பிரச்சனைகளுக்குள்ளேயே தீர்வு இருக்கும்!
ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்படுவதற்கு சில நாட்கள் முன்னாலேயே கொரோனா ஊடகங்களில் பிரதான செய்தியானது. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதில் இருந்து வேறு ஏதும் செய்திகள் இடம் பெறாமல் ஊடகங்கள் முழுவதையும் அது ஆக்கிரமித்துக் கொண்டது. நானும்கூட அதைப்பற்றிய செய்திகளையே அதிகம் பரிமாறிக் கொண்டேன். போரடித்துவிட்டது. நடப்பது நடக்கட்டும். ரூட்ட மாத்துவோம்னு இத எழுத ஆரம்பித்துள்ளேன். இதை ஒரு தொடராக எழுத வேண்டும் என்ற எண்ணமும் எனக்குள் உள்ளது. ஏன்னா, எனக்கும் வேற வழியில்லை. எப்படியோ பொழுத போக்கணும். நீங்களும் படிச்சிதான் ஆகணும்; உங்களுக்கும் வேற வழியில்லை.
எனது இளமைக் காலம்
எனது திருமணம் முடிந்திருந்த நேரம். நான் அப்போது ஒரு (ஐ.டி.ஐ) டர்னர். ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த வேலையில் சம்பளம் குறைவாக இருந்த காரணத்தால் வேறு வேலை தேடிக் கொண்டு இருந்தேன். எங்களது வீட்டுக்கருகிலேயே சுந்தரவேல் குச்சி பேக்டரி என்று ஒன்று இருந்தது. அங்கு வேலை கேட்கலாம் என்று போயிருந்தேன். உள்ளே அனுமதித்தார்கள். மானேஜரை பாருங்கள் என்று கூறி அவரை சந்திப்பதற்கு வழியும் காட்டினார்கள்.
நான் படித்த வேலை அங்கு இல்லை
அந்த நிறுவனத்திற்கு 20க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் விருதுநகர் மாவட்டத்தில் இருந்தது. அத்தனை தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களை அந்த மேனேஜர்தான் நிர்வகித்துக் கொண்டிருந்தார். அவரது பெயர் திரு காந்தி முருகேசன். என்னைப் பார்த்து விசாரித்து விபரம் அறிந்து கொண்டு, இங்க லேத் இல்லையேப்பா! என்றார். லேத் என்பது டர்னர்கள் வேலை பார்க்கும் இயந்திரம். பிறகு அவரே பிட்டர் வேலைதான் இருக்கு; பாக்குறீயா? என்றார்.
பிட்டர்ன்னா, என்ன வேலை பார்க்க வேண்டும்? என்றேன்.
அது வேற ஒண்ணுமில்லப்பா, தீப்பெட்டிக்குத் தேவையான மருந்து அரைக்கிற கிரைண்டிங் மெஷின்கள் நம்மளோட ஒவ்வொரு தீப்பெட்டி ஆபிஸிலும் இருக்கு. நீ ஒவ்வொரு ஆபிஸிற்கும் சென்று அதை மேற்பார்வை பார்க்கணும். சரி செய்ய முடிஞ்சா, அங்கேயே வச்சி சரி செஞ்சி கொடுக்கணும். அதிக பட்சம் புஸ் மாத்த வேண்டியதிருக்கும். அதுக்கும் மேல போச்சுதின்னா மெஷின மாத்தி கொடுக்க வேண்டியதிருக்கும். நம்மகிட்ட ஒரு நாலஞ்சி மெஷினு எப்பவுமே ஸ்பேரா இருக்கும். அதில ஒண்ண அங்க அனுப்பிட்டு, அங்க உள்ள மெஷின (தனியார்) ஒர்க்ஷாப்புக்கு அனுப்பி வைக்கணும். அப்புறம் அங்க இருக்கிற ஆயில் எஞ்சினயும் பாத்துக்கிடணும் என்றார்.
மேனேஜர் கொடுத்த தைரியம்
எனக்கு மலைப்பாக இருந்தது. ஏன்னா, நான் ஆயில் எஞ்சின தூரத்தில பாத்ததோட சரி. அதப்பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது. கிரைண்டிங் மெஷினக் கூட சமாளிச்சிரலாம்; ஆயில் எஞ்சின எப்படி சமாளிக்கிறது? என்று யோசித்தேன்.
அவர் என்னப்பா இப்படி யோசிக்கிற? என்றார்.
இல்ல அண்ணாச்சி எனக்கு ஆயில் எஞ்சினப் பத்தி ஒண்ணுமே தெரியாது! அதனாலதான் யோசிக்கிறேன்ன்னு அவரிடம் உண்மையைக் கூறினேன்.
அதனால என்ன? பரவாயில்லப்பா. உனக்கு தெரிஞ்ச வரைக்கும் பாரு. முடியலின்னா வெளிய இருந்து மெக்கானிக்க வரச்சொல்லிருன்னு சொல்லிட்டு அவர் வெளியே கிளம்பிட்டாரு.
