disalbe Right click

Wednesday, June 10, 2015

ஹெல்த் இன்சூரன்ஸ், முழுமையாக “க்ளெய்ம்” செய்ய


ஹெல்த் இன்சூரன்ஸ்,  முழுமையாக “க்ளெய்ம்” செய்வது எப்படி?
ஹெல்த் இன்ஷூரன்ஸில் முழுமையான க்ளெய்ம் கிடைக்க...
கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
ஹெல்த் இன்ஷூரன்ஸில் முழுமையான க்ளெய்ம் கிடைக்க கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் குறித்து விளக்குகிறார் ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம் நிறுவனத்தின் தலைமை இன்ஷூரன்ஸ் ஆலோசகர் ஸ்ரீதரன்.
மறைக்கக்கூடாத தகவல்கள்!
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனம் கேட்கும் விவரங்களில் எந்த மாதிரியான விவரங்களை முழுமையாகத் தரவேண்டும் என்பது இன்னும் பலருக்குத் தெளிவில்லாமல் இருக்கிறது. உதாரணமாக, ஏதாவது நோயினால் நீங்கள் அவதிப்பட்டு பாலிசி எடுப்பதற்குமுன் குணமடைந்திருந்தால் அது குறித்த மருத்துவச் சான்றிதழ் மற்றும் மருத்துவரின் பரிந்துரைக் கடிதங்களை விண்ணப்பத்தோடு சமர்பிக்க வேண்டும். உங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் நோய்கள் பற்றிய விவரங்களையும் விரிவாக, தெளிவாகக் குறிப்பிடுவதால் உங்கள் பிரீமியத்தை அதிகமாக்கும் என்றாலும், க்ளெய்ம் என்று வரும்போது பிரச்னை எழாமல் இருக்கும். பாலிசி எடுக்கும்போது பிரீமியத்தைக் குறைக்க உங்கள் நோய் பற்றிய விவரங்களை மறைத்தால் அது நீங்கள் எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசியின் அடிப்படை நோக்கத்தையே நேரடியாகப் பாதிக்கும்.
நீங்கள் தனிநபர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காமல் ஃப்ளோட்டர் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது மேற்கூறிய அனைத்தையும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்கெனவே உள்ள நோய்களை (ப்ரீ எக்ஸிஸ்டிங் டிஸீஸ்) பற்றிய விரிவான குறிப்புகள் மற்றும் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டு குணமான நோய்கள் போன்றவைகளையும் குறிப்பிடுவதால் க்ளெய்ம் தொகை கிடைப்பதில் சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
பாடி மாஸ் இண்டெக்ஸ்!
ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது பாடி மாஸ் இண்டெக்ஸ் கணக்கிடப்படும். இந்த இண்டெக்ஸ்படி, ஒருவர் எவ்வளவு உயரம் இருக்கிறாரோ, அந்த உயரத்துக்கு தகுந்தாற் போல் அவரின் உடல் எடையும் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் கூடுதல் உடல் எடை இருந்தால், அது இன்ஷூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்க காரணமாகும். ஏன் இதைக் கணக்கிடுகிறார்கள் என்றால், அதிகப்படியான உடல் எடை சர்க்கரை நோய்க்கு அடித்தளம். சர்க்கரை நோய் வந்துவிட்டால், படிப்படியாக ரத்த அழுத்தம், இதய நோய்களும் கூடவே வர வாய்ப்பு அதிகம். இதனால் கம்பெனி அதிக பிரீமியம் வசூலிக்க வேண்டியிருக்கும். பிரீமியத்தைக் குறைக்க நம் எடையைக் குறைத்து சொல்லி, பிறகு ஏதாவது க்ளெய்முக்குச்  சென்று, பின்னாளில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிய வந்தால் மொத்த பாலிசியும் ரத்து செய்யப்படும்.
ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் பாலிசி!
ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பாலிசிகளுக்கு இணையாக அதிக க்ளெய்ம்களை தருவதில்லை. உதாரணமாக, ஒரு சில ஜெனரல் இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் ஆம்புலன்ஸ், மருத்துவர் கட்டணம், சிறப்பு மருத்துவர் கட்டணம், நோயாளிகள் தங்கும் அறை வாடகை போன்றவை களுக்கு க்ளெய்ம்  கிடையாது.
மேலும், ஹெல்த் இன்ஷுரன்ஸ் நிறுவனங்களின் முதல் கடமையே இதுவாக இருப்பதால், பாலிசிதாரரின் தேவையை அறிந்து பல புதிய பாலிசிகளை அறிமுகமும் செய்து வருகின்றன. ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பாலிசிகளில் மேற்கூறிய அனைத்துக்கும் பாலிசியின் மொத்த க்ளெய்ம் தொகையில் குறிப்பிட்டுள்ள அளவு க்ளெய்ம் தொகை வழங்கப்படுகிறது. உதாரணமாக, பொது மருத்துவரை அணுகினால் மொத்த கவரேஜ் தொகைக்கு 1%, சிறப்பு மருத்துவர்களை அணுகினால் ஒரு நாளுக்கு இவ்வளவு தொகை என்று வழங்கப்படும். மருத்துவ அறையின் வாடகை கவரேஜ் தொகையில் 1% என்று வழங்கப் படுகிறது. இது ஒவ்வொரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் மாறுபடும்.
இரண்டாவது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி!
ஒருவர் இரண்டாவது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் அவர் தன் முதல் பாலிசி பற்றிய விவரங்களை இரண்டாவது பாலிசி எடுக்க இருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். இரண்டு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் ஐஆர்டிஏவின் பரிந்துரையின் படி, அதிக கவரேஜ் வழங்கிய நிறுவனம் அதன் கவரேஜ் தொகைக்குத் தகுந்த பங்கு தொகையையும், குறைந்த கவரேஜ் வழங்கிய நிறுவனம் அதற்குத் தகுந்த பங்கு தொகையையும் வழங்கும். உதாரணத்துக்கு, ஒருவர், முதல் பாலிசியில் 2 லட்சம் கவரேஜும், இரண்டாவது பாலிசியில் 1 லட்சம் கவரேஜும் எடுத்திருந்தால், முதல் பாலிசியிலிருந்து மூன்றில் இரண்டு பங்கும் இரண்டாவது பாலிசியில் இருந்து மூன்றில் ஒரு பங்கும் க்ளெய்ம் பெற முடியும். ஆனால், ஒருவர் இரண்டுக்கும் மேற்பட்ட ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கும்போது க்ளெய்ம் நேரத்தில் எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் எவ்வளவு க்ளெய்ம் வழங்க வேண்டும் என்று இன்ஷூரன்ஸ் நிறுவனங்க ளுக்குள் சிக்கல்கள் ஏற்படும். எனவே, ஒரு தனிநபர் பாலிசியும், ஒரு ஃப்ளோட்டர் பாலிசியும் எடுத்தால் போதுமானது.
கோ-பேமென்ட்!
பாலிசி எடுக்கும்போது கோ - பேமென்ட் என்று ஏதாவது செலுத்த வேண்டுமா என்பதைத் தெரிந்துகொண்டு  எடுங்கள். பல நிறுவனங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தொகையில் 10 - 20% தொகையைக் கோ-பேமென்ட்டாகச் செலுத்த வேண்டும் என்று சொல்கிறது. சில நிறுவனங்கள் இந்தக் கோ-பேமென்ட் இல்லாமலும் க்ளெய்ம் வழங்குகிறது. எனவே, இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பாலிசி எடுங்கள். அதேபோல் வயதானவர்களுக்கு எப்படி கோ-பேமென்ட் கணக்கிடுகிறார்கள் என்று விசாரித்து பாலிசி எடுங்கள்.
க்ளெய்ம் விவரங்கள்!
