disalbe Right click

Showing posts with label ஜீவனாம்சம். Show all posts
Showing posts with label ஜீவனாம்சம். Show all posts

Monday, March 12, 2018

பெரியம்மாவுக்கு ஜீவனாம்சம்

சின்னம்மா பிள்ளைகள் பெரியம்மாவுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டுமா?
இந்த வழக்கில் ராதாபாய் என்பவர் ஒருவருக்கு முதல் மனைவி ஆவார். அவருக்கு குழந்தைகள் இல்லாததால், அவரது சம்மதத்துடன், அவர் கணவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். அந்த இரண்டாம் தார மனைவிக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றனர். அந்தக் குழந்தைகளில் ஒருவர் டாக்டர் ஆகவும், மற்றொருவர் இன்ஜினியர் ஆகவும் ஆகிறார்கள். இந்நிலையில் இவர்களின் தந்தை இறந்து போய்விடுகிறார். இறக்கும் போது, அவரது பெயரில் சில சொத்துக்களை விட்டுச் சென்றார். அந்த சொத்துக்களை இரண்டாம் தார மனைவியின் பிள்ளைகளே அனுபவித்து வந்தனர்
ஜீவனாம்சம் வழங்க வேண்டும்!
கணவர் இறந்து விட்டதால் வயதான முதல் மனைவியான ராதாபாய் அனாதை ஆகி விடுகிறார்.  தன் கணவரின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்கிறார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதாபாய்க்கு மாதம்தோறும் கணவரின் இரண்டாம் தார பிள்ளைகள் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதனை எதிர்த்து இரண்டாம் தார மனைவியின் பிள்ளைகள் இந்த மேல்முறையீட்டு மனுவை பாம்பே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மாற்றாந்தாய் ஜீவனாம்சம் கேட்க முடியாது!
இரண்டாம் தார பிள்ளைகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், மாற்றாந்தாய் ஒருவர் ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறி பாம்பே உயர்நீதிமன்றம் "ரமாபாய் Vs தினேஷ்" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். அந்த வழக்கில் பாம்பே உயர்நீதிமன்றம், ஒரு மாற்றாந்தாய்க்கு உள்ள சட்டப்பூர்வமான உரிமைகளை குறித்து விவாதித்திருந்தது. மேலும் கு. வி. மு. பிரிவு 125 ல் கூறப்பட்டுள்ள தாய் என்கிற விளக்கத்திற்குள் மாற்றாந்தாய் வருவதில்லை என்றும் அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது?
முதல் மனைவியும், மாற்றாந்தாயுமான ராதாபாய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், உச்சநீதிமன்றம் "D. வடோடரியா Vs குஜராத் மாநில அரசு (1996-4-SCC-497)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். அதில் கு. வி. மு. பிரிவு 125 ன் கீழ் மாற்றாந்தாய்க்கு ஜீவனாம்சம் கோருவதில் உள்ள உரிமைகள் குறித்து விவரிக்கும் பொழுது கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது.
" குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 , அந்த பிரிவு இயற்றப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எளிமையாக பயன்படுத்த வேண்டும். குழந்தை இல்லாத மாற்றாந்தாய் தன்னுடைய கணவனின் மற்றொரு மனைவி மூலம் பிறந்த மகனிடம், தான் ஒரு விதவை அல்லது கணவரால் பராமரிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண் என்கிற காரணங்களின் அடிப்படையில் ஜீவனாம்சம் கோரலாம் என்று கூறியுள்ளது.
மேலே சொல்லப்பட்ட தீர்ப்பை பாம்பே உயர்நீதிமன்றம் "சரோஜ் கோவிந்த் முக்கவார் Vs சந்திரகலா பாய் (2009-ALLMR-CRL-1139)" என்ற வழக்கில் மேற்கோள் காட்டி தீர்ப்பு கூறியுள்ளதாகவும் கூறி வாதிட்டார்.
ஜீவனாம்சம் பெறத் தடையில்லை!
எனவே மாற்றாந்தாய் ஒருவர் தன் கணவனின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் பெற எவ்வித தடையும் இல்லை என்று பாம்பே உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
Criminal Appeal No - 1486/2001 Dr.Ravi Kumar and others Vs Radha Bai and Others
2013-1-DMC-509


நன்றி : முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான Dhanesh Balamurugan
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 12.03.2018 

Monday, October 16, 2017

வீட்டுவேலை செய்யும் கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்..

