disalbe Right click

Wednesday, February 8, 2017

விதிமீறல் கட்டடங்களை உள்ளாட்சிகளே இடிக்கலாம்


விதிமீறல் கட்டடங்களை உள்ளாட்சிகளே இடிக்கலாம் 

 டி.டி.சி.பி. (Directorate of Town & Country Planning) அதிரடி உத்தரவு
விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களை, உள்ளாட்சி அமைப்புகளே இடிக்கலாம்' என நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., உத்தரவிட்டு உள்ளது. 

தமிழகத்தில், சென்னையில் மட்டுமின்றி, பிறநகரங்களிலும், விதிமீறல் கட்டடங்கள் புற்றீசல் போல அதிகரித்து வருகின்றன. நகரமைப்பு துறையின் நிர்வாக குளறுபடியால், இந்த கட்டடங்கள் மீது, முறையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளன.

நடவடிக்கை : 
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில் உள்ளது போல, நகரமைப்பு துறையிலும் அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தப்படும் என, அரசு அறிவித்தது. 

அந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விதிமீறல் கட்டடங்கள் அதிகரித்து வருகின்றன. 

இந்நிலையில், நகர், ஊரமைப்புத் துறை ஆணையராக பொறுப்பு வகிக்கும், சம்பு கல்லோலிகர் பிறப்பித்துள்ள உத்தரவு: 

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டால், சம்பந்தப்பட்ட திட்ட குழுமம் அல்லது நகர், ஊரமைப்பு மண்டல அலுவலக அதிகாரிகள், சென்னை மாநகராட்சி சட்டம், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்ட விதிகள் மற்றும் நகரமைப்பு சட்ட பிரிவு, 56, 57ன்படி, 'சீல்' வைத்தல், இடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம். 

சுற்றறிக்கை : 

அதேபோல, ஊராட்சி பகுதிகளில் கட்டப்படும், விதிமீறல் கட்டடங்கள் மீது, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், தமிழ்நாடு ஊராட்சி கட்டடங்கள் சட்டத்தின் படி, அந்தந்த ஊராட்சிகளே நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. 

இந்த உத்தரவானது சுற்றறிக்கையாக, நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர், பேரூராட்சிகள் இயக்குனர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பொதுவாக விதிமீறல் கட்டடங்கள் குறித்து புகார்கள் வந்தால், நகரமைப்பு துறையின் பொறுப்பு என, உள்ளாட்சி அமைப்புகள் ஒதுங்கி வந்தன. தற்போதைய புதிய உத்தரவால், இனி, உள்ளாட்சி அமைப்புகள் ஒதுங்க முடியாது; நேரடியாக நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

- நமது நிருபர் -

நன்றி : தினமலர் நாளிதழ் - 07.02.2017

No comments:

Post a Comment