disalbe Right click

Thursday, May 12, 2016

ஃபேஸ்புக் இரகசியங்கள் தெரிந்துகொள்ள


ஃபேஸ்புக் இரகசியங்கள் தெரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?
இன்றைய உலகின் டிஜிட்டல் சமூக சதுக்கமாக பேஸ்புக் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களாகவும், மற்றவர்கள் அனைத்து வயது நிலைகளிலும் உள்ளனர். 

கம்ப்யூட்டர் பயனாளர்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தளமாக facebook.com இடம் பிடித்துள்ளது. இன்னொரு பக்கத்தில், பேஸ்புக், இந்த உலகின் மிக உயர்ந்த தொழில் நுட்ப திறன் கொண்ட வல்லுநர்களை இழுக்கும் காந்தமாகவும் மாறி வருகிறது. ஒவ்வொரு பயனாளரும் தங்களுக்கேற்ற வகையில் மாற்றி அமைத்துப் பயன்படுத்த வழி தருவதிலும், நகாசு வேலைகளை அமைத்துக் கொள்ள அனுமதி அளிப்பதிலும், தனிப்பட்ட முறையில் இயங்கும் செயலிகளைக் கொண்டிருப்பதிலும், ஒரு தனித்துவம் மிக்க பொறியியல் அறிவின் அடையாளமாக பேஸ்புக் வடிவமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. 

பேஸ்புக் இணைய தளத்தில், அதன் பயனாளர்கள் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். அவை அனைத்தும் அவர்களுக்குத் தெரியுமா என்றால், இல்லை என்று தான் பதில் சொல்ல வேண்டும். இப்படிக் கூறுகையில், பேஸ்புக் இணைய தளத்துடன் இணைந்து செயலாற்றக் கூடிய தர்ட் பார்ட்டி செயலிகளை இங்கு குறிப்பிடவில்லை. அல்லது பிரவுசர் வழியாக இணைந்து செயலாற்றும் செயலிகளை இங்கு பட்டியலிடவில்லை. தெரியாத செயல்பாடுகள் என்று சொல்லப்படுவது, பேஸ்புக் இணையதளத்திலேயே அமைந்து, அனைவரும் இயக்கும் வகையில் தரப்படும் செயல்பாடுகள் தாம். இவற்றைத்தாம் பெரும்பாலானவர்கள் அறியாமல் இருக்கின்றனர். அவற்றை இங்கு ஆய்வு செய்து பார்க்கலாம். தெரிந்த பின்னர், பயன்படுத்தி மகிழ்ச்சி அடைந்து பேஸ்புக் சூப்பர் ஸ்டாராக மாறலாம்.

நீங்கள் அறியாத உங்களின் செய்திப் பெட்டி (Hidden Message Box) உங்களுக்கு பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஒன்றும் அதற்கான தளமும் உள்ளதா? அதில் நீங்கள் விரும்பும் தகவல்களைப் பதிவு செய்கிறீர்கள். போட்டோக்களைப் பதிந்துவைத்து அழகு பார்க்கிறீர்கள். ஓரமாக அரட்டைக் கட்டத்தில் (Chat Box) நண்பர்கள் தென்பட்டால், அவர்களுடன் அரட்டை அடிக்கிறீர்கள். போட்டோ, பைல்களை அனுப்புகிறீர்கள். சில வேளைகளில், உங்கள் நண்பர்கள் உங்களுக்கு அனுப்பும் மெசேஜ்களை, உங்கள் மெசேஜ் பெட்டி திறந்து படிக்கிறீர்கள். இந்த வசதியை அனைவரும் பயன்படுத்துவதில்லை. 

இருப்பினும், இது தவிர, இன்னும் இரு மறைத்துவைக்கப்பட்ட உங்களுக்கான மெசேஜ் பாக்ஸ் இருப்பது தெரியுமா? இந்த செய்திப் பெட்டியைப் பெற, உங்கள் பக்கத்தில், மேலாக உள்ள "messages" என்னும் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். அல்லது இடது பக்கமாக "messages" என்னும் லிங்க்கின் மீது கிளிக் செய்திடுங்கள். இந்த இன்பாக்ஸைத் திறக்கும் போது, மாறா நிலையில், இதன் "Recent" டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். இதன் வலது பக்கத்தில் "Message Request" என்ற டேப் இருக்கும். இதனைக் கிளிக் செய்தால், "See filtered requests” என்ற லிங்க் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், உங்கள் நண்பர்களிடமிருந்தும், நீங்கள் அறியாத யார் யாரிடமிருந்தோ பல செய்திகள் இருக்கும். இவர்களுக்கு மறுமொழி அளிக்கலாம். அல்லது அப்படியே விட்டுவிடலாம். அல்லது நீக்கிவிடலாம். முதலில், இது போன்ற அறியாதவர்களிடமிருந்து வரும் செய்திகளைப் படிக்கும் இன்பாக்ஸ் திறப்பதற்கு, 2012ல், ஒரு டாலர் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர், இது உயர்த்தப்பட்டு, 100 டாலர் (மார்க் உட்பட அனைவருக்கும்) வரை சென்றது. பின்னர், இது இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

