disalbe Right click

Showing posts with label இந்திய சாட்சிய சட்டம். Show all posts
Showing posts with label இந்திய சாட்சிய சட்டம். Show all posts

Sunday, July 12, 2020

காணாமல் போனவர் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

காணாமல் போனவர் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
தனது பெயரில் சொத்தோ அல்லது வழக்கோ இல்லாத ஒருவர் காணாமல் போனால் எந்தவித பிரச்சணையும் இல்லை. ஒரு நபரின் பெயரில் சொத்து இருந்து அவர் காணாமல் போனால், அந்த சொத்து யாருக்கு உரியது? அதனை என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும். அதேபோல் ஒருவரது பெயரில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்து கொண்டு இருக்கும்போது அவர் காணாமல் போனால், அந்த வழக்கை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்ற குழப்பம் நீதிமன்றத்திற்கும், காவல்துறைக்கும் ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்திய சாட்சியச்சட்டம் பிரிவு 108 விளக்குகிறது.  
இந்திய சாட்சியச்சட்டம் பிரிவு 108 
ஒருவர் காணாமல் போய்விட்டால், அவர் காணமல் போன நாளில் இருந்து ஏழு வருடங்கள் முடிந்துவிட்டால், யூகத்தின் அடிப்படையில் அவர் இறந்து போனதாக கொள்ளலாம்! என்று இந்தப்பிரிவு சொல்கிறது. ஆனால், அவர் காணாமல் போன பிறகு, அவர் காணாமல் போய்விட்டார்; கண்டுபிடித்து தாருங்கள்! என்று அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்திலோ, நீதிமன்றத்திலோ புகார் அளித்து அந்த சம்பவத்தை பதிவு செய்திருக்க வேண்டியது மிக அவசியம்.
காணாமல் போனவரது சொத்து
காணாமல் போனவரது பெயரில் ஏதாவது சொத்து இருந்தால், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு,  காவல்நிலையத்தில் இருந்து அவரை கண்டுபிடிக்க இயலவில்லை! என்ற சான்றிதழை பெற்று அதனை வைத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அதனை நிரூபித்து, அவரது இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் பெற்று அந்த சொத்துக்களை அவரது வாரிசுகள் சட்டப்படி பிரித்துக் கொள்ளலாம். 
**********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 12.07.2020 

