disalbe Right click

Tuesday, April 28, 2015

வெளிநாட்டில் வேலை பார்க்க, பகுதி-3



வெளிநாட்டில் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும்? பகுதி-3
**********************************************************************************************

8) கடவுச் சீட்டில் விசா பதிவாகும் முறை:


நம்மை தேர்வு செய்த நிறுவனம், வேலை வாய்ப்பு நிறுவனம் நிர்வாகிகளிடமும் நமக்குரிய விசாவை கொடுத்து இருப்பார்கள். தொழில் விசாவில் இரு வகை உண்டு.

1) தனி விசா (INDIVIDUAL VISA)

2) கூட்டு விசா (GROUP VISA)

உதாரணமாக மின்-பணியாளர் பத்து பேர் ஒரு நிறுவனத்திற்கு தேவைப்பட்டால் ஒரே விசாவில் பத்து பேருக்கும் சேர்த்து இருக்கும்.

பத்து மின்-பணியாளர் தேர்வு செய்தவுடன், பத்து பேரின் கடவுச் சீட்டு, புகைப்படம், சான்றிதழ் இவற்றுடன் குரூப் விசாவையும் சேர்த்து, எந்த நாட்டிற்குச் செல்கிறோமோ, அந்நாட்டின் தூதரக அலுவலகம் உள்ள மும்பை, சென்னை, புதுதில்லி - இவற்றில் ஒரு இடத்தில் கொடுத்து கடவுச் சீட்டில் பதிவு செய்வார்கள்.

கடவுச் சீட்டில், விசா பதிவு செய்த நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் நாம் வெளிநாடு சென்றுவிடவேண்டும்.

விசா தயாரானவுடன் வேலை வாய்ப்பு நிறுவனம் நம்மை தொடர்பு கொண்டு வெளிநாடு செல்ல நம்மை அழைப்பார்கள்.

பிறகு விமான பயணச் சீட்டையும், புறப்படும் தேதியையும் உறுதி செய்வார்கள்.

அந்த நாளையும் நமக்குத் தெரியப்படுத்தி, முதல் நாளே சென்னை வந்து கடவுச்சீட்டையும். விமானப் பயணச் சீட்டையும் நம்மிடம் கொடுப்பார்கள்.

(9) எந்த விமான நிலயைத்தில் இறங்கவேண்டும்? யார் அழைத்துச் செல்வது: 

மறக்காமல் தங்களுடைய பணிக்கான தொகையையும் பெற்றுக் கொண்டுதான் மேற்கண்டவை நமக்கு கிடைக்கும்.

இங்கு முக்கியமாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அது வேலை வாய்ப்பு நிறுவனம் வாங்கும் தொகை (SERVICE CHARGE) பற்றியது. 

ஒருசில நிறுவனங்களை விட, மற்ற நிறுவனங்கள் வாங்கும் தொகை மிக அதிகம்.

இந்த விசயத்தில் அரசு தலையிட்டு, நிறுவனங்கள் வாங்கும் தொகையை முறைப்படுத்த வேண்டும்.

இதில் அரசின் அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வாங்கும் தொகையைப் பின்பற்றலாம்.

விமான நிலையத்தில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

நீங்கள் வெளிநாடு செல்லும் நாளும் வந்து விட்டது. பன்னாட்டு விமான நிலையத்திற்கு, விமான பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும், விமான புறப்பாடு நேரத்திற்கு மூன்று மணி நேரம் முன்னதாக (REPORTING TIME) சென்று தகவல் கொடுக்க வேண்டும்.

அப்போது தான் நீங்கள் பயணம் செல்வது உறுதி செய்யப்படும்.

(10) இமிக்ரேஷன் பகுதியில் உங்கள் கடவுச்சீட்டும், பயணச்சீட்டும் கொடுத்தவுடன், உங்களின் கடவுச்சீட்டு சரி பார்க்கப்பட்டு (IMMIGRATION CLEARANCE), உங்களுக்கு BOARDING PASS தருவார்கள்.

அத்துடன் இமிக்ரேசன் விண்ணப்பம் கொடுத்து பூர்த்தி செய்யவேண்டும் என்பார்கள்.

உங்களால் விண்ணப்பத்தை நிரப்ப முடியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கொடுத்து நிரப்ப வேண்டும்.

நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை விமான ஊர்திக்குள் உள்ளே செல்லும்போது விமான ஊழியர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

விமான இருக்கையில் அமர்ந்தவுடன் பாதுகாப்பு பட்டையை அணிந்து கொள்ளவேண்டும்.

விமானத்தில் உங்களுக்குத் தேவையான சைவ மற்றும் அசைவ உணவுகளை வாங்கிச் சாப்பிடலாம்.

இப்போது நாம் எந்த இடத்தில் பறந்து கொண்டு உள்ளோம் என்ற விவரம் நம் முன் உள்ள திரையில் காணலாம்.

நாம் சேருமிடம் வந்துவிட்டோ ம்.

விமானத்தில் இருந்து இறங்கியவுடன், வரிசையாக நின்று, இமிக்ரேசன் முடித்து, நமது கடவுச் சீட்டில் அந்நாட்டில் வந்து சேர்ந்ததற்கான முத்திரை குத்தப்பட்டு நம்மிடம் தருவார்கள்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து விட்டீர்கள்.

