும் தன் மகளை, மருமகளாக இன்னொரு வீட்டிற்கு வழி அனுப்பி வைக்கும் அப்பாவின் மனதில்தான் எத்தனை எத்தனை எண்ணங்கள்!

இப்படி ஒரு அப்பாவின் வாழ்வு முழுவதுமே சிறு சிறு நெகிழ்ச்சியுறும் தருணங்களால் நிறைந்தவையே. ஆனால், நம் கண்களுக்குத்தான் அது தெரிவதில்லை. நாம் நம் அப்பாவிடமிருந்து எவ்வளவு தொலைவில் இருந்தாலும், அவரிடம் எவ்வளவு கோபப்பட்டாலும், அவர் நம் மீது வைத்திருக்கும் அன்பும் காதல் என்றும் குறையாது. சின்னச் சின்ன தருணங்களிலேயே மனநிறைவு அடையும்.

அப்பாக்களுக்கு நிகர் அப்பாக்கள் மட்டுமே!

-ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)


நன்றி : விகடன் செய்திகள் - 18.06.2016