உங்கள் அக்கவுண்ட்டில் நுழைந்த நபர் யார்?
சில வேளைகளில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் பேஜில், வேறு யாரோ ஒருவர் நுழைந்து பார்க்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. உங்கள் பாஸ்வேர்டைத் தெரிந்த ஒருவர் அல்லது நீங்கள் உங்கள் நண்பர் வீட்டில் பேஸ்புக் பார்த்துவிட்டு, கணக்கை மூடாமல் வந்த பக்கத்தைப் பார்த்த ஒருவர் என அது யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அவரை நீங்கள் யாரெனத் தெரிந்து கொள்ள வேண்டுமா? 

முதலில் உங்கள் settings page (https://www.facebook.com/settings?tab=account) செல்லவும். அங்கே, Security போல்டரில், "Where You're Logged In" என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு, நீங்கள் பேஸ்புக் தளத்தை அணுகிய விபரங்கள் அனைத்தும் காட்டப்படும். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் எனப் பிரிக்கப்பட்டு இந்த பட்டியல் இருக்கும். இதில் நீங்கள் பயன்படுத்தாத சாதனம், பிரவுசர் மற்றும் நாள் இருப்பின், அதன் அருகே உள்ள End All Activity என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரில் பேஸ்புக் பார்த்துவிட்டு அதிலிருந்து முறையாக முடித்து வைத்து வெளியேறாமல் இருந்தால், அதுவும் காட்டப்படும். அதனை இங்கிருந்து முடித்துவிடலாம்.

ரகசிய உணர்ச்சி சித்திரங்கள்
கம்ப்யூட்டர் வழியாக நட்பு தொடர்புகளில், நாம் நம் உணர்வுகளைத் தெரிவிக்க, அதற்கென அமைந்த சிறிய படங்களை இணைப்பது வழக்கமாக உள்ளது. இவற்றை எமோட்டிகான் (emotion+icon) என அழைக்கிறோம். பேஸ்புக்கில், பல எமோட்டிகான்கள் உள்ளன. ஆனால், அவை நாம் எளிதாக அறியும் வகையில் இல்லை. நாம் பொதுவாகப் பயன்படுத்துவது :)/ :D/ ^_^ ஆகியவற்றையே. ஆனால், இன்னும் சில உள்ளன. அவை: (y) = வெற்றி எனப்படும் 'தம்ப்ஸ் அப்” அடையாளம். (^^^) =பெரிய வெள்ளை ஷார்க் மீன், :|] = ரோபோ என அழைக்கப்படும் இயந்திர மனிதன், <(") = பெங்குவின் பறவை. இவற்றை நீங்கள் வால் போஸ்ட், சேட், நம் கமெண்ட் ஆகியவற்றில் பயன்படுத்தலாம். இவற்றை டைப் செய்தவுடனேயே, அவை அந்த சிறிய ஐகானாக மாறும். எடுத்துக் காட்டாக, பெங்குவின் பறவைக்கானதை டைப் செய்தால், உடனே அது சிறிய பெங்குவின் பறவையாக மாறும். (உடனே பேஸ்புக்கில் டைப் செய்து பாருங்கள்.)

