disalbe Right click

Monday, June 13, 2016

என்ஜினியரிங் கவுன்சிலிங்கில்


என்ஜினியரிங் கவுன்சிலிங்கில் - என்ன செய்ய வெண்டும்?
   
பிளஸ் டூ தேர்வு முடிந்து அடுத்தக்கட்டத்திற்கு மாணவர்கள் தற்போது தங்களை தயார்படுத்திக் கொண்டிருப்பார்கள். 

அந்த வகையில் பொறியியல் படிப்பில் எந்தப் பிரிவை தேர்வு செய்யலாம்? எந்தக் கல்லூரியை தேர்வு செய்யலாம்? கட் ஆஃப் மதிப்பெண்கள் என்றால் என்ன? ரேண்டம் எண் என்றால் என்ன? கவுன்சலிங் அறையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் மாணவர்களுக்கு ஏற்படும்.

மாணவர்களின் சந்தேகங்களை அவர்களின் நிலையில் இருந்தே யோசித்து இந்தக் கட்டுரையை தொகுத்து தரப்பட்டுள்ளது.

கவுன்சலிங் எதற்காக நடத்தப்படுகிறது?
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 

கட் ஆஃப் மதிப்பெண்கள் என்றால் என்ன?
இந்தக் கேள்வி மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களுக்கும் பதற்றம் இருக்கத்தான் செய்கிறது. கணிதம் பாடத்தில் பெற்ற மதிப்பெண்களை 200க்குப் பதிலாக 100க்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல இயற்பியலில் பெற்ற 200க்கான மதிப்பெண்ணை 50க்கு மாற்ற வேண்டும். இதேபோல வேதியியல் மதிப்பெண்ணையும் 50க்கு எடுத்துக்கொள்ளவேண்டும். 

இந்த மூன்று பாடங்களின் கூடுதலை மொத்தம் 200க்கு மாற்றிக்கொள்வதே கட் ஆஃப் மதிப்பெண்கள் எனப்படுகிறது. தமிழக அரசின் இடஒதுக்கீட்டு கொள்கைகளுக்கு ஏற்றவாறு, ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணுக்கு ஏற்றபடி இடம் இருக்கின்ற கல்லூரியில், பிடித்த பாடத்தை தேர்வு செய்யும் முறையே கவுன்சிலிங் என்று அழைக்கப்படுகிறது.

கவுன்சலிங் எப்படி நடைபெறும்?
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை பொறுததவரை வெளிப்படையாக நடைபெறும். அது தொடர்பான விவரங்கள் ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை வெப்சைட்டில் அப்டேட் செய்யப்படுகின்றன. 

கவுன்சலிங் செல்லும் முன் கவனிக்கவேண்டியவை 
கவுன்சிலிங் விண்ணப்பப் படிவம் அனுப்பும் முன், மாணவர் தான் எந்தத் துறையில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். பெற்றோருடன் சேர்ந்து அவர்கள் முடிவு எடுக்க வேண்டும். 

இன்ஜினியரிங், விவசாயம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் எது தனக்கு பொருத்தமானது என்பதை திட்டமிட வேண்டும்.

மாணவருக்கு கலை மற்றும் அறிவில் நல்ல தேர்வு இல்லை என்று கூறிவிட முடியாது. அதேபோல் இன்ஜினியரிங் மட்டும் தான் சரியான தேர்வு என்றும் கூறிவிட முடியாது. 

மாணவருக்கு எதில் தகுதி இருக்கிறதோ அதை சரியாக அடையாளம் கண்டு, அத்துறையில் படிக்க வேண்டும். குடும்பத்துக்கும் மாணவருக்கும் ஏற்ற படிப்பு எது என்பதையும் தேர்வு செய்து படிக்க வேண்டும்.
இதற்கு ஏற்றாற்போல்தான் மாணவர் மருத்துவம் செல்ல வேண்டுமா, ஐ.டி.ஐ., செல்ல வேண்டுமா, டிப்ளமோ படிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். 

