disalbe Right click

Monday, November 30, 2015

லஞ்ச ஒழிப்புத்துறை


லஞ்ச ஒழிப்புத்துறை எவ்வாறு செயல்படுகிறது?

பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம், லஞ்சம் வாங்குவோர், அரசுத்துறைகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தனர். இவர்கள், நேர்மையான ஊழியர்களை கண்டு பயந்தனர். மக்களிடம் லஞ்சம் கேட்கவே கூச்சப்பட்டனர்; கைநீட்டி காசு வாங்க அச்சப்பட்டனர். இன்றோ, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
அரசுத்துறைகளில் லஞ்சம் வாங்குவோர் எண்ணிக்கை பெருகிவிட்டது. நேர்மையாக பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. லஞ்சம் வாங்குவோரை பார்த்து, லஞ்சம் வாங்காத ஊழியர்கள் அச்சப்படும் நிலையும் வந்துவிட்டது. இதற்குகாரணம், லஞ்சம் வாங்குவோரே, 'மெஜாரிட்டி'யாக உள்ளனர். 'லஞ்சம் வாங்குவது ஒன்றும் தப்பில்லை; அரசாங்க வேலை பெறவும், விரும்பிய இடத்துக்கு, 'டிரான்ஸ்பர்' பெறவும் பல லட்சங்களை செலவழிக்கிறோம். முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற வேண்டாமா' என, லஞ்சம் வாங்குவதை, நியாயப்படுத்தவும் துணிந்துவிட்டனர்.
அரசுத்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரி அல்லது ஊழியர் லஞ்சம் வாங்காமல் பணியாற்றினால், தற்போது அது, அதிசயத்துக்குரிய செய்தியாக வெளியாகிறது. இந்த அவலத்தை என்னவென்று சொல்வது? ஒருவர் லஞ்சம் வாங்காமல், நேர்மையாக பணியாற்றுவது என்பது, வாழ்வில் அவர் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்க நெறி கோட்பாடுகளில் ஒன்று. ஆனால், அவ்வாறான ஒழுக்க நெறி கோட்பாட்டை ஒருவர் பின்பற்றுவதே ஆச்சரியத்துக்கும், பாராட்டுக்கும் உரியதாக மாறிவிட்டது. இது, நாம் சார்ந்திருக்கும் சமூகம் எப்படிப்பட்ட சீரழிவுப்பாதையில், பேரபாயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
முன்பெல்லாம், சட்டத்தை மீறி காரியங்களை செய்ய மட்டுமே, அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்டார்கள். இப்போது, சட்டப்படியான ஒரு காரியத்தை செய்யக்கூட லஞ்சம் கேட்கிறார்கள்; அதுவும் மிரட்டிக் கேட்கிறார்கள். 'இந்த நடவடிக்கைக்கு, 'இன்ன ரேட்' என்று விலையையும் நிர்ணயம் செய்துவிட்டார்கள். 'கரன்சி'யை காட்டாதவர்களின் மனுக்கள், கசங்கிய காகிதமாக குப்பைக்கூடைக்கு போகின்றன.
நம் நாட்டில் லஞ்சமும்- ஊழலும் கக்கூஸ் முதல் சட்டமியற்றும் பார்லிமென்ட் வரை நாறடித்துக்கொண்டிருக்கிறது. எல்லா துறைகளிலும், கல்லாப்பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. லஞ்சம் கொடுப்போர் இருக்கும்வரை, வாங்குவோரும் இருக்கத்தான் செய்வர்.
வாங்குவது குற்றமெனில்; கொடுப்பதும் குற்றமே. அந்த குற்றத்தை இனி, செய்ய வேண்டாம். அரசு அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், சட்டப்படியாக அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது எப்படி? என்பதற்கு, இந்த இதழ் உங்களுக்கு வழிகாட்டும். 

கேட்டால் ஆத்திரப்படாதீர்கள்! 
அரசின் நலத்திட்ட உதவி பெற, உங்களுக்கு வருமானச் சான்று தேவைப்படுகிறது என, வைத்துக்கொள்வோம். வருவாய்த்துறை அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பம் அளிக்கிறீர்கள். அங்குள்ள அதிகாரியோ, '2000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் சான்று வழங்குவேன்' என்கிறார். அவரிடம் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். 'பணத்துடன் வருகிறேன்' என, பவ்யமாக கூறிவிட்டு வெளியேறிவிடுங்கள். லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் எழுத்து பூர்வமான புகார் அளியுங்கள். புகாரை பெற்றதும், லஞ்ச ஒழிப்புத்துறையின், ஆரம்பகட்ட விசாரணை இரு விதமாக நடக்கும்.