அங்கு இருந்த அவருடைய அஜிஸ்டெண்டு ஒரு முன்னாள் ஆசிரியர். அவரை எல்லோரும் வாத்தியார் என்றே அழைத்தனர். அவர் என்னிடத்தில் வந்து அந்தா இருக்கு டூல்ஸ் பை. எடுத்துக்கிட்டு முதல்ல பக்கத்தில இருக்குற தீப்பெட்டி ஆபிஸுக்கு போங்க. நான் போன் பண்ணி தகவல் சொல்லிடுறேன் என்றார். தயங்கிக் கொண்டே அதை எடுத்துக் கொண்டு அங்கே சென்றேன்.
அதிர்ச்சி அளித்த போர்மேன்
அந்த தொழிற்சாலை மிகவும் அருகிலேயே இருந்தது. அதனால் அங்கு எனது சைக்கிளிலேயே சென்றேன். அங்கு சென்று போர்மேனிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஓ, நீங்கதான் புது பிட்டரா? வாங்க, வாங்க. இங்க, ஆயில் எஞ்ஜின் ரெண்டு நாளா ஓடல; கொஞ்சம் என்னான்னு பாருங்க! என்று சொல்லிவிட்டு அவரது வேலையை பார்க்க போய்விட்டார். எனக்கு தூக்கிவாறி போட்டது. ஆயில் எஞ்ஜினை அப்போதுதான் முதன் முதலாக அருகில் சென்று பார்த்தேன்.
அதனை எப்படி இயக்க வேண்டும் என்பதும் எனக்குத் தெரியாது. அதனால் மீண்டும் போர்மேனை அழைத்தேன். அண்ணே, என்ன பிரச்சனை? என்றேன். ஸ்டார்ட் செய்வதற்கு சுழற்றியை போட்டு சுழற்றும்போது ஸ்டார்ட் ஆகும் நேரத்தில் ப்ளைவீல் சுழற்றியுடன் ரிவர்ஸில் சுத்துகிறது. ஸ்டார்ட் ஆகமாட்டேன் என்கிறது. எத்தனை தடவை சுழற்றினாலும் இதுபோல்தான் இருக்கிறது என்றார். என்முன்னே ஒரு முறை சுற்றுங்கள் என்றேன். ஒரு வேலையாளை அழைத்து சுழற்றச் சொன்னார். அந்த வேலையாள் அதனை சுழற்றியை வைத்து சுத்தினார். அவர் சொன்னது போலவே ஒரு வீல் மட்டும் ரிவர்ஸில் சுத்தியது.
சரி நீங்கள் போங்கள், நான் என்னவென்று பார்க்கிறேன் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தேன். முடியவில்லை என்று முதலிலேயே சொல்லிவிடுவோமா? என்று எண்ணினேன். மேனேஜர் கூறியது (ஒனக்கு தெரிஞ்ச வரைக்கும் பாரு. முடியலின்னா வெளிய இருந்து மெக்கானிக்க வரச்சொல்லிரு) எனது நினைவுக்கு வந்தது. சரி முயற்சி செஞ்சிதான் பாப்போமே என்று அந்த எஞ்ஜினை சுத்தி சுத்தி வந்தேன்.
முயற்சி திருவினை ஆனது
அந்த எஞ்ஜின் அருகிலேயே ஒரு காட்டர் பின் கிடந்தது. அது அந்த எஞ்ஜினுக்கு உரியதா? என்பதை சோதித்தேன். அந்த எஞ்ஜினுக்கு உரியதுதான். ரிவர்ஸில் சுத்திய வீலுக்கு உரியது. பிரச்சனைக்கு காரணம் இதுவாகத்தன் இருக்குமோ என்று நினைத்தேன். அதை எடுத்து அந்த வீலில் மாட்டினேன். சரி இப்போது ஓட்டி பார்ப்போம்; என்ன ஆகிறது என்று எண்ணி போர்மேனை மறுபடியும் அழைத்து, அந்த எஞ்ஜினை மீண்டும் இயக்கச் சொன்னேன். அவர் வேறு ஆளை அழைக்காமல் அவரே அதனை இயக்கினார்.
நீங்கதான்யா மெக்கானிக்
என்ன ஒரு ஆச்சர்யம்? எஞ்ஜின் இயங்க ஆரம்பித்துவிட்டது. போர்மெனுக்கு ரொம்ப சந்தோஷம். மகிழ்ச்சியில் என்னிடம் கை கொடுத்தார். வந்து அரைமணி நேரத்தில் எஞ்ஜின ஓடவச்சிட்டீங்களே, மெக்கானிக்குனா நீங்கதான் மெக்கானிக் என்று பாராட்டினார். எனக்கும் சந்தோஷமாக இருந்தது. கம்பீரமானேன்.
இதைப் போல்தான் பிரச்சனைகளும்
நாம் நமது வாழ்க்கையில் சந்திக்கின்ற பிரச்சனைகளும் இதுபோல்தான். அதனை நாம் கையாளும் விதத்தில்தான் நமது வெற்றி அதில் அடங்கியுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டில் பவுலர் உங்களை அவுட் ஆக்க வேண்டும் என்றுதான் பந்து வீசுவார். நீங்கள் அந்தப் பந்தை உங்கள் கையில் உள்ள மட்டையின் மூலம் கையாளுவதன் மூலம் அதனை சிக்ஸ் ஆக மாற்ற முடியும். ஆகையால் பிரச்சனைகளை கண்டு பயம் கொள்ளாமல் அதனை ஆராய்ந்து லாவகமாக கையாண்டு வெற்றி பெறுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.
******************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 28.03.2020