இன்ஜினியரிங் மட்டும்தான் கல்வி என்பது அல்ல. எந்த படிப்புப் படித்தாலும் அதிலிருந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர்களைப் பொறுத்தவரை எப்படியாவது கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் கஷ்டப்பட்டு இன்ஜினியர் ஆக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, நான்கு ஆண்டுகள் படிப்பை தொடர்வதில் சிக்கல் இருக்குமா என்பதைப் பற்றி அவர்கள் யோசிப்பதில்லை.

வங்கிக் கடன் கிடைக்குமா, அப்படிக் கிடைத்தால் எவ்வளவு சதவீதம் கிடைக்கும் என்பதைப் பற்றி அவர்கள் துவக்கத்தில் சிந்திப்பதில்லை. மீதம் எவ்வளவு கட்ட வேண்டியிருக்கும். அதை கட்டி முடித்துவிட முடியுமா?

இதையெல்லாம் குடும்பத்தில் முதலில் யோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும். இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்யும் முன் இவற்றையெல்லாம் திட்டமிட வேண்டும். பள்ளிப் படிப்பு வரை பொதுவாக பெற்றோர் தங்களது பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். 

அதுவே கல்லூரியில் சேர்ந்த பிறகு அந்தளவுக்கு அக்கறை செலுத்துவதில்லை. கல்லூரி, பாடப்பிரிவை தேர்வை செய்த பிறகும் தங்களது பிள்ளைகள் மீது நண்பர்களைப் போன்ற அணுகுமுறையுடன் கவனிக்க வேண்டும்.

கவுன்சலிங் போது சான்றிதழ்கள் வேண்டுமா?
கவுன்சிலிங் நாளில், ஒரிஜினல் சான்றிதழ்களை உடன் எடுத்துவர வேண்டும். சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு அவற்றை திரும்ப எடுத்துச் சென்றுவிட வேண்டும்.

இன்ஜினியரிங் படிப்புக்கு தகுதி எது?
இன்றைய மாணவர்களின் வாழ்க்கை தரத்தை நிர்ணயிக்கும் முதன்மையான படிப்புகளில் ஒன்றாக, பொறியியல் துறை கருதப்படுகிறது. தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட வேலை வாய்ப்புகளில், இன்ஜினியரிங் படிப்பு, விண்ணப்பதாரரின் தகுதியை நிர்ணயிப்பதாக அமைந்துள்ளது.

உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எதுவாக இருந்தாலும், அதற்கேற்ப இன்ஜின்களை வடிவமைப்பது, குறிப்பிட்ட நேரத்திற்குள் பொருட்களை குறைவில்லாமல் உற்பத்தி செய்வது, நிறுவனத்தின் பொருளாதார தன்மைக்கேற்ப பொருட்களை அதிக செலவில்லாமல் தயாரித்துக் கொடுப்பது என பொறியியல் துறையை மேற்கொண்டவர்களின் பங்களிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிறுவனத்தின் வளர்ச்சிக்காக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பரிசோதனை கூடங்கள், இயந்திரங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை, அதற்கான உள்கட்டமைப்பு, கட்டடடம் என அனைத்திலும், தொழில் நுட்பங்களை கற்றுத்தேர்ந்த பொறியியல் துறையை சார்ந்தவர்களே பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும், திறமையான பொறியியல் வல்லுநர்களை, அதே பொருளை உற்பத்தி செய்யும் மற்றொரு நிறுவனம், அதிக சம்பளம் சலுகைகள் கொடுத்து வேலையில் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு, இத்துறையில் அதிக அளவில் நடக்கிறது.

எத்தனைப் பிரிவுகள் இதில் இருக்கின்றன?
ஏரோஸ்பேஸ், அக்ரி கல்ச்சுரல், ஆட்டோமொபைல், பயோகெமிக்கல், பயோமெடிக்கல், செராமிக், கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், என்விரான்மென்டல் இண்டஸ்ட்ரியல், இன்ஸ்ட்ரூமென்டேசன், மரைன், மைனிங், மெக்கானிக்கல், மெட்டர்லஜிக்கல், பெட்ரோலியம், டெலிகம்யூனிகேஷன் டெக்ஸ்டைல் உட்பட பல்வேறு துறைகளில் பொறியியல் படிப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, ஏராளமான துணை படிப்புகளும் இதில் உள்ளன. பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடப் பிரிவுகளை படித்த மாணவர்கள் பொறியியல் துறையை தேர்வு செய்வதற்கு தகுதியானவர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளனர்.

