உங்கள் செல்போனில் மின்கட்டணம் குறித்த அறிவிப்பை பெற வேண்டுமா?
முன்பெல்லாம் கரண்ட் பில் கட்டுவதற்கென்று ஒவ்வொரு மாதத்தின் 15ம் தேதியை கடைசி தேதியாக மின்சாரத் துறையினர் அறிவித்திருந்தனர். அதன்பிறகு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறையைக் கொண்டு வந்தார்கள். அதிலும் மின்கட்டணம் கட்டுவதற்கு கடைசி தேதி 15ம் தேதிதான். இப்போது ரீடிங் எடுத்த நாளில் இருந்து இருபது நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்தி உள்ளனர். இங்குதான் நமக்கு குழப்பம் வந்துவிட்டது. என்றைக்கு ரீடிங் எடுத்தார்கள். என்றைக்கு கடைசி கட்டணம் என்று ஞாபகம் வைத்துக் கொள்ள எல்லோரால் முடிவதில்லை.
அபராதம் செலுத்துவது அதிகமானது
இரு மாதங்களுக்கு
ஒருமுறை, நம் வீட்டிற்கே வந்து நம்ம வீட்டு மின் கட்டணம் எவ்வளவு? என்று மின் வாரியப் பணியாளர் கணக்கெடுத்து ,அந்தக் கட்டணம் எவ்வளவு என்பதையும் அந்த மீட்டர் அருகில் நாம் வைத்திருக்கும் அட்டையில் எழுதியும் சென்றுவிடுவார். இருக்கின்ற வேலைப் பளுவில் அதைப் பார்க்கத் தவறிவிட்டால், அல்லது அட்டை தொலைந்து விட்டால் நாம் கட்டணம் கட்ட மறந்திருப்போம். குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு நமது மின் இணைப்பு துண்டிக்கப்படும்
என வயர்மேன் மூலமாக எச்சரிக்கப்பட்டு
பிறகு அபராதத்துடன் அந்த மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டிவரும்.
இதற்கு தீர்வு இருக்கிறதா?
இருக்கிறது. நமது மொபைல் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துவிட்டால், மின்சார வாரிய ஊழியர் நமது மின் கட்டணத்தை எடுத்துச் சென்று மின்வாரிய அலுவலகக் கணினியில் கட்டணம் எவ்வளவு என்று பதியும்போது, நமது மொபைல் எண்ணுக்கும் அது மெசேஜாக வந்துவிடும். அந்த மெசேஜில் நாம் செலுத்த வேண்டிய மின் கட்டணத் தொகை, நமது மின் இணைப்பு எண் மற்றும் நாம் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் ஆகிய விவரங்கள் அடங்கியிருக்கும். இந்த குறுஞ்செய்தி நமது மின் கட்டணத்தைக் கடைசித் தேதிக்கு முன்பாகச் செலுத்த உதவியாக இருக்கும். அபராதம் கட்டுவதை தவிர்க்கலாம்.
என்ன செய்ய வேண்டும்?
நமது மின் இணைப்பு எண்ணை இரண்டு வழிகளில் நமது செல்போனுடன் இணைக்கலாம். முதல் வழி என்னவென்றால், மின்சார வாரிய அலுவலகத்துக்குச் சென்று உங்களது பெயர் மற்றும் முகவரியுடன் கூடிய ஒரு விண்ணப்பத்தில்
உங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணைக் குறிப்பிட்டு
மின்சார வாரிய உதவிப் பொறியாளரிடம் விண்ணப்பித்தால், உங்களது எண் உங்கள் மின் இணைப்புடன் அவர்களது கணினியில் இணைக்கப்பட்டுவிடும்.
இரண்டாவது வழி என்னவென்றால், இணையதளம் மூலமாக உங்கள் மொபைல் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கலாம். http://bit.ly/2H0wpRM என்ற இணையதளத்துக்குச் சென்று உங்கள் பகுதியை முதலில் தேர்ந்தெடுக்க
வேண்டும். அதில் மொத்தம் 9 பிராந்திய (Region) பகுதியைக் கொண்டிருக்கும்.
அவற்றில் உங்கள் பிராந்தியத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.
பிராந்தியத்தை எப்படி தேர்ந்தெடுப்பது?
ஏற்கனவே பணம் கட்டியுள்ள உங்கள் மின் கட்டண ரசீதை எடுத்துப் பாருங்கள். அந்த ரசீதில் மின் கட்டண எண் 07 241 018 0062 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் இந்த எண்ணை நீங்கள் நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். முதல் இரண்டு எண்கள் (07) உங்கள் பிராந்திய எண், அதாவது மேலே குறிப்பிட்டுள்ள எண்ணில் 07 என்பது திருநெல்வேலி பிராந்திய எண் ஆகும்.. இரண்டாவதாக உள்ள மூன்று எண்கள் (241) உங்கள் ஊரின் (Section Number) எண் அடுத்த மூன்று எண்கள் (018) ஊரின் (Zone number) பகுதி எண் ஆகும்..
இவை ஒற்றை இலக்கத்திலிருந்தாலும் அவை மூன்றெழுத்து எண்ணாகத்தான் எழுதப்பட வேண்டும். உதாரணத்துக்கு 6 என்பதை 006 என்று எழுதப்பட வேண்டும். கடைசியாக இருக்கும் எண்கள் நமது வீட்டின் மின்இணைப்பு எண் (62) ஆகும். அவை ஒற்றை இலக்கத்திலிருந்து நான்கு இலக்க எண்கள்வரை இருக்கலாம். இந்த எண்ணையும் நான்கு டிஜிட்டில் குறிப்பிட வேண்டும். நான்கு டிஜிட் இல்லையென்றால், முன்னால் தேவையான சைபரை (0062) சேர்த்துக் கொள்ள் வேண்டும்.
பிராந்திய எண்களும், பிராந்தியப் பெயர்களும்
01 சென்னை - வடக்கு,
02 விழுப்புரம்,
03 கோயம்புத்துார்,
04 ஈரோடு,
05 மதுரை,
06 திருச்சி,
07 திருநெல்வேலி,
08 வேலூர்,
09 சென்னை – தெற்கு
அடுத்து என்ன செய்ய வேண்டும்?
அடுத்த உள்ள கட்டத்தில் நமது மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். கடைசியாக உள்ள மூன்று கட்டத்தில் ஏற்கெனவே மேலே குறிப்பிட்டவாறு நமது மின் இணைப்பு எண்ணில் முதல் இரண்டு இலக்கம் (07) போக மீதமுள்ள எண்களை முதல் கட்டத்தில் மூன்று எண்கள், நடுவில் உள்ள கட்டத்தில் மூன்று எண்கள், கடைசி கட்டத்தில் நான்கு எண்கள் உள்ளீடு செய்ய வேண்டும். பிறகு கீழே உள்ள பாக்ஸில் தெரிகின்ற Validate என்ற வார்த்தையை அழுத்தினால் நமது மொபைல் எண் நமது மின் கட்டண எண்ணுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி திரையில் நமக்குத் தெரியும்.
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.02.2018