disalbe Right click

Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Sunday, June 25, 2017

விழிப்புணர்வுடன் பிச்சையெடுப்பதால் நிகழும் அற்புதம்?!

விழிப்புணர்வுடன் பிச்சையெடுப்பதால் நிகழும் அற்புதம்?!

ஆன்மீகப்பாதையில் பிச்சை எடுப்பதென்பது வளர்ச்சிக்கான முக்கியமான கருவியாக பார்க்கப்படுகிறது! ஆனால், நாகரீக மனிதனின் பார்வையில் பிச்சையெடுப்பது அவமானத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது!
சத்குரு: தனது தேவைகள் அனைத்திற்கும் பிச்சை எடுத்த ஒரு பிச்சைக்காரர் இருந்தார். அவர் தனது வாழ்க்கை முழுவதும் ஒரு கிழிந்த அங்கியுடன் வாழ்ந்தார். மெதுவாக, அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு சம்பாதித்தார். மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அவரிடம் ஆலோசனை கேட்டு அவர் பின்னால் செல்லத் துவங்கினர். மிகவும் விவேகமான ஒருவராக அவர் கருதப்பட்டார். அவர் புகழ் ஊரெல்லாம் பரவ, அரசரும் இந்த செய்தியைக் கேட்டு அவரிடம் அறிவுரை கேட்டு அவரை சந்திக்கத் துவங்கினார்.

ஒருநாள் அரசர் அவரைப் பார்த்து, “நீங்கள் பிச்சைக்காரராக இருக்கக்கூடாது, நீங்கள் எனது அரசவையில் அமைச்சராக இருக்கவேண்டும்என்றார். அதற்கு அந்த பிச்சைக்காரர், “நீங்கள் வழங்கும் இந்த பணி எனக்கு அர்த்தமற்றது, ஆனால் மக்களுக்கு இது உபயோகமாக இருக்கப்போகிறது என்றால், ஒரே ஒரு நிபந்தனையுடன் இதனை நான் ஒப்புக்கொள்கிறேன். எனக்கு அரண்மனையில் ஒரு அறை வேண்டும், அதற்குள் எவரும் வரவோ, சோதனை செய்யவோ கூடாது, நீங்கள் உட்பட எவரும் அந்த அறைக்குள் வரக்கூடாது. அப்படி எவராவது வந்தால், அதற்குப்பிறகு நான் உங்கள் அமைச்சராக இருக்கமாட்டேன்என்றார். அதற்கு அரசர், “சரி, நான் உங்களுக்கு ஒரு அறை கொடுக்கிறேன். அதை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் அறையை நான் எதற்காக பார்க்க நினைக்கப்போகிறேன்?” என்றார்.

சில வருடங்கள் இது தொடர்ந்தது. இப்போது அவையின் முக்கிய மந்திரியாக பதவி ஏற்றிருந்த பிச்சைக்காரர், தனது கிழிந்த அங்கியுடன் இனி நடமாட முடியாது என்பதால் நல்லவிதமான உடைகளை உடுத்திக்கொண்டார். காலப்போக்கில் மக்கள் அனைவரும் அவரை போற்றத் துவங்கினர், அவர் அரசருக்கும் மக்களுக்கும் மிகவும் பிரியமான மந்திரியாக மாறினார். அவருடைய புகழையும் வெல்லமுடியாத விவேகத்தையும் கண்ட பிற அமைச்சர்கள் பொறாமை கொண்டனர். சில அமைச்சர்கள், “அவர் அந்த அறையில் சந்தேகத்திற்குரிய எதையோ வைத்திருக்கிறார். அதனால்தான் எவரையும் உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை. அது அரசருக்கும் தேசத்துக்கும் எதிரான ஏதோவொன்றாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் எதற்காக இப்படி எவரையும் நுழையவிடாமல் வைத்திருக்கவேண்டும்?” என்று சிந்திக்கத் துவங்கினர்.

இந்த வதந்திப்பேச்சு பரவி அரசரின் காதுகளை அடைந்தது. அரசரும் என்னவென்று கண்டுபிடித்துவிட வேண்டும் என்று நினைத்து, ஒருநாள் முக்கிய மந்திரியிடம், “உங்கள் அறையில் என்ன இருக்கிறதென்று நான் பார்க்க வேண்டும்என்றார். அதற்கு அமைச்சர், “நீங்கள் பார்க்கலாம், ஆனால் அந்த அறைக்குள் நீங்கள் நுழைந்த மறுகணமே நான் திரும்பிச் சென்றுவிடுவேன். உங்கள் அமைச்சராக இருக்கமாட்டேன்.என்றார். அவரின் விவேகத்தை நன்கு அறிந்த அரசர், இப்படியொரு அமைச்சரை இழக்க மனமின்றி தன் ஆர்வத்தை கட்டுப்படுத்திக்கொண்டார்.