Image may contain: text
வீட்டுவேலை செய்யும் கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.. 
மனைவிக்கு அதிரடி உத்தரவிட்ட மகாராஷ்டிரா கோர்ட்
சோலாப்பூர்: மகாராஷ்டிராவில் வீட்டு வேலை செய்யும் கணவருக்கு, வேலைக்கு சென்று சம்பாதிக்கும் மனைவி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என விவாகரத்து வழக்கு ஒன்றில் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகே உள்ள சதாரா என்ற இடத்தை சேர்ந்தவர் அனில் (38). இவரது மனைவி சரிதா (47). கடந்த 2004ம் ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது.
சரிதா நன்கு படித்தவர், ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். ஆனால் அனில் அவ்வளவாக படிக்கவில்லை. இதனால் சரிதா வேலைக்கு செல்ல, வீட்டு வேலைகளை அனில் கவனித்து வந்தார்.
இந்நிலையில் சமீபகாலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மோதலின் உச்சமாக அனிலை வீட்டை விட்டு வெளியே விரட்டினார் சரிதா.
இதனால் சோலாப்பூர் நீதிமன்றத்தில் சரிதா மீது வழக்குத் தொடுத்தார் அனில்.
வழக்கு விசாரணையின் போது, "எனக்கு திருமணமானதிலிருந்து என்னை சரிதா அனைத்து வீட்டு வேலைகள் செய்ய வைத்தார். அதோடு பலமுறை அடித்தும் கொடுமைகள் செய்தார்.
ஒரு கட்டத்தில் என்னை வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டார். இதனால் எனக்கு உதவித்தொகை வழங்கிட உத்தரவிட வேண்டும்" என அனில் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை சரிதா மறுத்தார். விசாரணையின் இறுதியில் அனில் பக்கம் நியாயம் இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து மாதாமாதம் சரிதா, அனிலுக்கு ரூ. 2 ஆயிரம் உதவித் தொகை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
By: Jayachitra
நன்றி : ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் - 17.10.201

Monday, August 28, 2017

ஜீவனாம்சம் மாதம் ஒன்றுக்கு ரூ. 4 லட்சம்!

ஜீவனாம்சம் மாதம் ஒன்றுக்கு ரூ. 4 லட்சம்!
மனைவிக்கு ரூ.4 லட்சம் வழங்க பணக்கார கணவனுக்கு உத்தரவு
புதுடில்லி : 'பிரிந்து வாழும் மனைவிக்கு பராமரிப்பு செலவாக, மாதத்துக்கு, நான்கு லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, பணக்கார கணவனுக்கு, டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னை விட்டு பிரிந்து சென்று, குடும்பத் தொழிலை கவனித்து வரும் மிகப் பெரிய பணக்காரரான கணவன், தனக்கு மாத இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி, ஒரு பெண், வழக்கு தொடர்ந்தார். 
கீழ் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். 'பணக்கார கணவனின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அதற்கேற்ப, மாத பராமரிப்பு தொகையை நிர்ணயிக்க வேண்டும்' என, மீண்டும் விசாரணை நீதிமன்றத்துக்கே, இந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியது.
அதன்படி, இந்த வழக்கை விசாரித்த, டில்லி நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
இந்த வழக்கில் தொடர்புடைய கணவனின் குடும்பம், மிகப் பெரிய பணக்கார குடும்பம்; அந்த குடும்பத்தினர், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது தொழில் மதிப்பு, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. அதனால், பிரிந்து சென்ற மனைவி மற்றும் அவரது பராமரிப்பில் உள்ள மைனர் மகளின் மாத பராமரிப்புக்கு, கணவர், ஒவ்வொரு மாதமும், நான்கு லட்சம் ரூபாயை பராமரிப்பு செலவாக அளிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆண்டும், 15 சதவீதம் உயர்வையும் அளிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.08.2017

Tuesday, August 15, 2017

பெற்றோருக்கு வீடு இருந்தாலும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் அவசியம்

பெற்றோருக்கு வீடு இருந்தாலும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் அவசியம்
புதுடில்லி: 'திருமணமான பெண், குடும்ப பிரச்னையால், கணவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் சூழ்நிலையில், அவருக்கு, நிதி பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்' என, டில்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
டில்லியை சேர்ந்த ஒரு பெண், தன் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குடும்ப வன்முறை வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் வரை, அந்த பெண்ணுக்கு, மாதம், 20 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் அளிக்க உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், பெண்ணின் கணவர் முறையீடு செய்தார். 'அந்த பெண், 2006ல், வழக்கறிஞராக பதிவு செய்தவர்; தன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்' என, மனுவில், கணவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி, தீபக் கார்க் பிறப்பித்த உத்தரவு: 
கணவர் வீட்டில் வசிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டு, வீட்டை விட்டு வெளியேறும் பெண்ணுக்கு, நிதி பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியம். அந்த பெண்ணின் பெற்றோருக்கு சொந்தமாக வீடு இருந்தாலும், அந்த வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டால், தனியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும்.
இந்த வழக்கில், கீழ் நீதிமன்றம் அளித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. குடும்ப வன்முறை வழக்கு முடியும் வரை, அந்த பெண்ணுக்கு, மாதம், 20 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் தரப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி, தீபக் கார்க் உத்தரவு பிறப்பித்தார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 15.08.2017

Monday, May 15, 2017

ஜீவனாம்சம் அளிப்பது கட்டாயமா?

