disalbe Right click

Friday, January 27, 2017

காவல்துறை ஆய்வாளர் மீது வழக்கு போடமுடியுமா?

Image result for விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் காவல் ஆய்வாளர்
காவல்துறை ஆய்வாளர் மீது வழக்கு போடமுடியுமா?

நீதிமன்ற தீர்ப்புகள் என்ற மாதம் இருமுறை தமிழில் வெளியாகும் இதழ் பற்றி சற்று முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதில்தான் இந்த வழக்கு பற்றி  விபரம் மற்றும் தீர்ப்பை வெளியிட்டிருந்தார்கள்.
அந்த வழக்கு மற்றும் தீர்ப்பு பற்றி முழுவதுமாக கீழே காணலாம்.

சென்னை உயர்நீதிமன்றம்
நீதியரசர் முனைவர் .தேவதாஸ்
CRL. O.P. No.:6608/2016,  நாள்:07.04.2016

மும்தாஜ் ------------------------------------------------------------------------------மனுதாரர்
எதிர்
காவல்துறை கண்காணிப்பாளர்
நீலகிரி மாவட்டம், மற்றும் பலர் ------------------------------எதிர்மனுதாரர்கள்

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழான சில பிரிவுகளில் ஒரு வழக்கை தாக்கல் செய்யும்படி இந்த 2ம் எதிர்மனுதாரரான நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளருக்கு கட்டளையிடும்படி கோரி கு.வி.மு.ச. பிரிவு 482ன் கீழ் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்நிலை புகார்தாரர் (Defacto Complainant)  உதக மண்டலத்திலுள்ள செல்வராஜ் என்பவரின் உணவு விடுதி முன்பு பழ வியாபாரம் செய்து வருபவராவார். அவர்களுக்கிடையே வியாபாரம் சம்பந்தமாக சில பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இந்த மனுதாரர் ஒரு புகாரை செல்வராஜ் மீது அளித்துள்ளார்.
அவருடைய புகாரின் அடிப்படையில் இ.த.ச.பிரிவுகள்294(b), 323, 324 மற்றும் 506(ii)ன் கீழ் குற்ற எண்:20/2016 என்கிற எண்ணில் ஒரு வழக்கு B1 காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கின் புலன் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.    
இந்த நிலையில், எதிரி செல்வராஜிற்கு அந்தக் காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகிய இருவரும் உதவி செய்து வருவதாக இந்த மனுதாரர்/நிகழ்நிலை புகார்தாரர் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அந்தக் காவல் நிலையத்தின் ஆய்வாளர் செல்வராஜின் உணவு விடுதியிலிருந்து தேநீர் மற்றும் உணவு ஆகியவற்றை விலையில்லாமல் பெற்றுச் செல்வதாகவும், எதிரு செல்வராஜிடம் இருந்து ரூ.25,000/-த்தை கையூட்டாக பெற்றுக் கொண்ட பின்னர் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் ஆகிய இருவரும் கிட்ட உள்நோக்கத்தோடு அந்த வழக்கின் புலன்விசாரணையை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவானது உள்நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், நீலகிரி தலைமை இருப்பிடக் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் நடத்திய விசாரணையில் காவல்துறை அதிகாரிகள் மீது எந்த ஆதாரமும் இல்லாமல், அந்த குற்றச்சாட்டுக்கள் இந்த மனுதாரரால் கூறப்பட்டுள்ளது என்கிற விஷயம் தெரிய வந்ததாகவும் அரசுத் தரப்பில் ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கு.வி.மு.ச. பிரிவு 482ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பிடியானை வேண்டாக் குற்றத்திற்கான ஆதாரம் உள்ளதா? என்பதை முதலில் இந்நீதிமன்றம் கண்டறிய வேண்டும். ஒரு வழக்கை பதிவு செய்யும்படி கட்டளையிடுவது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
ஒருவரை கைது செய்யக்கூடிய அளவிற்கு கொண்டு செல்வதோடு மிகவும் கடினமான குற்றவியல் நடவடிக்கையையும் ஒருவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அனுமானங்களின் அடிப்படையில் பிடியாணை வேண்டாக் குற்றம் நடைபெற்றுள்ளதாக கருத முடியாது.
ஒரு குற்றச் செயலுக்கு வலுவான சில ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே கு.வி.மு.ச. பிரிவு 482ன் கீழ் ஒரு கட்டளையைப் பிறப்பிக்க இயலும். கு.வி.மு.ச. பிரிவு 156(3)ன் கீழ் ஓர் உத்தரவினைப் பிறப்பிப்பதற்கு இணையான ஒரு தனி நபர் புகாரை (Private Complaint) தாக்கல் செய்யலாம்.
இந்த வழக்கு சங்கதிகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுது பிடியாணை வேண்டாக் குற்றத்திற்கான ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனக்குறிப்பிட்டு இந்த மனுவை தள்ளுவடி செய்து மாண்புமிகு நீதியரசர் முனைவர் .தேவதாஸ் அவர்கள் தீர்ப்பளித்தார்.
மனுதாரரின் வழக்கறிஞர் : திரு .குருபிரசாத்
எதிர்மனுதாரரின் வழக்கறிஞர்:திரு.கோவிந்தராஜன், Addl. P.P.
2016 - 2 - TNLR - 140

நன்றி:
நீதிமன்ற தீர்ப்புகள்,  மாதமிருமுறை சட்ட இதழ், டிசம்பர்-2016

No comments:

Post a Comment