சுப்ரீம் கோர்ட்டால் சிறைத்தண்டனையும் பெற்ற ப்ளாஷ்பேக்!
சென்னை : 2017ம் ஆண்டின் இறுதியில் இருக்கும் நமக்கு இந்த ஆண்டில் நடந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த சம்பவங்களின் தொகுப்புகளை வழங்கி வருகிறது தமிழ் ஒன் இந்தியா. தமிழக அரசியலில் பல பரபரப்புகள் இருந்தாலும் நீதித்துறையிலும் இந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நீதிபதி சி.எஸ். கர்ணன். தன்னுடைய தீர்ப்புகள் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு உத்தரவு போட்டவர் இறுதியில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றார்.
சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன்,
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள கார்நத்தம் கிராமத்தில், 1955-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி சுவாமிநாதன்- கமலம் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் பி.எஸ்சியும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார் கர்ணன். பின்னர் தமிழக பார் கவுன்சிலில் பதிவுசெய்துகொண்ட அவர், சிவில் வழக்குகளில் வாதாட ஆரம்பித்தார். பிறகு சென்னைக் குடிநீர் போன்ற அரசு நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகவும் அரசுக்கு வழக்கறிஞராகவும் ஆஜராகி வந்தார். கர்ணனுக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.
வழக்கறிஞராக சிறப்பாக செயலாற்றி வந்த கர்ணனை 2009-ஆம் ஆண்டில் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே. கங்குலியின் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பரிந்துரைத்தார். ஆனால், 2011-ஆம் ஆண்டிலேயே சக நீதிபதிகளுடன் இவருக்கு மோதல் வெடித்தது.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தான் தலித் என்பதால் மோசமாக நடத்தப்படுவதாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 2016ல் மாற்றப்பட்ட கர்ணன் சக நீதிபதிகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்ததால் அவரை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர். இதன் பேரில் 2016-ஆம் ஆண்டு பிப்ரவரியில், கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு கர்ணன் மாற்றம் செய்யப்பட்டார். இந்த இடமாற்ற உத்தரவுக்கு கர்ணன் இடைக்காலத் தடை விதித்ததோடு, ஊடகத்தினரை தன் சேம்பருக்கு வரவழைத்து பேட்டியும் கொடுத்தார்.
பிரதமருக்கு திறந்த கடிதம்
உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இந்தத் தடையை நீக்கியதும், அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டுமென சென்னை நகரக் காவல்துறைக்கு கர்ணன் உத்தரவிட்டார். தன்னுடைய பணிக்காலத்தில் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த நீதிபதி கர்ணன் இதன் உச்சகட்டமாக இந்த ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதியன்று பிரதமருக்கு ஒரு திறந்த கடிதத்தை அனுப்பினார்.
ஊழல் புகார்
அந்தக் கடிதத்தில் இந்திய உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களைச் சேர்ந்த 20 நீதிபதிகள் - ஓய்வு பெற்றவர்கள், பணியில் இருப்பவர்கள் - ஆகியோரைப் பற்றிய ஊழல் புகார்களை அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார். இதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய உச்ச நீதிமன்றம், பிப்ரவரி 13-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென கர்ணனுக்கு உத்தரவிட்டது. ஆனால், நேரில் ஆஜராவதற்குப் பதிலாக, தன் மீது நாடாளுமன்றம்தான் நடவடிக்கை எடுக்க முடியுமென கர்ணன் கடிதமொன்றை எழுதினார்.
நீதிபதிகள் ஆஜராக உத்தரவு
இதையடுத்து மார்ச் 10-ஆம் தேதியன்று பிணையில் வரக்கூடிய அழைப்பாணை கர்ணனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆஜராக மறுத்த கர்ணன், மத்தியப் புலனாய்வுத் துறையும் நாடாளுமன்ற அவைகளின் செயலாளர்களும் இது குறித்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளும் தன் முன்பாக ஏப்ரல் 28-ஆம் தேதியன்று ஆஜராக வேண்டும் என்ற உத்தரவையும் போட்டார்.
மனநல பரிசோதனை செய்ய உத்தரவு
கர்ணனுக்கு போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவப் பரிசோதனை நடத்தும்படி உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. ஆனால், மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த கர்ணன், தலைமை நீதிபதி உட்பட ஏழு நீதிபதிகளுக்கும் எதிராக பிணை வரமுடியாத வாரண்ட் பிறப்பித்தார்.
உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
இந்த மோதல்களின் உச்சகட்டமாக நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கி கடந்த மே மாதத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது அறிக்கைளையும் ஊடகங்களில் பிரசுரிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவன்று சென்னை திரும்பிய கர்ணன் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார். தமிழகம் முழுவதும் தேடிய போலீஸ் மறுநாள் மேற்குவங்க போலீசார் கர்ணனை கைது செய்ய சென்னை வந்த நிலையில் அதிகாலையில் வாக்கிங் சென்றவர் திடீரென தலைமறைவானார். தமிழக போலீசார் உதவியுடன் கர்ணனை மேற்குவங்க போலீசார் திருப்பதி, தடா உள்ளிட்ட பகுதிகளில் தேடினர். ஒரு மாத தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு ஜீன் மாதத்தில் கோவையில் வைத்து நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டார்.
புத்தகம் எழுதும் கர்ணன்
இதனையடுத்து அவர் கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார். நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெறும் இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தமக்கு ஜாமின் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் கர்ணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் சிறையில் இருந்தபடியே நீதித்துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் என்ற புத்தகத்தை எழுத திட்டமிட்டுள்ளதாக நீதிபதி கர்ணன் தெரிவித்திருந்தார்.
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் »15.12.2017