Saturday, March 16, 2019

சில வழக்குகளில் சூழ்நிலை சாட்சியத்தின் பங்கு

சில வழக்குகளில் சூழ்நிலை சாட்சியத்தின் பங்கு
பல சட்டங்களின் கீழ் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்படுகிறது. ஆனால், அந்த வழக்குகளுக்குரிய தக்க ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பவருக்குத்தான் வெற்றி கிடைக்கிறது. தகுந்த ஆதாரங்கள் மட்டும் இல்லாவிட்டால், உண்மையான வழக்காக இருந்தால்கூட நிதிமன்றத்தில் தள்ளுபடி ஆகிவிடும். நீதிமன்றத்தில் கொடுக்கப்படுகின்ற வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களை சாட்சியம் என்று சொல்கிறோம். வழக்கை உடல் என்றால், சாட்சியத்தை உயிர் என்று கூறலாம். 
இந்திய சாட்சியச் சட்டம் - 1872
நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் ஒரு சங்கதியை சாட்சியங்கள் மூலம் எவ்வாறு மெய்ப்பிக்கலாம்! என்பதற்கு ஏற்படுத்தப்பட்ட விதிகள்தான் இந்திய சாட்சியச் சட்டம் ஆகும். சாட்சியச் சட்டம் என்று ஒன்று இல்லாவிட்டால், வழக்குகளுக்கு முடிவு இருக்காது. சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்பவர்கள் சாட்சியச் சட்டத்தைப் பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இருபெரும் சாட்சியங்கள்
சாட்சியங்கள் ஆனது  வாய்மொழி சாட்சியம்  என்றும், ஆவண சாட்சியம் என்றும் இரண்டு பெரும் பிரிவுகளாக உள்ளன.  மேற்கண்ட இரண்டு சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு வேறு சில சாட்சியங்களும் உள்ளது. நாம் இங்கு சூழ்நிலை சாட்சியம் பற்றிக் காண்போம். 
சூழ்நிலை சாட்சியம்
நீதிமன்றத்தில் ஒருவர் கொடுத்த சாட்சியத்தில் இருந்து அல்லது அவர் அளித்த ஆவணத்திலிருந்து  வழக்கிலுள்ள சங்கதியினை யூகித்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலை வந்தால், அதுவே சூழ்நிலை சாட்சியம் ஆகும். எடுத்துக்காட்டாக  ஒரு வீட்டில் இருந்து ஒருவர் மண்ணெண்ணைக் கேனுடன் வெளியே செல்வதை பார்த்ததாக ஒருவர் சாட்சி கூறுகிறார். அந்த  வீட்டிற்குள் பெண் இறந்து கிடக்கிறார். அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளது.  ஒருவர் மண்ணெண்ணைக் கேனுடன் வெளியே செல்வதை பார்த்ததாக ஒருவர் சாட்சி கூறியது சூழ்நிலை சாட்சியம் ஆகும். மண்ணெண்ணைக் கேனுடன் வெளியே  சென்ற ஆண், வீட்டுக்கு உள்ளே இருந்த பெண்ணை கொலை செய்து எரித்துள்ளார் என்று வேறு சாட்சியங்கள் இல்லாத பட்சத்தில் யூகித்து அறிந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.
சூழ்நிலை சாட்சியம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டே (வேறு சாட்சியங்கள் இல்லாத பட்சத்தில்) குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றம் தண்டிக்கமுடியும். இதற்கு பல வழக்குகளை எடுத்துக்காட்டாக கூறலாம். அவற்றில் உச்சநீதிமன்றத்தின் பிரபலமான வழக்கு ஒன்றை கீழே காண்போம்.
இந்த வழக்கில் கொலை செய்தவராக குற்றம் சாட்டப்பட்டவர் பூனாவில் தொழில் புரியும் ஒரு டாக்டர். கொலையாகி இறந்து போனவர், பெரும் சொத்துக்கு சொந்தக்காரியான அதே பூனா நகரத்தில் வசித்து வந்த ஒரு விதவை. அந்த பெண்ணிற்கு சர்க்கரை நோயும், எலும்புருக்கி நோயும் இருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்து வந்தவர்தான் மேலே கண்ட டாக்டர் ஆவார். தனது உடல் உபாதைகள் மட்டுமல்ல, தனது சொத்து விபரங்கள் அனைத்தும் அந்த டாக்டரிடம் அந்தப் பெண்மணி தெரிவித்து இருந்தாள்.
மருத்துவ ஆலோசணைப் பயணம்
இந்த நிலையில் அந்தப் பெண்மணிக்கு இருக்கின்ற நோய்க்கு மும்பையில் உள்ள சிறப்பு மருத்துவரிடம் ஆலோசணை பெறலாம்! என்று அந்த டாக்டர் அழைத்ததன் பேரில் அந்தப்  பெண்மணி அவருடன் பூனாவில் இருந்து 12.12.1956 அன்று இரவு 10 மணியளவில் ரயில் மூலம் மும்பைக்குப் பயணமானார்.  மும்பையை அதிகாலை 05.45க்கு அடைந்தனர். ஆனால், மும்பையை அடைந்தபோது அந்தப் பெண்மணி மயக்கமாக இருந்தார். மயக்கமாக இருந்த அந்த பெண்மணியை  டாக்டர் மும்பை ஜி.டி.மருத்துவமனையில் அட்மிட் செய்தார். அங்கு அவருக்கு சர்க்கரை வியாதி காரணமாக ஏற்பட்ட கோமா என்று கருதி அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆவால், நினைவு திரும்பாமலேயே அந்தப் பெண்மணி 13.12.1956  பகல் 11.30 மணிக்கு இறந்துவிட்டார். அந்தப் பெண்மணியின் உடலை 14.12.1956 வரை யாரும் வாங்க வராத காரணத்தால், அது மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சந்தேகத்தின் பெயரில் போஸ்ட்மார்ட்டம்
மருத்துவக் கல்லூரியின் பியூன் ஒருவர் அந்தப் பெண்மணியின் உடலில் இருந்த சிராய்ப்புகளைக் கண்டு அதனை பிண ஆய்வாளருக்கு தெரிவித்தார்.  சந்தேகத்தின் பெயரில் அந்த உடல் 19.12.1956 அன்று போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. அந்தப் பெண்மணி விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், ஆய்வில் அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. எனவே, அந்தப் பெண்மணி இறப்பில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று முடிவு செய்யப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
