disalbe Right click

Friday, April 28, 2017

புதிய மாற்றங்கள்... எளிதாகும் வருமான வரி கணக்குத் தாக்கல்!

புதிய மாற்றங்கள்... எளிதாகும் வருமான வரி கணக்குத் தாக்கல்!
த்திய அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் சமர்ப்பிப்பது படிப்படியாகக் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இப்போது வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய ஆதார் எண் தரவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி உள்ளது மத்திய அரசு. வருமான வரிப் படிவத்தில், கணக்குத் தாக்கல் செய்பவரின் வங்கிக் கணக்குத் தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் இருக்கிறது.
இந்த நிலையில், வருமான வரித் தாக்கலில் ஆதார் எண்ணைப் பதிவு செய்வதன் மூலம், வரி செலுத்துபவரின் ‌வங்கிக் கணக்கு விவரங்கள், நிதி நடவடிக்கைகளை எளிதாக‌ப் பின்தொடர முடியும் என மத்திய அரசு கருதுகிறது‌. இதையொட்டி வருமான வரிக் கணக்குத் தாக்கல் படிவத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மாதச் சம்பளதாரர்களுக்காக புதிய வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் படிவம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படிவத்துடன் ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த நடைமுறை 2017 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. வருமான வரிக் கணக்குத் தாக்கல் படிவத்தில், இரண்டு வருடங்களுக்குமுன்பு அறிவிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் செயலற்றுக் கிடக்கும் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்கள் நீக்கப்பட்டு, மூன்று பக்க விண்ணப்பமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி கணக்குத் தாக்கல் படிவம் சிக்கலாக இருப்பதால், வரி வரம்புக்குள் உள்ள 29 கோடி பேரில் 6 கோடி பேர்தான் தாக்கல் செய்தனர். இப்போது இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 2017-18 மதிப்பீட்டு ஆண்டுக்கான விண்ணப்பப் படிவத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆடிட்டர் லதா ரகுநாதனிடம் பேசினோம்.
இதுவரையில் பக்கம்பக்கமாக இருந்த படிவம், கைக்கடக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் படிவங்கள் ITR 1 – 7 மட்டுமே. 2, 2ஆ என்பது போல இருந்த பல ஆவணங்கள் ஒன்றாக இணைக்கப் பட்டு ஏழு படிவங்களாகக் குறைக்கப் பட்டுள்ளன. இதில் மிக அதிகமாக உபயோகப்படும் படிவம் ITR 1 என்பதால், இது ஒரேயொரு பக்கமாகச் சுருக்கப் பட்டுள்ளது. இதன் இன்னொரு பெயர் சஹஜ்என்பதாகும். மாற்றங்கள் எல்லாப் படிவங்களிலும் உள்ளவை என்கிறபோதும், இந்த சஹஜ்படிவம் அதிகம் உபயோகப்படும் என்பதால், இதுபற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 
யார் உபயோகிக்கலாம்?
சம்பளம், ஒரே ஒரு வீடு மற்றும் வங்கி வட்டி வருமானம் பெரும் தனிநபர்கள் மட்டுமே. அரசாங்கத்தின் பார்வையில் இது இரண்டு கோடி தனிநபர்களுக்கு உபயோகப்படும் என்று சொல்லப்படுகிறது.
செய்யப்பட்ட மாற்றங்கள்
மொத்த வருமானத்திலிருந்து சாப்டர் ஆறு ஏ-வின் கீழ் அனுமதிக்கப்படும் வரிச் சலுகைகள், இப்போது 80சி, 80டி, 80டிடிஏ, 80ஜி போன்ற நான்கு பிரிவுகளின் கீழ் மட்டுமே படிவத்தில் காட்டப்படு கின்றன. இந்த மாற்றத்துக்குக் காரணம், பெரும்பாலான வரி செலுத்துபவர்கள் இந்தவிதமான வரி விலக்கைத்தான் கடந்த பல வருடங்களாகக் கோரி வந்துள்ளனர். இவற்றைத் தவிர, வேறு பிரிவுகளின் கீழ் வரி விலக்குக் கோருபவர்கள் அவற்றைத் தனியே வேறு சிலஎன்பதில் காண்பித்துப் பெறலாம்.
சொத்துகள் பற்றிய விவரங்கள் கொடுக்க, சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றம் இப்போது நீக்கப்பட்டுள்ளது. நவம்பர் 9 முதல் 30-ம் தேதி வரையில், அதாவது பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின், இரண்டு லட்சம் ரூபாய்க்கு  வங்கிகளில் கணக்குக் கட்டப்பட்டிருந்தால், இவற்றைத் தனியாகக் காண்பிக்க ஒரு பத்தி  கொடுக்கப்பட்டுள்ளது. 
கடைசியாக, ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்கப்பட வேண்டும். இந்த மாற்றம் எல்லா எண் படிவங்களுக்கும் பொதுவான ஒன்று.
எதற்காக இந்த நடவடிக்கை
இந்தக் கடைசி மாற்றம் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட வேண்டி இருக்கிறது. இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு சில  முக்கியமான காரணங்கள் உள்ளன. முதலில், வரி ஏய்ப்பை இதனால் தடுக்க இயலும். காரணம், தற்போது ஆதார் எண் எல்லா விதமான தினசரி நடவடிக்கைகளிலும் தரப்படுகிறது. இதனால் நிதிப் பரிவர்த்தனை தொடர்பான ஒருவரது எல்லா நடவடிக்கைகளும் அரசின் பார்வைக்கு வந்து விடும். இவற்றை மறைத்து இனி வரி ஏய்ப்பு செய்வது கடினம். 
