disalbe Right click

Showing posts with label எச்சரிக்கைப் பதிவுகள். Show all posts
Showing posts with label எச்சரிக்கைப் பதிவுகள். Show all posts

Friday, April 10, 2020

கொரோனா நோயை ஒருவரால் மற்றவருக்கு பரப்ப முடியுமா?

கொரோனா நோயை ஒருவரால் மற்றவருக்கு பரப்ப முடியுமா?
கொரோனா வைரஸ் 
கொரோனா நோய் என்பது முதலில் தொற்று நோய் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். எந்த ஒரு நோயுமே ஆர் நாட் (R0) ஆர் நாட் எனப்படும் ஓர் அளவுகோலை வைத்துத்தான் அதன் பரவும் தன்மை கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், கோவிட் - 19 கொரோனா வைரஸின் ஆர்.நாட் அளவு 1.5 முதல் 4 வரை இருக்கிறது என்று ஆய்வுகள் சொல்கிறது. அதாவது R0 மதிப்பென்பது 2.5 என எடுத்துக்கொண்டால், கொரோனா தொற்று கொண்ட ஒரு நபர் 30 நாள்களில் 406 நபர்களுக்கு அந்தத் தொற்றைப் பரப்புவார்.
அந்த R0 மதிப்பென்பது கூடுதல் ஆகும்போது அவர் இன்னும் அதிகமாக நபர்களுக்கு நோயை பரப்புகின்ற தன்மையை பெறுவார்.
தனக்கு நோய் இருக்கிறது என்பதே தெரியாமல் பரப்புகிறவர்
தனக்கு கொரோனா நோய் இருக்கிறது என்பதே தெரியாமல் பரப்புபவர் தானும் அவதிப்பட்டு, மற்றவர்களையும் அவதிக்குள்ளாக்குவார். இதனால்தான் நமது மத்திய, மாநில அரசாங்கங்கள், வீட்டில் இருங்கள்!, விலகி இருங்கள்! என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். தவிர்க்க முடியாத பட்சத்தில் வெளியில் செல்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், பெரும்பான்மையான மக்கள் இதனை கடைபிடிப்பது இல்லை. ஆகையால் பாதிப்பு இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால், ஊரடங்கு உத்தரவை நீடிக்கும் நிலைக்கு அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடியை பொதுமக்களே உருவாக்கி இருக்கிறார்கள்.
தனக்கு நோய் இருக்கிறது என்பதே தெரிந்தே பரப்புகிறவர்
தனக்கு கொரோனா நோய் இருக்கிறது என்பதே தெரிந்தே பரப்புபவர்களும் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு டெல்லியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவர் புதுச்சேரிக்கு நேர்முகத் தேர்வுக்காக வந்திருக்கிறார். ஊரடங்கு உத்தரவு காரணமாக அவரால் டெல்லி செல்ல முடியவில்லை. விழுப்புரத்தில் செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு செய்திருந்த முகாமில் தங்கி இருந்திருக்கிறார். அந்த முகாமில் இருந்தவர்களுக்கு 07.04.2020 அன்று பரிசோதணை செய்த போது, அவருக்கு நோய் தொற்று இருக்கிறது என்று ஆய்வில் கண்டுபிடித்து அவர் தங்கியிருந்த முகாமிற்கு சென்று பார்த்த போது அவர் அங்கிருந்து எங்கோ சென்றுவிட்டார். ஏழு தனிப்படைகள் அவரை தற்போது தேடிக் கொண்டிருக்கிறது. அவர் எங்கே இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.
குறிப்பு: இவர் 14.04.2020 அன்று செங்கல்பட்டில் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது
அவர் இப்போது அந்த நோயை எத்தனை பேருக்கு பரப்பி இருக்கிறாரோ தெரியவில்லை. அவருக்கு நோய் இருக்கிறது என்பது தெரியாமல் எத்தனை பேர்கள் அவருடன் பழகிக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. அவருக்கு நோய் இருக்கிறது என்பது அவருக்கு தெரிந்திருக்கலாம். அதனால், அதன் தாக்கம் அதிகமாகும்போது அவர் மீண்டும் ஆஸ்பத்திரிக்கே திரும்பி வரலாம். அவர் பிழைத்துவிடலாம். ஆனால், அவரால் நோய் தொற்றுக்கு ஆளாகி நோய் இருக்கிறது என்பதே தெரியாதவர்களின் கதி என்னாகும்?.
சமூக விலகலினால் என்ன பயன்?
பொதுமக்கள் கட்டுப்பாடுடன் சமூகவிலகலை கடைபிடித்தால், அதாவது முக கவசம் அணிந்து கொண்டு, மற்ற மனிதருடன் இருக்கும்போது இருவருக்கும் உள்ள இடைவெளியை 3 அடி தூரமாக வைத்துக் கொண்டால், ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கொரோனா வைரஸ் பரவாது.
ஊரடங்கு உத்தரவு
ஆகவே மக்களே, அரசு உத்தரவின்படி ஊரடங்கு உத்தரவை மதியுங்கள். ஒத்துழைப்பு தாருங்கள். சமூக விலகலை கடை பிடியுங்கள். வீட்டிலேயே இருங்கள். விலகியே இருங்கள். வாழ்வதற்கு முதலில் உயிர் முக்கியமானது. அதற்குப் பிறகுதான் உணவு.
****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 10.04.2020

