disalbe Right click

Sunday, November 15, 2020

பூர்வீக சொத்து - பேரன், பேத்திகளுக்கு பங்கு!

பூர்வீக சொத்து - பேரன், பேத்திகளுக்கு பங்கு! 

எங்கள் ஊரில் இப்படி ஒரு பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம்? சட்ட வல்லுநர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது என்று கடந்த 28.10..2020 அன்று முகநூலில் ஒரு பதிவு போட்டிருந்தேன்.
பல நண்பர்கள் அதற்கு பதில் அளித்திருந்தார்கள். பலர் சரியான பதிலை அளித்திருந்தார்கள். ஆனால், அவர்கள் இன்பாக்ஸில் அளித்திருந்த பதில்கள் மிக சுருக்கமாகவே இருந்தன. அவற்றை எத்தனை பேர் படித்திருப்பார்கள்? என்பது தெரியவில்லை. அதனால், மற்றவர்களும் இதைப்பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள இந்தப் பதிவை வெளியிடுகிறேன்.
பூர்வீக சொத்து
முன்னோர்கள்களான நமது தாத்தா, பாட்டி மற்றும் அவர்களது பெற்றோர்கள் தேடி வைத்த சொத்துக்களை, பொதுவாக நாம் பூர்வீக சொத்துக்கள் என்று சொல்கிறோம்.
அது போன்ற சொத்துக்களை ஒருவரிடமிருந்து நாம் வாங்கும்போது பின்னாளில் அந்த சொத்தில் வில்லங்கங்கள் ஏதும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, பத்திரப்பதிவின்போது முன்னேற்பாடாக சில காரியங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
 • அந்த முன்னோர்களின் இறப்புச் சான்றிதழ்கள், அவர்களது வாரிசு சான்றிதழ்கள் ஆகியவற்றை பத்திரத்துடன் இணைக்க வேண்டும்.
 • ஒரு வேளை வாரிசுகள் யாராவது இறந்திருந்தால் அவர்களுடைய இறப்புச் சான்றிதழ் மற்றும் அவர்களது வாரிசு சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும்.
 • அந்த கிரையப் பத்திரத்தில் அந்த முன்னோரின் வாரிசுகள் அனைவரிடமும் கையெழுத்துக்களை பெற வேண்டும்.
 • அந்த சொத்தின் வாரிசுகள் மைனர்களாக இருந்தால், அவருக்குரிய பங்குத் தொகையை அவருடைய பெயரில் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
 • ஏனென்றால் ஒரு மைனருடைய பங்கு சொத்து விற்பனை செய்யப்படும்போது அந்த மைனரின் பங்கு அவருக்கு முறையாக சேர்ப்பிக்கப்பட்டிருந்தால்தான் அந்த சொத்தை வாங்கும் நமக்கு பின்னாளில் பிரச்சனைகள் வராது.
 • இல்லையென்றால், அந்த மைனர் மேஜர் ஆன பிறகு, அதாவது தனது 18 வயதுக்குப் பிறகு தனது 21 வயதுக்குள் தங்களது பூர்வீக சொத்தை விற்பனை செய்தது செல்லாது என்று வழக்கு தொடுக்க முடியும். அதற்கு சாதகமாகவே சட்டமும் இருக்கிறது.
சுய சம்பாத்திய சொத்து
ஒரு ஆண், தான் சுயமாக சம்பாதித்த அசையா சொத்துக்கள் குறித்து ஏதும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால் அந்த சொத்துக்களும் பூர்வீக சொத்துக்களுக்குரிய தன்மையை பெற்று விடுகின்றன.
 • உதாரணமாக தந்தை ஒருவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