சிலர், ஒன்றுக்கு மேலான பான் கார்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு, சில கணக்குகளை மாற்றிக் காண்பித்து வரி ஏய்ப்பு செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. இந்த வகையில், இனி வரி ஏய்ப்பு செய்ய முடியாது. ஏனென்றால், ஆதார் கார்டுடன்  பான் கார்டை இணைப்பது அவசியம்.
மேலும், தற்போது ஆதார் கார்டு வங்கிக் கணக்குகள், பேபால் கணக்குகள் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே இவற்றின் மூலம், வருமான வரிச் செலுத்த மற்றும் ரிட்டர்ன்ஸ் சமர்ப்பிக்க சுலபமாக முடியும். முக்கியமாகடிசம்பர் 30-க்குமுன் இணைப்பைச் செய்யத் தவறினால், பான் கார்டு செல்லாது எனக் கொள்ளப்படும். ரூ.5 லட்சத்துக்குக் குறைவான வருமானம், ரீஃபண்ட் இல்லாதவர்கள் மற்றும் சஹஜ்’-ல் சமர்ப்பிக்கும் 80 வயதுக்கு மேலானவர்கள் இ-ஃபைலிங் செய்வதைவிடமேனுவல் ரிட்டர்ன் தாக்கல் செய்வது நல்லது. அப்படிச் செய்வதால், இந்த இணைப்புப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்என்றார் அவர்.
அனைவரும் ஆதார்எண் தர வேண்டும்
ஆதார்எண் பெறத் தகுதியானவர்கள்  மட்டுமே  வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது, ‘ஆதார்எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம் என்று வருமான வரித்துறை விளக்கம் தந்துள்ளது. அதாவது, ‘ஆதார்எண் பதிவு என்பது எல்லோருக்கும் கிடைத்துவிடாது. ஆதார்எண்ணுக்கு விண்ணப்பித்த தேதிக்கு முந்தைய 12 மாதங்களில், 182 நாட்களுக்கு குறையாமல், இந்தியாவில் வசித்த தனிநபர்கள் மட்டுமே இந்தியாவில் வசிப்பவர்களாகக் கருதப்பட்டு, ‘ஆதார்எண் பெறத் தகுதி உடையவர்கள்  என்று ஆதார் சட்டம் கூறுகிறது. எனவே, இந்தியாவிலேயே ஆண்டு முழுக்க வசித்து, ‘ஆதார்பெற்ற  அனைவருமே வருமான வரிக் கணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்எண் குறிப்பிடுவது கட்டாயம் என்று வருமான வரித் துறை அறிவித்திருக்கிறது.  
வருமான வரித் துறை கொண்டுவந்துள்ள இந்த மாற்றங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, இனி வரிக் கணக்கினைத் தாக்கல் செய்வோமா?
ஆதார் பான் எண் இணைப்பு: சிக்கலும் தீர்வும்!
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதா திருத்தத்தின்படி, வருமான வரிக் கணக்குத் தாக்கலின் போது, ‘ஆதார்எண் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மேலும், வருமான வரி நிரந்தரக் கணக்கு, பான் உடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான இணையதளத்தில் ஆதார்எண்ணை இணைக்க முயலும்போது, சிலருக்குச் சிக்கல் ஏற்பட்டது. காரணம், பான் எண் தொடர்பான ஆவணங்களில், எல்லோரின் பெயரிலும் தந்தை பெயர் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், ஆதார் எண் ஆவணங்களில், தந்தை பெயரின் முதல் எழுத்து (இன்ஷியல்) மட்டுமே குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த முரண்பாடுகளால் பான் எண்ணுடன் ஆதார்எண்ணைச் சிலரால் இணைக்க முடியவில்லை.
இதற்கு வருமான வரித்துறை ஒரு தீர்வைக் கண்டுள்ளது. ஆதார் இணையதளத்தில் சென்று (https://uidai.gov.in/), பெயர் மாற்றத்துக்கான கோரிக்கை விடுத்து, அதற்கு ஆதாரமாக பான் கார்டின் ஸ்கேன் காப்பியை அப்லோட்செய்ய வேண்டும். இதன் மூலம், ஒரே மாதிரியான பெயர் கிடைப்பதால், அதை பான் எண்ணுடன் இணைக்க முடியும் என்கிறார்கள் வருமான வரித் துறை அதிகாரிகள். 
சில பெண்கள் திருமணத்துக்குப்பிறகு கணவர் பெயரைச் சேர்த்திருப்பார்கள். இவர்களுக்கு, ஆதார் எண்ணுக்குப் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு ஒன் டைம் பாஸ்வேர்டை (ஓ.டி.பி.) வருமான வரித்துறை அனுப்பும். அப்போது, பான், ஆதார் என இரு ஆவணங்களிலும் அவர்களின் பிறந்த ஆண்டு ஒரே மாதிரியாக இருக்கிறதா என்று வருமான வரித்துறை சரிபார்க்கும். அந்த ஓ.டி.பி-யைப் பயன்படுத்தி, பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க முடியும் என்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் எண் செல்லாது என்கிற நிலை உருவாகியிருக்கிறது. மாதச் சம்பளக்காரர்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தக்கல் செய்ய வேண்டும். வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகும். (பான் எண்ணுடன் ஆதார்எண்ணை இணைக்க: https://incometaxindiaefiling.gov.in/). ஏப்ரல் 19, 2017 வரைக்கும் 1,10,16,997 பேர் பான் எண்ணுடன் ஆதார்எண்ணை இணைத்திருக்கிறார்கள்.
சோ.கார்த்திகேயன்
 சோ.கார்த்திகேயன்



நன்றி : நாணயம் விகடன் - 30.04.2017
·        



No comments:

Post a Comment