disalbe Right click

Thursday, January 19, 2017

வங்கியில் டெபாசிட்… வருமான வரி நோட்டீஸ் வந்தால்


வங்கியில் டெபாசிட்… வருமான வரி நோட்டீஸ் வந்தால் 

பழைய 500, 1,000 ரூபாய் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பலரும் அதிகத் தொகையை வங்கிகளில் டெபாசிட் செய்திருக்கிறார்கள். ஏறக்குறைய 60 லட்சம் பேர் சுமார்  7 லட்சம் கோடி ரூபாயை வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 3 முதல் 4 லட்சம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருக்கலாம் என வருமான வரித் துறை சந்தேகிக்கிறது.

இந்த நிலையில், நடப்புக்கணக்கில் ரூ.12.5 லட்சம், சேமிப்புக் கணக்கில் ரூ.2.5 லட்சம் தொகைக்கு மேல் டெபாசிட் செய்திருந்தால், அந்த விவரங்களை வங்கிகள், வருமான வரித் துறைக்கு அனுப்பி வருகின்றன. இதுபோன்றவர்களுக்கு வருமான வரித் துறையிடமிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வர வாய்ப்பு இருக்கிறது.

இப்படி வருமான வரித் துறையில் இருந்து நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும், எப்போதெல்லாம் நோட்டீஸ் வரும் என்பதை சென்னையின் முன்னணி ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார் விளக்கி சொன்னார்.

‘‘கிடைத்த வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் இருப்பது, வருமானத்தைத் தவறாக கணக்குக் காட்டி இருப்பது, செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாமல் இருப்பது, குறிப்பிட்டத் தொகைக்கு மேல் வருமானம் வந்தும் வருமான வரித் துறையிடம் வருமான வரித் தாக்கல் செய்யாமல் இருப்பது, தவறாக வரிக் கணக்குத் தாக்கல் செய்வது, தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் தாக்கல் செய்வது போன்ற காரணங்களுக்காக வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வரும். 

இப்படி நோட்டீஸ் வந்தவுடன் பதறவோ, பரபரப்படையவோ வேண்டாம். வருமான வரித் துறையிடமிருந்து தேவை இல்லாமல் யாருக்கும் நோட்டீஸ் வராது. உங்கள் வரவு செலவுக் கணக்கில் வழக்கத்துக்கு மாறாக ஏதோ ஒரு விஷயம் நடந்திருந்து, அதற்கான விளக்கத்தைப் பெற வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்புகிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

ஒருவருக்கு நோட்டீஸ் வந்தவுடன், என்ன காரணத்துக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்குப் புரியவில்லை எனில், ஒரு ஆடிட்டரிடம் சென்று, இந்த நோட்டீஸ் ஏன் வந்திருக்கிறது என்று கேட்டு, விளக்கம் பெறலாம். வருமான வரித் துறை கேட்கும் கேள்விகளுக்கு என்னென்ன ஆதாரங்கள் உங்களிடம் உள்ளது என்பதை எடுத்துச் சொல்லலாம். 

வரவு செலவுக் கணக்கைப் பொறுத்தவரை, ஆடிட்டரிடமோ அல்லது வருமான வரித் துறையினரிடமோ மறைக்க முயற்சிப்பது குற்றமாகும். எனவே, வரிச் சட்டத்துக்குட்பட்டு, ஆடிட்டர் தரும் யோசனைகளின்படி தகுந்த ஆதாரங்களை எடுத்துக்கொண்டு வருமான வரித் துறை அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளிப்பதன் மூலம் வருமான வரித் துறையினர் அனுப்பும் நோட்டீஸை எந்தப் பதற்றமும் இல்லாமல் எதிர்கொள்ளலாம்.

வருமான வரி வரம்பைவிட சிறிதளவு தொகை மட்டுமே வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் பட்சத்தில், அதற்கான விளக்கத்தை நீங்களே தந்துவிட முடியும் என்று நம்பினால், நேரடியாக வருமான வரித் துறை அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் தரலாம்.

ஆனாலும், வருமான வரி தொடர்பாக சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால், அந்த விஷயங்களைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன்.

  வியாபாரிகளுக்கு!

பொதுவாக, 1 கோடி ரூபாய்க்கு மேல் டேர்ன் ஓவர் இருந்தால், கட்டாயமாக ஒரு ஆடிட்டரிடம் கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும். மொத்த கணக்குவழக்குகளை ஆடிட்டர் சரிபார்த்து கையொப்பம் இட்டிருக்க வேண்டும். இதுவே 1 கோடி ரூபாய்க்குக் கீழ் என்றால், வியாபாரிகள் தங்களுடைய வரவு செலவுப் புத்தகங்களைச் சரியாக வைத்திருந்தால் போதும்.