Saturday, June 2, 2018

நம்பரும் போயிடும்… பணமும் திருடப்படும்!” எச்சரிக்கை!


நம்பரும் போயிடும்பணமும் திருடப்படும்!” – டிஜிட்டல் திருடர்களின் புதிய வழி
தொழில்நுட்ப வளர்ச்சியால், டிஜிட்டல் உலகில் நன்மைக்கு ஈடாகப் பல தீமைகளும் நாள்தோறும் நிகழ்கின்றன. டெக்னாலஜியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் குற்றவாளிகள் தற்போது புதிதாக `சிம்-ஸ்வாப்(SIM-SWAP) என்னும் முறையைக் கையாள்கின்றனர்.
ஹைதராபாத் சைபர் க்ரைம் காவல் நிலையம் சில நாள்களுக்கு முன்பு ஃபேஸ்புக் பதிவில் தகவல் ஒன்றை வெளியிட்டது. அதில் தற்போது சிம்-ஸ்வாப் என்ற புது வழியில் குற்றங்கள் நடைபெறுவதாகவும், அது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைத் திருடிப் பண மோசடியிலும் அவர்கள் ஈடுபடுவதாக அதில் குறிப்பிட்டு அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியுள்ளனர்.
`சிம்-ஸ்வாப்மூலம் மோசடி எவ்வாறு நிகழ்கிறது?
புதிதாக சிம் கார்டு ஒன்றை வாங்கி, ரேண்டமாக ஏதோ ஓர் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளும் குற்றவாளிகள், தங்களை வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக அறிமுகம் செய்துகொள்கின்றனர். அவ்வாறு தொடர்பு கொண்டு, “தங்களின் மொபைல் எண்ணுக்கு 10 ஜிபி இன்டர்நெட் இலவசமாகக் கிடைத்திருக்கிறது. அதை ஆக்டிவேட் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் சொல்லும் 16 இலக்கு எண்ணை 121 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் இலவச இன்டர்நெட் பேக் ஆக்டிவேட் செய்யப்படும்என்று கூறித் தொடர்பைத் துண்டிக்கின்றனர். அவர்களால் புதியதாக வாங்கப்பட்ட சிம் கார்டில் இருக்கும் எண்ணைத்தான் அவர்கள் 16 இலக்கு எண்ணாக நம்மிடம் சொல்வார்கள்.
அதாவது நமது மொபைல் எண்ணை 3ஜி வசதியிலிருந்து 4ஜி வசதிக்கு மாற்றுவதற்கு இந்த முறையைத்தான் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செய்கின்றன. உங்கள் கையில் ஒரு வெற்று சிம்கார்டைக் கொடுத்துவிடுவார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்ட புதிய சிம் கார்டின் 16 இலக்கு எண்ணை 121 என்ற எண்ணுக்கு உங்கள் மொபைலிலிருந்து குறுஞ்செய்தியாக அனுப்பிய பிறகு சில நேரத்தில் உங்கள் பழைய சிம் கார்டு செயலிழந்துவிடும். பிறகு உங்கள் கையில் கொடுக்கப்பட்ட புதிய சிம்கார்டை மொபைலில் போட்டுப் பயன்படுத்தலாம். அது 4ஜி வசதிக்கு மாற்றப்பட்டிருக்கும்.