ஆனால் சிலநாட்களில், மக்கள் அவரிடம் சொன்ன கதைகளையும், “நீங்கள் அரசராயிற்றே, உங்களுக்குத் தெரியாத ரகசியம் உங்கள் அரண்மனையில் இருக்கக்கூடாதுஎன்ற அறிவுரையையும் கேட்டு, அரசர் மீண்டும் பதற்றமடைந்தார். பிறகு ஒருநாள் விடாப்பிடியாக அரசர் சொன்னார், “நான் இன்று உங்கள் அறையை பார்த்தே தீரவேண்டும்.மந்திரி அதற்குச் சம்மதித்தார், அதனால் அரசர் உள்ளே சென்றார். அந்த அறையில் அவர் எதையும் காணவில்லை. அது ஒரு காலியான, வெற்று அறையாக இருந்தது. சுவற்றில் பிச்சைக்காரனாக இருந்தபோது அணிந்த அந்த கிழிந்த அங்கி தொங்கிக்கொண்டு இருந்தது.

இதைக் கண்ட அரசர், “இதை எதற்காக ரகசியமாக வைத்துக்கொண்டீர்கள்? இங்கு எதுவும் இல்லையே!என்று கேட்டார். அதற்கு மந்திரி, “பகலில் நான் மந்திரி. இரவில் அந்த அங்கியை அணிந்துகொண்டு தரையில் படுத்துத் தூங்கினேன். இதனால் அமைச்சராக இருந்த எனது பதவியில் நான் சிக்கிப்போகவில்லை. ஆனால் இப்போது நம் ஒப்பந்தத்தை நீங்கள் மீறிவிட்டீர்கள், இனி இது செல்லாது.என்றபடி கிழிந்த அங்கியை அணிந்துகொண்டு வெளியேறிச் சென்றார்.
விழிப்புணர்வாக பிச்சை எடுப்பது
இந்தியாவில் பிச்சை எடுப்பது எப்போதும் ஆன்மீக பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளது. உங்கள் உணவை நீங்கள் தேர்வு செய்யவில்லை, பிச்சை எடுத்து மக்கள் என்ன வழங்கினாலும் அதை உண்டு வாழ்ந்தீர்கள். ஆன்மீகப்பாதையில் இருந்த ஒருவர் உங்கள் வீட்டின் முன் பிச்சை கேட்டால், அவருக்கு நீங்கள் உணவு வழங்குவது மிகப்பெரிய பாக்கியமாகக் கருதப்பட்டது. இன்று இந்த பாரம்பரியங்களை தவறாக பயன்படுத்தியுள்ளார்கள். பலர் ஆன்மீகத் தேடுதலில் இருப்பவர்கள் போல உடை அணிந்தபடி பணத்தையும், உணவையும் மட்டும் தேடும் சாதாரண பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள். மக்கள் விழிப்புணர்வாக பிச்சை எடுத்தபோது, அதற்கு முற்றிலும் மாறுபட்டதொரு அர்த்தமும், சாத்தியமும் இருந்தது.
உங்கள் முன்னால் யாரோ ஒருவர் கையேந்தும்போது, அதை அவர் தவறாகப் பயன்படுத்துவதாக நீங்கள் உணர்ந்தால் நீங்கள் பிச்சை இடாமல் நகர்ந்து செல்லலாம். ஆனால் உண்மையான தேவையினால் அந்த செய்கை வந்திருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால், மனிதராக நீங்கள் அதற்கு பதில் கொடுக்க வேண்டும். நீங்கள் தெருவில் யாரோ ஒருவரிடம் கையேந்துவது எவ்வளவு கடினமாக இருக்கும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த மனிதர்கள் தங்களைத் தாங்களே அந்த நிலைக்கு உட்படுத்துகிறார்கள்.
ஒரு பிச்சைக்காரர் வேறு வழியறியாமல் அப்படி செய்யலாம், ஆனால் ஒரு சந்நியாசி விழிப்புணர்வாக தன்னுடைய வளர்ச்சிக்காக அப்படி செய்கிறார். தன் குப்பையால் தான் நிரம்பிவிடக்கூடாது என்பதற்காக செய்கிறார். ஒரு பிச்சைக்காரருக்கு அப்படிப்பட்ட எந்தவொரு உயர்ந்த குறிக்கோளும் கிடையாது, வயிற்றை அவராகவே நிறைக்க முடியாத நிலைக்குப் போய்விட்டதால் கையேந்துகிறார்.