ஓர் உதாரணம் மூலம் இதைப் புரிந்துகொள்ள முற்படுவோம். 

ஒருவரின் நிறுவனம் அல்லது கடையில் மாத டேர்ன் ஓவர் சராசரியாக ரூ.5 லட்சமாக இருந்து வருவதாக வைத்துக் கொள்வோம். திடீரென்று ரூ.5 லட்சத்துக்கு மேல் வியாபாரக் கணக்குகளின் மூலம் கிடைத்ததாக டெபாசிட் செய்தால், வரித் துறையினர் நிச்சயம் கேள்விக் கேட்க வாய்ப்பிருக்கிறது. அப்படிக் கேட்கும்போது வியாபாரிகள் அவர்களின் பிரச்னைகளை விளக்கமாக எடுத்துச் சொல்லலாம். பிசினஸில் ரொக்கத்தின் தேவை எவ்வளவுக்கு இருந்தது என்பதை எல்லாம் வியாபாரிகள்தான் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.

  கடன்கள்! 

நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ நீங்கள் கடன் தந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் தந்த பணத்தை கடன் வாங்கியவர் உங்களுக்குத் திரும்பத் தருகிறார். அவர் தந்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மொத்தமாக வங்கியில் டெபாசிட் செய்தால், வருமான வரித் துறையினர் கேள்வி எழுப்புவார்கள்.

பொதுவாக, வருமான வரி சட்டப்படி, ரூ.20,000-க்கு மேல் மனைவி, குழந்தை என்று எந்த ரத்தபந்தமாக இருந்தாலும், வங்கி வரையோலை மற்றும் காசோலை அல்லது நெட்பேங்கிங் மூலமாகத்தான் கடன்  கொடுக்க வேண்டும்.  அப்போது தான் கடன் கொடுக்கப்பட்டதாக வருமான வரித் துறையினர் கணக்கில் எடுத்துக் கொண்டு, திரும்பப் பெறும் கடன் தொகையை வருமானமாகக் கருதமாட்டார்கள். அப்படி இல்லாதபட்சத்தில், நீங்கள் கடன் கொடுத்து, திரும்பப் பெற்ற தொகையை வருமானமாகக் கருதி, வரி விதிக்கவே செய்வார்கள்.   

அதுமட்டுமின்றி, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ரொக்கமாகக் கடன் வழங்கி இருப்பது வரித் துறையினருக்குத் தெரியவந்தால், கொடுக்கப்பட்ட கடன் தொகைக்குச் சமமான தொகை அபராதமாக விதிக்கப்படும்.

எனவே, உறவினர்களுக்கு ரொக்கமாக கடன் கொடுத்திருக்கும்பட்சத்தில், வருமான வரித் துறையினருடன் வாக்குவாதம் செய்யாமல், திரும்ப வந்த தொகையை வருமானமாகக் காட்டி, அதற்கான வரியைக் கணக்கிட்டு செலுத்திவிடுவது உத்தமம். இது தனி நபர்கள் மற்றும் வியாபாரிகள் இருவருக்கும் பொருந்தும்.

 சொத்துகள்!

நடுத்தர வருமானப் பிரிவினர் செய்யும் தவறுகளில் மிக முக்கியமானது, வீடு மற்றும் மனை வாங்கும்போது ரொக்கமாகப் பணம் தருவதுதான். தங்கம் தொடங்கி வீடுகள், ரியல் எஸ்டேட் சொத்துகள் வரை எல்லாவற்றையும் ரொக்கமாக வாங்குவதையே நம்மில் பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

வருமான வரிச் சட்டப்படி ரூ.20,000-க்கு மேல் ரொக்கமாகத் தந்து பொருட்களை வாங்கும்போது காசோலை அல்லது வரையோலையாகத்தான் செலுத்த வேண்டும். அதேபோல்,  ரூ.20,000 ரூபாய்க்கு மேல் சொத்துகளை விற்கும்போதும் நாம் பணமாக வாங்காமல், காசோலை அல்லது வங்கி வரையோலையாகத்தான் பெற வேண்டும்.

இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 95 சதவிகித மக்களுக்கு இப்படியொரு சட்டம் இருப்பதே தெரியவில்லை. காரணம், இந்திய மொத்த மக்கள் தொகையில் வெறும் 5.17 கோடி பேர்தான் வரிக் கணக்குத் தாக்கல் செய்கிறார்கள்.

 தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்!

தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்று, கையில் ரொக்கமாகப் பணத்தை வைத்திருந்தால், அவை இதர வருமானம் என்று கருதி, 30% வரி விதிக்கப்படும். அதோடு, எந்த நிதி ஆண்டில் சொத்து விற்கப்பட்டதோ, அதற்கு அடுத்த நிதி ஆண்டின் முதல் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதத்துக்கும், கட்டவேண்டிய வரிக்கு வருமான வரி சட்டப் பிரிவு 234A, 234B, 234C-ன்படி 1% வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

சொத்துகளை (தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்) காசோலை அல்லது டிடி-யாகப் பெற்றிருந்தால், அதற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியாக 20% செலுத்தும்படி வரித் துறையினர் ஏற்கெனவே அறிவுறுத்தி இருப்பார்கள்.

ஒருவேளை, இப்படி நீங்கள் செய்யாமல் விட்டிருந்தால், இப்போது அந்தப் பணத்துக்கு 20% நீண்ட கால மூலதன ஆதாய வரி மற்றும் எந்த நிதி ஆண்டில் சொத்து விற்கப்பட்டதோ, அதற்கு அடுத்த நிதி ஆண்டின் முதல் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதத்துக்கும் 1% வட்டி செலுத்த வேண்டியிருக்கும். 

விவசாயிகளுக்கு!

இதுவே விவசாய நிலமாக இருந்து, அவர்கள் கிராமத்தில் எந்த ஒரு வங்கியும் இல்லாத நிலையில், நிலத்தை விற்றிருந்தால், கிடைத்த தொகையை ரொக்கமாகப் பெற்றிருக்கலாம். ஆனால், விவசாய நிலத்துக்கு இருக்கும் பட்டா மற்றும் சிட்டா போன்றவற்றில் ‘விவசாய நிலம்’ என்று குறிப்பிடப்பட்டு, பயிர் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போது இந்தப் பணத்தை பக்கத்து ஊரில் இருக்கும் வங்கிகளில் சென்று செலுத்தலாம்.

இதுகுறித்து வரித் துறையினர் கேள்வி எழுப்பினால், வங்கி இல்லாத காரணத்தைக் குறிப்பிட்டு, முறையான வருமான வரித் தாக்கல் செய்யவேண்டி இருக்கும். விவசாய நிலங்களுக்கு மூலதன ஆதாய வரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

 விளக்கம் போதவில்லை எனில்…?

நோட்டீஸ் வரப் பெற்றவர் கொடுக்கும் விளக்கம், வருமான வரித் துறை அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனில், அதிகாரிகள் விதிக்கும் அபராதத்தையும், வட்டியையும் செலுத்த வேண்டும். அதோடு, தாமதமாக வரி செலுத்தியதற்கு, செலுத்த வேண்டிய வரித் தொகையில் 1%  வட்டியாக கட்ட வேண்டியிருக்கும்.

எனவே, நோட்டீஸ் வரப் பெற்றவர் அளிக்கும் விளக்கங்கள் வரித் துறை அதிகாரிகளுக்கு திருப்தி அளிப்பதாக இருக்க வேண்டும். அப்போதுதான் வரித் துறை அதிகாரிகள், அபராதம் விதிக்காமல் வட்டியை மட்டும் கட்ட அனுமதிப்பார்கள். 

  மேல் முறையீடு!

வருமான வரித் துறை அதிகாரி, வட்டியைக் கட்டச் சொல்லி அறிவுறுத்தியபின், மேலதிகாரிகளிடம் முறையீடு செய்ய முடியாது. எனவே, வரித்  துறை அதிகாரிகளை அணுகும் முன் வரி மற்றும் வட்டியை மட்டும் கட்டிவிட்டு வரும் வகையில் நேர்மையாகப் பதில்களை தயார் செய்துகொண்டு, தகுந்த ஆதாரங்களோடு செல்ல வேண்டும். தவறான பதில்களால் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று முடித்தார் ஆடிட்டர் சதீஷ்குமார்.

சம்பளக்காரர்களாக இருந்தாலும் சரி, தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, வரவு செலவுக் கணக்கை முறையாக மேற்கொள்ளும் பட்சத்தில், எந்தச் சிக்கலிலும் சிக்க வாய்ப்பே இல்லை என்பது மட்டும் நிச்சயம்!

வரியும் வட்டியும்!

வங்கியில் வரவு வைக்கப்பட்ட மொத்தப் பணத்துக்கு இணையாக, வரும் வரிக் கணக்கீட்டு ஆண்டில் வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிட்டால், வருமான வரித் துறையினர் வரியை மட்டுமே கணக்கிடுவர். அபராதம் விதிக்க மாட்டார்கள். ஆனால், தாமதமாக வரி செலுத்துவதால் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். முன்கூட்டியே அதாவது, இந்த நிதி ஆண்டிலேயே வரி செலுத்தியிருந்தால், வட்டி  செலுத்தத் தேவை இருக்காது.

நன்றி : நாணயம் விகடன் - 22.01.2017

No comments:

Post a Comment