disalbe Right click

Friday, February 10, 2017

இயற்கைச் சீற்றங்கள்- காப்பீடு!

Image may contain: text


எதிர்பாராத இயற்கைச் சீற்றங்கள்...
 கைகொடுக்கும் சொத்து காப்பீடு!


சமீபத்தில் தமிழ்நாட்டை சேதப்படுத்திய வெள்ளம், மக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியது. சாதாரண மனிதர்களை மட்டுமல்ல, பெரும் பணம் படைத்தவர்களையும் பாடாய்ப்படுத்திவிட்டது மழை. மனிதர்களை மட்டுமல்லாது, வாகனங்கள், பயிர்கள், சொத்துக்கள், இயந்திரங்கள் மற்றும் சிறு தொழில்களையும் பெருமளவு பாதித்துவிட்டது அந்த வெள்ளம்.
வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது என்றாலும் இந்த மாதிரியான நிலைமைகளை சமாளிக்க எவ்வாறு ஆயத்தமாக வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்பதை இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்.
புதிதாக வீடு வாங்கியவர்கள் தங்களுடைய சொத்துக்களுக்கு சரியான காப்பீடு எடுத்து வைத்திருப்பது அவசியம். ஒவ்வொரு மனிதருக்கும் ஆயுள் காப்பீடும், மருத்துவக் காப்பீடும் முக்கியம் என்று சொல்லும் அதே நேரத்தில், சொத்துக்களுக்கான காப்பீடும் உங்கள் நிதித் திட்டத்தில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அதில் ஒன்றுதான், நமது வீடு. ஆயுட்காலம் முழுமைக்கும் நாம் தங்கி இருக்கும் வீட்டுக்கு சரியான சொத்துக் காப்பீடு மிகப் பெரிய பாதுகாப்பை அளிக்கும். நாம் தங்கியிருக்கும் வீட்டைத் தவிர, வீட்டிலிருக்கும் எலெக்ட்ரானிக் பொருட்கள், மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களுக்கும் காப்பீடு எடுப்பதன் மூலம் அவற்றை பாதுகாக்கலாம்.
பொதுவாக, தீ விபத்து, வெடிப்பு, சுவர் வெடிப்பு, நில நடுக்கம், இடிமின்னல், புயல், சூறாவளி, பெருங்காற்று, வெள்ளம், நீர் சூழ்தல், நிலச்சரிவு மற்றும் பாறைச் சரிவு போன்றவற்றுக்கு சொத்துக் காப்பீட்டின் மூலம் இழப்பீடு கிடைக்கும்.
இந்த பாலிசியில் பிரீமியம் என்பது அதிகம் கிடையாது.
ரூ.10 லட்சத்துக்கு நெருப்பு, வெள்ளம், நில அதிர்ச்சி போன்றவற்றை கவரேஜ் செய்யும்படி பாலிசி எடுத்தால், ஆண்டு பிரீமியம் ரூ.300-தான். இதுவே ரூ.20 லட்சத்துக்கு என்றால் ரூ.550-தான் ஆகும்
இயற்கைச் சீற்றங்களுக்காக சரியான காப்பீ்டு் பாலிசியை எடுக்கும்முன் கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்களை அனைவரும் அறிந்து வைத்துக் கொள்வது நல்லது.
1. பாலிசி மற்றும் காப்பீடு நிறுவனம் பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்து சந்தையில் அதன் நன்மதிப்பு, அதிலும் குறிப்பாக, க்ளெய்ம் எவ்வளவு வேகமாக தருகிறார்கள் என்பதைஅறிந்துகொள்ளுங்கள்.
2. விதிவிலக்குகள் மற்றும் உள்ளடக்கங்களை நன்றாகப் படித்து புரிந்துகொண்டு, உங்களுக்குத் தேவை யான பலன்களுடன் பாலிசியை வாங்கவும். மலிவான காப்பீட்டில், உங்களுக்கு அத்தியாவசியமான முழு பாதுகாப்புத் தரக்கூடிய சில பலன்கள் விடுபட்டிருக்கலாம்.
3. ரைடர்கள் இருக்கின்றனவா என்று பார்க்கவும். காப்பீட்டு நிறுவனங்கள் உங்களுக்கு கூடுதல் காப்பீடு, குறிப்பாக, நகை போன்ற மதிப்புமிக்க பொருட்களுக்கு கூடுதல் காப்பீடு வழங்கலாம்.
4. காப்பீட்டு பாலிசியில் ஆவணத்தில் எழுதியுள்ள அனைத்தையும் படிக்க மறக்காதீர்கள்.
5. க்ளெய்ம்களுக்கு முறையாக பணம் வழங்குவதற்கு நன்மதிப்பு பெற்ற காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்தே பாலிசிகளை வாங்கவும். காப்பீடு மூலம் கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் மன நிம்மதியை நினைத்துப் பாருங்கள்.
பேரழிவுக்கான காப்பீடு என்று வரும்போது, நேரம் மிகவும் முக்கியம்.பேரழிவு வரப்போகிறது என்று தெரிந்தபின் காப்பீடு எடுக்க இயலாது என்பதால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்போம். எனவே, இந்தக் காப்பீட்டை உடனே எடுப்பதும், எடுத்த காப்பீட்டை தொடர்ந்து புதுப்பித்து வைத்திருப்பதும் முக்கியம்.
கே.ஜி.கிருஷ்ணமூர்த்தி ராவ்,
மேலாண்மை இயக்குநர், ஃப்யூச்சர் ஜெனெரலி இந்தியா இன்ஷூரன்ஸ் கம்பெனி.
நன்றி : நாணயம் விகடன் - 07.02.2016

No comments:

Post a Comment