அவ்வாறு ஒரு சிம்கார்டை வாங்கிக் கொள்ளும் இந்த நூதனத் திருடர்கள், ரேண்டமாக ஏதோ ஓர் எண்ணை, (உங்கள் எண் என வைத்துக் கொள்வோம்) அழைத்து இலவச இன்டெர்நெட் இருப்பதாக ஆசை காட்டுகின்றனர். உங்களை அதற்கான குறுஞ்செய்தி அனுப்ப வைப்பதன் மூலம் உங்கள் எண் அவர்கள் கைக்கு மாறிவிடுகிறது. அந்த மொபைல் எண்ணில் நீங்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளுக்கான செயலிகள் (Apps) மீண்டும் வேறு மொபைலில் பதிவிறக்கப்படும்போது உங்கள் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) கூட அவர்களுக்கே செல்வதால் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைச் சுலபமாகத் திருடிவிட முடியும்.
கொஞ்ச நேரம் ரீசார்ஜ் கடையில் நின்றால் போதும். ஒவ்வொரு நெட்வொர்க்குக்கும் குறைந்தது 5 எண்கள் நம் காதில் விழுந்துவிடும். அதைக் குறிப்பெடுத்துக்கொள்கிறார்கள். அந்த எண் ஏர்டெல்லா, வோடோஃபோனா என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்கிறார்கள். புது சிம் ஆக்டிவேட் ஆனதும் பேடிஎம் போன்ற பணப்பரிமாற்ற ஆப்களை அவர்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். .டி.பி மூலம் அதுவும் ஆக்டிவேட் ஆகிவிடும். அதன்பின் நம் பணமும் களவுபோகும். அதோடு பாதிக்கப்பட்டவரின் மொபைல் நம்பரை வைத்துப் பல குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளன.
இந்த மாதிரியான ஒரு குற்றவாளியிடம் சிக்கிய மும்பையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தன் வங்கிக் கணக்கில் இருந்த 24,000 ரூபாயை இழந்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் இதுவரை 20,300 க்கும் மேற்பட்ட சிம்-ஸ்வாப் வழக்குகள் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களைக் கேட்டோம். அதற்குப் பதிலளித்த அவர்கள், “எப்போதும் எங்கள் மையத்திலிருந்து எக்காரணம் கொண்டும் தங்களுக்கு இவ்வாறு 16 இலக்கு எண்களைக் கொடுத்து அனுப்பச் சொல்ல மாட்டோம். மேலும் தங்களுக்கு வரும் OTP எண்கள் எதையும் அனுப்புமாறும் நாங்கள் கேட்க மாட்டோம். எனவே, அவ்வாறு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ வந்தால் அதற்குப் பதில் அளிக்காமல் எங்களிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்என்றனர்.
இதே போன்ற தொழில்நுட்பக் குற்றங்கள் பல நிகழ்ந்து வருவதால், தங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் இலவச இன்டர்நெட் பேக், புதிய பிரத்யேக ஆஃபர் என்ற செய்திகளையும் அழைப்புகளையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துத் தொடர்ந்தால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்கலாம்.
கொஞ்சம் உஷாராகத்தான் இருந்தாக வேண்டியிருக்கிறது.
 ச.அ.ராஜ்குமார்
நன்றி : விகடன் செய்திகள் - 28.05.2018 - https://www.vikatan.com