disalbe Right click

Showing posts with label வட்டி. Show all posts
Showing posts with label வட்டி. Show all posts

Tuesday, November 7, 2017

கந்துவட்டி… சிக்காமல் தப்பிக்க வழிகள்!

சுமார் முப்பது ஆண்டுகளுக்குமுன் கீழ்த்தரமான தொழிலாகப் பார்க்கப்பட்டு வந்தது வட்டித் தொழில். ஆனால், இன்று அரசியல், அதிகாரம், பணபலம் இருப்பவர்கள் நடத்தும் தொழிலாக மேலான ஒரு நிலையை அடைந்திருக்கிறது.
வட்டிக்குக் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் உயர்ந்திருப்பதே இதற்குக் காரணம். ‘கடன் வேணுமா?’ என்று கேட்கிறவர்கள் ஒருபக்கமெனில், ‘கடன் கிடைக்குமா?’ என்று கேட்கிறவர்களும் நிறையவே இருக்கிறார்கள். இதன் விளைவாக, கடன்களும், வட்டிகளும் பல வகையான அவதாரங்கள் எடுத்திருக்கின்றன.
பலவிதமான வட்டிகள்
இன்றைக்குப் பலவிதமான கடன்கள் இருக்கின்றன. அவற்றுக்கு வாங்கப்படும் வட்டியின் அளவைப் பொறுத்து, அந்தக் கடன்களின் பெயர்கள் மாறுகின்றன. மீட்டர் வட்டி, மின்னல் வட்டி, ஸ்பீடு வட்டி, ராக்கெட் வட்டி, ஜெட் வட்டி, நிமிட வட்டி, நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி, ரன் வட்டி, பைக் வட்டி, பருவகால வட்டி, தண்டல் எனப் பல பெயர்களில் வட்டிகள் விஸ்வரூபம் எடுத்துவருகின்றன.
இதில் எந்தவொரு வட்டியில் கடன் வாங்கினாலும் மாதமொன்றுக்குக் குறைந்தது 3% முதல் 4%, 5%, 10%, 12%, 15% வட்டி வரை தாராளமாக வசூலிக்கப்படுகிறது. கடன் வாங்குபவர்கள் அவசரம் காட்டினால், மிக அதிகமான வட்டி வசூலிக்கப்படும்.
ஒவ்வொரு கடனிலும் எந்த அளவுக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது என்பதைப் பார்த்தால், நமக்குக் குலைநடுங்கும். விவரம் தெரியாமல் கடன் வாங்கிவிட்டு, அதிலிருந்து மீள முடியாமல் தீக்குளித்துச் சாவதற்குக் காரணமாக இருப்பது இந்த அநியாய வட்டிதான். இந்த வட்டிகளைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
எவ்வளவு வட்டி?
மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, மின்னல் வட்டி போன்றவை பொதுவாக வியாபாரிகளுக்கு வழங்கப்படுவதாகும். மீட்டர் வட்டியில் கடன் கொடுக்கும்போது முதல் தவணை வட்டியைக் கந்துவட்டிக்காரரே எடுத்துக்கொள்கிறார். உதாரணமாக, ரூ.10,000 கடன் வாங்கினால், அதில் 10% அதாவது, முதலிலேயே 1,000 ரூபாயைக் கந்துவட்டிக்காரர் எடுத்துக்கொள்வார். இதில் காலையில் ரூ.9,000 வாங்கினால், மாலையில் 10,000 ரூபாய் கொடுக்க வேண்டும்.
ஸ்பீடு வட்டி/ மின்னல் வட்டி: இந்தக் கடன் சில மணி நேரத்துக்கு மட்டுமே தரப்படும். குறிப்பிட்ட நேரத்தில் வாங்கிய பணத்தை வட்டியுடன் தரத் தவறினால் வட்டி இருமடங்காகும் என்பது திகில் உண்மை.
ராக்கெட் வட்டி, ஜெட் வட்டி, நிமிட வட்டி: இத்தகைய வட்டி பெரிய பிசினஸ்மேன்களுக்குத் தரப்படுவது. இவர்கள் வரி கட்ட, செக் க்ளியராகாதபோது உடனே பணம் தர, வரவேண்டிய பணம் உரிய நேரத்தில் வராமல்போய், பிறருக்குத் தரவேண்டிய பணத்தைத் தந்தே ஆகவேண்டிய கட்டாயம் போன்ற பிரச்னைகளைச் சமாளிக்க வாங்கப்படுவதாகும். இந்த மாதிரியான கடனுக்கு 3% முதல் 10% வரை குறிப்பிட்ட நேரத்துக்கும், நாள்களுக்கும் வட்டி வாங்கப்படுகிறது.
