disalbe Right click

Tuesday, July 12, 2016

பள்ளியில் ஆசிரியை ஆவதற்கு


பள்ளியில் ஆசிரியை ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?


இன்ஜினீயர், டாக்டர், விஞ்ஞானி போன்ற பணிகளில் சேர இன்றைய இளைஞர்கள் பெரிதும் ஆசைப்பட்டாலும் அவர்களுக்கு ஆசிரியர் பணி மீதான ஈர்ப்பும் குறைந்துவிடவில்லை. பெரும்பாலான பெண்கள் ஆசிரியர் பணியை விரும்புகிறார்கள். இதர அலுவலகப் பணிகளைக் காட்டிலும் குடும்பத்தை நன்கு கவனித்துக்கொள்ள ஏற்ற பணியாக அவர்கள் கருதுவது ஆசிரியர் வேலையைத்தான்.
தயாராவது எப்படி?
இரண்டு வழிகளில் ஆசிரியர் பணியில் சேரலாம். ஒன்று பிளஸ் 2 முடித்துவிட்டு 2 ஆண்டுக் கால இடை நிலை ஆசிரியர் பயிற்சியை முடிக்க வேண்டும். அதன் பிறகு ஆசிரியர் தகுதி தேர்வெழுதிப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் ஆகலாம். மற்றொன்று பட்டதாரி ஆசிரியர் பணி. இதற்குப் பட்டப் படிப்பை முடித்துவிட்டு பி.எட். பட்டம் பெற வேண்டும். அதன் பிறகு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்வெழுதிப் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேரலாம். தற்போது பெரும்பாலானோர் பட்டதாரி ஆசிரியராகவே விருப்பப்படுகிறார்கள். முதுகலைப் பட்டதாரிகள் பி.எட். முடித்துவிட்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் ஆகலாம். எனவே, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அடிப்படைக் கல்வித்தகுதியாக இருப்பது பி.எட். பட்டம்.
இரண்டாண்டு காலப் படிப்பு
தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரி களும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளும், 600-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் பி.எட். பட்டம் வழங்கப்படுகிறது. முன்பு ஒரு ஆண்டுக் காலமாக இருந்த பி.எட். படிப்பு கடந்த ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுக் காலமாக மாற்றப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்படுகிறது.
தனியார் கல்லூரிகளில் உள்ள பி.எட். இடங்களைக் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பி விடுவார்கள். அரசு மற்றும் அரசு கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் வாரத்தில் வழங்கப்படுகின்றன. ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை என்பதால் ஒரேயொரு விண்ணப்பம் போட்டால் போதும். கலந்தாய்வின்போது தங்களுக்கு விருப்பமான கல்லூரியைத் தேர்வுசெய்துகொள்ளலாம்.
எங்கே படிக்கலாம்?
பி.எட். படிப்புக்கு அரசு கல்லூரிகளில் ரூ.2,250-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் தேசியத் தர மதிப்பீட்டு கவுன்சில் (நாக்) அங்கீகாரம் பெற்றிருந்தால் ரூ.46,500. தர அங்கீகாரம் பெறவில்லை எனில் கல்விக்கட்டணம் ரூ.41,500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இப்படி ரெகுலர் கல்லூரியில் சேர்ந்து பி.எட். படிப்பது ஒருபுறம், இன்னொரு புறம் தொலைதூரக் கல்வி திட்டத்தில் 2 ஆண்டுக் கால பி.எட்.-ஐ படிக்கலாம். இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரிகள் இதில் சேரலாம்.
இதற்கு 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவமும் அவசியம். இதற்கான நுழைவுத்தேர்வு, சிறப்பு மதிப்பெண் (பட்டப் படிப்பு மதிப்பெண், ஆசிரியர் பணி அனுபவத்துக்கு மதிப்பெண்) அடிப்படையில் நடைபெறு கிறது. இதுபோன்று பணியில் இருந்துகொண்டும் தொலைதூரக்கல்வி மூலம் பி.எட். பட்டம் பெறலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 12.07.2016

No comments:

Post a Comment