disalbe Right click

Thursday, February 2, 2017

பணம் இல்லாவிட்டாலும் தொழில் தொடங்கலாம்


பணம் இல்லாவிட்டாலும் தொழில் தொடங்கலாம்

தொழில் தொடங்கத் தகுதியும், திறமையும் பெரும்பாலானோருக்கு இருக்கும். ஆனால், தொழில் தொடங்கத் தேவையான பணம் இருக்காது. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால், எங்காவது மாத ஊதியத்துக்கு வேலை செய்து தங்களது வாழ்நாளைக் கழிக்கின்றனர்.
இத்தகையவர்களுக்கு உதவிட மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் உள்ளன. வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலும், அவர்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தொழில் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
உற்பத்தியைச் சார்ந்த தொழில் பிரிவுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சமும், சேவை சார்ந்த தொழிலுக்கு ரூ.3 லட்சமும், வியாபாரம் தொடங்க ரூ.1 லட்சமும் கடனுதவி வழங்க வங்கிகளுக்குத் தொழில் மையங்கள் பரிந்துரை செய்கின்றன.
திட்ட மதிப்பீட்டில் பொதுப் பிரிவினருக்கு சொந்த முதலீடு 10 சதவீதம் இருக்க வேண்டும். இதில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் உள்ளிட்டோர் 5 சதவீதம் சொந்த முதலீடு வைத்திருந்தால் போதுமானது.
தொழில் முனைவோர் 7 நாள்கள் பயிற்சியைக் கண்டிப்பாகப் பெற வேண்டும். இப்பயிற்சிக்கு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சி முடித்த பின்னர்தான் வங்கிக் கடனுதவியின் முதல் பகுதி வழங்கப்படுகிறது.
கடனுதவி கோருவோரின் வயது 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தது 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ், ரேஷன் அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விலைப் பட்டியல் அசலுடன், ரூ.20 முத்திரைத் தாளில் நோட்டரி பப்ளிக்கிடம் உறுதிமொழிப் பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். செய்யவுள்ள தொழிலின் வரைவுத் திட்ட அறிக்கையும், பொருளின் சந்தைவாய்ப்பு, லாப விவரம், அத்தொழிலில் உள்ள அனுபவம் குறித்த முன் அனுபவச் சான்றிதழ் உள்ளிட்டவற்றையும் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்படும். அக்குழு நடத்தும் நேர்முகத் தேர்வுக்குப் பின்பு, தகுதியானவருக்கு கடனுதவி வழங்கப் பரிந்துரை செய்யப்படும். இதுமட்டுமின்றி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
திட்ட மதிப்பீட்டில் 90 முதல் 95 சதவீதம் வரை கடன் தொகை வழங்கத் தொழில் மையம் வங்கிகளுக்குப் பரிந்துரை செய்யும். கடன் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதம் அல்லது உற்பத்தி தொடங்கிய நாள் இதில் எது முன்னர் உள்ளதோ அன்றிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
அரசிடம் இருந்து மானியத் தொகை மாவட்டத் தொழில் மையத்துக்குப் பெறப்பட்டவுடன், முன்னோடி வங்கியில் செலுத்தப்படும். வங்கி மேலாளர் அரசு மானியத் தொகையை 3 ஆண்டுகளுக்குச் சம்பந்தப்பட்ட பயனாளியின் பெயரில் வைத்திருக்க வேண்டும். இதற்கு வட்டி கிடையாது. பின்னர் பயனாளியின் வங்கிக் கணத்தில் தொகை வரவு வைக்கப்படும்.
பயனாளியின் தொழில் நிறுவனத்தில் தொழில் மைய அலுவலர்கள் எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்துவார்கள். மேலும், சந்தைவாய்ப்பு, விற்பனை, மூலப் பொருள்கள் வாங்குதல் உள்ளிட்ட தொழில் நிமித்தமாகவும் அவர்கள் வழிகாட்டுவர்.
தினமணி - இளைஞர் மணி - 26.01.2016

No comments:

Post a Comment