வார வட்டி: இந்த வகையான வட்டி, பொதுவாக வாரச் சம்பளம் வாங்குகிறவர்களுக்குக் கடனாகத் தரப்பட்டு வசூலிக்கப்படுவதாகும். கொடுக்கும் பணத்துக்கு வார இறுதியில் வட்டியுடன் அசலையும் திருப்பித் தரவேண்டும். அல்லது அதற்கான வட்டியைக் கொடுத்து அசலில் எவ்வளவு குறைக்க முடியுமோ, அவ்குவளவுக்குக் குறைத்துத் தரவேண்டும். இதில் சிறு கடன்கள் மட்டுமே தரப்படுகிறது. இதில் ரூ.1,000 – 5,000 வரை கடனாகத் தரப்படும். இதற்கு வட்டியாக 10% வரை வசூலிக்கப்படுகிறது.
மாத வட்டி: இந்த வட்டியைத்தான் பொதுவாக அனைத்துத் தரப்பினரும் வாங்குகிறார்கள். இதில் 2% முதல் 6% வரை மாத வட்டியாக வசூலிக்கப்படும். அசல் எப்போது கிடைக்கிறதோ, அப்போது கடனை முடித்துக்கொள்ளலாம். இந்தக் கடனை அடைப்பதும் மிகவும் கடினம். இந்தக் கடனை வாங்கிய பல லட்சம் பேர் பல வருடங்களாக மாட்டிக்கொண்டு, வட்டி மட்டுமே கொடுத்துவருகிறார்கள். அசலை அடைக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
ரன் வட்டி: இத்தகைய வட்டி சிறு தொகையாக இருந்தாலும், பெரிய தொகையாக இருந்தாலும் ஜாமீன் இல்லாமல் கடன் தரமாட்டார்கள். அதாவது, அசையா சொத்தையோ அல்லது அசையும் சொத்தையோ ஜாமீனாகக் கொடுத்து கடன் வாங்கலாம். உதாரணம், தங்கம், வாகனம், பாஸ்போர்ட், ஆதார் கார்டு, பட்டப்படிப்பு சான்றிதழ், வீட்டுப் பத்திரம் போன்றவை.
பருவகால வட்டி: இந்தக் கடனானது விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பருவகாலம் தொடங்கியதும் கந்துவட்டிக்காரர்களும், உரக்கடை உரிமையாளர்களும் தாங்களாகவே முன்வந்து, விவசாயிகளுக்கு உரம் வாங்குவதற்காகத் தருவார்கள். இதற்குப் பிரதிபலனாக அந்த விவசாயி, தன்னுடைய வயலில் விளையும் விளைபொருளை வேறு யாரிடமும் விற்கக்கூடாது. விதையையும், உரத்தையும் யாரிடம் கடன் வாங்கினாரோ, அவரிடமே விற்க வேண்டும். விதை கொடுத்தவர்தான் விலையையும் நிர்ணயிப்பார். விளைபொருள்களுக்குத் தரப்படும் விலையானது சந்தை விலையிலிருந்து மிகக் குறைவாக இருக்கும் என்பதுதான் இதில் உள்ள சூட்சுமம். மற்றபடி இதில் வட்டி எனத் தனியாக எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
தண்டல் வட்டி: இத்தகைய கடன்தான் கடன்களின் ராஜா என்கிறார்கள். அனைத்துத் தரப்பு மக்களும் இந்தக் கடனை வாங்கி வாழ்க்கையைத் தொலைக்கிறார் கள். இந்தக் கடனை டீ கடை முதல் பெரிய துணிக்கடை வரை அனைவரும் வாங்குகிறார்கள். இதில் ஒருமுறை கடன் வாங்கி ஒழுங்காகக் கட்டிவிட்டால், எவ்வளவு தொகையைக் கடனாகக் கேட்டாலும் அடுத்தமுறை தருவார்கள். இது 100 நாள் கடன் திட்டம். இந்தக் கடனில் கொள்ளை லாபம் கிடைப்பதால், இந்தக் கடனைத் தருவதிலேயே கந்து வட்டிக்கா ரர்கள் குறியாக இருப்பார்கள். இந்தத் தண்டல் கடனை வாங்கிய ஒருவர் எப்படிப் பாதிக்கப்படுகிறார் என்பதை ஒரு உதாரணம் மூலம் பார்ப்போம்.