திறன்கள்: 
தான் சார்ந்திருக்கும் துறையில், அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, கூர்ந்து கவனிக்கும் திறன், இயந்திரங்களில் ஏற்படும் பழுதுகளுக்கான காரணம் அறியும் திறன், எதையும் மறந்துவிடாமல் நினைவில் வைத்துக் கொள்ளும் ஞாபகசக்தி, மக்களின் தேவைக்கேற்ற கணிப்புகளை உணர்ந்து கொள்ளும் பொது அறிவு, எளிதான தொழில்நுட்பங்களை வடிவமைக்கும் கற்பனை, அதை உருவாக்கும் படைப்பாற்றல், மனதிற்குள் நினைப்பதை வரைபடமாக வரைந்து நிறுவன உரிமையாளரிடம் விளக்கமளிக்கும் செயலாற்றல் என பொறியியல் வல்லுநர்களின் அடிப்படை தகுதிகள், ஒவ்வொரு துறைக்கேற்ப கூடுதல் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ரேண்டம் எண் மற்றும் ரேங்கிங் என்றால் என்ன?
கவுன்சிலில் போது ரேண்டம் எண், ரேங்கிங் ஆகியவை முக்கியமானவை. கவுன்சிலிங் துவங்குவதற்கு 15 நாட்களுக்கு முன் ரேண்டம் எண், 10 நாட்களுக்கு முன் ரேங்கிங் வழங்கப்படும். 

ரேண்டம் எண்ணுக்கு முக்கியமான பணி இருக்கிறது. பொதுவாக, ரேங்க் பட்டியல் தயாரிக்கும் போது குறிப்பிட்ட இடத்துக்கு பலர் மோதும் நிலை ஏற்படும். அப்போது ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க ரேண்டம் எண் உதவும். இது, வழங்கப்பட்ட பின்தான் ரேங்கிங் அறிவிக்கப்படுகிறது.

ரேங்கிங்கில், சிலருக்கு ஒரே ‘கட்-ஆப்’ மதிப்பெண் இருக்கும். இந்நிலையில் யார் கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ அவர்களுக்கு ரேங்க் முன்னுரிமை கொடுக்கப்படும். அடுத்து இயற்பியலில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

இதற்கடுத்து, பிறந்த நாள் அடிப்படையில், வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயதும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில்தான் ரேண்டம் எண்ணில் யாருக்குப் பெரிய எண் என்று பார்க்கப்படும். அதன் அடிப்படையில் ரேங்க் வழங்கப்படும். ரேங்கிங் நிர்ணயித்த பின்னர், அது அண்ணா பல்கலைக்கழக வெப்சைட்டில் வெளியிடப்படும். ஒரு மாதம் வரை கவுன்சிலிங் நடக்கும்.

 ஜாதிச் சான்றிதழை இணைக்க மறந்திருந்தால்?
ஜாதி சான்றிதழை இணைக்கத் தவறியோர், பொதுப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பர். உரிய சான்றிதழை சமர்ப்பித்த பின், கம்யூனிட்டி ரேங்கிங்கில் சேர்க்கப்படுவர். அப்போது, ரேங்க் எண்களில் இரு முழு எண்களுக்கு இடையில் 0.25, 050 அல்லது 0.75 என சேர்க்கப்படும். இதனால் மற்ற மாணவர்களின் ரேங்கிங் மாறாது. உதாரணமாக 13268.50 என்று வழங்கப்படும். மற்ற மாணவர்களுக்கு முழு எண்ணாக ரேங்கிங் இருக்கும்.
ரேங்கிங் அறிவிப்பி பின், கவுன்சிலிங்குக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.

 இந்த ஆண்டு (2016) எப்போது நடைபெறவிருக்கிறது?
ஜூன் 24 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரேங்கிங் வரிசைப்படி எந்தெந்த நாட்களில் கவுன்சிலிங் என்பது பத்திரிகைகளில் வெளியாகும். அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள் கூட, அந்நாளில் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம். 