காவல்துறையில் புகார் அளித்த உறவினர்கள்
இந்த நிலையில் பூனாவில் இருந்த அந்தப் பெண்மணியின் உறவினர்கள் நீண்ட நாட்களாக அவரை காணவில்லை என்பதால் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்தப் பெண்மணி இறந்து சுமார் 14 மாதங்கள் கழித்து நடைபெற்ற புலன்விசாரணையில், சொத்துக்கு ஆசைப்பட்டு ஏதோ ஒரு விஷத்தைக் கொடுத்து அந்தப் பெண்மணியை கொன்றதாக, அந்த டாக்டர் மீது காவல்துறையினர் இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 302ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.  அந்த டாக்டருக்கு மரண தண்டணை வழங்கப்பட்டது. அந்த டாக்டர் மேல்முறையீடு செய்தார். மும்பை உயர் நீதிமன்றம் தண்டணையை உறுதி செய்தது. இந்தக் கொலைக்கு நேரடி சாட்சியம் என்று யாரும் இல்லை. சூழ்நிலை சாட்சியங்களின் அடிப்படையில் அந்தப் பெண்மணியை கொன்றவர் இந்த டாக்டர்தான் என்று வழக்கில் முடிவு செய்யப்பட்டது.  
சூழ்நிலைச் சாட்சியம்
இந்த டாக்டர்தான் அந்தப் பெண்மணியை கொலை செய்தார் என்பதற்கு கிடைத்த சூழ்நிலை சாட்சியங்கள் என்னென்ன?
  1. இந்த டாக்டரும், அந்தப் பெண்மணியும் ரயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்தனர்.
  2. பூனாவில் இருந்து மும்பைக்கு வேகமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல இருக்க மிக மெதுவாக செல்லும் பாஸஞ்சர் ரயிலை டாக்டர் தேர்ந்தெடுத்தார்.
  3. பூனாவில் ரயிலில் ஏறும்போது அந்தப் பெண்மணி மிக ஆரோக்யமாக நடந்து சென்று ரயிலில் ஏறியதை பலர் பார்த்ததாக சாட்சி கூறினர்.
  4. டாக்டர் அந்த ரயில் பெட்டியில், தானும் அந்தப் பெண்மணியும் மட்டுமே தனித்து பயணம் செய்வதற்கு வசதியாக தனது செல்வாக்கை பயன்படுத்தி ஏற்பாடு செய்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
  5. அந்தப் பெண்மணி ரயிலில் திடீரென மயக்கமடைந்து விட்டதாக மருத்துவமனையில் சேர்க்கும்போது தெரிவித்திருந்தார். ஆனால், அந்தப் பெண்மணி எந்தவித நோயினாலோ அல்லது சர்க்கரை வியாதியினால் ஏற்படும் மயக்க நிலையினாலோ  இறக்கவில்லை! என்று மருத்துவ நிபுணர் டாக்டர் மேத்தா சாட்சியம் அளித்தார். ஏனென்றால், மேற்படி கோமாநிலை திடீரென ஏற்படாது. அதற்கு முன் பல தொந்தரவுகள், உடல் உபாதைகள் ஏற்படும் என்றும் சாட்சியம் அளிக்கப்பட்டது.  
  6. மேலும், மருத்துவ நிபுணர் டாக்டர் மேத்தா தனது சாட்சியத்தில் அங்கீகரிக்கப்படாத விஷம் ஏதோ அந்தப் பெண்மணிக்கு கொடுத்ததன் விளைவாக அவர் இறந்திருக்கலாம் என்றும், காலம் கடந்து பரிசோதனை செய்ததால் அதனை தங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என்றும் கூறினார்.
  7. அந்தப் பெண்மணி இயற்கையாக இறந்துவிட்டார் என்று அறிக்கை தயாரிக்கும்படி மருத்துவமனை மருத்துவருக்கு தனக்குத் தெரிந்த ஒரு நண்பர் மூலம் லஞ்சம் கொடுக்க அந்த டாக்டர் முயற்சி செய்திருந்தார்! என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
  8. மெதுவாக கொல்லக்கூடிய விஷத்தை அந்த டாக்டர் பூனாவில் ஒரு கடையில் வாங்கி, தனது கையினாலேயே ரயில் பயணத்தில் அந்தப் பெண்மணிக்கு கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறார்! என்பது ஊர்ஜிதமானது. 
  9. தனது கடையில்தான் டாக்டர் அந்த விஷத்தை வாங்கினார்! என்றும், எதற்காக இதை வாங்குகிறீர்கள்? என்று தான் அவரை கேட்டபோது, தேவையில்லாமல் எதையும் என்னிடம் கேட்காதே! என்று டாக்டர் கூறியதாக கடை உரிமையாளர் சாட்சியம் அளித்தார்.
  10. மும்பை மருத்துவமனையில் அந்தப் பெண்மணியை சேர்க்கும்போது அந்தப் பெண்மணிக்கு தவறான பெயரையும் உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் மருத்துவமனையில் டாக்டர் தெரிவித்துள்ளார்.
  11. பூனா ரயில் நிலையத்தில் அந்தப் பெண்மணி ரயில் ஏறும்போது போட்டிருந்த நகைகள் மும்பையை அடையும் போது அவரது கழுத்தில் காணப்படவில்லை என்று பலர் சாட்சியம் அளித்தனர்.
  12. அந்தப் பெண்மணியை மும்பையில் மருத்துவமனையில் சேர்த்திருப்பதை அவளது உறவினர்கள் எவரிடமும் டாக்டர் தெரியப்படுத்தவில்லை. அந்தப் பெண்மணி இறந்த பிறகு உறவினர்களின் முகவரிகள் டாக்டருக்கு தெரிந்திருந்தும் அவர்களுக்கு அதனை அறிவிக்கவில்லை.
  13. அந்தப் பெண்மணி இறந்தவுடன் அவரது உடலைப் பெற முன்வராமல் டாக்டர் தலைமறைவானார். இதனால், அவர்தான் அந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அதிகமாக்கியது.
  14. அந்தப் பெண்மணியில் உடல் தகனம் செய்யப்பட்ட சில நாட்களுக்குள் அந்தப் பெண்மணியின் போலிக் கையொப்பம் இட்டு அவளது சொத்துக்களின் சில பகுதிகளை டாக்டர் தன்வசப்படுத்திக் கொண்டிருந்தார்.
இதனால், சொத்துக்கு ஆசைப்பட்டு மேற்படி கொலையை டாகடர் செய்துள்ளார் என்று நிரூபணம் ஆகின்றது.  அந்த டாக்டருக்கு மரணதண்டணை அளிக்கப்பட்டது.
வழக்கு எண்: Anant Chintaman Lagu vs State of Bombay AIR 1960 SC 500
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 16.03.2019 