கணக்குப்படி வாங்கிய கடன் தொகை: ரூ.50,000
அதற்கான வட்டியாக முதலிலேயே பிடிக்கப்படும் தொகை: ரூ.5,000
கைக்குக் கிடைக்கும் அசல் கடன் தொகை: ரூ.45,000
வாங்கியவர் தினமும் கட்ட வேண்டிய தொகை: 550 (100 நாள்களில்)
550*100=55,000
அதாவது, ஏற்கெனவே ரூபாய் 5,000 வட்டியைப் பெற்றுத்தான் ரூ.45,000 தரப்படுகிறது. கடன் தொகை 50,000 ரூபாயை 100 நாள்களில் வசூலிக்க 500 ரூபாய்தான் வாங்கவேண்டும். ஆனால், தினமும் 550 ரூபாய் வாங்கி, கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். 100 நாள்களில் ரூ.10,000 லாபம் பார்க்கிறார்கள்.
சிக்காமல் தப்பிக்கும் தாரக மந்திரம்
சாதாரண மனிதர்களாக இருந்தாலும் சரி, பிசினஸ் செய்பவர்களாக இருந்தாலும் சரி, திடீர் தேவைக்குக் கடன் வாங்குவது தவறில்லை. ஆனால், தொடர்ச்சியாக கடனை வாங்கிக்கொண்டே வாழ்க்கையையும், பிசினஸையும் நடத்துவதுதான் தவறு. பணத்தைக் கடனாக வாங்கும்போது அது நமக்கு எதிராக வேலை செய்கிறது. ஆனால், முதலீடு செய்யும்போது நமக்குச் சாதகமாகச் செயல்படுகிறது. பணத்தின் இந்தத் தாரக மந்திரத்தைப் புரிந்துகொள்பவர்கள் கடன் வலையில் ஆரம்பத்தில் சிக்கினாலும், பிறகு அதில் சிக்கவே மாட்டார்கள்.
வருமானத்துக்குள் செலவு
முடிந்தவரை கடன் வாங்காமல் நமது தேவைகளை நிறைவேற்றக் கற்றுக்கொண்டால் நிம்மதியுடன் வாழலாம். மாதம் ரூ.5,000 சம்பாதித்தாலும், ரூ.50,000 சம்பாதித்தாலும் இன்னும் நிறைய பணம் வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் தவறானது.
பக்கத்து வீட்டுக்காரர் அதை வைத்திருக்கிறார், இதை வைத்திருக்கிறார் என்று சொல்லி நாம் கடனில் பொருள்களை வாங்குவது தவறு. கல்யாணமோ, கருமாதியோ, நம் கையில் உள்ள பணத்துக்கேற்ப செலவு செய்ய நினைக்கும் தைரியம் நமக்கு வேண்டுமே தவிர, கெளரவத்துக்காக கடன் வாங்கிச் செலவு செய்துவிட்டு, சிக்கலில் மாட்டக்கூடாது. வருமானத்துக்கேற்ப வாழக் கற்றுக்கொண்டால், கடன் வலையில் சிக்காமலே இருக்கலாம்.
வட்டியைப் புரிந்துகொள்ளுங்கள்
கடன் வாங்கும்போது தனிப்பட்ட நபர்களிடம் வாங்குவதைவிட, வங்கிகளில் வாங்குவது நல்லது என்பதற்குக் காரணம் வட்டிதான். இந்த வட்டியைப் புரிந்துகொண்டால், கடன் வாங்க பலரும் யோசிக்கவே செய்வார்கள்.
வங்கியில் ரூ.10,000 கடன் வாங்குகிறோம் எனில், அதற்கு வட்டியாக ஆண்டுக்கு 10% என்றால், ஆண்டுக்கு ரூ.1,000 கட்டினால் போதும். இதை மாதக் கணக்கில் கணக்கிட்டால் வெறும் ரூ.83 மட்டுமே ஆகும்.