கவுன்சிலிங் நடந்து கொண்டிருக்கும் போதே, வெப்சைட்டில் விபரங்களை அறியலாம். கவுன்சிலிங்குக்கு முந்தைய நான் இட விபரங்களை அறிந்து கொள்வது நல்லது. இன்டர்நெட்டிலும், கவுன்சிலிங் செல்லும் முன்பாக உள்ள விளக்கவுரை அரங்கிலும் மாணவர்கள் இட நிலவரங்களை தெளிவாக அறியலாம்.

 எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
மாணவருடன் வருபவர், மாணவர் நலனை கருத்தில் கொண்டு, உடனடி முடிவு எடுப்பவராக இருக்க வேண்டும். கவுன்சிலிங் துவங்குவதற்கு 1.30 மணி நேரத்திற்கு முன் மாணவர் அங்கு இருக்க வேண்டும். ஒருவேளை, ரேங்கில், மறுமதிப்பீடு தொடர்பாக விபரங்களை அப்டேட் செய்ய விரும்புவோர், 3 மணி நேரத்துக்கு முன் வரவேண்டும்.

கவுன்சிலிங் வருவோர், 5 ஆயிரம் ரூபாய்க்கான அட்வான்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும்.  எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் போதும். கவுன்சிலிங் வளாகத்திலேயே அதை செலுத்தலாம். 

அப்போது மாணவர் தொடர்பான விபரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். விளக்க உரை நடக்கும் ஹாலுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். அங்கு மாணவர் வந்ததற்கான வருகை பதிவு செய்யப்படும். 

பின், கவுன்சிலிங் ஹால் செல்வதற்காக விளக்கவுரை ஹாலில் அமர வேண்டும். அங்கு கவுன்சிலிங் நடைமுறைகள் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். தாங்கள் விரும்பும் கல்லூரி, பாடப்பிரிவு கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதை விளக்கவுரை ஹாலில் தெரிந்து கொள்ளலாம்

பின்னர், கவுன்சிலிங் அறைக்கு மாணவர்கள் அழைக்கப்படுவர். அங்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். சான்றிதழ்களில் ஏதாவது விடுபட்டு போயிருந்தால், வேறு சிக்கல்கள் இருந்தால் தங்களைப் பற்றி முழுத் தகவல்களை அப்டேஷன் பிரிவில் பதிவு செய்யலாம்.

 பின் கவுன்சிலிங் நடைபெறும் பகுதிக்கு  மாணவர்கள் அழைக்கப்படுவர். இங்கு கல்லூரியை தேர்வு செய்யும் போது, ஒரே மாதிரியான பெயர்களில் பல கல்லூரிகளில் இருக்கும். 

ஒரு முறை கல்லூரியை தேர்வு செய்து முடித்து விட்டால், மாணவர் அடுத்த கல்லூரியை தேர்வு செய்ய முடியாது. ஆகவே, கல்லூரியின் ‘கோட்’ எண்ணை கவனமாக தெரிந்து வர வேண்டும். அது விளக்கக் குறிப்பில் உள்ளது.

ரேங்க் அடிப்படையில் தனது முறை வந்தவுடன், தேர்வு செய்த கல்லூரி, பாடப்பிரிவை உறுதி செய்ய வேண்டும். உங்களது முடிவுப்படி ஒரு முறை கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கப்பட்டு விட்டால் மாற்ற முடியாது என்பதால் அந்நேரத்தில் கவனமாக செயல்பட வேண்டும்.

இடத்தை தேர்வு செய்தவர்கள், அதற்கான ஒதுக்கீட்டு சான்றிதழை (அலாட்மென்ட் லெட்டரை) பெற்றுக் கொண்டு, மகிழ்ச்சியுடன் வீடு திரும்பலாம்.

யாருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு அளிக்கப்படும்?
முன்னாள் ராணுவத்தினர், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு சிறப்பு  இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை தரப்படுகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட பிரிவுக்கும் தனித்தனி விண்ணப்பம் இருக்கும். இதை பூர்த்தி செய்து இணைக்க வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகங்களில் 4 இடங்கள்,  அண்ணா தொழில்நுட்ப  பல்கலைக்கழங்களில் 4 இடங்கள், அரசு, உதவிபெறும் கல்லூரிகளில் 34 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 108 இடங்கள் என150 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

சுதந்திர போராட்ட தியாகி களின் வாரிசுகளுக்கு அரசு, உதவி பெறும் பல்கலைக்கழ கங்களில் 10 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தகுதியுள்ள விளையாட்டு வீரர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 12, அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 100 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு
விளையாட்டு, வீரர்களுக்கான இட ஒதுக் கீட்டின்கீழ்  விண்ணப்பிப்பவர் கள் உரிய ஆவனங்களுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக வந்து படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

ஒற்றைச் சாளர முறையில் இடம்பெறும் மொத்த இடங்களில் காதுகேளாதோர்,  கண் பார்வையற்றோர், பிற உடல் ரீதியான மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு தலா ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

விண்ணப்பத்துடன் இருக்க வேண்டியவை
குறிப்பிட்ட பிரிவில் இட ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பிப்போர்,  அதற்கான சான்றிதழை இணைக்க வேண்டும். இல்லாவிடில் அவர்கள் பொதுப் பிரிவினாக கருதப்படுபவர். இதனால் அவர்கள் குறிப்பிட்ட பிரிவுக்கு உரிய இட ஒதுக்கீட்டை கோர முடியாது. மாணவர், கவுன்சிலிங் நடைபெறும் காலத்துக்குள் சிறப்பு விண்ணப்பத்தை இணைத்துக் கொள்ளலாம். 

ஜாதிச்சான்றிதழ் கொடுக்க தாதமானால். நல்ல கல்லூரியை தேர்வு செய்ய முடியாமல் போய் விடும். விண்ணப்ப விஷயத்தில் முழு கவனம் செலுத்தினால் தவறுகளை தவிர்க்கலாம் 8ல் இருந்து  12ம் வகுப்பு வரை தமிழகத்தில் படித்தவர்களே தமிழக மாணவர்களாகக் கருதப்படுபவர். 

விண்ணப்பத்தில் அதற்கான விபரங்களை குறிப்பிட்ட வேண்டும். இல்லை என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இது தெரிந்து மாணவர் இருப்பிட சான்றிதழை வழங்கினால் அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும்.

மரைன், மைனிங் படிப்பு: தகுதி என்ன?
பொதுவாக இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழியாக சேர்க்கை பெற வயது தடையில்லை என்றாலும், மரைன் படிப்பில் சேர மட்டும் அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பிரிவினரும் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 வகுப்பில் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

மைனிங் படிப்பை பொறுத்தவரை, ஆண்கள் மட்டுமே சேர முடியும். இதைதவிர, உடல் தகுதியும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சிறந்த துறையை எப்படி தேர்வு செய்வது?
துறையை தேர்வு  செய்யும் முன், அதை எவ்வாறு தேர்வு  செய்ய வேண்டும் என்ற அறிவை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். பிடித்தமான துறையாக இருந்தாலும், அதன் வளர்ச்சி விகிதம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு, படிப்பை தேர்வு செய்யுங்கள். 

எந்த தொழில்நுட்பம் தற்போது சிறப்பாக உள்ளது; வேலை வாய்ப்பு எந்த  துறைக்கு நன்றாக இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.  இதையடுத்து, ஐந்து ஆண்டுக்கு பின் உள்ள நிலைமையை, ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

படித்த பின், மாணவர் வேலைக்குப் போகப்போகிறாரா, ஆராய்ச்சி செய்யப் போகிறாரா அல்லது ஆசிரியர் பணிக்கு வரப்போகிறாரா என் பதை அறிந்து முடிவு செய்ய வேண்டும். தொழிற்சாலை பணிக்குச் செல்ல வேண்டுமானால், அதற்கேற்ப படிப்பு அமைய வேண்டும்.
அது தொடர்பாக மாணவருக்கு விழிப்புணர்வு இருக்கிறதா என பார்க்க வேண்டும். 