Wednesday, March 6, 2019

இந்திய சாட்சிய சட்டம் பிரிவு - 101

இந்திய சாட்சியச் சட்டத்தில் - மெய்ப்பிக்கும் சுமையைப் பற்றி .....
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
காவல்நிலையத்திலோ, நீதிமன்றத்திலோ எவர்மீதும், யாரும் புகார் அளிக்கலாம். அந்தப் புகாரினை மெய்ப்பிக்கும் சுமை யாருடையது? என்ற கேள்விக்கு இந்திய சாட்சியச் சட்டம் விடை தருகிறது. ஏனென்றால், நீதிமன்றமானது தன்னிடம் தாக்கல் செய்யப்பட்ட எந்த ஒரு வழக்கையும் அளிக்கப்படும் சாட்சியங்களின் அடிப்படையிலும், ஆதாரங்களின் அடிப்படையிலும்,  தீர்த்து வைக்கிறது.
பேனா இருக்கிறது, பேப்பர் இருக்கிறது, எழுதுவோம் புகாரை! என்று பொய்புகாரை எழுதி காவல் நிலையத்திலோ, நீதிமன்றத்திலோ ஒருவர் வழக்கு தொடுக்கலாம். ஆனால், அந்தப் புகாரிலுள்ள சங்கதிகளை மெய்ப்பிக்கும் சுமையானது புகார்தாரருக்கே உள்ளது. நாம் தொடுக்கின்ற வழக்குகளை நாம்தான் மெய்ப்பிக்க வேண்டும். அவ்வாறு மெய்ப்பிக்க முடியாவிட்டால், அந்த வழக்கு காவல்நிலையத்திலும், நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்படும். 
இந்திய சாட்சிய சட்டம் பிரிவு - 101
சட்டப்படியான உரிமை அல்லது பொருள் எதையாவது பற்றி ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டுமென்று ஒருவர் வழக்கு தாக்கல் செய்தால், அது அந்த வழக்கில் கூறியுள்ள சங்கதிகளின் உண்மையைப் பொறுத்து இருக்குமானால், அந்த உண்மைகளை அவரேதான்    மெய்ப்பிக்க   வேண்டும். 
உதாரணம் :
ஒரு குற்றம் செய்ததற்காக ராஜா என்பவர் மீது குமார் என்பவர் வழக்குத் தொடுக்கிறார்! என்று வைத்துக் கொள்வோம். அந்த ராஜா என்பவர் குற்றம் செய்தார்! என்பதை குமார்தான் மெய்ப்பிக்க வேண்டும். 
இந்திய சாட்சிய சட்டம் பிரிவு - 102
ஒருவர் தொடுத்த வழக்கை அவரேதான் நிரூபிக்க வேண்டும் என்பது பற்றி இந்திய சாட்சியச் சட்டம் 101ல் நாம் பார்த்தோம். அவ்வாறு நிரூபித்துவிட்டால் வழக்குத் தொடுத்தவருக்கு வெற்றி கிடைத்துவிடும். ஆனால், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஏதேனும் சங்கதிகளைப் பற்றிக் கூறினால் அந்த சங்கதிகளைக்கூறிய குற்றம் சாட்டப்பட்டவரே அதனை  மெய்ப்பிக்க வேண்டும்
உதாரணம் : 1
பயணச் சீட்டில்லாமல் பயணம் செய்ததாக பயணச் சீட்டு பரிசோதகர் ஒருவரால் ரயில் பயணி ஒருவர் குற்றம் சாட்டப்படுகிறார். தன்னிடம் பயணச்சீட்டு உள்ளதாக விசாரணையில் அந்தப் பயணி கூறுகிறார். தன்னிடம் பயணச்சீட்டு இருப்பதை அந்தப் பயணிதான் மெய்ப்பிக்க வேண்டும்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு - 211
பொய்யான புகாரினை  ஒருவர் நீதிமன்றத்திலோ, காவல்நிலையத்திலோ அளித்தால்  பாதிக்கப் பட்டவர் இந்திய   தண்டணைச் சட்டம் பிரிவு 211ன் கீழ் அவருக்கு  இரண்டு வருட தண்டணை பெற்றுத் தரலாம்.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.03.2019