ஊனம் என்பது ஒரு கையையோ, காலையோ தொலைப்பதல்ல. நீங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து உணரும் விதத்திலேயே ஊனமாக இருக்கமுடியும். சொல்லப்போனால், நம் ஜனத்தொகை முழுவதுமே சிந்திக்கும் விதத்தாலும் வாழ்க்கை குறித்த உணர்வாலும் ஏதோவொரு விதத்தில் ஊனமுற்றுத்தான் இருக்கிறது. அப்படித்தான் பிச்சைக்காரனும் தன்னைத் தானே ஒரு மூலைக்குத் தள்ளிக்கொண்டான், பிழைப்பை சம்பாதிக்க பிச்சை எடுப்பதுதான் மிக சுலபமான வழி என்ற முடிவுக்கு அவன் வந்துவிட்டான்.
உங்களை கீழே உதிர்ப்பது
ஆன்மீகப்பாதையில் இருப்பவர், தன்னைத் தானே உதிர்ப்பதற்காகவே பிச்சை எடுக்கிறார். என் பிழைப்பையும், பணத்தையும், உணவையும், வீட்டையும் நானே சம்பாதிக்கிறேன்என்பது உங்கள் அகங்காரத்தின் மிகப்பெரிய அங்கம் வகிக்கிறது. ஒருநாள் ஒரு விருந்தினர், கைகளில் சில பூக்களை ஏந்தியபடி கௌதம புத்தரைக் காண வந்தார். ஒரு குருவைக் காண வரும்போது, அவருக்கு அர்ப்பணிக்க மலர்களை எடுத்துச்செல்வது நமது கலாச்சாரத்தில் உள்ள வழக்கம்.
அவர் வந்ததும் கௌதம புத்தர் அவரைக் கண்டு, “கீழே போடுஎன்றார். அவர் சுற்றியும் பார்த்துவிட்டு, “எதைக் கீழே போடுவது?” என்று குழம்பிப்போனார். அவர் கொண்டுவந்த மலர்களைக் கீழே போடச் சொல்கிறார் என்று எண்ணி தயங்கினார். ஆனால் இவற்றை உங்களுக்காக கொண்டுவந்தேன்என்றார். அதற்கு கௌதம புத்தர் மீண்டும் கீழே போடுஎன்றார். உடனே அவர் கையிலிருந்த பூக்களை கீழே போட்டார். கௌதமர் அவரை மீண்டும் பார்த்து, “கீழே போடுஎன்றார். அதற்கு அவர், “நான் மலர்களை கீழே போட்டுவிட்டேன். உங்களுக்காக பரிசாகக் கொண்டுவந்தேன். ஆனால் நீங்கள் கீழே போடச் சொன்னீர்கள். போட்டுவிட்டேன். இப்போது கீழே போட வேறென்ன இருக்கிறது?” என்று கேட்டார். கௌதமர் சொன்னார், “இல்லை, முதலில் உங்களை கீழே போடுங்கள். மலர்கள் ஒரு பிரச்சனையல்ல. மலர்களை எனக்காக பறித்தீர்கள், அது பரவாயில்லை, அவற்றை நான் பெற்றுக்கொள்கிறேன். ஆனால் உங்களை கீழே போடுங்கள்.
பிச்சை எடுப்பது உங்களை நீங்களே கீழே போடுவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது. ஏனென்றால் பிழைப்பை சம்பாதிக்கும்போது உங்களை நீங்கள் ஒரு குவியலாக சேர்த்துக்கொள்கிறீர்கள். ஆனால் உங்கள் பிழைப்பை சம்பாதிக்கும் திறமை உங்களுக்கு இருப்பதை நன்கு உணர்ந்திருந்தும் பிச்சை எடுப்பதை தேர்ந்தெடுக்கும்போது, இன்னொருவர் முன்னால் கையேந்தி, உங்களை நீங்கள் உதிர்க்கிறீர்கள். இது ஒரு மனிதருக்குள் நிகழும் அபாரமான தன்னிலை மாற்றம். மனிதர்கள் உங்களுக்கு உணவு தரலாம், அல்லது உங்களை வெளியே போகச் சொல்லலாம், அது ஒரு பொருட்டல்ல, ஆனால் விழிப்புணர்வாக பிச்சை எடுப்பது சாதாரண விஷயமல்ல.
நன்றி : தினமலர் நாளிதழ் - 20.06.2017