ஆராய்ச்சியில் விருப்பம் இருந்தால், ஆராய்ச்சி தொடர்பான படிப்புகளை தேர்வு செய்யலாம். மாணவர்கள், பெற்றோருடன் கலந்து ஆலோசனை செய்யலாம்.

இயற்பியலில் ஈடுபாடு உள்ளவர்கள், எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான பாடங்களை தேர்வு செய்யலாம். வேதியியலில் ஆர்வம் இருந்தால், மெட்டீரியல் சயின்ஸ் தொடர்பான பாடங்களை எடுக்கலாம். இதையெல்லாம் நன்றாக யோசித்துத் தான் முடிவு செய்ய வேண்டும்
.
கவுன்சிலிங்  அறைக்கு வந்த பின், கிடைக்குமா கிடைக்காதா என்ற எண்ணம் இருக்குமே தவிர, இது போன்ற விஷயங்களை பரிசீலிக்க நேரம் இருக்காது.
பக்கத்து வீட்டுக்காரர் தேர்வு செய்தார். அதே போல் நான் இந்த பிரிவை தேர்வு செய்யப் போகிறேன் என்ற மனப்பாங்கில் தேர்வு செய்யக் கூடாது. மாணவரால் படிக்க முடியுமா: அவருக்கு அந்த திறன் இருக்கிறதா என்பதைப் பார்த்துத்தான் முடிவு செய்ய வேண்டும்.
பெற்றோர் சிலர், தாங்கள் விரும்புவதைத்தான் பிள்ளைகள் மீது திணிக்கின்றனர். அது தவறு. மாணவரே முடிவு செய்யட்டும் என விட்டுவிட வேண்டும். அல்லது பெற்றோர் இணைந்து முடிவு செய்ய வேண்டும்.

சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி
கவுன்சிலிங்கில் மாணவர்கள் எடுத்த ‘கட்-ஆப்’ மதிப்பெண் அடிப்படையில் தான் கல்லூரிகளை தேர்வு செய்ய முடியும். எனவே பிளஸ் 2 மதிப்பெண் வந்தவுடன், எந்த கல்லூரியில் எந்த பிரிவை எடுக்கலாம். என்பதை, கடந்த ஆண்டு, இதே கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு கிடைத்த இடத்தை வைத்து முடிவு செய்யலாம். 

ஆனால், இது உத்தேசமானதுதான். சில நேரங்களில் கடந்த ஆண்டு அதே மதிப்பெண்ணுக்கு கிடைத்த அதே மதிப்பெண்ணுக்கு கிடைத்த இடம் இப்போது கிடைக்காமல் போகலாம். கிடைக்கவும் செய்யலாம்.

180 ‘கட்-ஆப்’ எடுத்த மாணவர் அண்ணா பல்கலையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கக் கூடாது. அதே சமயத்தில் புதிய கல்லூரியில்தான் கிடைக்கும் என்பதில்லை. கடந்த முறை மாணவர்கள் பாடப்பிரிவுகளையும் கல்லூரிகளையும் தேர்வு செய்தது போல் இந்த ஆண்டும் இருக்க  வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது பெரிய அளவில் மாற்றம் இல்லை.

மதிப்பெண் வந்துவிட்டதால், பெற்றோர் மற்றும் மாணவர்கள் இணைந்து, 10-15 கல்லூரிகளை தேர்வு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். 180 ‘கட்-ஆப்’ எடுத்த மாணவர் 177 முதல் 183 வரை ‘கட்-ஆப்’ வரை கிடைத்த கல்லூரியிலிருந்து தேர்வு செய்து கொள்வது நல்லது.

ஒவ்வொருவர் பார்வையிலும் கல்லூரியைப் பற்றிய மதிப்பீடு மாறுபடும். சில பெற்றோர்கள் கல்லூரியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தால்தான் படிப்பார்கள். சில மாணவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால்தான் படிப்பார்கள் என்று நினைப்பார்கள். அதைப் பொறுத்துதான் அவர்கள் கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும். வீட்டிலிருந்து சென்று படிக்க வேண்டுமா விடுதியில் தங்கிப் படிக்க வேண்டுமா என்பதையும் பார்க்க வேண்டும்.

