disalbe Right click

Tuesday, March 7, 2017

கச்சத்தீவு... நாம் தெரிந்துகொள்ளவேண்டிய பத்து விஷயங்கள்...


கச்சத்தீவு... நாம் தெரிந்துகொள்ளவேண்டிய பத்து விஷயங்கள்...

அது 2009-ம் ஆண்டு. காங்கிரஸ் அரசுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு கடற்கரை மேலாண்மைத் திட்டம் அறிவிக்கையை வெளியிட்டு இருந்தது. “இந்த அறிவிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து விஷயங்களும் எங்களுக்கு எதிரானவை. இது மீனவனைக் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தும் ஒரு நெடுந்திட்டத்தின் பகுதி” என்று மீனவ மக்கள் தீவிரமாகப் போராடிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் வேதாரண்யம் பகுதியில் நாம் சந்தித்த மீனவர் இப்படியாகச் சொன்னார்.

“தமிழ் மன்னர்கள் பல நாடுகளுக்குப் பயணம் செய்து வணிகம் செய்தார்கள் என்கிறோம்... பல நாடுகளை வெற்றிபெற்றார்கள் என்கிறோம்... இதுவெல்லாம் எப்படி சாத்தியமானது? பரதவனின் துணையோடுதானே...? வரலாற்றில் எங்கள் பங்களிப்பு திட்டமிட்டு மறைக்கப்பட்டு இருக்கிறது. இலைகள் எப்போதும் தன் மரத்தின் தொன்மையை அறிந்திருக்கும்.

பாவம், மனிதனுக்குத்தான் தொன்மமும் தெரியவில்லை, தங்கள் தொன்மம் குறித்த பெருமிதமும் இல்லை. அதனால்தான் எவன் எவனோ எங்களை அடிக்கிறான். துணை நிற்கவேண்டிய நாடு, கண்ணீர் சிந்தக்கூட மறுக்கிறது...!” என்றார்.

அந்தக் கோபத்தின் குரல் நியாயமானது. ஆம், வரலாற்றை மறந்துவிட்டோம்... நம் கடல்பரப்பின் கதைகளை நம் பிள்ளைகளுக்குக் கடத்த மறந்துவிட்டோம். அதனால்தான் மீனவன் செத்தால் சமூகத்தின் மனம் பதைபதைக்க மறுக்கிறது; நெகிழ மறுக்கிறது.

மீனவச் சமூகத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கு முன், குறைந்தபட்சம் நாம் இழந்த கச்சத்தீவு குறித்தாவது தெரிந்துகொள்வோம்.

2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி, கச்சத்தீவு குறித்த வழக்கில், இந்திய அரசு நீதிமன்றத்தில், “இந்தியாவுக்குச் சொந்தமான எந்த ஆட்சிப் பரப்பும் இலங்கைக்குப் பிரித்து அளிக்கப்படவில்லை” என்றது. இது உண்மையா...?

இல்லை, என்கிறது வரலாறு. “வரலாற்றுக் காலம் தொட்டு, கச்சத்தீவும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிறுசிறு தீவுகளும், தமிழ் ஆட்சியாளர்களுக்குச் சொந்தமானதாகத்தான் இருந்திருக்கிறது” என்று பத்து வரலாற்றுத் தகவல்களைப் பட்டியலிடுகிறார் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்.

“கச்சத்தீவு பத்து”

1605 முதல் கச்சத்தீவு, குத்துக்கால் தீவு, ராமசாமித் தீவு, மண்ணாளித் தீவு, குருசடித் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேது அரசர்க்கு உரியதாக இருந்தன.

கூத்தன் சேதுபதி (1622 - 1635) காலத்துச் செப்பேடு தலைமன்னார்வரை சேதுபதி அதிகாரத்துக்கு உட்பட்டது எனக் கூறுகிறது.

சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரிமுறை செயலுக்கு வந்த ஆண்டு 1803. ராணி மங்களேஸ்வரி நாச்சியார் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதரவோடு 1803 முதல் 1812 வரை சேதுபதி ஜமீனாகப் பொறுப்பேற்றார். அவருக்கு வழங்கப்பட்ட ஜமீன் உரிமைப் பட்டயத்தில் கச்சத்தீவு ஆட்சிப்பரப்பும் குறிக்கப்பட்டிருந்தது.

1822-ம் ஆண்டு, கிழக்கிந்திய கம்பெனி கச்சத்தீவைக் குத்தகைக்கு எடுத்தது. அதற்கான பத்திர ஆவணங்கள் ஜமீன் வாரிசுகளிடம் இன்றும் இருக்கின்றன.