Friday, January 5, 2018

மின்னணு நகல்களை எதிரிக்கு

இராம் பிரசாத் என்பவர் மீது . . பிரிவு 323 ன் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் இந்த வழக்கில் 5 ஆம் எதிரி ஆவார். மற்ற எதிரிகள் மீது . . பிரிவுகள் 302 மற்றும் 34 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குறுந்தகடு (CD)
இந்த வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு ஆவணங்களும் குறியீடு செய்யப்பட்டது. அதில் ஒரு வீடியோவும், ஒரு குறுந்தகடும் சான்றாவணமாக குறியீடு செய்யப்பட்டது. இராம் பிரசாத் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அந்த குறுந்தகடின் நகலை தனக்கு தர வேண்டும் என்று கூறி ஒரு மனுவை தாக்கல் செய்தார்
காவல்துறை மறுப்பு
அந்த மனுவிற்கு பதிலுரை தாக்கல் செய்த காவல்துறையினர் . . பிரிவு 29 மற்றும் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 3 ஆகியவற்றின்படி குறுந்தகட்டை ஒரு ஆவணமாக கருதக்கூடாது, எனவே இராம் பிரசாத்க்கு குறுந்தகட்டின் நகலை தர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினர்.
கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு
காவல்துறையினரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட குற்றவியல் நடுவர் இராம் பிரசாத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடஉத்தரவிட்டார்
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
அந்த உத்தரவை எதிர்த்து இராம் பிரசாத் இந்த மனுவை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. வைத்தியநாதன் விசாரித்தார்.
இந்திய சாட்சிய சட்டத்தில், 2000 ஆம் ஆண்டில் சட்டம் 21/2000 ன்படி புதிதாக 65(B) என்கிற சட்டப் பிரிவு சேர்க்கப்பட்டு அது 17.10.2000 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி மின்னணு நகல்களை சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதற்கு ஏதுவாக எதிரிக்கு வழங்க வேண்டும். அப்படி எதிரிக்கு வழங்காவிட்டால் அவரால் சாட்சிகளை முழுமையாக குறுக்கு விசாரணை செய்ய முடியாது.
இதுபோக இந்திய தண்டனைச் சட்டத்தில் 17.10.2000 ஆம் தேதியில் புதிதாக சட்டப் பிரிவு 29(A) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதில் மின்னணு ஆவணங்கள் என்ற சொற்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 ல் பிரிவு 2 உட்பிரிவு 1 கூறு (2) ல் கூறப்பட்டுள்ள பொருளையே கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின்படி குறுந்தகட்டின் நகலை பெற எதிரிக்கு உரிமை உள்ளது என்று கூறி இராம் பிரசாத் மனுவை தள்ளுபடி செய்து குற்றவியல் நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதியரசர் உத்தரவிட்டார்.
வழக்கு எண் :  CRL. OP. NO - 18495/2013, dt- 7.1.2014
இராம் () இராம் பிரசாத் Vs ஆய்வாளர், கண்டோன்மெண்ட் காவல் நிலையம், திருச்சி
2014-2-MLJ-CRL-83

நன்றி : முகநூல் நண்பர், வழக்கறிஞர் திரு Dhanesh Balamurugan அவர்கள்
*************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 05.01.2018  

Tuesday, September 12, 2017

ஆவணங்களின் முக்கியத்துவம் பற்றி .....