நான்கு ஆண்டுகள் அந்த கல்லூரியில்தான் இருக்க வேண்டும் என்பதால், இதையெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதையெல்லாம் அந்தந்த கல்லூரியில் படித்த மாணவர்களிடம் கேட்கலாம். இதையெல்லாம் விட முக்கியமாக வேலைவாய்ப்பு எப்படி உள்கட்டமைப்பு வசதிகள் எப்படி என்ற விபரங்களையும் சேகரிக்க வேண்டும்.

இன்ஜினியரிங் கல்லூரியைப் பொறுத்தவரை உள்கட்டமைப்பு வசதியும், ஆசிரியர்களின் திறனும் மிக முக்கியம். ஆய்வக வசிதி எப்படி, பயிற்சி அளிக்கும் முறைகள் திருப்திதானா என்பதையும் பார்க்க வேண்டும். பாடம் தவிர்த்த பிற திறன் வளர்த்திலில் கல்லூரியின் செயல்பாடு ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். பாடம் தவிர்த்த பிற திறன் வளர்த்தலில் கல்லூரியின் செயல்பாடு ஆகியவற்றையும் பார்க்க வேண்டும்.

கல்லூரியில் சேர்வதற்கு முன், அந்த கல்லூரியை பெற்றோருடன் சென்று பார்க்க வேண்டும். அங்குள்ள மாணவர்களைப் பார்த்தும் கல்லூரியில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அட்மிஷனுக்காக கல்லூரிக்கு செல்வதைவிட, விழிப்புணர்வு பெறுவதற்காகக் கல்லூரிக்கு செல்லலாம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். முதலில் தேர்வு செய்த 15 கல்லூரிகளில் 10 கல்லூரியை இறுதி செய்து விடுவோம்.

கவுன்சிலிங்கின் போது, அந்த கல்லூரிகளுக்குள், காலியாக உள்ள இடத்தின் நிலவரத்தைப் பொறுத்து தேர்வு செய்வது எளிதாக இருக்கும். சிலர் நல்ல கல்லூரியில் எந்த பிரிவு கிடைத்தாலும் படிக்கிறார்கள். சிலர் நல்ல பிரிவு எந்த கல்லூரியில் கிடைத்தாலும் படிக்கிறார்கள். இந்த இரண்டுமே சரியான முடிவுதான். அது அவர்களது விருப்பம்.

அப்படி அவர்கள் படித்து முடித்தால் கூட, கண்டிப்பாக அவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். பெற்றோர்களிடம் அனுபவமும் மாணவர்களிடம் புத்தி சாலித்தனமும் இருக்கிறது. முடிவு இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ளும்படி இருக்க வேண்டும்.
யாருடைய கையிலும் இல்லை என்பதை புரிந்து  கொள்ள வேண்டும். மாணவர்  பிடிவாதமாக இருந்தால் பெற்றோர்கள் மாணவர் சிந்திக்க அவகாசம் கொடுக்கலாம். இரு தரப்பிலும் மாற வேண்டியிருந்தால் மாறித்தான் ஆக வேண்டும். இரு தரப்பினரும் முடிவு எடுத்து விட்டால், பின்னர், இப்படி முடிவு செய்திருக்கலாமே அப்படி செய்திருக்கலாமே என்று நினைக்கக்கூடாது. முடிவு எடுத்தபின் அதில் உறுதியாக இருக்க வேண்டும்.

போலிச் சான்றிதழ்களா? உஷார்!
தற்போது இன்ஜினியரிங் படிப்பின் மீது மாணவர்கள் அதிக  ஆர்வம் காட்டுகின்றனர். இச்சூழ்நிலையில், இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் முன்னணி கல்லூரிகளில் இடம் பெறவும், அரசு சலுகைகளை பயன்பபடுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், பிள்ளைகளுக்கு புத்தி சொல்ல வேண்டிய பெற்றோரை அதிக அளவில் இதில் ஈடுபடுவது தான். பொதுவாக, விண்ணப்பப் படித்துடன் இணைக்கப்படும் அனைத்து சான்றிதழ்களின் உண்மை  தன்மை தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன என்பதை இவர்கள் மறந்து விடுகின்றனர்.