ஜீவனாம்சம் அளிப்பது கட்டாயமா?

டில்லி கோர்ட் அதிரடி உத்தரவு!
புதுடில்லி: 'தன் திருமணம் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, அதற்கான கோர்ட் உத்தரவை கணவன் பெறும் வரை, குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், அனைத்து பலன்கள் மற்றும் பாதுகாப்பை பெற, மனைவிக்கு உரிமை உண்டு' என, டில்லி கோர்ட் கூறி உள்ளது.
டில்லியைச் சேர்ந்த ஒருவர், அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த மனைவிக்கு, மாதந்தோறும், 5,000 ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டுமென, மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, டில்லி செஷன்ஸ் கோர்ட்டில், மேல்முறையீடு செய்த அந்த நபர், தன்னை திருமணம் செய்வதற்கு முன், தன் மனைவி, வேறொருவரை திருமணம் செய்திருந்ததாக, மனுவில் குறிப்பிட்டார்.
உரிமை உண்டு:
இந்த வழக்கை விசாரித்த, செஷன்ஸ் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டதாவது:ஆண், பெண் இடையே நடந்த திருமணம், செல்லாததாக கோர்ட்டால் அறிவிக்கப்பட்டு, அதற்கான உத்தரவை கணவன் பெறும் வரை, குடும்ப வன்முறை சட்டப்படி, அனைத்து பலன்கள் மற்றும் பாதுகாப்பை பெற, மனைவிக்கு உரிமை உண்டு. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாக, திருமண சான்றிதழ் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. முதல் திருமணம் நடந்ததை நிரூபிக்க, சான்றிதழ் மட்டும் போதாது; எனவே, மனு நிராகரிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
வரதட்சணை :
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் தாக்கல் செய்திருந்த மனுவில், 'கடந்த, 2013ல், எனக்கு திருமணம் நடந்தது. சில நாட்களிலேயே, கணவரும், அவர் குடும்பத்தினரும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். 'இரண்டு மாதங்களில், அந்த வீட்டை விட்டு என்னை துரத்திவிட்டனர். எனவே, எனக்கு ஜீவனாம்சம் பெற்றுத் தர வேண்டும்' என, கூறியிருந்தார்.
நன்றி : தினமலர் நாளிதழ் -16.05.2017

Monday, April 24, 2017

அந்தஸ்துக்கு ஏற்ப ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்!

அந்தஸ்துக்கு ஏற்ப ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்!
அந்தஸ்துக்கு ஏற்ப ஜீவனாம்சம் , சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
புதுடில்லி: 'விவாகரத்து பெறும் போது, மனைவிக்கு அளிக்கப்படும் ஜீவனாம்ச தொகை, கணவன், மனைவி ஆகிய இருவரின் அந்தஸ்துக்கு பொருந்தும் வகையில் இருக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

கடந்த, 1995ல் திருமணமாகி, 2012ல், விவாகரத்து பெற்ற தம்பதி தொடர்பான வழக்கை, சமீபத்தில், கோல்கட்டா ஐகோர்ட் விசாரித்தது. விவாகரத்து பெற்ற கணவனின் மாதச் சம்பளம், 63,500 ரூபாயிலிருந்து, 95 ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருந்தது. அதே சமயம், விவாகரத்து பெற்ற கணவன், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து, அவள் மூலம், ஒரு குழந்தைக்கு தந்தையாகி உள்ளார். 

கணவனின் சம்பளம் அதிகரித்து உள்ளதால், பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வந்த ஜீவனாம்ச தொகையை, 16 ஆயிரம் ரூபாயில் இருந்து, 23 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, கோல்கட்டா ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், கணவன் மேல்முறையீடு செய்தார். 

இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஆர்.பானுமதி, எம்.எம்.சந்தனகவுடர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறும் கணவன், இருதரப்பின் அந்தஸ்துக்கு பொருந்தும் வகையில், ஜீவனாம்சம் அளிக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில், ஜீவனாம்சம் அளிப்பவரின் நிதி நிலைமையையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

ஜீவனாம்ச வழக்கில், கணவன், மனைவி ஆகிய இருவரது நிகழ்கால சூழ்நிலையை பொறுத்தே, ஜீவனாம்ச தொகை அமையும்.இந்த வழக்கில், கணவனுக்கு சம்பளம் உயர்ந்துள்ள போதிலும், அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணமாகி, குழந்தை பிறந்துள்ளது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவர் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும். 

அதனால், கோல்கட்டா ஐகோர்ட் கூறிய ஜீவனாம்ச தொகை, 23 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது.

இவ்வாறு சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 23.04.2017