ஆவணங்களின் முக்கியத்துவம் பற்றி .....
குற்றங்களை வகைப்படுத்தி,  இந்திய தண்டணைச் சட்டத்தின் கீழ்,  அதனைச் செய்தவர்களுக்கு உரிய தண்டணையை வழங்குவதற்கு நீதிமன்றங்களில் இந்திய சாட்சியச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. 
சாட்சியம் என்று சொன்னால், ஒரு நீதிமன்றத்தில் ஒருவராலோ அல்லது பலராலோ கொடுக்கப்படுகின்ற வாக்குமூலங்கள்  அல்லது சமர்ப்பிக்கப்படுகின்ற ஆவணங்கள் ஆகும்.
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 3
எழுத்தால் எழுதப்பட்ட உரையையே நாம் ஆவணம் என்கிறோம். இதனை நீதிமன்றத்தில் சாட்சியமாக அளிக்கும்போது "ஆவண சாட்சியம்" (Documentary Evidence) என்று சொல்கிறோம்.  ஒரு ஆவணத்தில் கூறப்பட்டு உள்ள சங்கதிகளை நிரூபிப்பதற்கு, அந்த ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது தவிர சிறந்தது ஏதுமில்லை. 
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 59
ஆவணங்களில் உள்ள சங்கதிகளை வாய்மொழி சாட்சியங்கள் மூலம் மெய்ப்பிக்க வேண்டியதில்லை. ஏனென்றால், அந்த ஆவணத்தையே ஒரு சாட்சியமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது அதில் உள்ள சங்கதிகளை மெய்ப்பித்து விடலாம். அந்த அளவுக்கு ஒரு சிறந்த சாட்சியம் ( Best Evidence) ஆவண சாட்சியம் ஆகும்.
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 61
ஒரு ஆவணத்திலுள்ள சங்கதிகளை தலைநிலை சாட்சியம் மூலமாகவோ அல்லது சார்நிலை சாட்சியம் மூலமாகவோ நீதிமன்றத்தில் நாம் மெய்ப்பிக்கலாம்
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 62
ஒருவர் ஆவண சாட்சியத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது அந்த ஆவணத்தின் அசலையே தாக்கல் செய்ய வேண்டும்   இந்த  அசல்  ஆவணமானது  “தலை நிலை சாட்சியம்”      
 ( Primary Evidence) அல்லது “முதல் நிலை சாட்சியம்”  ஆகும்.  இதற்கு இணை ஏதுமில்லை. 
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 63
ஆவண சாட்சியத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது அந்த ஆவணத்தின் அசலை தாக்கல் செய்ய முடியாத சமயத்தில் அந்த அசல் ஆவணத்தின் உண்மை நகலை தாக்கல் செய்யலாம். இது சார்நிலை சாட்சியம் (Secondary Evidence)  ஆகும். ஆனால், இது  இரண்டாந்தரமான  சாட்சிய்ம் ஆகும்.
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 64
ஆவணங்களை நீதிமன்றத்தில் மெய்ப்பிக்க தலைநிலை சாட்சியம் மூலமாகவே மெய்ப்பிக்க வேண்டும்.  
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 65
சார்நிலை சாட்சியம்  எந்தெந்த சூழ்நிலைகளில் அளிக்கப்படலாம்? என்பது குறித்து இந்தப்பிரிவு விளக்குகிறது.
  1. எவர் ஒருவருக்கு அந்த ஆவணமானது பயன்படுத்தப்படுமோ, அந்த நபர் அந்த ஆவணத்தின் அசலை வைத்திருக்கும்போது அல்லது அவ்வாறு வைத்திருப்பதாக தோன்றும் போது.
  2. எவருக்கு எதிராக ஒரு ஆவணத்தின் சங்கதிகள் பயன்படுத்தப்படுமோ அவரே அதனை எழுத்து மூலமாக அந்த ஆவணத்தின் சங்கதிகளை ஏற்றுக் கொண்டுள்ளார்! என்று மெய்ப்பிக்கப்படும்போது.
  3. அசல் ஆவணமானது அழிந்து போயிருந்தாலோ அல்லது தொலைந்து போயிருந்தாலோ.
  4. அசல் ஆவணத்தை எளிதாக வெளியில் எடுத்துச் செல்ல முடியாதபோது.
  5. அசல் ஆவணமானது இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு-74ன்படி பொது ஆவணமாக இருக்கும்போது.
  6. அசல் ஆவணமானது எந்த ஒரு சட்டத்தாலும் அனுமதிக்கப்பட்ட வகையில் சான்றளிக்கப்பட்ட நகலாக இருக்கும்போது.
  7. அசல் ஆவணமானது நீதிமன்றத்தில்  வைத்து வசதியாக ஆய்வு செய்வத்ற்கு முடியாதவாறு ஏராளமான பக்கங்களை கொண்டிருக்கும்போது.
தொல்லாவணம் ( Ancient Document) 
ஒரு ஆவணமானது முப்பது ஆண்டுகளுக்கு முந்தையதாக இருந்தால், அதனை தொல்லாவணம் என்கிறோம். எதிர் தரப்பினர் மறுப்பு ஏதும் இல்லாமல் இருந்தால் அதிலுள்ள சங்கதிகள் அனைத்தையும் நீதிமன்றம் உண்மையானது என்று  நம்பிக்கை கொள்ளலாம். ஆனால், சம்பந்தப்பட்ட ஆவணம் அது எழுதப்பட்ட நாளில் இருந்து முப்பது ஆண்டுகளை கடந்ததாக இருக்க வேண்டும். அது அந்த ஆவணத்தில் குறிக்கப்பட்டு இருக்கவேண்டும். 
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 90
மேற்கண்ட தொல்லாவணத்தைப் பற்றி இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 90ல் கூற்ப்பட்டுள்ளது. மேலும், தொல்லாவணம் போல் ஐந்து ஆண்டுகள் ஆகிய மின்னியக்க பதிவேடுகள் (Online Documents) குறித்தும் நம்பிக்கை கொள்ளலாம் என்று புதிதாக சேர்க்கப்பட்ட இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 90-A-3 ல் கூறப்பட்டுள்ளது.
************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Monday, June 5, 2017