மெசஞ்சர் வழியாக பைல் பரிமாற்றம்
பேஸ்புக் மெசஞ்சர் விண்டோவை நீங்கள் திறந்தால், அதில் சிறிய கியர் ஐகான், வலது மேல்புறம் இருப்பதனைப் பார்க்கலாம். இதில் தட்டினால், அதில் "Add Files...", என்று ஓர் ஆப்ஷன் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், உடனே கம்ப்யூட்டரிலிருந்து பைலைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம். இந்த ஆப்ஷன் சேட் விண்டோவிலும் கிடைக்கும். இதனைப் பெறுபவர், இதில் காட்டப்படும் லிங்க்கில் கிளிக் செய்து பைலைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தலைகீழாக ஆங்கிலம்
பேஸ்புக்கில் நாம் காணும், அல்லது அமைக்கும் ஆங்கில வாக்கியங்கள் அனைத்தும் தலைகீழாக இருந்தால் எப்படி இருக்கும்? இந்த கற்பனைக்கான விடையை, பேஸ்புக் தளத்தினை வடிவமைத்தவர்கள், ஓர் ”ஈஸ்டர் எக்” ஆக அமைத்துள்ளனர். இதனைக் காண்பதற்கு, பேஸ்புக்கில் உங்கள் அக்கவுண்ட் தளத்தில் மொழி அமைப்பினை மாற்றி அமைக்க வேண்டும். உங்கள் தளத்தில், General Account Settings > Language எனச் செல்லவும். அங்கு ஏற்கனவே English (US) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால் கிடைக்கும் பட்டியலில், English upside down என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்துவிட்டால், உங்கள் பக்கத்தில் உள்ள ஆங்கில சொற்கள் அனைத்தும் தலைகீழாகத் தெரியும். ஒன்றை கவனத்தில் கொள்ளவும். இதனை எளிதாகப் படிக்க முடியாமல் எரிச்சல் அடைவோம். மாற்றிவிட்ட பின்னர், மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கையில், மெனுக்களில் உள்ள சொற்கள் அனைத்தும் தலைகீழாகத் தெரியும். கவனமாக அதனைக் கண்டு, மீண்டும் English US என்பதைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். இல்லையேல், நீங்கள் கம்ப்யூட்டர் முன்னால் தலைகீழாக சிரசாசனம் செய்து பேஸ்புக் தளத்தினைப் படிக்க வேண்டும். எப்படி வசதி?

பேஸ்புக்கில் வலைமனை (Blog) வசதி
பேஸ்புக் தளத்தில் நம் கருத்துகளைப் பதிவிடுகிறோம். சில படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வெளியிடுகிறோம். சில வேளைகளில், மிகப் பெரிய உரைக்கோவை ஒன்றை பதிவிட விரும்பினால், பேஸ்புக், அதற்கான சிறிய வலைமனை ஒன்றை அமைக்க வசதி தருகிறது. இதற்கு எச்.டி.எம்.எல். தெரிந்திருக்க வேண்டியதில்லை. 


facebook.com/notes என்னும் முகவரி உள்ள பக்கத்திற்குச் செல்லுங்கள். இங்கு உங்களுடன் நட்பாயிருப்பவர்களின் குறிப்புகள் இருக்கும். இதில் உங்களுடையதையும் இணைக்க விரும்பினால், மேல் வலது மூலையில் உள்ள "+ Write a Note" என்பதில் கிளிக் செய்திடவும். உடன் புதிய வலைமனைப் பக்கம் ஒன்று கிடைக்கும். இதன் மேலாக, படத்தை வைக்க இடம் உண்டு. அடுத்து, உங்கள் கருத்து குறித்த தலைப்பினை அமைக்கலாம். அடுத்து உங்கள் கருத்தை விளக்கும் டெக்ஸ்ட்டை ஒட்டலாம். அல்லது எழுதலாம். ஒரே முயற்சியில் நீங்கள் விரும்பியதை எல்லாம், எழுதி அமைக்க முடியவில்லை என்றால், இயன்றதை எழுதி, சேவ் செய்து, பின்னர் வெளியிடலாம்.

பேஸ்புக்கில் உங்கள் இனிய நட்பு

உங்களுடைய பேஸ்புக் இணைய நட்பு குறித்து அறிய www.facebook.com/us என்ற முகவரியை டைப் செய்து காட்டப்படும் தளத்தினைப் பாருங்கள். உங்கள் அனைத்து நண்பர்களின் புகைப்படங்கள், நீங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் என அனைத்து நடவடிக்கைகளின் அடையாளம் கிடைக்கும். 

பின்னால் பார்த்துக் கொள்ள காத்திடு
சில வேளைகளில், பேஸ்புக்கில் நம் நண்பர்கள், முக்கியமான இணைய தளங்களை நாம் பார்க்க வேண்டும் என்பதற்காக, அதன் லிங்க் அனுப்பி வைப்பார்கள். நமக்கு அப்போது நேரம் இல்லாததால், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவைப்போம். ஆனால், லிங்க்கினை சேவ் செய்திட மாட்டோம். இது போல “அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்ற விஷயங்களை, சேவ் செய்து வைத்துப் பின்னால் பார்க்க, பேஸ்புக் வழி அமைத்துத் தருகிறது. இந்த டூலின் பெயர் "Save for Later". 

