disalbe Right click

Thursday, February 23, 2017

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியிழப்பு


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியிழப்பு

இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட் உத்தரவு
மதுரை: 'உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, செலவு கணக்கை தாக்கல் செய்யாமல், தகுதியிழப்பு செய்யப்பட்டவர்களின் விபரங்களை, மாநில தேர்தல் கமிஷனின் இணையதளத்தில், ஒரு வாரத்திற்குள் வெளியிட வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:

மறு பரிசீலனை : உள்ளாட்சித் தேர்தல் நடத்த, 2016ல் அறிவிப்பு வெளியானபோது, மதுரை மாநகராட்சி வார்டு, 41ல் போட்டியிட, என் மனைவி முத்துசுமதி - இந்திய கம்யூ., மனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்த இந்திராணியும் மனு தாக்கல் செய்தார்.

அவர், 2011 உள்ளாட்சித் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி, மனு பரிசீலனையின்போது, அதிகாரியிடம் எதிர்ப்பு தெரிவித்தோம்.

ஆட்சேபனை மனுவை ஏற்ற அவர், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை; ஒப்புகைச் சான்றும் வழங்கவில்லை.

போட்டியிடுபவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தல் செலவு கணக்குகளை விதிகளின்படி சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், தகுதியிழப்பு செய்யப்படுவர்.

ஓட்டு போட தகுதியானவர்கள் பட்டியலை வெளியிடும்போது, போட்டியிட தகுதி மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை வெளியிட வேண்டியது, மாநில தேர்தல் கமிஷனின் கடமையாகும்.

இதை அரசியலமைப்புச் சட்டப்படி மேற்கொள்ள வேண்டும். ஒருவர் மனு தாக்கல் செய்யும்போது, அவருக்கு எதிராக யார் ஆட்சேபனை தெரிவித்தனரோ, அவர்களே குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கூறுகிறார்.

எதிர்ப்பு தெரிவிக்கும் வேட்பாளர் தான் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. புகாரை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சான்று வழங்காதது, தேர்தல் முடிந்த பின், சட்டப்படி நிவாரணம் தேடுவதற்கு தடையாக இருக்கும்.

தகுதியிழப்பு : கடந்த, 2011 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் தகுதியிழப்பு, செய்யப்பட்டவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும்.

யாரேனும் ஆட்சேபனை மனு அளித்தால், அதை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கும் வகையில், தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்களுக்கான வழிகாட்டுதலை, கையேட்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கண்ணன் மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் கொண்ட அமர்வு விசாரித்தது.அரசு வழக்கறிஞர், 'நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 4,772 பேர் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளனர்' என்றார்.

நீதிபதிகள், '2011 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் தகுதியிழப்பு செய்யப்பட்டவர்களின் விபரங்களை, மாநில தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் ஒரு வாரத்திற்குள் வெளியிட வேண்டும்' என உத்தரவிட்டனர்.

மாநில தேர்தல் கமிஷனின் செயலர், மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி, மார்ச் 8க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 24.02.2017

No comments:

Post a Comment