இந்திய சாட்சியச் சட்டம் மூலம் ஆவண நகல்களைப் பெற

இந்திய சாட்சியச் சட்டம் மூலம் ஆவண நகல்களைப் பெற.....
(இணைப்பு : மாதிரி கடிதம்)
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தான் ஆவண நகல்களைப் பெற முடியும் என்பது இல்லை. அந்தச் சட்டம் வருவதற்கு முன்பே இந்திய சாட்சியச் சட்டம் (INDIAN EVIDENCE ACT) நமக்கு அந்த உரிமையை வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆவண நகல்களை நாம் எப்படிப் பெறலாம் என்பதைப் பற்றி கீழே காணலாம்.
இந்திய சாட்சியச் சட்டம் - 1872
இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 74ல் பொது ஆவணங்களை பற்றி தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. 
இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 75ல்  தனியார் ஆவணங்களை பற்றி தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. 
இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 76 ஒரு பொது ஊழியரின் வசம் உள்ள பொது ஆவணங்களை ஆய்வு செய்யவும், அவற்றை சான்று ஒப்பம் இட்ட ஆவண நகலாக பெறவும் நமக்கு உரிமையை வழங்கியுள்ளது.  அதற்கென்று சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள கட்டணத்தை நாம் அவர்களிடம் செலுத்த வேண்டும். சான்றொப்பம் இட்டு ஆவண நகல்களை அளிக்க முடியாவிட்டால், அந்த ஆவண நகல்களின் கீழே உண்மை நகல் என்று கையொப்பம் இட்டு பொது ஊழியர் அதனை நமக்கு வழங்க வேண்டும்.
ஆவண நகல்களைப் பெற என்ன செய்ய வேண்டும்? 
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு நீங்கள் எழுதுகின்ற விண்ணப்பத்தின் வலதுபுறத்தில் ஐந்து ரூபாய் கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டவேண்டும். தலைப்பில் இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 76ன் கீழ் ஆவண நகல்கள் வேண்டி விண்ணப்பம் என்று குறிப்பிட வேண்டும்.   அந்தக் கடிதத்தில் உங்களுக்குத் தேவையான ஆவண நகல்களைப் பற்றி குறிப்பிட வேண்டும்.  கடிதத்தை பதிவுத்தபாலில் ஒப்புதல் அட்டை இணைத்து அனுப்ப வேண்டும். 
கடிதம் அனுப்பி 30 நாட்கள் ஆனபிறகும் எந்தவித பதிலும் அவர்கள் உங்களுக்கு தரவில்லை என்றால், ஒரு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அவர்களுக்கு அனுப்பவேண்டும். அந்த நினைவூட்டல் கடிதம் அனுப்பி 15 நாட்கள் ஆனபிறகும் உங்களுக்கு அவர்கள் தரப்பில் இருந்து பதில்  தரவில்லை என்றால், சட்டப்படியான அறிவிப்பு ஒன்றை அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.  
அறிவிப்பு அனுப்பி 15 நாட்கள் ஆன நிலையில்   குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, பிரிவு : 2(4)ன் கீழ்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். அல்லது குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, பிரிவு : 200ன் கீழ்  நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மூலம் வ்ழக்கு தொடுத்து  ஆவண நகல்களைப் பெறலாம். 
இணைப்பு : முகநூல் நண்பர் திரு Vasu Devan  அவர்களின் மாதிரி கடிதம். 