 • தனது சொத்துக்கள் குறித்து ஏதும் எழுதி வைக்காமல் அவர் ஒரு நாள் திடீரென்று இறந்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
 • அவரது சுய சம்பாத்திய சொத்துக்களை அவரது வாரிசுகளான இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும், அவரது மனைவியும், அவரது தாய் உயிரோடு இருந்தால் அவரும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
 • அவர்கள் ஒவ்வொருவருக்கு அந்த சொத்துக்களில் ஆறில் ஒரு பங்கு கிடைக்கும்.
 • மேற்கண்ட அனைவரும் முதல்நிலை வாரிசுதாரர்கள் ஆவார்கள்.
வாரிசுகளின் வாரிசுகள்
 • அந்த இரண்டு மகன்களுக்கு திருமணமாகி வாரிசுகள் இருந்தாலோ, அந்த இரண்டு மகள்களுக்கு திருமணமாகி வாரிசுகள் இருந்தாலோ, அவர்களும் மேற்கண்ட சொத்துகளுக்கு மறைமுக வாரிசுதாரர்கள் ஆகிவிடுவார்கள்.
 • மேற்கண்ட வாரிசுகளின் பட்டியலில் மகனின் மனைவியோ, மகளின் கணவனோ இடம்பெற மாட்டார்கள்.
 • அந்த சொத்தை தனது தந்தையின் சொத்துதானே என்று தன்னிச்சையாக வேறு யாருக்கும் அந்த இரண்டு மகன்களோ அல்லது அந்த இரண்டு மகள்களோ விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ முடியாது. அந்த இடத்தில் பேரன் பேத்திகளின் கையெழுத்து வேண்டும்.
 • மேலும், அந்த சொத்தை தனது உடன்பிறந்தவர்களுக்கு தான செட்டில்மெண்ட் செய்யவோ, பிறருக்கு தானம் செய்யவோ முடியாது.
 • அவர்கள் அந்த சொத்தை வாழ்க்கை முழுவதும் அனுபவித்துக் கொள்ளலாம், அவ்வளவுதான். எதையாவது விற்கவேண்டும் என்று நினைத்தால் அதற்கு அவர்களது வாரிசுகளின் ஒப்புதல் கண்டிப்பாக தேவை.
 • மேற்கண்டவாறு பத்திரம் பதிவு செய்யவில்லை என்றால் அந்த பத்திரப்பதிவு செல்லாது. அந்த பத்திரத்தை பதிவு செய்த சார்பதிவாளரும், அதனை தயாரித்த ஆவண எழுத்தரும் குற்றவாளி ஆவார்கள்.
தான செட்டில்மெண்ட் பத்திரம்
 • தனது பெயரில் உள்ள, தனக்குச் சொந்தமான சொத்தை மட்டுமே ஒருவர் , தனது ரத்த சம்பந்தமுள்ள மற்றவருக்கு தான செட்டில் மெண்ட் பத்திரம் மூலம் அளிக்க முடியும்.
 • பிரிக்கப்படாத பூர்வீக சொத்துக்களை தான செட்டில்மெண்ட் மூலம் பிறருக்கு அளிக்க முடியாது.
 • எதுவும் எழுதி வைக்காமல் இறந்து போன தந்தையின் சொத்தையோ, முன்னோர்களின் பூர்வீக சொத்தையோ தங்களது வாரிசுகளான மகன், மகள் ஒப்புதலின்றி ரத்த சம்பந்தமுள்ள ஒருவருக்கு தான செட்டில்மெண்ட் செய்ய முடியாது.
அப்படி என்றால், என்ன செய்ய வேண்டும்?
ரத்த சம்பந்தமுள்ள வேறு ஒருவருக்கு எதுவும் எழுதி வைக்காமல் இறந்து போன தந்தையின் சொத்தையோ, முன்னோர்களின் பூர்வீக சொத்தையோ ஒருவர் எழுதிக் கொடுக்க வேண்டும் என்றால், விடுதலைப் பத்திரம் மூலமாக எழுதிக் கொடுக்கலாம். ஆனால், அதிலும் தங்களது வாரிசுகளின் கையொப்பங்களை கண்டிப்பாக பெற வேண்டும்.