புகார்தாரரின் கூற்றில் உண்மை உள்ளதா ? லஞ்சம் கேட்ட அதிகாரி எப்படிப்பட்டவர் ?
அதிகாரி மீது லஞ்ச புகார் அளிப்பவர், நேர்மையானவராக இருக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கை (வருமானச் சான்று கோரி, வருவாய்த்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்த விவரங்கள்) சட்டப்படி நியாயமானதாக இருக்க வேண்டும். இது குறித்துதான், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆரம்ப கட்ட விசாரணை மேற்கொள்வர். புகாரில் கூறிய விவரங்கள் உண்மை என்பதை உறுதிப்படுத்தியபின், லஞ்சம் கேட்ட அதிகாரி குறித்த விசாரணை ரகசியமாக நடக்கும். அவர் எப்படிப்பட்டவர், ஏற்கனவே புகார் உள்ளதா என, தகவல் திரட்டுவர். ஏனெனில், குற்றஞ்சாட்டப்படும் அதிகாரி, நேர்மையானவராகவும், கண்டிப்பானவராகவும் கூட இருக்கக்கூடும். அவரது பெயரைக்கூறி, புரோக்கர்கள் முறைகேட்டில் ஈடுபடவும் வாய்ப்புண்டு.
எதிரிகள், பொய் புகார் அளித்து பழிவாங்கவும்கூடும். எனவே, ரகசிய விசாரணை நடத்தி, புகார் உண்மை என்பதை உறுதி செய்த பிறகே, அடுத்தகட்ட கைது நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொள்ளும்.

மன உறுதி பரிசோதிப்பு' 
புகார்தாரர் மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்கள் உண்மை' என, உறுதி செய்யப்பட்டதும், அவரது மன உறுதி பரிசோதிக்கப்படும். புகார்தாரர் தாமாக புகார் அளிக்க வந்துள்ளாரா? வேறு யாரேனும் தூண்டிவிட்டதன் காரணமாக புகார் அளிக்க வந்துள்ளாரா? லஞ்சம் கேட்ட அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாரா? என, பரிசோதிப்பர். ஏனெனில், லஞ்சம் கேட்ட அதிகாரியை, 'பொறி' வைத்து கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மனுதாரரின் மன உறுதி மிக முக்கியமானது.
காரணம், வழக்குப்பதிவு செய்து, லஞ்ச அதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கையை துவக்கியபின், பாதிக்கட்டத்தில், புகார்தாரர் ஒத்துழைக்காமல் அச்சமடைந்து ஓடிவிடுவதும் உண்டு. இவ்வாறு பின்வாங்கிவிட்டால், லஞ்சம் கேட்ட அதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கை தோற்றுவிடும். கைது நடவடிக்கையை துவக்கிய போலீஸ் அதிகாரி, துறைசார்ந்த நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும். எனவே, புகார்தாரர் மனஉறுதியுடன் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு ஒத்துழைக்க ஆலோசனைகள் வழங்கப்படும். அதன்பிறகே, லஞ்ச பேர்வழியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கும்.

ஒத்திகை... கைது!
அரசு தரப்பு சாட்சிகள் அழைப்பு: லஞ்சம் கேட்ட அரசு ஊழியரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, அரசு தரப்பு சாட்சிகள் இருவர் கட்டாயம் இருக்க வேண்டும், என்கிறது சட்டம். அதனால், அரசு தரப்பு சாட்சிகள் இருவர் தயார் செய்யப்படுவர்.
லஞ்ச வழக்கில் கைது செய்யப்படவுள்ள அதிகாரி எந்த பதவியில், என்ன பணி நிலையில் உள்ளாரோ, அதற்கு நிகரான பதவியில் இருக்கும் அதிகாரிகள் இருவர், அரசு தரப்பு சாட்சிகளாக அழைக்கப்படுவர். உதாரணமாக, 'குரூப் -1' பதவி நிலை அதிகாரியை கைது செய்யும் திட்டமிட்டிருந்தால், அதே பதவி நிலையில் இருக்கும் அதிகாரிகள் இருவரை, வேறு துறைகளில் இருந்து அழைப்பர். கைது செய்யப்படப்போகும் நபர் சாதாரண ஊழியராக இருப்பின், அதற்கு நிகரான பணி நிலையில் இருக்கும் ஊழியரை அழைப்பர்.
அரசு தரப்பு சாட்சிகளாக செயல்படுமாறு, இவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அழைக்க மாட்டார்கள். அழைக்கப்படும் சாட்சிகள், எந்த துறையில் பணியாற்றுகிறார்களோ, அந்த துறையின் தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிக்கு கடிதம் அளிப்பர். அவர்தான், சாட்சியை தேர்வு செய்து அனுப்பி வைப்பார்.
இரு சாட்சிகள், வெவ்வேறு துறையை சார்ந்தவர்களாகவும் இருக்கக்கூடும். இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். எந்த துறையில் பணியாற்றும் அதிகாரியை, லஞ்ச வழக்கில் கைது செய்ய திட்டமிட்டிருக்கிறார்களோ, அந்த துறையில் இருந்து, அரசு தரப்பு சாட்சிகளை அழைக்கமாட்டார்கள். அவ்வாறு அழைத்தால், கைது நடவடிக்கை திட்டம் கசிந்து தோல்வியடைந்துவிடும் வாய்ப்புள்ளது.

ஒத்திகை: 
லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு வருகை தரும் இரு அரசு தரப்பு சாட்சிகளிடம், புகார்தாரரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிமுகம் செய்து வைப்பர். அப்போதுதான், எந்த துறையில் பணியாற்றும் அதிகாரியை கைது செய்ய, தாம் சாட்சிகளாக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே, அந்த சாட்சிகளுக்கு தெரியும்.
அதன்பின், லஞ்ச அதிகாரியை கைது செய்வது தொடர்பான ஒத்திகை, லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் நடத்தப்படும். லஞ்ச அதிகாரியை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, புகார்தாரரும், அரசு தரப்பு சாட்சிகளும் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என, காட்சி அமைப்புடன் கூடிய செயல் விளக்கம் அளிக்கப்படும். லஞ்ச ஒழிப்பு போலீசாரில் ஒருவர், லஞ்சம் கேட்ட அதிகாரியாக நடிப்பார். அரசு தரப்பு சாட்சிகள் தயார் நிலையில் இருப்பர். கைது செய்யப்போகும், போலீஸ் அதிகாரிகளும் இந்த ஒத்திகையில் நடிப்பர். ஒத்திகை வெற்றிகரமாக முடிந்ததும், அடுத்ததாக, உண்மையான கைது நடவடிக்கைகள் துவங்கும்.

லஞ்ச பணம் தயாராகும்: 
அதிகாரிக்கு தரப்பட வேண்டிய லஞ்சப்பணம் தயாராகும். இத்தொகையை, புகார்தாரரே கொண்டுவர வேண்டும். ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றிருக்கும் 'சீரியல் எண்கள்' குறிப்பெடுக்கப்படும். அதன்பின், அவற்றின் மீது பினாப்தலின் எனும் ரசாயனம் தடவப்படும்.

நேரம் குறிக்கப்படும்: 
புகார்தாரர், தன்னிடம் லஞ்சம் கேட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு, 'நான் உங்களை சந்திக்க எப்போது வரலாம்' என, கேட்டு, நேரம் குறிப்பார். லஞ்ச பணத்தை வாங்கி பையில் போடும் ஆவலில், அந்த அதிகாரியும் ஓர் நேரத்தை சொல்வார்.
ஆம், அந்த நேரமே, அவர் அந்த அலுவலகத்தில் கடைசியாக பணியாற்றப்போகும், கைதாகப்போகும் நேரம் என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார். காசு தான் கண்களை மறைக்கிறதே! இப்போது, புகார்தாரர், அதிகாரியை சந்திக்கப்போவது உறுதியாகிவிட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை, புகார்தாரரின் சட்டை பாக்கெட்டில் வைத்து அனுப்பி வைப்பர்.

சாட்சி உடன் செல்வார்: 
அரசு தரப்பு சாட்சிகளில் ஒருவர், புகார்தாரருடன் செல்வார். மற்றொரு சாட்சி, லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் செல்வார். லஞ்ச பணத்தை எடுத்துச் செல்லும் புகார்தாரர், தப்பித்தவறிக்கூட ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தொடமாட்டார்; தொடவும் கூடாது. குறிப்பிட்ட அரசு அலுவலகத்துக்குச்சென்று, தன்னிடமுள்ள லஞ்சப் பணத்தை அதிகாரியிடம் அளிப்பார். ஒருவேளை அந்த அதிகாரி உஷாராக இருந்து, 'உங்களுடன் வந்திருப்பது யார்' எனக் கேட்டால், 'இவரா சார், என் சித்தப்பா, மாமா...' என, ஏதாவது ஒரு உறவுமுறையை கூறி நம்ப வைப்பார்.
கைமாறியதும் சிக்னல்: புகார்தாரர் அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதை, உடன் வந்த அரசு தரப்பு சாட்சி நேரில் காண்பார். அதன்பின் இருவரும் வெளியே வருவர். தனக்கு ஏற்கனவே அறிவுறுத்தியபடி, புகார்தாரர் வெளியே வந்ததும், சாதாரண உடையில், சாமானியரைப் போன்று சற்று தொலைவில் மறைந்து நின்றிருக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு 'சிக்னல்' தருவார். (தலைமுடியை மூன்று முறை தன்னிடம் உள்ள சீப்பால் வாருவார் அல்லது கைக்குட்டையை பாக்கெட்டில் இருந்து எடுத்து முகத்தை துடைப்பார் அல்லது, தனக்கு அளிக்கப்பட்ட வேறு ஏதாவது சமிக்ஞையை காண்பிப்பார்).

அதிரடியாக கைது:
 'இதற்காகத்தானே இத்தனை நாட்களாய் காத்திருந்தோம்' என்பதைப் போன்று, அவர்கள் அதிரடியாக உள்ளே புகுந்து லஞ்ச அதிகாரியை கைது செய்வர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 01.12.2015

No comments:

Post a Comment