அனுப்புனர் 
                     செ.பெ.வாசுதேவன்
                     மாநில பொதுச் செயலாளர்
                     குளோபல் லா பவுண்டேஷன் 
                     (பதிவு எண்:1/Book No:4/262/2018),
                     ...........................................................................
                     ...................................
                      கரூர் மாவட்டம் - 621311.
பெறுநர்
                   வருவாய் கோட்டாட்சியர் அவர்கள்
                   .....................................................................
                   .....................................................................
                   .....................................................................
ஐயா,
                   பொருள்: இந்திய அரசியலமைப்பு சாசனம்-1950, கோட்பாடு 19(1)அ   மற்றும்  இந்திய சாட்சியச்  சட்டம்-1872,    பிரிவுகள் 74, 76ன் கீழ்  நகல்கள்   கோரும் மனு.
              கீழ்வரும் ஆவணங்களானது இந்திய அரசிலமைப்பு சாசனம் 1950 கோட்பாடு 19(1)அ மற்றும் இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவுகள் 74, 76ன் கீழ் பொது ஆவணங்கள் ஆகும்.
               இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவு 74ன் கீழ் அரசுத்துறை அதிகாரத்தின் கீழ் அதன் செயல்முறைகளோடு இணைந்த ஆவணங்கள் அனைத்துமே பொது ஆவணங்கள் எனப்படுகின்றது. அரசு அதிகாரம் பெற்ற குழுக்கள் அல்லது அவற்றின் பதிவேடுகள், அரசு அதிகாரத்தின் கீழ் இயற்றப்பட்ட ஆவணங்கள், பதிவேடுகள், ஆணைகள், அரசிதழ்கள் உள்ளிட்ட பொது ஆவணங்களை பொதுமக்கள் பார்வையிடலாம். அந்த ஆவணத்தின் நகல் ஒன்று தேவைப்பட்டால், உரிய கட்டணம்  செலுத்தப்படுவதன் பேரில், அதனை இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவு 76ன் கீழ் மனுதாரருக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி வழங்க வேண்டும்.
                   மேற்கண்டவாறு வழங்கப்படுகின்ற நகலின் கீழ் அப்போது அந்த ஆவணத்தை பாதுகாத்து வருகின்ற பொது அலுவலர் அவர்கள் உண்மை நகல் (True Copy) என சான்றளிக்க வேண்டும். அவரது பெயர், பதவி, சான்றளிக்கப்பட்ட நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு அவரது கையொப்பமிடப்பட்டு அலுவலக முத்திரை வைக்கப்பட வேண்டும். மேற்கண்டவாறு சான்று அளிக்கப்பட்டு வழங்கப்படுகின்ற நகல்கள் “சான்று அளிக்கப்பட்ட நகல்கள்” எனப்படுகின்றன. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு எண்:W.P.(C), 210/2012 உத்தரவில், இந்திய சாட்சியச் சட்டத்தைப்பற்றி மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
                    இவ்வாறு பெறப்பட்ட சான்று நகல்களை இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவு 77ன் கீழ்  நீதிமன்றத்தில் தக்க சான்றுகளாக தாக்கல் செய்யலாம் என்பதையும், இவ்வாறு தங்களால் வழங்கப்படுகின்ற தகவல்கள் மற்றும் சான்று நகல்கள் தவறானதாக இருந்தால், இந்திய தண்டணைச் சட்டம் 1860, பிரிவு 166ன் கீழ் கடமை தவறியது மற்றும் ஷை சட்டம் பிரிவு 167ன் கீழ் தவறான ஆவணத்தை உருவாக்கியது என்ற  குற்றங்களை தாங்கள் செய்தவர் ஆவீர்கள்!  என்பதையும் தங்களது கவனத்திற்கு கொண்டுவர கடமைப்பட்டு உள்ளேன்.
                   வருவாய்த்துறையில் பணியாற்றி வருகின்ற பணியாளர்கள் தங்களது அன்றாடப் பணிகள் குறித்த முழு விபரங்கள் அடங்கிய நாட்குறிப்பை பராமரித்து வரவேண்டுமென வருவாய் நிலை ஆணைகளின் வழியாக உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, வருவாய் வட்டாட்சியர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த வேலைகளை காட்டும் நாட்குறிப்பொன்றை பிரதி மாதம் 5ம் தேதிக்குள் வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பவேண்டும் என்று வருவாய்த்துறை அரசாணை (நிலை)  எண்:581, நாள்:03.04.1987ல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதையும். தங்களது கவனத்திற்கு கொண்டுவர கடமைப்பட்டு உள்ளேன்.
  1. மேற்கண்ட விதிமுறைகளின்படி பழனி வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு கடந்த 01.01.2017 முதல் 31.03.2017 வரை தங்களால் சமர்ப்பிக்கப்பட்ட நாட்குறிப்புகளின் நகல்களை (Certified Copies)  இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவு 76ன் கீழ் வழங்கவும். 
  2. மேற்கண்ட விதிமுறைகளின்படி பழனி வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் ஆய்வு குறிப்புரையுடன் கூடிய கடந்த 01.01.2017 முதல் 31.03.2017 வரையிலான தங்களின் நாட்குறிப்புகளின் நகல்களை (Certified Copies)  இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவு 76ன் கீழ் வழங்கவும். 
                  மேற்படி சான்று நகல்கள் நீதிமன்றத்தில் சான்றாவணமாக சமர்ப்பிக்க வேண்டியதிருப்பதால், ஒருங்கிணைந்த விதி 1971ன்படி மிகவும் அவசரமாக 7 தினங்களுக்குள் வழங்கிட கோருகிறேன். இத்துடன் ரூ.5/-க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டியுள்ளேன். மேற்கண்ட நகல்களைப் பெற ஏதேனும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதிருந்து, அதனை எனக்கு உரிய வழியில் தெரிவித்தால் அதையும் செலுத்த தயாராக இருக்கிறேன் என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாள்    :  XX.XX.2019    .                                                                                                                               இப்படிக்கு
இடம் :  
                   
      

******************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி