disalbe Right click

Wednesday, October 26, 2016

ஒரே கிளிக்கில் ஓவர் டிராப்ட் கடன்


ஒரே கிளிக்கில் ஓவர் டிராப்ட் கடன் - என்ன செய்ய வேண்டும்?

ஒரே க்ளிக்கில் ஓவர் டிராப்ட் கடன்… வாங்கலாமா, கூடாதா?

அவசரத் தேவைக்கு சிலர் வங்கியில் சம்பள ஓவர் டிராப்ட் கடன் வாங்குவார்கள். இந்த வாடிக்கையாளர்களைக் குறிவைத்து தனியார் நிறுவனங்கள் உடனடிக் கடன் வழங்க ஆரம்பித்திருக்கின்றன. 

முதல் முறையாகக் கடன் வாங்கும்போது ஐந்தே நிமிடங்களில் தரப்படும் இந்தக் கடன், இரண்டாவது முறையிலிருந்து ஒரு சில நொடிகளில் கடன் வசதி என அறிவிப்பை வெளியிட்டு சம்பளதாரர்களை கிறங்கடிக்கின்றன.

உடனடிக் கடன்!

மாதச் சம்பளம் வாங்கும் வாடிக்கையாளரைக் குறி வைத்து, அவர்களுடைய அவசரத் தேவைக்கு பணம் வழங்குவதே இது போன்ற நிறுவனங்களின்  நோக்கம். வாடிக்கையாளர் வாங்கும் கடனுக்கு மாதம் 1.8-2%. வட்டி. 

முதன் முறையாகக் கடன் வாங்கும்போது பரிசீலனைக் கட்டணம் ரூ.250-300, 

இரண்டாவது முறையிலிருந்து ரூ.150 வசூலிக்கப்படுகிறது. 

அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை இந்தக் கடன் வழங்கப்படுகிறது. 

சராசரியாக ரூ.50,000 கடன் வழங்கப்படுகிறது.

இந்த நிறுவனங்கள் வழங்கும் கடன் வசதியில் என்ன விசேஷம் எனில், அவசர பணத் தேவைக்காக அலையத் தேவையில்லை. நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ கடன் கேட்டு தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டியதில்லை. இந்த நிறுவனங்களின் ஆப் மூலம் உடனடியாகவும், எளிதாகவும் கடன் கிடைக்கும். 

ஆனால், இதுபோன்ற நிறுவனங்களை நம்பலாமா? இதன் சாதகம், பாதகம் குறித்து நிதி ஆலோசகர் முத்துக்கிருஷ்ணனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

அதிக வட்டி!

“இதுபோன்ற நிறுவனங்கள் வழங்கும் கடன் சேவையில் சாதகமான விஷயங்களைவிட, பாதகமான விஷயங்களே அதிகமாக உள்ளன. ஏனெனில் இந்த நிறுவனத்தில் குறைந்தபட்சம் வட்டியே மாதத்துக்கு 2% என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் வருடத்துக்கு 24% வட்டி கட்டவேண்டும். 

வங்கிகளில் சம்பள ஓவர் டிராப்டுக்கு அதிகபட்சமாக 16%  என்றளவில்தான் கடன் வழங்குகிறார்கள். ஆகையால், இவ்வளவு அதிக வட்டிக்கு இதுபோன்ற கடனை வாங்கத் தேவையில்லை. உதாரணத்துக்கு, இதில் 10,000 ரூபாய்க்குக் கடன் வாங்குகிறோம் எனில், ரூ.150 பரிசீலனைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவே கடனில் 1.5% ஆகும். 

இது தவிர ஒவ்வொரு மாதமும் 2 சதவிகித வட்டி செலுத்தவேண்டும்.

சிபில் ஸ்கோர் பாதிக்கும்!

இந்தக் கடனுக்கு ஒவ்வொரு முறையும் பரிசீலனைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கடன் சுலபமாகக் கிடைப்பதால், இது நாளடைவில் நமக்குப் பழகிவிடும். கடன் வாங்குவது எளிதாக இருப்பதால், வாடிக்கை யாளருக்கும் அடிக்கடி இந்தக் கடனை வாங்கி, எப்போதும் வட்டி கட்டும் நிலை ஏற்படும்.

இதுபோன்ற கடனை அடிக்கடி வாங்கினாலோ, திரும்பச் செலுத்தாமல் இருந்தாலோ, வாடிக்கை யாளர்களுடைய சிபில் ஸ்கோர் குறைய வாய்ப்புண்டு. ஏனெனில் சிபில் ஸ்கோரைப் பொறுத்தவரை அடிக்கடி கடன் வாங்கினாலே அது தவறாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இதுபோன்ற நிறுவனங்கள் மூலம் ஆயிரம், இரண்டாயிரத்துக்குக் கடன் வாங்கி, அதன்பின் முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால்கூட, எதிர்காலத்தில் வீட்டுக் கடனுக்கோ அல்லது அவசரத் தேவைக்கோ வங்கிகள் கடன் வாங்கும்போது கடன் கிடைக்காமல் போகலாம்.

இந்தக் கடனை வாங்கியபின் திரும்பச் செலுத்தாவிட்டால் அல்லது காலதாமதம் ஏற்பட்டால் எந்த மாதிரியான நடவடிக்கையை மேற் கொள்வார்கள் என்பது தெரியவில்லை. வாடிக்கையாளரைக் கைது செய்வார்களா அல்லது அலுவலகத்துக்கே வந்து மிரட்டல் விடுப்பார்களா என்பது போன்ற விவரங்களும் தெரியாது. 

இதுபோன்ற நிறுவனங்கள் ஆர்.பி.ஐ வரம்புக்கு உட்பட்டதாகவும் தெரிய வில்லை. ஆகையால், இந்த இணையதளம் மூலம் அவசரத் தேவைக்கு வேண்டுமானால் கடன் வாங்கலாம். ஆனால், தேவையில்லாத செலவுக்கு கடன் வாங்காமல் இருப்பதே சிறந்தது” என்றார்.

மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு நிதிச் சிக்கல் தொடர்ந்து இருந்தாலும், எளிதில் கிடைக்கிறது என்பதற்காக இதுபோன்ற நிறுவனங்களின் வலையில் சிக்காமல் இருப்பதே நல்லது. உடனே திரும்பக் கட்டிவிட முடியும் என்கிற நம்பிக்கையில், அவசரத் தேவைக்கு மட்டுமே இதனைப் பயன்படுத்தலாம்.

சோ.கார்த்திகேயன்
நன்றி – நாணயம் விகடன் – 30.10.2016

No comments:

Post a Comment