disalbe Right click

Tuesday, November 1, 2016

தொகுப்பு வீடுகள் - விபரங்கள்


தொகுப்பு வீடுகள் - விபரங்கள் - என்ன செய்ய வேண்டும்?
மக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்துகிறார்கள். அந்த திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்று செல்கிறதா? என்றால் முழுமையாக இல்லை என்ற பதில் கிடைக்கிறது. இதற்கு காரணம் திட்டம் தொடர்பான தகவல் மக்களுக்கு தெரியவில்லை.
அதை தெரிவிக்க வேண்டிய அதிகாரவர்க்கத்தினரும் மெத்தனம் காட்டுகிறார்கள். தேவையில்லாத பிரச்னைக்கெல்லாம் தெருவில் இறங்கி போராட்டம் நடத்ததும் அமைப்பினர் மக்களுக்கு தேவையான தகவல்களை கொண்டு சேர்ப்பதில் அக்கரை எடுத்து கொள்வதில்லை.
இந்நிலையில் அரசாங்கத்தின் திட்டங்களை மக்கள் முன் கொண்டு செல்லும் நோக்கத்தில் சமூக கண்ணோட்டத்துடன் நமது தினகரன் நாளிதழில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை அன்று சட்டம் ஒரு எட்டும் கனி என்ற பெயரில் சிறப்பு கட்டுரை வெளியிடுகிறோம். அதன்படி இவ்வாரம் மாநிலத்தில் வாழும் ஏழை குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் ‘‘தொகுப்பு வீடு’’ திட்டம் தொடர்பாக தகவல் கொடுக்கப்படுகிறது.
தார்மீக உரிமை:
நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் நாட்டில் குடிமகனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடம் ஆகிய மூன்றும் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லாதவர்களுக்கு அரசாங்கம் அதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதை மிகவும் அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் 40 சதவீதம் பேர் மட்டுமே சொந்த வீட்டில் வாழ்வதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பலர் வாடகை வீடுகளிலும், சிலர் பாழடைந்த கட்டிடங்கள், திறந்த வெளியில் டெண்ட் அமைத்து வாழ்கிறார்கள்.
மாநகரங்கள், நகர பகுதியில் கண்நோக்கி பார்க்கும் இடமெல்லாமல் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நாட்டில் வீடில்லாத ஏழைகளுக்கு படிப்படியாக வீடு கட்டி கொடுக்கும் தொகுப்பு வீடு திட்டம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதன்படி மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் பல்வேறு பெயர்களில் தொகுப்பு வீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒவ்வொரு கிராமத்தில், 20 வீடு என்ற வகையில் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கீடு செய்து வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிலமோ அல்லது தனியார் நிலத்தை வாங்கி அதில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனாளிகளை கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்து அதை மாவட்ட பஞ்சாயத்துக்கு சிபாரிசு செய்யும், அதை தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிகள் பரிசீலனை செய்து பின் ஆன்லைன் மூலம் மாநில வீட்டு வசதி வாரியத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.
அவற்றை பரிசீலனை செய்து வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து வீடு கட்டும் பொறுப்பை குத்தகைதாரர்களிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள், வீடு கட்டி முடித்தபின் பயனாளிகளுக்கு காண்பித்து அவர்கள் கட்டியுள்ள வீடு வாழ வசதியாக உள்ளது என்பதை உறுதி செய்து ஒப்புதல் சான்றிதழ் வழங்குவார்கள். அதைத் தொடர்ந்து குத்தகை எடுத்தவர்கள் வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்ற சான்றிதழை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பார்கள். இப்பணிகள் மேற்கொண்டபின் வீடுகளை அரசாங்கம் பயனாளிகளிடம் ஒப்படைக்கும்.அதன்பின் வீடுகள் பராமரிப்புச்செலவை மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும்.
பயனாளிகள் தேர்வு எப்படி?:
தொகுப்பு வீடு திட்டத்தில் மத்திய அரசு ராஜீவ்காந்தி வீட்டு வசதி திட்டம் அடல்பிகாரி வாஜ்பாய் வீட்டுவசதி திட்டம், பிரதமர் வீட்டு வசதி திட்டம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. கர்நாடக அரசு இந்திராகாந்தி, வாஜ்பாய், வால்மீகி ஆகிய பெயர்களில் வீட்டு வசதி தி்ட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. எந்த வீட்டுவசதி திட்டமாயிருந்தாலும் மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி தொகுப்பு வீட்டு திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கிராம பஞ்சாயத்துகள் கூடி தங்கள் பஞ்சாயத்துக்கு உள்பட்ட கிராமங்களில் எத்தனை பேர் சொந்தமாக வீடுகள் இல்லாமல் உள்ளனர் என்ற பட்டியல் தயாரிக்க வேண்டும்

மேலும் வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க நிலம் உள்ளதா என்ற விவரங்களை தயார் செய்து பொதுமக்கள் கருத்துகேட்புகள் வெளியிட வேண்டும்.