உங்களுக்காக நீங்கள் பணி செய்யப்போகும் நிறுவனம் அனுப்பிய பிரதிநிதி கையில் நிறுவனப் பெயர் அடங்கிய அட்டையை கையில் வைத்துக் காத்திருப்பார்.

(11) அந்த  நிறுவனத்தின் பிரதிநிதி வரவில்லை! என்றால்? 

இங்கு ஒருமுறை எனக்கு நேர்ந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வளைகுடா நாடுகளில் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமை விடுமுறை நாட்கள்.

நான் சவூதி அரேபியா சென்று இறங்கியது வெள்ளிக்கிழமை மாலை 7 மணி. அன்று விடுமுறை என்பதால் என்னை அழைத்துச் செல்லும் நபர் விமான நிலையத்திற்கு வரவில்லை.

தொலைபேசியில் தொடர்பு கொண்டால் பதில் இல்லை. என்ன செய்வது?

விமான நிலையத்தின் வெளியே சுற்றும் முற்றும் பார்த்தேன். மொழி வேறு தெரியாது.

அப்போது நான்கு தமிழ் அன்பர்கள் வாடகை வண்டியை அணுகி பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று என் நிலையை விளக்கினேன்.

அன்பர் ஒருவர், 'அதற்கென்ன இன்று இரவு எங்கள் அறையில் தங்கி விட்டு, காலையில் நீங்கள் செல்லும் இடத்திற்கு வண்டி பிடித்து அனுப்புகிறோம்' - என்றார்.

அப்போது தான் எனக்கு தெம்பு வந்தது.

இரவு சாப்பாடு கொடுத்து, காலை வாடகை வண்டி பிடித்து, நான் செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பினார்கள்.

(12) நண்பர்களுக்கு என் நன்றி!

இதைப் போல் உங்களுக்கு ஒரு நிலைமை என்றால், மேற்கண்டபடி நீங்களும் சமாளிக்க வேண்டியது தான்!

நீங்கள் பணியில் சேர்ந்தவுடன், அங்கும் ஒரு மருத்துவ பரிசோதனைக்கு உங்களை அனுப்புவார்கள். அந்த மருத்துவச் சான்றிதழ், நிறுவன கடிதம், கடவுச் சீட்டு இவற்றை இணைத்து 'WORK PERMIT' - பெற அனுப்புவார்கள்.

'WORK PERMIT' - கிடைத்தவுடன் அதில் எத்தனை வருடத்திற்கு அனுமதி உள்ளதோ அதுவரை அந்நாட்டில் பணிபுரியலாம்.

நிறுவனம், தேவைப்பட்டால் மறுபடியும் 'work permit'- ஐ புதுப்பித்துக் கொள்ளும்.

நீங்கள் எங்கு வெளியே சென்றாலும், கண்டிப்பாக உங்கள் வசம் 'WORK PERMIT' வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய இன்னொன்று, மீண்டும் ஒரு பணி ஒப்பந்தம் கொடுத்து கையொப்பம் இடச் செய்வார்கள்.

ஏற்கனவே, நீங்கள் நேர்முகத் தேர்வு முடிந்தவுடன் பேசிய சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அடங்களி ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருப்பீர்கள்.

அதனுடைய நகலை மறக்காமல் கைவசம் வைத்திருந்து, பணியில் சேர்ந்தவுடன் கொடுக்கும் ஒப்பந்த பத்திரத்துடன் சோதித்து பார்த்து ஏதாவது வேறுபாடு உள்ளதா என பார்க்க வேண்டும்.


(13)  பேசிய சம்பளத்திற்கு குறைவாக இரண்டாவது ஒப்பந்தத்தில் இருந்தால்?

ஒப்பந்தம் சரி செய்தால் ஒழிய, நீங்கள் கையொப்பம் இடக்கூடாது.

இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்வது எப்படி?

நீங்கள் பணியில் சேர்ந்தவுடன் உங்கள் பெயர், அப்பா பெயர், இந்திய விலாசம், தற்போதைய நிறுவனத்தின் விலாசம், வேலையின் பெயர், கடவுச் சீட்டு எண், கடவுச் சீட்டின் நகல் ஆகியவற்றை மெயில் மூலமாகவோ அல்லது தொலை நகல் மூலமோ இந்திய தூதரகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்திய தூதரகத்தின் விலாசத்தை இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உங்களைப் பற்றிய குறிப்புகளை தூதரகத்தில் பதிவு செய்து கொள்வார்கள். நீங்கள் பணிபுரியும் நாட்டில் எந்த பிரச்சினை என்றாலும் இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

உங்கள் கடவுச் சீட்டை புதுப்பிக்க மற்றும் விசா பற்றிய சந்தேகங்களும் நிவரத்தி செய்வார்கள். உங்களுக்கு அருகில் உள்ள நகரங்களுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தூதரகங்கள் மூலம் முகாம் நடத்துவார்கள்.
                                                                                                                              -இன்னும் இருக்கிறது-

நன்றி : திரு முத்துரத்தினம் அவர்களுக்கு

1 comment:

  1. பதிவை பார்க்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
    தயவுசெய்து உங்களது எண்ணங்களை இங்கு எங்களுக்குத் தெரிவியுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், எங்களது சேவையை இன்னும் சிறப்பாக தங்களுக்கு வழங்க இயலும்! என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete