disalbe Right click

Monday, February 6, 2017

பக்கிங்ஹாம் கால்வாய்


பக்கிங்ஹாம் கால்வாய்


சென்னையின் நீர்வழித்தடங்கள் - 2 பஞ்சத்தை எதிர்கொண்ட பக்கிங்ஹாம் கால்வாய்!

அதிசயம்! ஆனால் உண்மை - ஆமாம்; சென்னையின் நீர்வழித்தடங்களைக் குறித்து நாம் ஆலோசிக்கிறோமோ இல்லையோ, பல ஆங்கிலேயர்கள் அந்நாட்களிலேயே நினைவு கூர்ந்துள்ளனர்.
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற ஒரு பெண்மணியைப் பற்றி நம்மில் அறியாதவர்கள் இருக்க முடியாது. 'லேடி வித் அ லேம்ப்' என்றறியப்பட்ட அப்பெண்மணி, செவிலியர்களுக்கு முன்னோடி. ஆனால் அவர், சென்னையின் நீர்வழித்தடங்களைப் பற்றி, 16ம் நுாற்றாண்டிலேயே எழுதியுள்ளார் என்று எத்தனை பேருக்குத் தெரியும்?
அவர் முக்கியமாக இவற்றைப் பற்றி நினைத்தற்குக் காரணம், சுகாதாரத்திற்கு இன்றியமையாதது, கழிவுநீர்க் கால்வாய்கள் என்ற கருத்தின் அடிப்படையில் தான். நோய்கள் வரக் காரணமே, கழிவுநீர் சரிவர அகற்றப்படாதது என்ற கருத்துடையவராக இருந்தார்.
அவர் இந்தியாவின் சுகாதாரத்தைப் பற்றி எழுதியவை, ஒரு நுாலாக வெளிவந்துள்ளன. அதில் அவர் அன்றைய மதராசைக் குறித்து எழுதியுள்ள கடிதங்களும் உள்ளன. அதில், அவர் சென்னையின் நீர்வழித்தடங்களைப் பற்றியும் விரிவாகவே எழுதியுள்ளார்.
அவரது கடிதம், சர் ஆர்தர் காட்டன் எழுதிய, 'தி மெட்ராஸ் பேமின் - வித் அபெண்டிக்ஸ் கன்டெய்னிங் ஏ லெட்டர் பிரம் மிஸ் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அண்டு அதர் பேப்பர்ஸ்' என்ற, 1877ம் ஆண்டில் பதிக்கப்பட்ட ஆங்கில நுாலில் காணக் கிடைக்கிறது. 

'இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ்' என்ற பத்திரிகையில், பிளாரன்ஸ், இந்தி யாவைப் பற்றி பல கடிதங்கள் எழுதியுள்ளார். அந்த பத்திரிகை, இந்தியாவின் பஞ்சத்தைப் பற்றிய பல படங்களை அக்காலகட்டத்திலேயே வெளியிட்டுள்ளது.
சர் ஆர்தர் காட்டன், தென்னகத்தின் நீர்வழித்தடங்களை நன்கு ஆய்ந்தவர். கோதாவரி ஆற்றை அவர் அறிந்த அளவுக்கு இந்தியர்களே தெரிந்து கொள்ளவில்லை எனலாம். தஞ்சாவூர் பகுதியிலும் அவரது பணிகள் நன்கறியப்பட்டவை.
படகுகள் ஊர்வலம்
கடந்த, 1879, ஏப்ரல் 2௮ம் தேதி அன்று, 'தி இல்லஸ்ட்ரேட்நியூஸ்' ஆங்கிலப் பத்திரிகைக்கு, பிளாரன்ஸ் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
(1)ஜூலை, 1877ல் நீங்கள் இருமுறை எனது கடிதங்களைப் பிரசுரித்துள்ளீர்கள். அதில் நான் சென்னை ராஜதானியின் பஞ்சங்களைக் குறித்து எழுதியிருந்தேன்.
பஞ்சத்தை எதிர்கொள்ள டியூக் ஆப் பர்மிங்ஹாம் செய்த ஒரு சிறப்பான காரியம் குறிப்பிடத் தக்கது. அவர் ஒரு கால்வாயை வெட்டி, அதன் மூலம் சரக்குகளைக் கொண்டு செல்ல ஒரு வழி வகுத்தார்.
மதராசுக்கு வடக்கில், காகிநாடாவில் இருந்து, தெற்கு வரை, 450 மைல்கள் ஒரு கால்வாய் மூலம், படகுகள் இப்போது செல்ல முடியும்.
(இந்த கடிதம், 137 ஆண்டு களுக்கு முந்தையது என்பதை வாசகர்கள் நினைவு கூர்ந்து கொள்ள வேண்டும்)
அன்று, ஊர்வலம் போல, 70லிருந்து 80 படகுகள் வரை இக்கால்வாயில் சென்றது, வெனிசில் படகுகள் (கொண்டோலாக்கள்) செல்வதை நினைவூட்டியிருக்கக்கூடும்.
இவ்வாறு, அவர் எழுதி இருந்தார்.
வேடிக்கை என்னவெனில், பிளாரன்ஸ், இந்தியா வந்திருக்கவில்லை
தொடர்ந்து அவர் கடிதத்திலிருந்து நமக்குத் தெரிவது, அவர் கருத்துப் படி, பிரிட்டிஷ் இந்தியாவில் பஞ்சங்களுக்குக் காரணம், உணவு பற்றாக்குறை மட்டுமல்ல. 

ஏனெனில் இந்தியாவின் பல இடங்களில் உணவு நல்ல அளவில் கிடைத்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால் அப்படி இருந்தும் உணவுப் பொருளை, உணவு குறைந்த பிரதேசத்திற்கு எடுத்துச் செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாததுதான் என்று கூறி, அவ்விஷயத்தில் பக்கிங்ஹாம் பிரபு உண்டாக்கிய பக்கிங்ஹாம் கால்வாய் சிறப்பாக அமைந்தது என்று தெளிவுபடுத்தி உள்ளார்.
இன்று கூட வல்லுனர்கள் கருத்துப்படி, இந்தியாவில் உணவுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால் வினியோகிப்பதில் தான் குறையுள்ளது
என்றறிகிறோம்.
சென்னையையே பார்த்திராத அப்பெண்மணி, சென்னையின் நீர்வழித்தடங்களின், முக்கியமாகக் கழிவுநீர் பிரச்னைகளைப் பற்றி, பல ஆண்டுகளுக்கு முன்னரே நன்றாகவே புரிந்து கொண்டிருந்தார் என்பதும், அதைப் பற்றித் தமிழர்களாகிய நாம், இன்றும் சரியாக உணர்ந்து கொள்ளவேயில்லை எனபதும் இதிலிருந்து நிதர்சனமாகின்றது அல்லவா?
உண்மையில் அவரது நோக்கு ஆங்கிலேய ராணுவ சிப்பாய்களைப் பற்றித்தான் முதலில் துவங்கியது. பின்னர் மற்ற சிப்பாய்களைப் பற்றியதாகவும், இறுதியில் மொத்தமாக இந்தியாவின் சுகாதார முறைகளைப் பற்றியதாகவும் மாறியது.
வாழ்வு அல்லது சாவுகடந்த, 1864ம் ஆண்டில் அவர், 'இந்தியன் சானிடரி ரிப்போர்ட்' என்ற ஒரு ஆய்வறிக்கையையும் தயாரித்தார். அப்போது மதராஸ் சுகாதாரக் கமிஷனராக இருந்த, ராபர்ட் ஸ்டாண்டன் எல்லிஸ் என்பவருக்கு, இங்கிலாந்தில் நிலவும் சுகாதார முறைக்கும், இந்தியாவில் காணப்படும் சுகாதார முறைக்கும் உள்ள வேறுபாட்டைக் குறித்து, அவரது இங்கிலாந்து வருகையின் போது சுட்டிக் காட்டினார்.
அவரது பரிந்துரையின் பேரில், 1866ம் ஆண்டில், கேப்டன் டுல்லாக் என்பவர் அன்றைய மதராசின் கழிவுநீர்ப் பிரச்னை கள் குறித்து ஒரு அறிக்கை தயார் செய்ய இங்கிலாந்திலிருந்து அனுப்பப்பட்டார்.
அது மட்டுமல்ல. அவர் இந்தியாவில் சுகாதாரத்தைப் பற்றி ஆய்வு செய்ய, ராயல் கமிஷன் குழு அமைக்கப்பட்டபோது, அதில் பெரும் பங்கினை தானே ஏற்றுக் கொண்டார். 1874ம் ஆண்டில், ஒரு கையேடு தயாரித்தார்.
அதற்கு 'இந்தியாவில் வாழ்வு அல்லது சாவு' என்ற தலைப்பு கொடுத்தார். இது குறித்து, அவர் 1888, அக்டோபர் 10ம் தேதி எழுதிய கடிதத்தில் அன்றைய அரசைக் குறை கூறியுள்ளார். மொத்தத்தில் பக்கிங்ஹாம் கால்வாய், பஞ்சத்தை எதிர்க்க உறுதுணையாக இருந்திருக்கின்றது.
இதன் ஆரம்பம் அதாவது பிறப்பிடம் (ஆங்கிலத்தில் ஜீரோ பாயின்ட்), செயின்ட் மேரி பாலத்தினருகில் அமைக்கப்பட்டது. அதிலிருந்துதான் வடக்கேயும் தெற்கேயும் கால்வாய் அளவுகள் எடுக்கப்பட்டன.
முன்னரே கூறியபடி, முதலில், 178 சதுரமைல் பரப்பளவு கொண்ட பழவேற்காடு ஏரி, சென்னையின் கோட்டைப் பகுதியிலிருந்து கோக்ரேன் கால்வாய் மூலம் இணைக்கப்பட்டது.
அப்போதுதான் கூவம் ஆறு சங்கமம் ஆகுமிடத்தில், மணல் மேடு உண்டாவதும் அதனால் ஆற்றின் நீர் வேகம் தடுக்கப்படுவதும் பொறியாளர்களுக்குச் சரியாகப் புரிந்தது.
அதைத் தொடர்ந்துதான் லாக் கேட்டுகள், கால்வாயின் நீர் வடிந்திடாதிருக்க அமைக்கப்பட்டன. இக்கால்வாயின் முதல் காலம் 1857லிருந்து 1883ம் ஆண்டு வரை எனக் கணக்கெடுக்கப்
பட்டது. இரண்டாவது காலம் 1883 லிருந்து 1891 வரையிலானது. இந்த கால கட்டத்தில்தான் பல தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்று, கூவத்தைப் பற்றியதுமாகும்.
அதைப் பற்றிக் கூவம் ஆற்றைப் பற்றி வரும் பகுதியில் பின்னர் பார்க்கலாம்.
கடந்த, 1879ம் ஆண்டில் புயலால் இக்கால்வாய் பெரும் சேதம் அடைந்தது. பழுது பார்க்கையில் பல லாக் கேட்டுகள் கைவிடப்பட்டன. வடபகுதியில் அதாவது ஆந்திராவில் இக்கால்வாய் இன்னும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தெற்கிலோ மொத்தமாக பாழடைந்து விட்டது.
1. Florence Nightingale on Health in India: Collected Works of Florence Nightingale By Florence Nightingale, 
Lynn McDonald, Grard Vall e 

(கட்டுரையாளர் - எழுத்தாளர், ஆய்வாளர்)
தொடர்புக்கு: narasiah267@gmail.com
- நரசய்யா -

நன்றி : தினமலர் நாளிதழ் - 07.02.2016

No comments:

Post a Comment