ஆனால், கந்துவட்டி அப்படியல்ல. இதில் மாதத்துக்கு ஒரு ரூபாய்க்குக் குறைந்தது மூன்று பைசா முதல் அதிகபட்சமாக 10, 12, 15 பைசா என்கிற அளவில் வட்டி வசூலிப்பார். அதாவது, 10,000 ரூபாய்க்கு மாதத்துக்கு மூன்று பைசா வட்டி என்றால், அதற்கு மாதத்துக்கு வட்டியாக 300 ரூபாய் தரவேண்டும். ஆக, ஆண்டுக்கு ரூ. 3,600 வட்டி போகும். சதவிகிதக் கணக்கில் பார்த்தால், ஆண்டுக்கு 36% சதவிகித வட்டியாகும்.
மூன்று பைசாவுக்கே இப்படி எனில், நான்கு பைசா, ஐந்து பைசா, பத்து பைசா என்றால், வட்டியாகக் கட்டவேண்டிய பணம் எவ்வளவாக இருக்கும் என்பதைக் கணக்கிட்டால், நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள். இந்த வட்டிக் கணக்கைப் புரிந்துகொள்ளாமலே பலரும் கடன் வாங்கி, பிறகு அசலைத் திரும்பத் தரமுடியாமல் வட்டி மட்டுமே கட்டி, தன் வாழ்க்கையைத் தொலைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
வங்கியில் வாங்கினால் தப்பில்லை
வங்கியில் கடன் வாங்கத்தான் நினைக்கிறோம். ஆனால், தரமாட்டேன் என்கிறார்களே என்பதே பலருடைய புகாராக இருக்கிறது. வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்துள்ள பணத்தைத்தான் வங்கிகள் மற்றவர்களுக்குக் கடனாகத் தருகின்றன. எனவே, பணத்தைத் திரும்பச் செலுத்தும் தகுதியிருந்தால் மட்டுமே வங்கிகளில் கடன் கிடைக்கும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். வங்கிகளில் கடனுக்கான வட்டி நியாயமாக இருப்பதால், அங்கு மட்டுமே தேவைப்படும்போது கடன் வாங்கலாம்.
வங்கிகளில் கடன் கிடைக்கவில்லை எனில், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களில் கடன் வாங்கலாம். மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் அதிகபட்சமாக 26 சதவிகிதத்துக்கு மேல் வட்டி வசூலிக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கிறது. இந்த 26 சதவிகித வட்டியே வங்கி வட்டியுடன் ஒப்பிடும்போது அதிகம் என்றாலும், தனிப்பட்ட நபர்களிடம் 36 சதவிகித வட்டி கட்ட வேண்டியிருக்கும் என்பதால், இந்த வட்டி பரவாயில்லை எனலாம்.
பிசினஸ்மேன்களுக்கான தீர்வுகள்
பிசினஸ்மேன்கள் மற்றும் வியாபாரிகள் ராக்கெட் வட்டி, ஜெட் வட்டி, நிமிட வட்டி மாதிரியான கடன்களை வாங்குவதைவிட, வங்கியில் பர்சனல் லோன், ஓவர் டிராப்ட் கடன் போன்றவற்றை வாங்கலாம். வங்கி விஷயத்தில் நீங்கள் நேர்மையாக நடந்து, ஆண்டுதோறும் வரிக் கணக்கைச் சரியாகத் தாக்கல் செய்யும்பட்சத்தில், உங்களுக்கு வங்கியானது கடன் தரத் தயங்காது. இதற்கு வட்டி 14% – 22% மட்டுமே. ஒவ்வொரு மாதமும் அசலும், வட்டியும் சேர்த்துக் கட்டி 3-5 வருடங்களில் கடனை முடிக்கலாம்.
மாத வட்டிக்குத் தனிநபர் களிடம் கடன் வாங்கியவர்கள் தங்களிடம் தங்க நகை இருந்தால், அதை வங்கியில் அடமானம் வைத்துக் கடன் பெற்று, கடனை அடைக்கலாம். இதற்கான வட்டி பொதுத்துறை வங்கிகளில் வருடத்துக்கு 7% முதல் 11% வரை மட்டுமே.
விவசாயிகளும் கிஷன் கிரெடிட் கார்டு மூலம் பயிர் கடன் பெறலாம். தங்க நகையை அடமானம் வைப்பதன் மூலம் மிகக் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். இதனால் அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களைச் சந்தையில் நல்ல விலைக்கு விற்று லாபம் பார்க்கலாம்.