எந்தப் பதிவினையாவது சேவ் செய்திட வேண்டும் என்றால், அந்தப் பதிவின் மேல் வலது முனையில் உள்ள சின்ன அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில் Save "[name of story]" என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இது, உங்களுடைய சேவ் செய்யப்பட்ட போல்டருக்கு இந்த பதிவினை அனுப்பி சேவ் செய்திடும். "saved" என்ற பெயரில் ரிப்பன் ஒன்று காட்டப்படும். முதல் முதலாக ஏதேனும் ஒரு பதிவினை சேவ் செய்த பின்னரே இந்த போல்டர் உருவாக்கப்படும். பின்னர் அடுத்தடுத்து சேவ் செய்திடுகையில், அவை இங்கு வைக்கப்படும். அதில் கிளிக் செய்தால், அனைத்து சேவ் செய்யப்பட்டவைகளையும் பார்க்கலாம். 

மொத்த பேஸ்புக் செயல்பாடு பார்க்க
நீங்கள் பேஸ்புக் தளத்தில் மேற்கொண்ட அனைத்து செயல்பாடுகளையும், அதாவது “அனைத்தும்” மொத்தமாக பார்க்க விருப்பமா? பேஸ்புக் அதற்கான வழியினைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு போஸ்டிங், படம், விடியோ, தகவல், நண்பர்களுடன் அரட்டை என “அனைத்தும்” பெறலாம். உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் தளத்தில் Settings > General என்று செல்லவும். 



அங்கு "Download a copy of your Facebook data" என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், அங்கு தரப்படும் வழிகளைப் பின்பற்றவும். நீங்கள் மேற்கொண்ட அனைத்தும் காட்டப்படும். நீங்கள் உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டினை நீக்க முடிவு செய்தால், உங்கள் பேஸ்புக் நாட்களை காப்பி எடுத்து வைக்க இந்த டூல் உதவுகிறது. 

நம் பேஸ்புக் வாரிசு யார்?

பேஸ்புக்கில் உள்ள அனைவரும் ஒரு நாள் மரணத்தைச் சந்திக்கத்தான் போகிறோம். அய்யோ! அப்படியானால், நான் இத்தனை நாள் பதிவு செய்து, வளர்த்து ஆளாக்கிய என் பேஸ்புக் தளம் என்னாவது? பேஸ்புக் மட்டுமல்ல. இது அனைத்து சமூக வலைத் தளங்களுக்கும் பொருந்தும். நீங்கள் மட்டுமல்ல, பேஸ்புக்கில் உள்ள உங்கள் நண்பர்களும் மரணத்தைத் தழுவுவார்கள். பேஸ்புக் இதற்காகவே, உங்கள் மரணத்திற்குப் பின், சட்ட ரீதியாக, உங்கள் தளப் பக்கத்தினை ஏற்றுக் கொள்ளும் வாரிசை நியமிக்க வழி செய்துள்ளது. பேஸ்புக் இதனை a legacy contact என அழைக்கிறது. பேஸ்புக்கில் உங்கள் நண்பராய் உள்ள ஒருவரை இதற்கென நியமிக்கலாம். அது உங்கள் மகன் / மகள் / மனைவியாகக் கூட இருக்கலாம். இதற்கு to Settings > Security > Legacy Contact என்று சென்று நியமிக்கலாம். இவ்வாறு நியமிக்கப்படுபவர், உங்கள் பேஸ்புக் தளப்பக்கத்தினை நிர்வகிப்பார். உங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்கு உங்கள் மறைவு குறித்த தகவலைத் தெரிவிப்பார். 
இவ்வாறு நியமிக்கப்படுபவரை பின் நாளில், நீங்கள் மாற்றவும் செய்திடலாம். உங்கள் இணைய தளப் பக்கத்தினை நீக்கிவிடவும் இங்கு வழி தரப்பட்டுள்ளது. 
கூடுதல் தகவல்கள் பெற https://www.facebook.com/help/1568013990080948 என்ற முகவரியில் உள்ள பேஸ்புக் இணைய தளத்தினைப் பார்க்கவும்.
நன்றி : தினமலர் - கம்ப்யூட்டர் மலர், 02.05.2016



No comments:

Post a Comment