disalbe Right click

Monday, April 6, 2015

இறப்புச் சான்றிதழின் அவசியம்


இறப்புச் சான்றிதழ்

இறப்புச் சான்றிதழின் அவசியம் என்ன?

ஒருவரின் உயிர் இயக்கத்துக்கான அறிகுறிகள் அனைத்தும் நின்றுவிட்டதை உறுதிப்படுத்த இறப்புச் சான்றிதழ் அவசியம்.

எந்த சூழ்நிலையில் இறப்புச் சான்றிதழ் தேவைப்படும்?

சொத்து, நிலம், காவல் விசாரணை உள்ளிட்ட விவகாரங்களுக்கு இறப்புச் சான்றிதழ் தேவை.

இறப்புச் சான்றிதழை எங்கு, யாரிடம் பெறுவது?

இறப்புச் சான்றிதழை இறப்பு நிகழும் இடத்துக்கு உட்பட்ட பிறப்பு - இறப்பு பதிவாளரிடம் பெற வேண்டும். மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையரிடமும், ஊராட்சிகளில் நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர் என அதற்கு பொறுப்பான அதிகாரியிடமும் பெற வேண்டும்.

இறப்பு நிகழ்ந்தவுடன் செய்யவேண்டியது என்ன?

மருத்துவமனையில் இறப்பு நிகழ்ந்தால், இறந்தவரின் பெயர், வயது உள்ளிட்ட தகவல்களை மருத்துவமனையில் தெரிவித்து, இறப்பு நிகழ்ந்ததற்கான காரணத்தை குறிப்பிடும் படிவம் IV-ஐ பெற்றுக்கொள்ள வேண்டும்.

வீட்டில் இறப்பு நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும்?

வீட்டில் இறப்பு நிகழ்ந்தால், அதை அருகில் உள்ள பிறப்பு - இறப்பு பதிவாளரிடம் தெரிவித்து படிவம் IV-ஏ-வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவே இறப்பை உறுதிப்படுத்தக்கூடிய சான்றிதழ்.

எத்தனை நாட்களுக்குள் இறப்புச் சான்றிதழ் பெற வேண்டும்?

ஒருவர் இறந்து 30 நாட்களுக்குள் பெற வேண்டுமானால், மருத்துவமனையிலேயே பெற்றுக்கொள்ளலாம். 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் என்றால், மாநகராட்சி ஆணையர் அல்லது அதற்கு பொறுப்பான அலுவலரிடம் இருந்து எழுத்து மூலமாக அனுமதி பெற வேண்டும். ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டால், குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற வேண்டும்.

ஒருவர் வசிக்கும் ஊரிலிருந்து வேறு இடத்தில் இறப்பு நிகழ்ந்தால் செய்ய வேண்டியது என்ன?
இறப்பு எங்கு நிகழ்ந்தாலும், அந்த இடத்தில் உள்ள பிறப்பு - இறப்பு பதிவாளரிடம் இருந்துதான் சான்றிதழைப் பெற வேண்டும்.

குழந்தை இறந்தே பிறந்தால், கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன?

இறந்தே பிறக்கும் குழந்தைக்கு, பிறப்புச் சான்றிதழ் கொடுக்கப்பட மாட்டாது. இறப்புச் சான்றிதழ் மட்டுமே கொடுக்கப்படும். அதற்கும், மற்றவர்கள் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான அதே நடைமுறைகள்தான் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

இறந்து பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆன ஒருவருக்கு, அவரது இறப்பை பதிவு செய்யாத நிலையில், அவரது “இறப்புச்சான்றிதழ்” பெற என்ன செய்ய வேண்டும்?

முதலில் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகம் சென்று, அவரது இறப்புச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும். அங்குள்ள பதிவு அதிகாரி, அந்த இறப்பு பதிவு செய்யப்படவில்லை என ஒரு அறிக்கை தங்களுக்கு வழங்குவார்.

அதன்பிறகு ஒரு வழக்கறிஞர் மூலமாக, முண்ணனி தமிழ் நாளிதழ் ஒன்றில் இறந்துபோன தங்களது உறவினர் பற்றிய
விபரங்களை முழுமையாக குறிப்பிட்டு விளம்பரமாக வெளியிடவேண்டும். அதற்கு 15 நாட்களுக்குள் யாரும் ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில், அதனையும், நகராட்சி அலுவலர் கொடுத்த அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நீதிபதி சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலருக்கு, தங்கள் உறவினரின் இறப்புச்சான்றிதழ் வழங்குமாறு உத்தரவு பிறப்பிப்பார்.

No comments:

Post a Comment