அதில், ஆட்சேபனை ஏதாவது இருக்குமாயின் அதனை சரிசெய்து உரிய பயனாளிகள் பட்டியல் தயாரித்து அவை பஞ்சாயத்து அலுவலக பெயர் பலகையில் அறிவித்து ஜனவரி 31க்குள் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வழங்க வேண்டும். மாவட்ட பஞ்சாயத்து தயாரித்துள்ள பட்டியலுக்கு தகராறில்லாமல் ஒப்புதல் கேட்டால் கிராம சபை கூட்டி அதற்கு அனுமதி பெற்று பின் தொகுதி எம்.எல்.ஏ. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆஷ்ராய கமிட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்

அக்கமிட்டி பரிசீலனை செய்து பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும்படி தாலுகா பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிக்கு சிபாரிசு செய்யும். அவர் பரிசீலனை செய்த பின் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பார்.

தொகுப்பு வீடு திட்டத்தில் மொத்த வீடுகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் 10 சதவீதம் பழங்குடியினத்தவருக்கும் மீதி 10 சதவீதம் சிறுபான்மை பிரிவினருக்கும் கட்டாயம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கொடுக்க வேண்டிய ஆவணங்கள்: சொந்தமாக வீடு இல்லாத ஏழைகள் அரசின் பல்வேறு திட்டங்களில் வீடு பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பயனாளிகள் விண்ணப்பப் படிவத்துடன் ரேஷன் கார்டு, தேர்தல் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பேங்க் பாஸ்புக் ஆகியவற்றின் நகல்கள் கொடுக்க வேண்டும் இது தவிர சாதி மற்றும் வருமானச் சான்றிதழ் இணைக்க வேண்டும்.

மேலும் மத்திய மாநில அரசுகளின் எந்த வீட்டு வசதி திட்டத்தின் கீ்ழ் இதுவரை எந்த வீடு அல்லது நிலம் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்தும் கடிதம் கொடுக்க வேண்டும்.

மேலும் சொந்தமாக வீடு வைத்துள்ளவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர் மட்டுமே இத்திட்டத்தில் பயனாளியாக சேர்க்கப்படுவார்கள்.

கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் ரூ.34,000க்கும் குறைவாக இருக்க வேண்டும். நகரப்பகுதியில் உள்ள ஏழைகளாக இருப்பின் அவரது ஆண்டு வருமானம் ரூ.87,600 ஆக இருக்க வேண்டும். பயனாளிகள் மாநிலத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

மேலும் தாங்கள் வசிக்கும் நகரம் அல்லது கிராமப்பகுதியில் தனக்கு சொந்தமாக வீடு இல்லை அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறையிடம் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் தனித்தனி பெயரில் வீட்டுமனை பெற வாய்ப்பில்லை.

அதே போல் ஒரே ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்களுக்கு தனித்தனியாக வீடு கட்டித்தர முடியாது. இத்திட்டத்தில் சொந்த வீடு இல்லாதவர்கள் அல்லது வசிக்க தகுதியில்லாத பாழடைந்த வீட்டில் வசித்து வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

இத்திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குத்தகை ஒப்படைத்தபின் ஓராண்டுக்குள் வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தை நிறைவு செய்ய வேண்டும். பயனாளிகள் கிராமப் பஞ்சாயத்து தாலுகா, மாவட்ட, பஞ்சாயத்து அலுவலகங்களில் இவற்றுக்கான விண்ணப்பம் பெறலாம் அல்லது ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பம் செலுத்தலாம். ஜனவரி மாதம் பயனாளிகள் தேர்வு தொடங்கி 3 மாதங்கள் முடித்துவிட்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வீடு கட்டும் திட்டத்தை தொடங்க வேண்டும்.

இத்திட்டத்தில் பொய்த்தகவல் கொடுத்து யாராவது வீடு அல்லது நிலம் பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக விவரம் வேண்டுவோர்
ராஜீவ் காந்தி ஊரக வீட்டு வசதிக் கழகம்
பிளாட் நம்பர் 1-4,
2வது மாடி ஐடி பார்க்,
இன்டஸ்டிரியல் எஸ்டேட்,
ராஜாஜி நகர்,
பெங்களூரு 560044
தொலை பேசி எண் 808-23118888,
இ.மெயில் rgrhel@rediff mail.com
அல்லது
இணையதளம். ashraya.kar.nic.in தொடர்பு கொள்ளலாம்.

நன்றி : தினகரன் நாளிதழ் - 20.09.2016

No comments:

Post a Comment