முதலீடுதான் நீண்ட காலத் தீர்வு
ஏதோவொரு அவசரத் தேவைக்காக அதிக வட்டி என்றாலும் குறுகிய காலத்துக்குள் திரும்பக் கட்டிவிட முடியும் எனில், கடன் வாங்குவதில் தவறில்லை. வங்கிகளில் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வாங்குவதில் தவறே இல்லை. மிக மிக அதிக வட்டியில் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்குவதுதான் தவறு. இந்தக் கடன் மற்றும் வட்டியிலிருந்து தப்பிக்க ஒரே வழி, முதலீடு செய்வதுதான். மாதமொன்றுக்கு 100 ரூபாய்கூட சேமிக்கலாம். இதற்கு வருடத்துக்கு 3% முதல் 6% வரை வட்டி கிடைக்கும். நமக்கு எப்போது பணம் தேவையோ, அப்போது எடுத்துக்கொள்ளலாம்.
கடனிலிருந்து விடுதலை
ஓரளவுக்கு வருமானம் பெறுகிறவர்கள் மாதமொன்றுக்கு ரூ.1,000 அல்லது ரூ.2,000 என வங்கிகளிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் கடன் சார்ந்த திட்டங்களிலோ முதலீடு செய்யலாம். இப்படிச் செய்வதன் மூலம் குறைந்தது 7% வருமானம் கிடைக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்ய முடியுமெனில், பங்குச் சந்தை சார்ந்த திட்டங் களில் முதலீடு செய்யலாம்.
இதற்கு 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. இப்படி முதலீடு செய்திருக்கும் பணத்தை எதிர்காலத்தில் தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் கடன் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. வட்டி கட்ட வேண்டிய தொல்லையும் இல்லை. நாள் வட்டியில் கடன் வாங்கிவிட்டு, தினம் ரூ.100 கொடுக்க முடிகிறபட்சத்தில், தினமும் ரூ.100 ஏன் உங்களால் சேமிக்க முடியாது?
பணம் எப்போதுமே கடன் வாங்குபவர்களுக்கு மிக எதிராகவும், முதலீடு செய்யும்போது உற்ற நண்பனாகவும் இருக்கும். பணத்தின் இந்தத் தாரக மந்திரத்தை மறக்காதீர்கள், ஒருபோதும் கடன் தொல்லையில் மாட்ட மாட்டீர்கள்.
மாற்றப்பட வேண்டிய கந்துவட்டிச் சட்டம்
கந்துவட்டிக்கு எதிராக 2003-ல், ‘தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டித் தடுப்புச் சட்டத்தை (Tamilnadu Prohibition Of Charging Exorbitant Interest Act 2003) அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். பிறகு ஒரு சில திருத்தங்களுடன் 09-06-2003-ல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின்படி, 12 சதவிகிதத்துக்கு மேல் வட்டி வாங்கினால் அது கந்து வட்டியாகக் கருதப்படும்.
பொதுத் துறை வங்கிக் கடன்களுக்கான வட்டியை நிர்ணயிக்கும் ரிசர்வ் வங்கி, மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் அதிகபட்சமாக வசூலிக்கத் தகுந்த வட்டியையும் நிர்ணயம் செய்துள்ளது. அதிகபட்சமாக 26 சதவிகிதத்துக்கு மேல் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் வட்டி வசூலிக்கக்கூடாது என்கிறது ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கியே 26% வட்டி வசூலிக்கலாம் என்று நிர்ணயம் செய்தபின், 12% சதவிகிதத்துக்கு மேல் வட்டி வசூலிக்கக்கூடாது என்னும் தமிழக அரசின் சட்டம் காலத்துக்கேற்றதாக இல்லை. இதனால் சாதாரண மக்கள் கந்து வட்டிக்காரர்களிடம் 36, 48%, 60% என வட்டி கொடுத்துச் சாகிறார்கள். கந்து வட்டிக்கான வட்டி விகிதத்தை சுமார் 18 சதவிகிதமாக உயர்த்துவதன் மூலம், இந்தச் சட்டத்தை இன்னும் திறமையாக நடைமுறைப்படுத்தி, வட்டிக் கொடுமையிலிருந்து மக்களைக் காக்க முடியும்!
நன்றி : நாணயம் விகடன் - 05.11.2017