என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்?
1. போலி சான்றிதழ் பயன் படுத்தி, பொறியியல் கவுன்சிலிங் மூலமாக சேர்க்கை பெற்றிருந்தால் அத்தகைய மாணவ, மாணவியரது படிப்பு காலத்தில் எப்போது வேண்டுமானாலும் இடைநீக்கம் செய்யப்படுபவர்.

2. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்கவும் தடைவிதிக்கப்படுவர்.

3. மாணவ, மாணவியர் மட்டுமின்றி, பெற்றோர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, உண்மையான சான்றிதழ்களை மட்டுமே பயன்படுத்தி, நேர்மையான முறையில் சேர்க்கை பெற்று படியுங்கள்.

சிறந்த கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்:
உலகம் முழுவதும் அதிகமான மாணவர்கள், பொறியியல் படிப்பையே விரும்பி தேர்வு செய்கின்றனர். நாட்டின் சுற்றுச்சூழல், தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றில் இன்ஜினியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதனால் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. விரும்பிய துறைகள் சாதிக்க நினைக்கும் மாணவர்கள், அதில் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

விருப்பம்தான் முதல் படி..
பொறியியல் படிப்புக்கான விதை, உயர்நிலைப் பள்ளியிலேயே போடப்படுகிறது. பள்ளி காலங்களிலேயே மாணவர்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து, அதில் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், அல்ஜீப்ரா, வடிவியல், கோணவியல் மற்றும் நுண்கணிதம் ஆகியவற்றை விரும்பி படிக்க வேண்டும்.

எப்படி தேர்வு செய்யலாம்?
விரும்பிய துறையை தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம். இருப்பினும் அந்த துறையில் வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, பொருளாதார சூழ்நிலை மற்றும் இதர காரணிகள் எவ்வாறு உள்ளன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
பயில விரும்பும் கல்லூரிக்கு சென்று, சீனியர் மாணவர்களிடம் கலந்துரையாடினால் தெளிவு பிறக்கும். தொழிற்சாலைகளுக்கு சென்று எந்த வகையான இன்ஜினியர்கள் தேவைப்படுகிறார்கள் என கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

சிறப்பாக படித்து, தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டால் வீட்டையும், நாட்டையும் உயர்த்தலாம். எந்த இன்ஜினியரிங் துறையை தேர்வு öய்தாலும் பணி வாயப்ப்புகள் உள்ளன. ஆராய்ச்சி, உற்பத்தி பிரிவு என பிடித்தமான பிரிவில் பணிபுரியலாம்.

சுயசார்பு படிப்புகள்...
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இணைப்பு பெற்று, அரசு உதவியின்றி தனியாரால் நடத்தப்படும் சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்பு சுயசார்பு படிப்பு என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், அரசு கல்லூரியோ அல்லது அரசு உதவிபெறும் கல்லூரியோ அரசு உதவியின்றி ஒரு குறிப்பிட்ட துறையை சுயமாக நிர்வகித்து நடத்தும் பாடங்கள் சுயசார்பு பாடங்கள் (எஸ்.எஸ்..,) என்று அழைக்கப்படுகின்றன. 

எவ்வளவு கட்டணம்?
கவுன்சிலிங் வழியாக இடம் கிடைக்கும் மாணவர் சுயநிதி கல்லூரியில் சேர்ந்தால்கட்டணம் குறைவு. தர அங்கீகாரம் பெற்றுள்ள துறையிலும் சுயசார்பு துறையில் படிப்புக்கு சேர்ந்தால் அதைவிட அதிகமான பணம் கட்ட வேண்டும். நிர்வாக ஒதுக்கீடு வழியாக இடம்பெறும். மாணவர்கள் ஏறத்தாழ இரு மடங்குகட்டணம் அதிகமாக கட்ட வேண்டும்.

நன்றி : http://www.sikams.com/

No comments:

Post a Comment