1858-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பிரிட்டிஷ் அரசு நேரடியாக இந்திய ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. இதுகுறித்து விக்டோரியா பேரரசு வெளியிட்ட அறிக்கையில் கச்சத்தீவு சேதுபதி மன்னர்களுக்கு உரிய பகுதிகளாகவே குறிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் பிரிட்டிஷ் அரசு பொறுப்பைக் கவனித்துவந்த பி.பி.பியரிஸும் இதை உறுதி செய்திருக்கிறார்.

1913 ஜூலை மாதம், கச்சத்தீவு உள்ளிட்ட சில பகுதிகளைச் சென்னை மாகாண அரசு குத்தகைக்குப் பெற்றது. குத்தகை விபரங்கள் ராமநாதபுரம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டது.

1947-ல் பதிவான இன்னொரு குத்தகைப் பத்திரத்திலும், 'கச்சத்தீவு ராமநாதபுரம் ஜில்லா ராமேஸ்வரம் பகுதிக்குப் பாத்தியமானது கச்சத்தீவு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1957-ல் வெளியான ராமநாதபுரம் மாவட்டம் குறித்த ஆவணக்குறிப்பில், தனுஷ்கோடி கிராம நிர்வாகத்துக்கு உட்பட்டது கச்சத்தீவு' என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1972-ம் ஆண்டு வெளியான ஆவணக்குறிப்பில், “கச்சத்தீவு ராமேஸ்வரத்துக்கு வட கிழக்கில் 10 மைல் தொலைவில் இருக்கும் அம்மாவட்டப் பகுதி என்றும் அதன் சர்வே எண் 1250 என்றும் அந்தத் தீவின் பரப்பளவு 285.2 ஏக்கர் என்றும் அங்குள்ள கத்தோலிக்க ஆலயத்தில் தங்கச்சிமடம் பங்குத் தந்தை வழிபாடு நடத்திக் கொடுப்பார் என்றும் குறிக்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி, ராமேஸ்வரம் கர்ணம் (அன்றைய கிராம நிர்வாக அலுவலர்) நிர்வாகத்தில் கச்சத்தீவு இருக்கிறது'' என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணக் குறிப்பு வெளியான இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் கச்சத்தீவு தமிழகத்துக்குச் சொந்தமில்லை என்று அப்பட்டமான பொய் சொல்லி அந்தத் தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தது இந்திய அரசு.
சரி... ஏன் இந்தப் பத்து விஷயங்களை நம் பிள்ளைகளுக்குச் சொல்லவேண்டும்?

“ஊழியில் துடுப்பு தொடுத்தவர்கள்”

ஏறத்தாழ ஆயிரத்து நூறு கிலோமீட்டருக்கு நீண்டுள்ள கடலோரப் பரப்பில் பல லட்சம் மீனவர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் மீனவர்கள் மட்டுமல்ல... வரலாற்றுக் காலம் முதல் வெளிப் படையெடுப்பை முறியடிக்கும் அரண்கள். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், இன்று தமிழரென்று ஓர் இனம் இருப்பது நிச்சயம் மீனவனாலும் மீகாமனாலும்தான்.

மிகையாகவெல்லாம் சொல்லவில்லை...

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குமரிக்கண்டத்தை ஊழி தாக்கிய போது... இவர்களின் நாவாயில் தப்பிவந்தவர்கள் நம் மூதாதையர்கள். நாம் நம் பிள்ளைகளுக்கு அந்த மீனவனின், மீகாமனின் வரலாற்றைச் சொல்ல மறந்துவிட்டோம். அவனுடைய நிலப்பரப்பைக் குறித்தும் சொல்ல மறந்துவிட்டோம். நம் உணவுத்தட்டுக்கும் அவன் உழைப்புக்கும் உள்ள தொடர்பையும் மறந்துவிட்டோம்.... அதனால்தான், அந்த வேதை மீனவர் தன் வேதனையைப் பகிர்ந்துகொண்டதுபோல, வந்தவன் போனவன் எல்லாம் தமிழ்ச் சமூகத்தின் அரண்களை அடிக்கிறான்; அவன் நாவாயைப் பிடிங்கி வைத்துக்கொள் என்று யோசனை தருகிறான். இன்னொரு ஊழிவந்து நாம் தப்பிக்க வேண்டுமானால்கூட, அந்த மீனவனின் உதவி தேவை. குறைந்தபட்சம் அந்தச் சுயநலத்துக்காவது... கச்சத்தீவின், நம் மீனவர்களின் கதைகளைச் சொல்வோம்!
- மு. நியாஸ் அகமது

நன்றி : விகடன் செய்திகள் - 08.03.2017

No comments:

Post a Comment