********************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 15.11.2020  

Sunday, November 8, 2020

கொடுக்கல், வாங்கல் - கடன் விதிமுறைகள்
அவசரத்திற்கு பணம் தேவைப்படுகிறது என்று உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ அல்லது வட்டிக்கு பணம் கொடுக்கின்ற தொழில் செய்பவர்களிடமோ நாம் கடனாக பணம் வாங்குகிறோம்.
அதிக வட்டி கிடைக்கிறது என்பதால், அதற்கென்று சில நிபந்தனைகளை வகுத்துக் கொண்டு, அடியாட்களை வைத்துக் கொண்டு வட்டிக்கு பணம் கொடுக்கின்ற தொழிலை சிலர் செய்து வருகிறார்கள்.
ஆனால், நமது அரசாங்கம் இதற்கென்று சில விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளது. அதனை பின்பற்றாமல். நீங்கள் கடன் வாங்கினாலும், கடன் கொடுத்தாலும் அது சட்ட விரோதம் ஆகிவிடும்! என்பது உங்களுக்குத் தெரியுமா?
கடன் கொடுப்பவருக்குண்டான விதிமுறைகள்:
வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் இருந்து கடன் வாங்கும் போது, கடன் பெறுபவர்களிடம் பல தாள்களில் கையெழுத்து வாங்குவார்கள். இதற்கென்று பல்வேறு விதிமுறைகளும், நடைமுறைகளும் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
அறிமுகமானவர்களுக்கோ அல்லது அறிமுகமானவர்கள் பரிந்துரைக்கின்றவர்களுக்கோ அவசரத் தேவைக்காக நீங்கள் அதிக வட்டிக்கு பணம் கொடுப்பவராக இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட தொகைக்கு மேல் ரொக்கமாக கொடுக்க கூடாது என்ற விதிமுறை இருக்கிறது.
ரொக்கமாக எவ்வளவு கொடுக்கலாம்?
கடன் வழங்கும் போது, 20 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ரூபாய் அதிகமான தொகையாக இருந்தால் எனில், அதை ரொக்கமாகவோ அல்லது பெயர் தாங்கிய காசோலை மூலமாகவோ நீங்கள் வழங்க முடியாது.
அதனை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தக்கூடிய காசோலையாகவோ, வரைவோலையாகவோ அல்லது மின்னணு பரிவர்த்தனை மூலமாகவோ மட்டுமே வழங்க வேண்டும்.
கொடுத்த கடனை தொகையை திரும்ப பெறுகின்ற போதும் இந்த முறையை கண்டிப்பாக நீங்கள் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், அது சட்டவிரோத செயலாகிவிடும்.
வாடகை மற்றும் கட்டணங்கள்
வீடுகளுக்கோ, கடைகளுக்கோ மற்றும் திருமண மண்டபங்களுக்கோ நீங்கள் வாடகை செலுத்துவதாக இருந்தாலும் மேற்கண்ட முறையை பின்பற்ற வேண்டும். கல்வி கட்டணங்கள் செலுத்துவதற்கும் இந்த விதிமுறை உண்டு.
அபராதம் உண்டு:
மேற்கண்ட விதிமுறையை நீங்கள் மீறியது தெரியவந்தால், உங்களுக்கு வருமான வரித்துறையால் அபராதம் விதிக்கப்படும்.
இதற்கென்று வரி விதிப்பும் உண்டு
கடன் வழங்குவதற்கென்று வரி ஏதும் கிடையாது. ஆனால், கொடுத்த கடனுக்கு நீங்கள் பெறுகின்ற வட்டிக்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும். ஒருவரது இதர வருமானம் என்ற பிரிவின்கீழ் இது வரும்.
பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்கள்
சிலர் சொத்து வாங்கும்போது, கொடுக்கின்ற முன்பணத்தை 20 ரூபாய் பத்திரம் வாங்கி அதில் அதனை எழுதியோ, டை அடித்தோ வைத்துக் கொள்கிறார்கள். இது சட்டப்படி செல்லாது. உங்களிடம் பணம் வாங்கியவர் மிகவும் நம்பிக்கையானவராக இருக்கலாம். எதிர்பாராவிதமாக அவர் இறந்துவிட்டால் நீங்கள் கொடுத்த தொகையை திரும்பப்பெறுவது கேள்விக்குறி ஆகிவிடும்.
ஒப்பந்த பத்திரங்கள் சட்டம்
ஒப்பந்த பத்திரங்கள் சட்டம் பிரிவு 17ன்படி, 5,000 ரூபாய்க்கு மேல் உள்ள சொத்தினை வாங்கும்போதோ அல்லது கொடுக்கும்போதோ போடப்படுகின்ற ஒப்பந்தங்களை கண்டிப்பாக பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
எச்சரிக்கையுடன் இருங்கள்!
மேற்கண்ட முறைகளை பயன்படுத்தாமல் கொடுக்கல், வாங்கல் செய்பவர்களுக்கு சட்டச்சிக்கல் வரும் என்பது நிச்சயம். எனவே எச்சரிக்கையாக செயல்படுங்கள்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 09.11.2020