disalbe Right click

Monday, February 20, 2017

அன்னப்பிளவு

அன்னப்பிளவு


1 அன்னப்பிளவு என்றால் என்ன?
கர்ப்ப காலத்தில் குழந்தை கருப்பையில் வளரும்போது, ரத்த நாளத்திலிருந்து, மூக்கின் கீழ்ப்பகுதி வளர உதவும் தசைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடையேதும்
ஏற்பட்டால், அப்பகுதி முழுமையாக வளர்ச்சி பெறாமல் பிளந்து காணப்படும். இதுவே, அன்னப்பிளவு என்றழைக்கப்படுகிறது.
2அன்னப்பிளவு ஏற்பட காரணம் என்ன?
கருவிலிருக்கும் குழந்தையின் உடல் உறுப்புகள், முழு வளர்ச்சி அடையாமல் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமே, ஊட்டச்சத்து குறைபாடு தான். எனவே, கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
3 இப்பிரச்னை பிறவிக் குறைபாடா?
கருவிலேயே குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுவதால், இது பிறவிக் குறைபாடு தான். இப்பிரச்னையை குழந்தை கருவில்இருக்கும் போதே தீர்க்க முடியாது. குழந்தை பிறந்தவுடன் தான் தீர்வு காண முடியும்.
4 இப்பிரச்னையால் எவ்வகையான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்?
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பை சார்ந்தவர்களுக்கு, பிறக்கும் குழந்தைகளில், சில பேர் அன்னப்பிளவோடு பிறக்கின்றனர். கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்தின்
முக்கியத்துவத்தை அறியாமல், சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாத மற்றும் கர்ப்ப காலத்தை அதிக மன அழுத்தத்தோடு கடத்தும் கர்ப்பிணிகளுக்கு, பிறக்கும் குழந்தைகள் அன்னப்பிளவால் பாதிக்கப்படுகின்றனர்.
5 மேற்சொன்ன காரணங்களால் மட்டுமே அன்னப்பிளவு ஏற்படுகிறதா?
கர்ப்ப காலத்தில், மருத்துவரின் அறிவுரை படி, நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யாத கர்ப்பிணிகளுக்கு, பிறக்கும் குழந்தைகள் அன்னப்பிளவால் பாதிக்கப்படுகின்றனர். அது மட்டுமல்ல; கர்ப்பத்திலுள்ள குழந்தைகள் அன்ன வளர்ச்சிக்கு செல்லும் ரத்தக்குழாயான முகத்தமனியை, சில வேளைகளில் கருவிலிருக்கும் குழந்தைகளே அழுத்திக் கொண்டிருந்தாலும் இப்பிரச்னை ஏற்படும்.
6 கருப்பையிலிருக்கும் குழந்தைக்கு உடல் உறுப்புகள் முழு வளர்ச்சியடையாமல் இருக்கிறது என்பதை, எவ்வாறு அறிந்து கொள்வது?
‘ஸ்கேன்’ செய்து கொள்வது பற்றி, மக்களிடம் மிகத் தவறான கருத்து நிலவுகிறது. மருத்துவத் துறையில் வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கும் காலம் இது. எனவே கர்ப்பிணிகள் அனைவரும் கட்டாயம் தேவையான சமயங்களில், பரிசோதனை செய்வதன் மூலம், குழந்தையின் உடல் உறுப்புகள் சீராக வளர்ச்சியடைந்து இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
7 கருவிலிருக்கும் போதே குழந்தைக்கு ஏற்படும் வளர்ச்சி குறைபாட்டை, சீர் செய்ய முடியாதா?
குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, சில குழந்தைகளுக்கு அன்னப்பிளவு, ஆறாவது விரல் போன்ற குறைபாடுகள் இருக்கும், சில குழந்தைகளுக்கு வயிற்றுப் பகுதி லேசாக வீங்கியிருக்கும். இது மாதிரியான குழந்தைகளுக்கு உடனே சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை; செய்யவும் முடியாது. எனவே, குழந்தை பிறந்தபின் மட்டுமே சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
8 குழந்தைகள் அன்னப்பிளவு பாதிப்பை தவிர்க்க என்ன செய்யலாம்?
கர்ப்ப காலத்தில் ஊட்டச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். சீரான நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டும்.
மன அழுத்தம் இல்லாமல், மன மகிழ்ச்சியோடு கர்ப்ப காலத்தை கடக்க வேண்டும்.
9 அன்னப்பிளவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எவ்வகையான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்?
காது, மூக்கு மற்றும் தொண்டை வளர்ச்சி குறைபாடுகளும் ஏற்படும். சில குழந்தைகளுக்கு இதயம் சார்ந்த நோய்களும் ஏற்படும். திட, திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளும்
போது, அவை மூக்கு வழியாக வெளியேறும். மூக்கு வழியாக சென்ற உணவு நுரையீரலுக்கு செல்வதால், நிமோனியா காய்ச்சல் போன்றவை ஏற்படும்.
10 இதற்கு சிகிச்சை என்ன?
குழந்தை பிறந்த மூன்று மாதம் முதல், ஒரு வருடத்திற்குள் முகசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்தால் நல்ல பலன் இருக்கும். குழந்தை வளர்ந்த பின் சிகிச்சை மேற்கொண்டால் அங்கிருக்கும் சதைகள் குறைபடுவதால், முகசீரமைப்பு சீராக வராது. அன்னப்பிளவு, தீர்க்கக் கூடிய பிரச்னையே!
By vayal on 17/02/2016

No comments:

Post a Comment