எந்த மாதிரியான சிகிச்சைகளுக்கு க்ளெய்ம் கிடைக்கும்; எந்த மாதிரியான சிகிச்சைகளுக்கு க்ளெய்ம் கிடைக்காது என்பதையும் தெரிந்துகொண்டு எடுங்கள். உதாரணமாக, நாம் செய்து கொள்ளும் சிகிச்சைகளில் நம் அழகை அதிகப்படுத்தச் செய்யப்படும் கிசிக்கைகளுக்கு க்ளெய்ம் கிடைக்காது. அதோடு ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு எத்தனை ஆண்டுகள் காத்திருப்புக் காலம்  என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு பாலிசி எடுப்பது நல்லது. சில நிறுவனங்கள் பாலிசி எடுத்து 30 நாட்களுக்குப் பின் க்ளெய்ம் செய்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதேபோல் ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு எத்தனை நாட்களுக்கு காத்திருப்புக் காலம் என்பதை எல்லாம் கவனித்துப் பாலிசி எடுங்கள். இது உங்கள் க்ளெய்ம் தொகையில் பிரச்னை இல்லாமல் இருக்க வழி வகுக்கும். இந்தக் காத்திருப்புக் காலம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.
சர்க்கரை நோய்..! 
பொதுவாக சர்க்கரை வியாதிக்கு எந்த பாலிசியிலும் க்ளெய்ம் கிடைக்காது. அப்படி க்ளெய்ம் கொடுப்பதாகக் குறிப்பிட்டிருந்தால் எதற்கு எல்லாம் க்ளெய்ம் உண்டு என்று தீர விசாரித்துத் தெரிந்துகொண்டு பாலிசி எடுங்கள். எனவே, சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பிரத்தியேகமான டயாபெட்டீஸ் பாலிசி எடுத்தால் சர்க்கரை வியாதியால் வரும் அனைத்து நோய்களுக்கும் க்ளெய்ம் கிடைக்கும். சர்க்கரை வியாதிதான் இன்றைய தேதியில் பெரும்பாலான நோய்களுக்கான அறிமுக நோயாக இருக்கிறது. எனவே, அதற்கு தனி பாலிசியை எடுத்துக்கொள்வது நலம்.
எங்கு சிகிச்சை?
பாலிசி எடுத்தவர்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் எனில், பாலிசி எடுத்த நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவ மனைகளில் இணைவது நல்லது. பணத்தை நாம் செலுத்திவிட்டுப் பின் க்ளெய்முக்கு காத்திருப்பதை விட கேஷ்லெஸ் முறையில் நெட்வொர்க் மருத்துவ       மனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்வது பெஸ்ட்.
தெரியப்படுத்துதல்!
முன்கூட்டித் திட்டமிட்டு எடுக்கவுள்ள சிகிச்சைகளை 72 மணி நேரத்துக்குமுன் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெரியப்படுத்த வேண்டும். இல்லை என்றால் உங்கள் க்ளெய்மை நிராகரிக்க இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு உரிமை உண்டு.
அதுபோல அவ்வப்போது ஏதாவது புதிய விதிமுறைகள் வந்திருக்கிறதா அல்லது இருக்கும் விதிமுறைகள் மாற்றப்பட்டிருக்கிறதா என்பதை இணையம், நாளிதழ்கள் மற்றும் உங்கள் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
சிறப்பு பாலிசிகள்!
இன்றைய காலத்தில் க்ரிட்டிக்கல் இல்னஸ் பாலிசிகள், மகளிர் பாலிசிகள் என்று பல தரப்பட்ட பாலிசிகளை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கத் தொடங்கி இருக்கின்றன. மேலும், மூத்த குடிமக்களுக்கும் சிறப்பு பாலிசிகளை ஒரு சில நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஆகவே, மூத்த குடிமக்களும், இத்தகைய சிறப்பு பாலிசிகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
உதாரணமாக, ஒரு குடும்பத்தில் பலருக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு உள்ளது என்றால் வெறும் கார்டியாக் பாலிசியை எடுத்தால் போதும். அதேபோல் தற்போது பெண்களுக்கு என்று சிறப்பு மகளிர் பாலிசிகள் வந்திருக்கின்றன. இந்த பாலிசி மூலம் பெண்களை அதிகம் தாக்கக்கூடிய மார்பகப் புற்றுநோய், கர்பப்பை புற்றுநோய் பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளின் நோய்களான ப்ரீ மெச்சூர் ஒவேரியன் ஃபெய்லியர், பாலிசிஸ்டிக் ஓவரி போன்ற பிரச்னைகளுக்குக்கூட இந்த பாலிசிகளில் க்ளெய்ம் கிடைக்கும்.
மு.சா.கெளதமன்
நன்றி : நாணயம் விகடன், 07.06.2015  

No comments:

Post a Comment